விடுதலைப் போரின் வீரமரபு 24

 

நேற்றைய தொடர்ச்சி…

அன்றைய சென்னை மாகாண காங்கிரசில் வ.உ.சிக்கு இணையான தியாகியோ, போர்க்குணமுள்ள தலைவரோ கிடையாது. எனினும் வ.உ.சி.க்கு உரிய மரியாதையை காங்கிரஸ் தரவில்லை. அது மட்டுமல்ல, காங்கிரசிலிருந்து வெளியேறிய பின், கேரளத்தின் மாப்ளா எழுச்சியை ஆதரித்து கோவையில் பேசியதற்காக வ.உ.சி மீது அரசதுரோக வழக்கு தொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இந்த வழக்கை எதிர் கொள்வதற்கும் கூட அவருக்கு காங்கிரஸ் உதவவில்லை. வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த இந்த வெறுப்பற்கு வேறொரு வலுவான காரணம் உண்டு. 1925-ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் ஆரம்பிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், தமிழக அரசியலை இரண்டாகப் பிளக்கிறது. 19.6.27 அன்று கோவில்பட்டியில் நடந்த ஒரு கூட்டத்தில் பெரியாருடன் வ.உ.சியும் கலந்து கொள்கிறார். ‘எனது தலைவர்’ என்று பெரியாரை பெருமையுடன் குறிப் பிட்டுப் பேசுகிறார். பின்னர் பேசிய பெரியார், தனக்கேயுரிய பண்போடு அதை மறுக்கிறார். (குடி அரசு, 26.6.27).

பின்னர் காங்கிரசில் மீண்டும் இணைந்த வ.உ.சி, 1927 சேலம் காங்கிரஸ் மாநாட்டில், “இம்மகாநாட்டில் குழுமியுள்ளோரில் பெரும்பாலோர் பிராமணரல்லாதோர். நானும் பிராமணரல்லாதார்தான்” என்று பேசுகிறார். 1928இல் காரைக்குடியில் சைவ சமயத்தோர் மத்தியில் பேசும்போது அவருடைய பேச்சில் பெரியாரின் தாக்கம் அதிகமாகவே தெரிகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு மனுஸ்மிருதியையும் கண்டிக்கிறார், சிரார்த்தம் செய்வதைக் கேலி செய்கிறார். பார்ப்பான் என்ற கற்பிப்பதையும் பயன்படுத்துகிறார். பெண்களின் உரிமை பற்றிப் பேசுகிறார். “தவறு சொல்லை எதிர்ப்பாகவே என்று தெரிந்தால் வள்ளுவரென்ன, சிவபெருமானே ஆனாலும் தள்ளி வைக்க வேண்டியதுதான்” என்று பேசுகிறார். சிறையில் இருந்த போது அவரிடம் நிலவிய சாதி மனோபாவத்தை அவரது குறிப்புகளே கூறுகின்றன. “பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்” என்று ஜெயிலரிடம் போராடிய வ.உ.சி. பெரியாரின் தாக்கத்தால் பெருமளவு உருமாறியிருக்கிறார் என்பதை மேற்சொன்ன நிகழ்வுகள் நிரூபிக்கின்றன.

வ.உ.சி மீது காங்கிரஸ் கொண்டிருந்த வெறுப்புக்கான காரணத்தை இனிமேலும் விளக்கத் தேவையில்லை. 1936-இல் வ.உ.சி இறந்த பிறகும் அவர் மீதான வெறுப்பை காங்கிரஸ் கைவிடவில்லை. திராவிட இயக்கத்தின் மீதும் பெரியார் மீதும் கட்டுக்கடங்காத காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தவரான ம.பொ.சி தன் அனுபவத்தை எழுதுகிறார். 1939இல் வ.உ.சிக்கு ஒரு சிலை வைக்க ம.பொ.சி முயன்றபோது காங்கிரஸ் நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுக்கிறார் சத்தியமூர்த்தி. “வகுப்புவாத உணர்ச்சி காரணமாகத்தான் நான் ஜஸ்டிஸ் கட்சிக்காரரான வ.உ.சிக்கு காங்கிரஸ் மாளிகை முன்பு சிலை வைக்க முயல்கிறேன் என்று (என் மீது) பழி சுமத்தினார் சத்தியமூர்த்தி” என்று எழுதுகிறார் ம.பொ.சி.

பிறகு, வேறு வழியில்லாமல் வ.உ.சியை காங்கிரஸ் ‘கவுரவிக்க’ முயன்றபோது அது அவரை மிகக் கேவலமாக இழிவுபடுத்துவதாக அமைந்தது. 1949இல் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே வ.உ.சி யின் பெயரில் கப்பல் விடப்படுகிறது. துவக்க விழாவில் பேசினார் அன்றைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி: ‘கோரல் மில்ஸ், பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி இவற்றின் ஒத்துழைப்புடனும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடனும்… இந்தக் கப்பல் போக்குவரத்தை இன்று நான் ஆரம்பத்து வைக்கிறேன்…. நம் நாடு முழு விடுதலை பெற்று விட்டது. ஹார்வி கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரது வீட்டில் இன்று நான் விருந்தாளியாகத் தங்கியிருக்கிறேன்… சிதம்பரம் பிள்ளை ஆனந்தக் கண்ணீர் ததும்ப தம் பெரிய கண்களை அகல விரித்து இந்த விழாவையும் என்னையும் பார்த்துக் கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது” என்று கொஞ்சமும் வெட்கமில்லாமல் இந்த பச்சைத் துரோகத்தை பெருமை பொங்க விவரித்தார்.

இறந்தவர் மீண்டும் வரக் கூடுமென்றால், வ.உ.சி தனது பெரிய கண்கள் சிவக்க இந்தப் பச்சைத் துரோகத்துக்காக ராஜாஜியின் குரல் வளையைக் கடித்துக் குதறியிருப்பார். அவர் உயிருடன் இருந்தபோதே

அவர் துவங்கிய கப்பல் கம்பெனி நலிவுற்றது. ”நான் தோற்றுவித்த கப்பல் கம்பெனி நசித்தபின் எங்கள் கம்பெனியைச் சேர்ந்த ஒரு கப்பலை எங்கள் எதிரியான பி.ஐ.எஸ்.என் கம்பெனியாரிடமே அப்போதிருந்த சுதேசிக் கப்பல் அதிகாரிகள் விற்று விட்டது எனது உடைந்த மனதில் உதிரம் பெருகச் செய்தது” என்று குமுறினார் வ.உ.சி.

எந்த எதிகளை எதிர்த்து வ.உ.சி கப்பல் விட்டாரோ, அந்த எதிரியின் தயவிலேயே கப்பல் விட்டு அதற்கு அவரது பெயரையும் சூட்டிக் களங்கப்படுத்தியது ‘சுதந்திர’ இந்தியா. தன்னுடைய சித்திரவதைகள் மூலம் வ.உ.சியின் உடலிலிருந்துதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ரத்தம் குடிக்க முடிந்தது. காங்கிரஸ் துரோகிகளோ, தேச விடுதலைக்காகத் துடித்து அடங்கிய அந்த உள்ளத்தையும் உடைத்து ரத்தம் குடித்து விட்டார்கள்.

  • வே.மதிமாறன்

விடுதலைப் போரின் வீர மரபு – 24

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here