டமாநில விவசாயிகள் மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியை முற்றுகையிட்டு போராடியும் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்படவில்லை. எனவே  தமது அடிப்படையான – நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்க விவசாய சங்கங்கள் மீண்டும் களமிறங்கியுள்ளன. 2024 இல் மீண்டும் டெல்லியை முற்றுகையிட பஞ்சாப், ஹரியானா மாநில சாலைகளில் முன்னேறி வருகின்றன. இம்முறை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி டெல்லி செல்லும் சாலையில்,   பஞ்சாப் – ஹரியானா எல்லையிலேயே போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது.

தூண்டப்படும் போராட்டம்!

விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்க துடிக்கும் மோடி கும்பலானது தலைநகர் டெல்லியை ஓராண்டுக்கும் மேல் முற்றுகையிட்டு போராடிய விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதன்மூலம், நீண்ட காலமாக முன்வைக்கப்படும் குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இரண்டாம் கட்டமாக மீண்டும் டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகளை தள்ளிவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின், பாஜக அரசின் தடித்த தோலுக்கு உரைக்கும் வகையில் போராடவேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் ஒரு டெல்லி முற்றுகைக்கு 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஆதரவளித்துள்ளனர். இதன்மூலம் தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வைக்க டெல்லி நோக்கி பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் பிப்ரவரி 13 முதல் அணிவகுத்து முன்னேறி வருகின்றனர்.

டெல்லியை நெருங்கவே தடைபோடும் ஹரியானா!

பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியை அடைய ஹரியானாவை கடந்தாக வேண்டும். எனவே ஹரியானா எல்லைக்கு தமது முற்றுகைக்கான முன்தயாரிப்புகளுடன் அணிவகுத்து வந்தனர். ஆம் ஆத்மி கட்சியால் ஆளப்படும் பஞ்சாப் அரசு ஹரியான எல்லைபுறமான சம்புவில் சாலைகளில் தடையை ஏற்படுத்தவில்லை. இதனால் அம்மாநிலத்தில்அமைதியாக டிராக்டர்கள் கடந்துள்ளன. ஆனால் டெல்லிக்கு செல்லும் வழியில் உள்ள மாநிலமான ஹரியானாவில் நடப்பதோ பாஜக ஆட்சி. எனவே விவசாயிகள் பேரணியை நுழையவிடாதபடி அம்மாநில அரசு அம்பாலாவில் தடுப்புகளை வைத்து மறித்து தாக்குகிறது. இதனால் போராட்டத்தின் ஒரு முனையாக பஞ்சாப் – ஹரியானா எல்லை மாறியுள்ளது.

எல்லைப்புற நகரான அம்பாலாவில் நடக்கும் இந்த தாக்குதலில் டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுகின்றன. ரப்பர் தோட்டாக்கள் கொண்டும் சுட்டு வருகின்றனர். அரசின் அடக்குமுறையால் விவசாயிகளின் ரத்தம் ஹரியானா மண்ணில் சிந்தப்பட்டு வருகிறது. போடப்படும் தடைகளை தகர்த்தபடி தெற்கே செல்லும் சாலையில் டிராக்டர் பேரணி முன்னேறுகிறது. ஆற்றுப்பாலங்கள் மறிக்கப்பட்ட இடங்களில் ஆற்றை கடக்க பொருத்தமான இடத்தில் புதிய பாதைகள் போடப்படுகின்றன. இருபுறமும் கரைகளை வெட்டி உயரத்தை குறைத்தபின் ஆறுகளுக்குள் டிராக்டர்கள் கம்பீரமாக இறங்கி மறுபுறம் ஏறுகின்றன. கண்ணீர்புகை குண்டு வீச்சுக்கிடையே வயலுக்குள் இறங்கி கால்நடையாக முன்னேறுகிறது விவசாயிகளின் அணிவகுப்பு.

பீதியில் ஹரியானாவின் பாஜக அரசு!

மனோகர்லால் கட்டார்  தலைமையிலான பாஜக அரசின் பீதிக்கு உதாரணம் வேண்டுமென்றால் சாலைகளை பர்த்தாலே போதும். 50 வயது முதியவர் தனியாக தமது பைக்கில் டெல்லி செல்லும் சாலையில் அனுமதிக்க அஞ்சுகின்றனர். சாலையில் செல்லவிடாமல் மறித்து கைது செய்கின்றனர். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாகத்தான் தெரிகிறது.

ஏதோ பாகிஸ்தான், சீன எல்லையில் எதிரிப்படையின் முன்னேற்றத்தை இந்திய ராணுவம் தடுப்பதுபோல் ஹரியானாவில் முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் நம் நாட்டின் எதிரிகளைப்போல வகைப்படுத்தப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகின்றனர். இதில் முன்னாள் ராணுவ வீரரும் தற்போதைய விவசாயியும் கூட தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பேட்டி தரும் காணொளி ஊடகத்தில் பரவிவருகிறது.

போராடும் உரிமை ரத்து!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என 56” மோடியால் உதார்விடப்பட்டுவரும் நம் நாட்டில் எதார்த்தத்தில் போராடும் உரிமை கிடையாது. பாசிசம் ஜனநாயகத்தை விரும்புவதில்லை. பாசிஸ்ட்டுகள் ஆளும் தலைநகரை நெருங்கக்கூட முடியாது என்று காட்ட துணிந்துள்ளனர்.

