ந்தியா ஜனநாயக நாடு. இந்தியாவில் பெண்களை கடவுளாக நினைக்கிறோம் என்றெல்லாம் மேடை போட்டு பேசும் அரசியல்வாதிகளை பார்த்திருப்போம். ஆனால் இந்தியாவில் பெண்களை கடவுளாகத் தான் பார்க்கிறார்களா? இந்தியாவில் பெண்களின் நிலை என்ன? என்பதை ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு கொலை வழக்கும், குற்றவாளிகளின் விடுதலையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மாவட்டம் தான் ஹத்ராஸ். 2020ஆம் ஆண்டு இந்தியாவை பிரபலப்படுத்திய (அம்பலப்படுத்திய) ஊரின் பெயர். இந்த ஊர் இந்தியாவை பிரபலப்படுத்த காரணம் இங்கு நடந்த பாலியல் வன்புணர்வு கொலை தான். உபி பாசிஸ்ட்  யோகியின் ஆட்சியில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்தது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட உயர்சாதி சமூகத்தை சேர்ந்த 4 பேரில், மூவருக்கு விடுதலையளித்து  தீர்ப்பு வழங்கியுள்ளது உத்திரப்பிரதேச நீதிமன்றம்.

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வும், சிறுமியின் மரணமும்

கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள பூல்ஹர்கி கிராமத்தில் தாக்கூர் உயர்சாதியை சார்ந்தவர்களின் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த பொழுது மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிப் போய் பார்த்த தாய் தனது மகள் நாக்கு அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்தார். பின்னர் தனது மகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சந்த்பா காவல் நிலையத்திற்கு  சென்றனர்.

சந்தீப், ராமு, லவ்குஷ் மற்றும் ரவி  என்ற ஆதிக்க சாதி கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் காவல்துறையோ ஆதிக்க சாதி கும்பல் மீது வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட சிறுமியை அழைத்து செல்லுமாறும் மிரட்டியுள்ளது. பின்னர் மக்கள் போராட்டத்திற்கு பிறகே வழக்கு பதியப்பட்டது.

அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 19 வயது சிறுமியின் உடல்நிலை மோசமானதால், உயர் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சப்தார்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 15 நாட்கள் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பலனளிக்காததால் செப்டம்பர் 30 ஆம் தேதி மரணமடைந்தார் என்று சொல்வதை விட கொல்லப்பட்டார் என்பதே சரியாக இருக்கும். அந்த அளவுக்கு சிறுமியின் உடலை காயப்படுத்தியிருந்தது பாலியல் வல்லுறவு கும்பல்.

தலித் சிறுமிக்கு இழைக்கப்பட்ட குற்றம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியது. ஆதாரங்களை மறைக்க குடும்பத்தின் அனுமதியின்றி சிறுமியின் உடலை தகனம் செய்ததாக உத்திரப்பிரதேச காவல்துறை மீது குற்றம் சாட்டப்பட்டதால் இந்த குற்றம் பரவலான கவனத்தைப் பெற்றது.

குடும்பத்தினர் கூறுகையில்  “எங்களை வீட்டில் அடைத்து வைத்து விட்டு, எங்களது மகளின் உடலை அதிகாலை 2.30 மணிக்கு எரித்து விட்டனர்” எனக் கூறினர், இது குறித்து நீதிமன்றம்; உபி, ஆளும் பாஜக அரசிடம்  விளக்கம் கேட்கையில், ‘லட்சக்கணக்கான மக்கள் கூடி போராட்டம் நடத்த வாய்ப்பிருந்ததாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது. அதனால் கலவரங்கள் ஏதும் நடந்து விடாமல் தடுப்பதற்காக செய்தோம்’  என தனது குற்றத்தை மறைக்க அரசு இயந்திரத்தை பயன்படுத்திக் கொண்டது யோகி அரசாங்கம்.

