சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் நீதிபதி கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த ஜுலை 24ந்தேதி ரிட் மேல்முறையீடு ஒன்றை விசாரித்தபோது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஒரு தரப்புக்கு வக்காலத்து பதிவு செய்திருந்ததை பார்த்து, அவரை நேரில் அழைத்து வழக்குக்கே தொடர்பில்லாத கேள்விகளைக் கேட்டு விசாரணைக் கூண்டில் ஏற்றியுள்ளது.
குறிப்பிட்ட அந்த வழக்கில் இருந்து தான் விலகியது குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பதிவு செய்த போதும், அவர் மீது அமர்வு தொடங்கிய நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று கூறியது மட்டுமல்லாமல், நீதிபதி சுவாமிநாதன் மீது நீதித்துறை கடமைகளை நிறைவேற்றுவதில் வகுப்புவாத மற்றும் சாதி சார்புகளை வெளிப்படுத்துவதாக வாஞ்சிநாதன் சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டியதாகக் குறிப்பிட்டு, நீதிபதிக்கு முறையற்ற நோக்கத்தை காரணம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டி கேள்வி எழுப்பியது.

மேலும், வழக்கறிஞர் வாஞ்சிநாதனின் நடத்தை ஒரு வழக்கறிஞருக்குத் தகுதியற்றது என்று கூறிய நீதிமன்ற அமர்வு, இந்திய பார் கவுன்சிலால் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, இடைநீக்கம் ரத்து செய்யப்பட்ட பிறகு அவர் தனது நடத்தையை மேம்படுத்திக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தனது நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லை என்றும், நீதித்துறையை தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதாகவும், நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிப்பது ஒரு விஷயம், ஒரு நீதிபதி மீது அவதூறு பரப்புவது வேறு விஷயம் என்றும், வாஞ்சிநாதன் கூறிய அவதூறான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற அவமதிப்பு குற்றமாகும் என்று அச்சுறுத்திவிட்டு, வாஞ்சிநாதனிடம் அவர் தனது கூற்றில் உறுதியாக இருக்கிறாரா என்பது குறித்து கேள்வி எழுப்பி உள்ளது.
எந்த தயாரிப்பு இல்லாமல் இருந்த வழக்கறிஞரை பார்த்து இந்த (blitzkrieg) எதிர்பாரா தாக்குதலுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று கோரியுள்ளது நீதிமன்றம். அதற்கு அவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டால் பதிலளிப்பதாக கூறியுள்ளார். எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்க கோரிய வழக்கறிஞர் வாஞ்சிநாதனை பார்த்து, “கேள்விக்குப் பதிலளிக்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஒரு கோழையா” என்று திமிர்த்தனமாக பேசி, ஒரு வழக்கறிஞரை நீதிமன்றத்திலேயே அவமதிப்பு செய்துள்ளார் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்.
மேலும், எழுத்துப்பூர்வமாக அவரிடம் கேள்வி எழுப்பி, ஜூலை 28 ஆம் தேதி மதியம் 1:15 மணிக்குள் நேரில் பதிலளிக்குமாறு கேட்டுள்ளது.
ஏன் இந்த திடீர் தாக்குதல்?
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நீண்ட காலமாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருபவர். மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம் உள்ளிட்ட புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து தில்லைக் கோயில் தமிழ் பாடும் உரிமைப் போராட்டம், வைகுண்டராசனின் தாதுமணல் கொள்ளை எதிர்ப்புப் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் எனப் பலவற்றில் முக்கிய பங்காற்றியுள்ளார். அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்குகளையும் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த வழக்கில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமனம் செல்லாது என தீர்ப்பு வழங்கிய அமர்வில் ஜி.ஆர்.சுவாமிநாதன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு வழக்குகளில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும் வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கும் காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளது.
நீதித்துறை பாசிசம் குறித்த கட்டுரைகள்:
காவிமயமாகிய நீதித்துறை: – ஜி.ஆர்.சுவாமிநாதன்-லெட்சுமி நாராயணன்களே சாட்சி!
இந்திய நீதித்துறையின் அவலமும் – பாசிசக் காவிக் கூட்டத்தின் ஆட்டமும்!
இனியாவது மக்கள் பக்கம் நிற்குமா இந்திய நீதித்துறை?
நீதித்துறையின் அன்னா ஹசாரே! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்!
ஹத்ராஸ் சிறுமியை மீண்டும் கொன்ற நீதித்துறை
நீதித்துறை கவலைக்கிடம்! ஏமாற்றத்தில்/ வருத்தத்தில் சட்ட உலகம்!
