இலங்கை அனுரவின், ‘ சிவப்பு சாயம்’ வெளுத்தது!

இலங்கை: அனுரவின், ‘ சிவப்பு சாயம்’ வெளுத்தது!
இலங்கை யின் சிங்கள இளைஞர்கள் மற்றும் பௌத்தப்பிக்குகள் அனுரவின் ஆட்சிக்கு எதிராக, “அனுர கோ ஹோம்” என்ற இயக்கத்தை துவங்கியுள்ளதாக இரு வேறு செய்திகள் அங்கிருந்து வருகின்றன.

இலங்கை அனுரவின், ‘ சிவப்பு சாயம்’ வெளுத்தது!

“இலங்கையில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகள் திட்டமிட்டு நடத்திய மறுகாலனியாக்கத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அதற்கு எதிராக தனது வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் வராதா என்ற எதிர்பார்ப்பிலும், ஊழல், கிரிமினல்மயமான ராஜபக்சே ஆட்சிக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர் என்பது தான் நிலவரம்.

இப்படி ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களித்ததை வைத்துக் கொண்டு மாற்று அரசியலுக்கு மக்கள் தயாராகி விட்டார்கள் என்று மதிப்பீடு செய்வதோ அல்லது இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்து செங்கொடி பூத்துக் குலுங்குவதாக பெருமைப்பட்டுக் கொள்வதோ இலங்கையில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கும் எந்த வகையிலும் பயன் அளிக்காது.”என்று நவம்பர் 19, 2024 புதிய ஜனநாயகம் தினசரியில் எழுதி இருந்தோம்.

ஆனால் இதற்கு நேர் மாறாக இலங்கையில் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்து விட்டனர் என்றும் ஆசிய நாடுகளில் இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இடதுசாரி எழுச்சி உலகம் முழுதும் உள்ள இடதுசாரிகளுக்கு ஒரு உந்து சக்தி என்றும், இந்தியாவில் உள்ள போலி இடதுசாரிகள் கூச்சலிட்டு வந்தனர்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்தியா டுடே துவங்கி டிராட்ஸ்கிய ஆதரவாளர்களால் நடத்தப்படுகின்ற எம் ஆர் ஆன்லைன் வரை அனைவரும் இலங்கையில் ஒரு இடதுசாரி ஆட்சி வந்துவிட்டது என்று வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக் குதித்தனர்.

ஆனால் ஐஎம்எப் மற்றும் சீனாவின் தலைமையிலான பிரிக்ஸ் கூட்டணியின் நாடுகளில் இருந்து பெறப்படுகின்ற கடன் ஆகியவற்றை வைத்துக்கொண்டு இலங்கையில் பொருளாதாரத்தை மீட்கப் போவதாக அனுர மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

இத்தகைய வாக்குறுதிகள் அனைத்தும் மோசடியானது என்பதை தனது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்ட இலங்கை புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிய கட்சி கீழ்க்கண்டவாறு கடந்த ஜூன் 2025-ல் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது.

“நாடும் மக்களும் எதிர் நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கும், தீர்க்கப்படாது நீடித்துவரும், தேசிய இனங்கள் எதிர்நோக்கி வரும் தேசிய இனப் பிரச்சினைக்கும் உரிய தீர்வுகள் கிடைக்கும் எனும் நம்பிக்கையிலேயே .ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வாக்களித்து பதவிக்குக் கொண்டு வந்தனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவிக்கும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றத்திற்கும் தமது பிரச்சனைகளுக்குத் தீர்வு வரும் என்று நம்பியே கடந்த கால ஆட்சியாளர்களை நிராகரித்து தேசிய மக்கள் சக்தியினருக்கு மக்கள் வாக்களித்தனர்.

ஆனால் எட்டு மாதங்கள் கடந்த நிலையில் நாடும் மக்களும் எதிர் நோக்கியுள்ள மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கும் வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளடங்கிய தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணும் அறிகுறிகள் எதுவுமே காணப்படவில்லை. மக்களைத் திசை திருப்பி வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்தப்படுகிறது.

பதவிக்கு வருவதற்கு முன்பு மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றி அனுரகுமார அரசாங்கம் கடும் மௌனம் காத்து வருகிறது. “வளமான நாடு அழகான வாழ்க்கை” எனும் சொற்தொடர் பதவிக்கான வெறும் அலங்கார வார்த்தைகளாகி அவை மறக்கப்பட்டும் வருகின்றன.

படிக்க: இலங்கை போராட்டம் | போராட்ட வழியை மக்களே தீர்மானிப்பார்கள்!