காவல்துறை ஆதிக்க சாதிக்கு ஆதரவு:

ஆதாரங்கள் தெளிவாக இருந்தபோதிலும், உள்ளூர் போலீசார் வன்புணர்வுக்கான சாத்தியத்தை ஆரம்ப கட்டத்தில் விசாரிக்கவில்லை.உள்ளூர் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட ஆரம்ப FIR இல் சந்தீப் மீது பாலியல் வன்புணர்வு அல்லது கூட்டு பலாத்கார குற்றச்சாட்டுகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை; வலுவில்லாத சட்டம் IPC இன் பிரிவு 354, (இந்த தண்டனை சட்டத்தின் அடிப்படையில் யாராவது ஒரு பெண்ணை தாக்கினால் அல்லது அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்டால் குறைந்த பட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்படும்) பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்கு மூலத்தின் படி FIR-ல் சேர்க்கப்பட்டது.

சிபிஐக்கு வழக்கு மாற்றம்:

சிபிஐ விசாரணையை எடுத்துக் கொண்ட பிறகு, கும்பல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான ஐபிசி பிரிவுகள் மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் FIR  பதிவு செய்தது. ஆனால் உள்ளூர் காவல்துறையால் பாதுகாக்கப்படக்கூடிய முக்கியமான ஆதாரங்கள் விசாரணையின் ஆரம்ப கட்டங்களில் தொலைந்துவிட்டன என்று கதைக் கட்டியது.

காலம் செல்லச் செல்ல, உ.பி.யில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியது போல் இது பாலியல் வன்புணர்வு வழக்கு அல்ல என்பதை நிறுவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர். பாலியல் வன்புணர்வு  சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதற்கும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை திசைதிருப்புவதற்கும் ஆளும் பாஜக அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் ஒரு வழியாக இது பார்க்கப்பட்டது.

உ.பி.யின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தடய அறிவியல் ஆய்வகத்தின் (எஃப்எஸ்எல்) அறிக்கை, பாதிக்கப்பட்ட 19 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்படவில்லை, ஏனெனில் விந்து எதுவும் கிடைக்கவில்லை” என்று கூறியது.

பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாகக் கூறி அலிகார் மருத்துவமனையில் தனது முதல் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் பதிவுசெய்த மூன்று நாட்களுக்குப் பிறகு, உண்மைச் சம்பவம் நடந்த 11 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 25 அன்று உ.பி காவல்துறையின் முடிவுகளின் அடிப்படையில் FSL சோதனை நடத்தப்பட்டது.

பாலியல் பலாத்கார வழக்குகளின் மாதிரிகள்: குற்றம் நடந்த 72-90 மணி நேரத்திற்குள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர் சிறுநீர் கழிக்காத, மலம் கழிக்காத, அல்லது குளிக்காமல் இருக்கும் போது  சேகரிப்பது, துல்லிய முடிவுகளைத்தரும் என்றும்  மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். இது கேள்வியை எழுப்புகிறது. அத்தகைய தாமதமான அறிக்கை துல்லியமான, உறுதியான முடிவுகளை வழங்க முடியுமா?

பாலியல் வன்புணர்வு வழக்குகளில் முக்கிய ஆதாரம், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் தான். ஆனால் காவல்துறையும் அரசும் திட்டமிட்டு ஆதாரங்களை அழிக்கவே சிறுமியின் உடலை புதைக்காமல் தகனம் செய்துள்ளது அன்றே அம்பலமானது.

வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தின் அநீதியும்:

2020  ஆம் ஆண்டு டிசம்பரில்,  ஹத்ராஸில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ.    குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீது SC/ST சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளுடன் கூட்டுப் பலாத்காரம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளையும் சுமத்தியது.

சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த பின்னர், கொலை முயற்சி, கூட்டு பலாத்காரம் மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மீதான அத்துமீறல் ஆகிய குற்றங்களில் நான்கு குற்றவாளிகளான சந்தீப், ராமு, லவ்குஷ் மற்றும் ரவி ஆகியோரை ஹத்ராஸ் போலீசார் கைது செய்தனர்.