சமீபத்தில் மதுரையில் நடந்த டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புப் போராட்டம், திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் கும்பலை எதிர்த்துப் போராட்டம் எனத் தொடர்ந்து களத்தில் இறங்கி செயல்பட்டு வருபவர். வாஞ்சிநாதனின் இத்தகைய போராட்டங்களைத் தங்கள் செயல்திட்டத்துக்கு இடையூறாக கருதுகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல். அவரை எப்படியாவது முடக்க வேண்டும் என எத்தனித்துக் கொண்டு இருக்கும் சங்கி கும்பல்.
இந்நிலையில், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். “உச்சநீதிமன்றத்திற்கு மட்டும் அனுப்பப்பட்ட அந்த புகார் வழக்கறிஞர்கள் மத்தியிலும், சமூக வெளியிலும் பரப்பப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜராஜன் என்பவரே இதை முதலில் வழக்கறிஞர்கள் குழுவில் பதிவிட்டுள்ளார். அவருக்கு இந்த புகார் கடிதம் எப்படி கிடைத்தது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவுள்ளது. இது தனது பணி பாதுகாப்புக்கும், உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுபடுத்தியுள்ளது” என்று பேட்டி அளித்துள்ளார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். மோடியின் ஆட்சியில் அனைத்து துறைகளைப் போல் நீதித்துறையும் காவி மயமாக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றங்கள் தானாக ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது பிராமண சாதி சாய்வுடனும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த சார்புடனும் நீதி பரிபாலனை செய்வதாகவும் குற்றஞ்சாட்டி அவர் மீது விசாரணை கோரியும், அதற்கு சான்றாக, குறிப்பிட்ட வழக்கறிஞரின் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்தது, அங்கப்பிரதட்சணம் வழக்கில் மூட நம்பிக்கைக்கு ஆதரவாக, சுயமரியாதைக்கு எதிராக அவர் அளித்த தீர்ப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் நியமனம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது தன்னை ஒரு “ஸ்மார்த்த பிராமணர்” என்று கூறியது மட்டுமல்லாமல், பிராமணரல்லாதவர்கள் அர்ச்சகர் ஆவது குறித்து ஆட்சேபம் தெரிவித்தது உட்பட 15 நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி ஆதாரபூர்வமாக அளித்த புகார் கடிதம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளது. அவரது தனிப்பட்ட கோபத்தை வரைமுறையின்றி வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், தானே அது குறித்து ஒரு நீதிமன்ற அவமதிப்பு விசாரணையைத் தொடங்கி உள்ளார். வழக்கறிஞர் வாஞ்சிநாதனை “நீங்கள் கோழையா” என்று கேள்வியெழுப்பிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தன் மீதான புகார் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றதை கண்டு அஞ்சி கோழைத்தனமாக தானே தன் வழக்கில் நீதிபதியாக அமர்ந்துள்ளார். சற்றே நேர்மையும், தைரியமும் இருப்பவராயின் இந்த வழக்கை அவர் தொடங்கி இருக்கக் கூடாது. உச்சநீதிமன்றத்தில் விசாரணை வந்திருந்தால் அதை எதிர்கொண்டு இருக்க வேண்டும். புகார் கொடுத்த வரை அதிகார திமிருடன் மிரட்டல் விடுத்திருக்கக்கூடாது.
நீதித்துறை ஆர்.எஸ்.எஸ் மயமாகியுள்ளதிற்கு இது ஓர் சான்று. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய புகார் மனு வெளியே வந்ததிலிருந்தே நாம் இதை புரிந்துக் கொள்ள முடியும். நீதித்துறையில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக அமர்ந்துக் கொண்டு பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நீதியை வழங்கிக் கொண்டுள்ளது. நீதிபதிகள் ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் கலந்துக் கொள்வது மட்டுமல்லாமல் மதசார்பின்மைக்கு எதிராக பேசுவதும் நடந்துள்ளது. நீதித்துறை பாசிசத்தை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் இணையதளத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளோம்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் மீதோ எந்த தனிநபர் மீதோ புகார் அளிக்கும் அரசியல் அமைப்பு சட்ட உரிமையைப் பறிப்பதாகும். இது வாஞ்சிநாதன் மீதான பாசிச தாக்குதல் மட்டுமல்ல, சமூக பொறுப்புணர்வுடன் இயங்கும் வழக்கறிஞர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் என்பதாகவே எடுத்துக் கொள்ள முடியும். இந்த வழக்கை திரும்பப் பெறக் கோரிப் போராடுவது வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள் அனைவரின் கடமையாகிறது.
- திருமுருகன்







வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சமூக உரிமை சார்ந்து மக்களுக்காக களத்திலே போராடக் கூடிய வழக்கறிஞர்.