விவசாயிகளை மறிக்கும் படி டெல்லியிலிருந்து ஆணைகள் பறக்கின்றன. தடைகள் ஏற்படுத்தி, படையை குவித்து பாலங்களை மறித்து தொண்டூழியம் செய்கிறது ஹரியானா அரசு. மாற்றுவழியாக கடந்த முறைபோல் ஆறுகளை கடப்பதை தடுக்க  JCP கொண்டு ஆறுகளை ஆழப்படுத்தியும் மோடி அரசுக்கு விசுவாசமாக நிற்கிறார் ஹரியானாவின் முதல்வர் மனோகர்லால் கட்டார்.

அரசின் தாக்குதலை எதிர்கொண்டு முன்னேறி வருவதோடு அடிபடும் தமது போராளிகளுக்கு அவர்களே முதலுதவியும் செய்துகொள்கின்றனர். ஈர சணல் சாக்கால் கண்ணீர்புகை குண்டுகளை சமாளிக்கவும் செய்கின்றனர். டிராக்டர்களைக்கொண்டு கான்கிரீட் தடையரண்களை சாலையிலிருந்து இழுத்துச்சென்று வழி ஏற்படுத்துகின்றனர். சொந்த நாட்டு விவசாயிகளை ஒடுக்கும் அரசை பணியவைக்கும் உறுதியுடன் முன்னேறியும் வருகின்றனர்.

தலைநகர் டெல்லி தனிநாடா?

கார்ப்பரேட் முதலைகளான அதானிகளுக்காக அயல்நாடுகளுக்கு பறக்க துடிக்கும் மோடி சொந்தநாட்டு விவசாயிகளை பார்க்க நேரமே தருவதில்லை.  ஊடகத்துக்கு பேட்டி தரவே, நிருபர்களை கேள்வி கேட்க அனுமதிக்கவே அஞ்சி தொடை நடுங்குகிறார். அவ்வளவு ஏன்? தம் குடிமக்களை காணவே அஞ்சுகிறார் மோடி. அதனால்தான் டெல்லியை சுற்றி அகழி வெட்டுகிறார்.

தற்போது வருபவர்கள் எதிரி நாட்டு ஊடுருவல் படையினரல்ல. ஆனால் பதறியுள்ள மோடி அரசால் சிங்கு எல்லையில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. சாலைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில் கூர்மையான கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கும் சிமெண்ட் சிலாப்கள் அடுக்கப்படுகின்றன. இரும்பு முள்வேலிகள் சாலையில் குறுக்கே விரிக்கப்படுகின்றன. நள்ளிரவிலும் ஓய்வின்றி சாலைகளை  அடைக்கும் வேலை முடுக்கிவிடப்படுகிறது.  இதற்கென கான்கிரீட் கலவை லாரிகள் வந்து சென்றவண்ணமுள்ளன. நிரந்தரமாக சிமெண்ட் கலவை கலக்கி சாலைகள் மூடப்படுகின்றன.


இதையும் படியுங்கள்:


வெறும் கையுடன் முழக்கமிட்டபடி வரும் விவசாயிகளுக்கு எதிராக கத்திகளை போன்ற முள் ஆணி விரிப்புகளை போலீசார் பிடித்தபடி நிற்கின்றனர். அவை டிராக்டர் டயர்களை சேதப்படுத்தவா அல்லது முன்னேறும் விவசாயிகளின் முகத்தை குத்தி கிழிக்கவா என்பதை பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். அடுத்தாக வஜ்ரா வாகனங்கள்,  துப்பாகிகளுடன் துணை ராணுவம் அணிவகுத்துள்ளது. தேவைக்கேற்ப ராணுவம் தயார் நிலையில் உள்ளது. அத்துக்கூலியாக படையில் உள்ள அக்னிவீரர்கள் தாம் யாரை எதிர்த்து நிற்கிறோம் என்பதை உணரத்தொடங்கியவுடன் காட்சிகள் மாறக்கூடும்.

நாடுதழுவிய எதிர்ப்பு!

இந்தியாவில் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைமையில் கிராமீன் பந்த்தும், தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம், மறியல் போராட்டமும் பிப்ரவரி 16-இல் நடக்கிறது. 2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவருகிறது. போராட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த ஆண்டு தந்த வாக்குறுதிகள் என்னாவானது? சொன்னபடி செய் என நிர்பந்திக்கிறார்கள் விவசாயிகள். தொழிலாளர் நல சட்டங்களை ஒழித்து கார்ப்பரேட்டுகளுக்கு எங்களை அடிமையாக்காதே என்கின்றனர் தொழிலாளர்கள். மோடி ராமனைக்காட்டி தேர்தலில் வாக்குகளை பெறும் கனவை கலைக்கின்றன தற்போது வெடித்துகிளம்பும் போராட்டங்கள்.

கார்ப்பரேட்- காவி பாசிசத்தை நீடிக்க விடலமா? இந்தியா கூட்டணியிலுள்ள கட்சிகள் தற்போது ஏவப்படும் பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக களமிறங்க வேண்டும். விவசாயிகளின், தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கைகளை ஏற்று அதை தீர்க்கும் உத்தரவாதத்தை தமது கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளாக பகிரங்கமாக, அறிவிப்பதன் மூலம் மோடிக்கான மாற்றாக மக்களின் மதிப்பை பெறும் வாய்ப்பை இறுகப்பற்ற வேண்டும். பாசிசத்தை அதிகாரத்திலிருந்து இறக்கவும், மக்கள் ஆதரவுடன் முழுமையாக வீழ்த்தவும் தமது பங்களிப்பை செலுத்த முன்வரவும் வேண்டும்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here