படத்தின் வலப்புறம் :ஹான்ஸ்ஐஸ்லர், கிழக்கு ஜெர்மனி இசை அமைப்பாளர்; இடப்புறம் :ஜெர்மனி  நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெக்ட். இவர் கார்க்கியின் ' தாய் ' நாவலை நாடகவடிவில் எழுதி இயக்கி உலக முழுக்க மேடை ஏற்றியவர்.

ஸ்பெயினில்  பாசிச  ஃபிராங்கோவை எதிர்த்து  உலகெங்குமிருந்து  கம்யூனிஸ்டுகள்  தமது ஆதரவாளர்களை அணிசேர்த்து  ஆயுதப்படைதிரட்டிக்  களத்தில் இறங்கினார்கள்.  அப்போது  பலநாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகள் லட்சக்கணக்கானோரைத்  திரட்டின.

அந்தக் களத்திற்கே  நேரடியாகச் சென்று வீரர்களோடு பழகி  அனுபவம்  திரட்டினார் ஐஸ்லர். இவர்  சிறந்த  இசை அமைப்பாளர்,  மார்க்சிய இசை அறிஞர். கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்டாகச் செயல்பட்டவர்.  பாசிச  ஃபிராங்கோவிற்கு எதிரான  களத்தின்  பின்பகுதியில் தங்கி பாடல்கள் உருவாக்கி,  இசை அமைத்து, காயங்களோடு போராடிவந்த  வீரர்கள் மத்தியில்  பல நிகழ்ச்சிகளை  நடத்தினார். அந்த  அனுபவங்கள்   ” இசையில் ஒரு கலகக்காரன் ஹான்ஸ் ஐஸ்லர் ”  என்ற நூலில் 1976ல்  மிக விரிவாகப்  பதியப்பட்டன.  உலகில்  முதல்முறையாக  ஐஸ்லர்  முக்கியமான  மார்க்சிய  இசைக் கோட்பாடுகளை  அவற்றில்  விவாதித்தார்.  கிழக்கு ஜெர்மனியின்  ” 7 Seas Books ”

(7 கடல் நூல்கள்)  மூலம்  அந்தப் பொக்கிசங்கள் வெளியுலகிற்கு வந்தன.

சோவியத் நவம்பர்புரட்சிநாளை ஒட்டி
அந்நூலின்  ஒரு முக்கியப் பகுதியை இங்கே தருகிறோம் :

நண்பர் தளபதி லுத்விக் ரென்  அப்போதுதான் போர்முனையிலிருந்து திரும்பியிருந்தார். அவரைப்  பார்க்கப் போனபோது, ” என்னோட வாரண்ட் உனக்குக் கெடச்சிதா? ” என்று  ஆரம்பித்தார். மேசை மேலிருந்த கோப்புகளைப் பீறாய்ந்து கடித நகல் ஒன்றை  என்னிடம்  காட்டினார். “இந்த முறை நிகழ்ச்சி நடத்தாமப் போயிடுவியான்னு   பாத்துடுவோம், ” உற்சாகமாக  என்னை  அவர்  வரவேற்றார். அடுத்த ஓரிரு நாளில்  அவர்  போர்முனைக்குத் திரும்பவேண்டுமாம்.

இந்த நெருக்கடி நேரத்தில்  இசைநிகழ்ச்சி என்றால்  பொருத்தமான  தொழில்முறைப் பாடகர்களை  எங்கே  போய்த் தேடுவது ?  காயம்பட்டவர்களும் சிறிய ஓய்வுக்கு வந்தவர்களும் மட்டுமே கைவசம்  இருந்தார்கள்.  உற்சாகம்  பொங்கிவழியத் துடிப்போடு சுற்றிவரும் வீரர்கள் போதும், அவர்களை வைத்துச் சவாலைச் சந்திப்பதே சரி  என்று  முடிவு செய்தேன்.  ஸ்பானிய, ஃப்ரெஞ்சு, ஆஸ்டிரியா, ஜெர்மன் தோழர்கள், மற்றும்  யூதப்பிரிவுகளிலிருந்து வரும் தொண்டர்களைத் திரட்டினோம் ;  காலை பயிற்சி ,மாலை  இசைநிகழ்ச்சி என்று திட்டமிட்டு  முடித்துவிட்டோம்.