அவரது சமூகப் பணிக்கு பாசிச கும்பல் நீதித்துறை மூலமாக அடக்குமுறை செலுத்த பார்க்கிறது.
இந்த தருணத்தில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு பக்க பலமாக நின்று பாசிச சிந்தனை கொண்ட நீதிபதிகளை நீதிமன்றத்தில் இருந்து அகற்றக்கூடிய போராட்டத்தை வலுவாக நாம் கட்டமைக்க வேண்டும்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் அவர்கள் தமிழகத்தில் மக்கள் பிரச்சினைக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளார் தில்லை கோயில் நுழைவுப் போராட்டம் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் அனைத்து சாதியினர் அர்ச்சகராக நியமிக்கும் போராட்டம் தாது மணலுக்கு எதிரான போராட்டம் மதுரை டங்ஸ்டன் எதிரான போராட்டம் பாசிச கோமாளிகளின் முருகன் மாநாட்டுக்கு எதிரான துணிவு மிக்க மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு உருவாக்கி சங்கிகளின் கலவரத்துக்கு எதிரான போராட்டத்தில் மக்களோடு களத்தில் நின்றவர் அவரை நீதிபதி ஜி ஆர் சுப்பிரமணியன் தமிழகத்தில் கடந்த காலங்களில் பல வழக்குகளில் ஒரு தலை பட்சமாக ஆர்எஸ்எஸ் பிஜேபியின் கருத்தியல்படி பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார் இதை நீதிமன்றத்தில் பலமுறை நீதிபதி ஜி ஆர் சுப்பிரமணியன் அவர்களுடன் தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்துள்ளார் ஆனால் நீதிபதி தோழர் வாஞ்சிநாதன் வாதத்தை ஒருபோதும் பொருட்படுத்தாமல் ஒரு பாசிச சர்வாதிகாரியாக நீதிமன்றத்தில் செயல்பட்டுள்ளார் கடந்த கால தீர்ப்புகளை உச்ச நீதிமன்றத்தில் புகார் அளிக்கும் படி நீதிபதி ஜி ஆர் சுப்பிரமணியன் குறித்து ஒரு கடிதம் எழுதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தோழர் வாஞ்சிநாதன் கடிதம் அனுப்பி உள்ளார் ரகசியமாக அனுப்பப்பட்ட கடிதத்தை அதிமுக வை சேர்ந்த வழக்கறிஞர் ராஜராஜன் அவர்கள் சமூக ஊடங்களிலே பரப்பி உள்ளார் இது ஒரு தனிநபர் பாதுகாப்பையை மீரிய செயல் நீதிமன்றங்களில் பாசிசம் மையம் ஆகுவதை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது அதன் வெளிப்பாடுதான் இந்த கடிதத்தை கண்டு பீதி அடைந்த நீதிபதி ஜி ஆர் சுப்பிரமணியன் தோழர் வாஞ்சிநாதனுக்கு சர்வாதிகார முறையில் சம்மனை அனுப்பி நீதிமன்றத்திற்குள் பல வழக்கினர்கள் முன்பாக பல கேள்விகளைக் கேட்டு தோழர் வாஞ்சிநாதன் அவர்களை அவமானப்படுத்தி உள்ளார் தோழர் வாஞ்சிநாதன் எழுத்துப்பூர்வமாக குற்றச்சாட்டு கூறினால் அதற்கு தான் எழுத்துப்பூர்வமாக பதில் அளிப்பதாக நீதிபதியிடம் கூறியுள்ளார் ஆத்திரம் அடைந்த நீதிபதி நீ ஒரு கோழையா என்று அதிகார தோணியில் பல வழக்கறிஞர்கள் முன் அவமானப்படுத்தி உள்ளார் பேசி உள்ளார் ஆகவே ஒரு மனிதன் நீதிமன்றத்தை நாடும்பொழுது நீதிபதிகள் கடவுளுக்கு இணையவானவர்களாக கருதப்படுகிறார்கள் அப்படிப்பட்ட நீதிபதி ஜி. ஆர். சுப்பிரமணியன் தான் ஒரு சங்கி என்பதை நிரூபித்துள்ளார் அவர் ஏற்றுக்கொண்ட உறுதிமொழியை காற்றில் பறக்க விட்டு அரசியல் சாசன சட்டத்தையே காலில் போட்டு மிதித்து ஒரு பாசிச சர்வாதிகாரி ஹிட்லரை போல் நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளார் இது வன்மையாக கண்டிக்கப்படக்கூடிய ஒரு செயல் ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் வழக்கறிஞர்களும் நீதிமன்றம் பாசிசம் மையம் ஆகுவதை கண்டித்து நீதிபதி ஜி ஆர் சுப்பிரமணியினுடைய அதிகாரப் போக்கை கண்டிக்க தமிழ்நாடு முழுவதும் எழுச்சி உருவாக்க வேண்டிய தருணம் இது என்பதை நாம் உணர வேண்டிய ஒரு கட்டுரையாக இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது .
கட்டுரை ஆசிரியர் திருமுருகன் அவர்களுக்கு நன்றி
கரூர் பகுதி கோவில் விழா ஒன்றில் பார்ப்பனர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு முடித்த பின் வரிசையாகக் கிடக்கின்ற எச்சில் இலைகள் மீது பக்தியின் பெயரால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உருண்டு புரண்டு தமது ‘பக்தி பரவசத்தை’ ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டின. இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரி இதே நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அமர்வுக்கு வழக்கு செல்கிறது. இந்த நீதிபதியோ ‘இது தொன்று தொட்டு பக்தர்களின் பழக்கவழக்கங்களுக்கும் நம்பிக்கைக்கும் உரிய நிகழ்வாக நடந்து வருகின்றன. அவருடைய மத இறை நம்பிக்கையில் நீதிமன்றம் குறிக்கிட அவசியமில்லை’ என்ற பாணியில் தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
ஒரு கூட்டத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றும் பொழுது ‘சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடித்து பேசினார். அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்ற வழக்கில் ‘நானே ஒரு ஸ்மார்த்த பிராமணன்; நானே நினைத்தாலும் கோவில் அர்ச்சராக முடியாது’
என்ற பாணியில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் அடையாளங்களை காண்பித்துக் கொண்டார். பல்வேறு வழக்குகளில் சங்கிகளுக்கு ஆதரவாக மட்டுமே இவர் தீர்ப்பளித்து வந்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி சம்பந்தப்பட்ட அதிகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பின்தள்ளி
தமிழ்நாடு அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார்.
மூத்த வழக்கறிஞர் வில்சன் MP மற்றும் அரசு மூத்த வழக்கறிஞர் ராமன் முதலானோரை உதாசீனப்படுத்தி அவர்களை அவமானப்படும்படி செய்தார். எனவே கட்டுரையாளர் விளக்கிக் கூறியிருக்கபடி,
இவருடைய நீதிபதி பரிபாலன முறைக்கு
எதிரான தீர்ப்புகள், அகம்பாவிதமான பேச்சுக்கள் அனைத்தையும் தொகுத்தே போராளி வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஜி ஆர் சுவாமிநாதன் பற்றி புகார் அனுப்பியுள்ளார்.
அதை எவ்வகையிலோ சங்கிகள் துணையுடன் நகல் பெற்று ராஜராஜன் என்ற அதிமுக வழக்கறிஞர் கசிய விட, அது GRS
க்கும், சங்கிகள் சார்ந்த கூட்டத்தினருக்கும்
கோபக் கனலை உருவாக்கி விட்டது. அதனுடைய வினையாற்றலே தோழர் வாஞ்சிநாதனுக்கு எதிராக GRS போடும் சதிராட்டமாகும். கட்டுரையில் இது தொடர்பாக நன்றாகவே எடுத்துக் கூறப்பட்டுள்ளது. நாம் தோழர் வாஞ்சிநாதன் அவர்களுக்கு ஆதரவாக தோழமைக் கரம் உயர்த்தி போராட்டக் களம் காண்போம்! சட்டத்தின் ஆட்சியையே கேள்விக்குள்ளாக்கி சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் கோழைகளுக்கு முடிவு கட்டுவோம்.
கடவுள் பார்ப்பனர்களுக்கும் கட்டுப்பட்டது என பார்ப்பனிய வேதம் கூறலாம்
ஆனால் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் மக்களுக்கு கட்டுப்பட்டவர்கள் மக்களுக்காக தான் நீதிமன்றங்கள் நீதிபதிகளும் இருக்க வேண்டுமே தவிர நீதி கூறுவதால் அவர்கள் வேதம் சொல்லும் கடவுள் அல்ல என்பதனை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்,
அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் மக்களுக்கு கட்டப்பட்டவை அது மக்களை ஏறி தாக்கி வரும் சூழலில் மக்கள் கோடிக்கால் பூதமாய் வெகுண்டு எழுந்தால் கடவுள்கள் என்று கூறப்படும் இது போன்ற ஆதிக்க வாதிகள் காணாமல் போவார்கள் என்பதனை நாம் புரிய வைக்க வேண்டும்….
மக்கள் வழக்கறிஞர் தோழர் வாஞ்சிநாதன் அவர்களை அவதூறாக பேசி மிரட்டிய நீதிபதி சுவாமிநாதன் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் மக்கள் மன்றத்தில் நிறுத்துவோம்…