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பின்னர் சிறப்பு நீதிமன்றத்தால், 4 பேரில் 3 பேர் குற்றவாளிகள் இல்லை என்றும் நான்காவது குற்றவாளியான சந்தீப் சிசோடியாவுக்கு – கொலைக்கு சமமான ,குற்றமற்ற கொலை மற்றும் SC/ST சட்டத்தின் பிரிவுகளின் கீழ் தண்டனையும் வழங்கி  தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும், அமைப்புகளும் கண்டித்துள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பில்கிஸ் பானு வழக்கில் இப்படி அநீதியான தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம். தற்போது ஹத்ராஸ் வழக்கிலும் அநீதியான தீர்ப்பு வழங்கி பாசிச கும்பலுக்கு துணைபோயுள்ளது  ‘அ’நீதிமன்றங்கள்.

இதையும் படியுங்கள்: சித்திக் காப்பன் சந்தித்த கொடுமைகள்..

ஹத்ராஸ் சம்பவத்தை பற்றி விசாரிக்க சென்ற சித்திக் காப்பான் என்ற பத்திரிக்கையாளரை அடக்குமுறையை கையாண்டு சிறையில் வைத்த காவல்துறையும் நீதிமன்றமும் இரண்டாண்டுகளுக்கு பின்னர் நிபந்தனை ஜாமீன் வழங்கி, பின்னர் விடுதலை செய்தது. ஆனால் குற்றம் செய்த கும்பலை குற்றவாளிகள் அல்ல என்று விடுதலை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம் இருந்தும் இது தான் நீதி என்றால், பாதிக்கப்பட்ட சாமானிய மக்கள் எதை நம்பி நீதிமன்றம் செல்வார்கள்?

ஆரம்பக் கட்டத்தில் சிறுமியின் கொலைக்காக போராடிய கட்சிகள் அதன் பிறகு கண்டு கொள்ளவில்லை. கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பம் CRPF வீரர்களால் சூழப்பட்டு வீட்டை சுற்றி கம்பி வேலிகளால் அடைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தை பார்க்க எந்த அரசியல் கட்சிக்கும் அனுமதியில்லை. இப்பேற்பட்ட சூழ்நிலையிலும் இந்த குடும்பம் நீதிக்காக போராடியுள்ளது. ஆனால் உத்திரபிரதேச நீதிமன்றமோ அநீதியை வழங்கியுள்ளது. இந்தியாவையே உலுக்கிய பாலியல் வல்லுறவு கொலை தான் ஹத்ராஸ் சிறுமியின் படுகொலை. குற்றம் நடந்த நாள் முதலே அதனை ஊத்தி மூட படாதபாடு பட்டது பாசிஸ்டுகளின் உத்திரபிரதேச அரசாங்கம். ஆரம்பத்தில் வேகம் காட்டிய அரசியல் கட்சிகள் போகப்போக கண்டுக்கொள்ளவில்லை. குற்றவாளி மேல்சாதியை சேர்ந்தவன் என்பதாலோ என்னவோ பின்வாங்க ஆரம்பித்தார்கள். ஆனாலும் பீம்ஆர்மி உள்ளிட்ட ஒரு சில அமைப்புகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பக்கம் நின்றார்கள்.

பாசிஸ்டுகள் அரசு கட்டமைப்பு முழுவதும் தனது தீவிர விசுவாசிகளை நிரப்பி வருகிறார்கள். நமது குடும்பத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்று அமைதியாக கடந்து சென்றோமானால் நாளை அதன் விளைவுகளை நாமும் சந்திக்க நேரிடும். அவர்களை எதிர்க்க தனித்தனியான போராட்டங்கள் பலன் தராது. மக்களை ஒன்றிணைப்போம், இந்த சமூகத்திற்கும் மனிதகுலத்திற்கும் எதிராய் இருக்கும் காவி கும்பலை வேரோடு பிய்த்தெறிவோம்.

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here