அதற்கு  முதல்நாள்  ரென்னோடு சேர்ந்து பாடல்களைத் தேர்வு செய்வதில் இறங்கினேன்.

ரென் தன் குறிப்பு நோட்டுக்களிலிருந்த துண்டுத் துணுக்கு வரிகளில் மூழ்கினார். என் பங்குக்கு நானும் தயாரானேன்.

மறுநாள் காலை படைப்பிரிவுகளிலிருந்து ஓரளவு  இசை ஆர்வமுள்ள  ஆட்களைத் திரட்டிவிட்டோம்.யூத தொண்டர் படைப்பிரிவுத் தோழர்கள்  அவர்களின்  புதையலிலிருந்து ஏராளமான  நாட்டுப்புறப் பாடல்களை அள்ளிக் கொடுத்தார்கள்.ஆஸ்திரியத் தோழர்கள் அக்கார்டியன் ஒன்றைக்  கொண்டுவந்துவிட்டார்கள்.

பாசிச எதிர்ப்புச் சுவரொட்டி : “பாசிஸ்டுகளைத் தப்பவிடமாட்டோம் ! “

ரென்முகாமில்தான் பயிற்சி.  இடையிடையே ராணுவ ஆர்டர்லிகள்  வருவதும்  போவதுமாக இருந்தார்கள்.  இத்தனைப்  பரபரப்புக்கு இடையே ரென் அமைதியை உருவாக்கிக் கொண்டார். பாடல்வரிகளை எழுதி விவாதித்தார்.  சொற்களை  உருட்டி தட்டிச் சரிசெய்து இசைக் கோலத்தில்  தோய்த்து  முழுவரிகளாக்கினார். என்னோடு பேசி இறுதி செய்து கொண்டார். இரண்டுமணி நேரத்தில் பாடல்கள் தயார்.  தயாரித்த தாள்கற்றைகளை  எடுத்துக்கொண்டு  என் அறைக்கு ஓடினேன், சில முன்தயாரிப்பு வேலைகள் செய்து  புதிதாக  நான்கு பாடல்களுக்கு  மெட்டமைத்து முடித்தேன்.

இரண்டாம் நாள் :  சிறிய உணவுவிடுதி ஒன்றில் படைப் பிரிவொன்றின் செயலாளர் துடிப்பான பெண்  உதவிசெய்ய  முன்வந்தார்; பாடல்களைத்  தட்டச்சு செய்து, ஸ்டென்சில்வெட்டி  100 படிகளும் தயாரித்துவிட்டார். சுறுசுறுப்பான பறவை போல சுழன்று  வேலை செய்துமுடித்தார். பார்வையாளர்களுக்கு  படிகளைக் கொடுத்து கூடவே பாடச்செய்வதற்காக அந்த ஏற்பாடு.

சரியாகக் குறித்த நேரம் தப்பாமல்  பிற்பகல் 5 மணிக்கெல்லாம் இசைநிகழ்ச்சி தொடங்கியது.

மேடையில்  ஏராளமான  பாடகர்கள் திரண்டார்கள்.  காயம்பட்ட வீரர்கள் பலர் காயக்கட்டுக்களைக்கூட அவிழ்க்கவில்லை. அரங்கில்  படைத் தொண்டர்களும்  ஸ்பானிய வீரர்களும்  பொதுமக்களுமாக நெருக்கியடித்து  அமர்ந்திருந்தார்கள்.  மிக நெருக்கடியான  நேரங்களிலும்,  கலாச்சார/ பண்பாட்டு வாழ்க்கையின் உயிரோடு உறவாடும் சம்பவங்களை,  ஃபிராங்க்கோவின் ஒடுக்குமுறைகளை

பாடல் – ஆடல்களாக, சிறு நாடகக் காட்சிகளாக  மேடையில்எதிர்பார்த்து விழிப்போடு காத்திருந்தார்கள்.