அதேவேளை அமெரிக்கா தலைமையிலான ஐ.எம்.எப் எனும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனும்- வட்டியும் தொடர்வதற்கு அதன் மோசமான நிபந்தனைகள் மறுபேச்சின்றி ஏற்கப்பட்டும் உள்ளன. அதன் விளைவே அண்மைய பதினைந்து வீத மின் கட்டண உயர்வாகும். அதே போன்றே வற்வரி உட்பட வரி விதிப்புகளிலும், ஐ எம் எப் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலுமே மருந்துகள் உட்பட பொருட்களின் விலைகள் குறைவடைய முடியாது உள்ளன.

அரிசி முதல் உப்பு, புளி வரையான அன்றாட உணவுப் பொருட்களை உழைக்கும் மக்கள் வாங்க முடியாது வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் கடும் பாதிப்புகளைப் பெற்று வருகின்றனர். மாற்று வழிதெரியாது மக்கள் திணறித் திண்டாடி நிற்கின்றனர். இந் நிலையில் ஆட்சியில் இருப்பவர்கள் எட்டு மாதங்களுக்கு முன்பு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை. மக்கள் நினைவுபடுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதேவேளை இலங்கையின் வளங்கள் இந்திய ஆளும் வர்க்கக் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது. ஜனாதிபதி அனுரவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இதுவரை பாராளுமன்றத்திற்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தப்படவில்லை. ஏன் என்பது தான் கேள்வியாக உள்ளது.” என்று 23.6.2025-ல் அனுரவின் எட்டு மாத ஆட்சிக்கால அனுபவத்தை விமர்சித்து அறிக்கை வெளியிட்டது.

படிக்க: இலங்கை: தேவை புரட்சிகர கட்சி – ஐக்கிய முன்னணி – படை எனும் மந்திர ஆயுதங்கள்!

இந்த நிலையில் இலங்கையின் சிங்கள இளைஞர்கள் மற்றும் பௌத்தப்பிக்குகள் அனுரவின் ஆட்சிக்கு எதிராக, “அனுர கோ ஹோம்” என்ற இயக்கத்தை துவங்கியுள்ளதாக இரு வேறு செய்திகள் அங்கிருந்து வருகின்றன.

இந்த செய்திகள் உண்மைத் தன்மை ஒரு புறம் இருக்க இலங்கையில் சிங்கள பேரினவாத ராஜபக்சே கும்பல் ஆட்சியை தூக்கி எறிந்து உருவான ஜேவிபி தலைமையிலான மக்கள் சக்தி என்ற இயக்கம் உண்மையிலேயே மக்களுக்கு விடிவை தருகின்ற அரசியல் பொருளாதார திட்டங்களை முன் வைத்தது இல்லை.

மாறாக ஏகாதிபத்திய முதலாளித்துவ உலக கட்டமைப்பை ஆதரித்துக் கொண்டே சில சீர்திருத்தங்களை கொண்டு வருவது விரக்தி அடைந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு பெயரளவிலான சில அம்சங்களை செய்து கொடுப்பது என்பதை தாண்டி அவரது ஆட்சியில் எதுவும் நிறைவேறப் போவதில்லை.

புதிய ஜனநாயகப் புரட்சி ஒன்றே இலங்கையின் தற்போதைய நெருக்கடிகள் அனைத்திற்கும் தீர்வாகும் என்ற போதிலும் அதற்கு எதிராக தற்காலிகமாக முன்வைக்கப்படுகின்ற கூட்டணி அரசாங்கங்கள் ஏகாதிபத்திய முதலாளித்துவ பொருளாதார பொருளாதாரக் கொள்கைகளுக்கு மாற்றாக ஒன்றையோ அல்லது இலங்கையில் உள்ள சிங்கள பேரினவாத, பாசிச கும்பலுக்கு எதிராக ஒரு மாற்றையோ முன் வைக்கவில்லை என்பதால் எப்படிப்பட்ட ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருந்தாலும் அல்லது எழுச்சியின் மூலமாக ராஜபக்சே தூக்கி எறியப்பட்டிருந்தாலும் மாற்று ஒன்று இல்லாமல் பழைய வழியிலேயே சென்று கொண்டுள்ளது.

ஆனால் இலங்கையில் சிவப்பு பூத்துக் குலுங்குவதாக முன்வைத்த போலி இடதுசாரிகளின் சிவப்பு சாயம் மட்டுமின்றி அனுரவின் சிவப்பு சாயமும் படிப்படியாக வெளுக்க துவங்கியுள்ளது.

முகம்மது அலி.

நன்றி: புதிய ஜனநாயம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here