ஒரே வரியில் உங்களிடம் நான் சொல்லக்கூடியது — இந்த அரங்கத்தை ஒருவர் புரிந்து உணரவேண்டும்.

படைத்தொண்டர்கள் — ஊழியர்கள்  மிகக் கடுமையான  கஷ்டநஷ்டங்களைத்  தாங்கி வந்திருந்தார்கள் ; இதைவிடக் கொடுமையான  நாட்கள்  வரும், அவற்றை எதிர்கொள்ளவேண்டிவரும், எதிர்கொள்வோம்  என்று  தயாராகவே இருந்தார்கள்.  பாரம் நிரம்பி  வழிவது போன்ற, மட்டுமீறிய  கவலைகளை விவரிக்கும்  பாடல்களைப்  பாடியபோது  அவற்றை  உதிர்த்து எறிந்துவிடமுடியும்  என்ற நம்பிக்கையைச் சொல்லும்   உடல் மொழியை வெளிப்படுத்தினார்கள்.

பல்வேறு  படைப்பிரிவினரும்  பல தேசிய இனங்களும்  தோழமை  உறவுகொண்டு  ஒரே ஆறாகத் திரண்டு  பெருக்கெடுத்துப் பாய்ந்துசெல்வதுபோலவே  எங்களுக்குத் தோன்றியது.

அன்றைய  நிகழ்ச்சி  அரங்கை உலுக்கி எடுத்தது. அவர்கள் அப்படி  ஒன்றும் அழகாகப் பாடவில்லை;  பதுங்கு குழிகளில்  தீவிரமான பனிப் பொழிவில் நின்று  ஓய்வே இல்லாமல் போரிட்டவர்களின்  குரல்கள்  தொண்டைகட்டி கம்மியாக  கரகரப்பாக  இல்லாமல் வேறெப்படி இருக்கும் ?

அவர்கள் அன்று  துயரம், கோபம், ஆவேசத்தோடு  பாடினார்கள்;  உற்சாகம் பொங்கப் பாடினார்கள்;  பல லட்சம் விவசாயிகள்  போரில்  இறங்கிப் போராடியபோதெல்லாம்  தங்கள் பாடல்களை இப்படித்தானே  பாடியிருப்பார்கள் ?

பதினைந்தாம்  நூற்றாண்டில்,   டாபொரைட்டுகள் ( செக்கோஸ்லாவாக்கியா பகுதிகளின் சமத்துவத்தை அன்றாடம்   நடைமுறைப்படுத்திய, தங்களை  சகோதர – சகோதரிகள் என்று அழைத்துக் கொண்ட   பூர்வீகக்குடி  விவசாயிகள் ) மற்றும்  முற்போக்குக்  கட்சிகளைச்  சேர்ந்த உறுப்பினர்கள்  இப்படித்தானே பாடியிருப்பார்கள் ?  முதல்முதலாக மார்செயில்ஸ் கீதம்  (  பதினெட்டாம் நூற்றாண்டு புரட்சிச் சூழலில்  ஃபிரான்ஸின் போர்ப்பாடல் ) இப்படித்தானே முழங்கியிருக்கும் ?

ஓர் இசையமைப்பாளனான  எனக்கு அந்நாளின்   மாலைநேரம்  ஏராளமாகக் கற்றுத்தந்தது ;  காரணம்,  இசை என்பது எப்படி ஒரு அவசியமான வாழ்க்கையின் உயிர்ச்சத்து  என்பதை  அன்றைய   நிகழ்ச்சி மீண்டும்  எனக்கு  நிரூபித்தது;  ஒரு புத்துலகைப் படைக்கவல்ல  போராட்டங்களில் எல்லாம் இசை முக்கியக் கருவியாகத் தொடரும்என்பதையும் நிரூபித்தது !

மூலம் : ஹான்ஸ் ஐஸ்லர்.

ஆக்கம் : பீட்டர்

1 COMMENT

  1. இப்படி ஒரு கட்டுரையை எழுதிப்பதிவிட்ட மக்கள் அதிகாரம் இணையத்திற்கு வாழ்த்துக்கள்…நன்றியும் கூட….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here