நினைவுகள் அழிவதில்லை,  தோழர் Shahul Hameed பதிவுக்கு நன்றி:

ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்வதை விட, ஒரு கம்யூனிஸ்ட்டின் மனைவியாக வாழ்வது மிகப்பெரும் தியாகம்.. அதே நேரம், ஒரு கம்யூனிஸ்ட்டாகவும்,ஒரு கம்யூனிஸ்ட்டின்
மனைவியாகவும் வாழ்க்கை நடத்துவது, அதை விட பெரிய தியாகம்… அப்படி ஒரு ஆளுமையை, ஏறத்தாழ 42ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மீண்டும் காணும் வாய்ப்பு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் வாய்த்தது….

தோழர் ஜானகி  ராமச்சந்திரன் அவர்கள்.. தோழர்  PRC(P.Ramachandran)அவர்கள் மனைவி; Dr.தோழர் கோபிநாத், Frontline ஆங்கில இதழ் ஆசிரியர் தோழர் Vijayasankar Ramachandran ஆகியோரின் அன்னை….
மனிதர்கள் விழித்துக்கொள்ளும்போது, என்ற நூலின் ஆசிரியர்… வோர்லி பழங்குடியினர் போராட்டங்கள் குறித்து, தோழர் கோதாவரி பருலேகர் எழுதிய மராத்தி நூல் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது; அந்த மலையாள நூலை, அவசர நிலையின் போது, உடல் நலிவுற்றிருந்த போது, தோழர் ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்து மனிதர்கள் விழித்துக்கொள்ளும்போது என்ற பெயரில் வெளி வந்தது… அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க(AIDWA)நிறுவனத் தலைவர்களில் ஒருவர்; செயல்பாட்டாளர், பேச்சாளர் என்று அயராத பெருவாழ்வு வாழ்ந்த அந்த ஆளுமையை சந்தித்த அந்த முப்பது நிமிடங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாது…

ஏற்கனவே தோழர் விஜயசங்கர் அவர்களை சந்தித்த போது, அம்மாவை சந்திக்க வேண்டும் என்ற எனது ஆசையை தெரிவித்த போது, அவர்,”தோழர்.. ஒண்ணும் பிரச்சினை இல்லை; இப்போது அம்மா கோழிக்கோட்டில் எனது அண்ணன் Dr.கோபிநாத் வீட்டில் தான் வசித்து வருகிறார்; நீங்கள் வயநாடு செல்லும் போது,
அம்மாவை சந்தித்து வாருங்கள்”என்று கூறியிருந்தார்… கடந்த வாரம் வயநாட்டில் எனது மகனின் புதிய வீட்டுக்கு சென்று பார்த்து விட்டு திரும்பி வரும் போது, தோழர்
விஜயசங்கர் அவர்களை தொடர்பு கொண்ட உடனே தனது அண்ணன் Dr.கோபிநாத் அவர்கள் கைபேசி எண், வீட்டு முகவரி போன்ற தகவல்களை தந்தார்…குறிப்பிட்ட முகவரியை தேடிக் கண்டு பிடித்த உடனே, மிகவும் தயக்கத்துடன் கை பேசியில் Dr.கோபிநாத் அவர்களை அழைத்தேன்…”ஹலோ.. தோழர். வாருங்கள்… உங்களுக்காகத்தான் நாங்கள் காத்திருக்கிறோம்”என்று பேசியது அந்த குரல்!
வீட்டை கண்டு பிடிக்க நாங்கள் தடுமாறிக் கொண்டு நிற்பதை புரிந்து கொண்டு, எங்களைத் தேடி விறுவிறுவென வந்தார் தோழர்:Dr.கோபிநாத் அவர்கள்.. என்ன ஆச்சரியம்… அப்படியே அச்சு அசலாக தோழர் PRC அவர்களின் அதே நடை… ஓடி வந்து எனது கைகளை பற்றிக்கொண்டே எங்களை அழைத்து சென்றார் அவர்..

வீட்டில் நுழையும் போதே, நான் அழுது விடக்கூடாது என்ற உறுதியுடன் இருந்தேன்….
வீட்டில் நுழைந்த போது, இரண்டு கைகளையும் கூப்பியவாறே, சன்னமான குரலில்”எல்லாரும் வாங்க”என்று எங்களை வரவேற்றார் தோழர் ஜானகி ராமச்சந்திரன் அவர்கள்… 42ஆண்டுகளுக்கு முன்பு உறையூரில் நான் தோழர் PRC அவர்கள் வீட்டுக்கு சென்ற போது நான் கண்ட அந்த கருணை மிக்க அன்னையை
மீண்டும் சந்தித்தேன்.. ஆனால், காலம் தனது கோலத்தை அவரது முகத்தில் வரைந்திருந்தது! எதுவும் அவரது நினைவில் இல்லை… நன்றி கெட்ட மனிதர்கள் எவரையும் அவருக்கு நினைவில்லை…. பற்றற்ற நிலையில், பச்சை
குழந்தை போன்ற மாசற்ற நிலையில் அவர்.. நான் அருகில் சென்று சிறிது பேச்சு கொடுத்த போது, ஆழமான ஒரு புன்னகை மட்டுமே அவரது பதிலாக இருந்தது…
என்னிடமிருந்த ஒரு பழைய புகைப்படத்தை அவரிடம் காட்டிய போது, அப்படியே அதில் லயித்து,அந்த புகைப்படத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தார். தோழர் ஜானகி ராமச்சந்திரன் அவர்கள்.. அப்போது அவரது கண்களில் கண்ணீர் திரண்டு வந்ததை நான் கவனித்தேன்:ஆனால் தனது கண்ணீரை மிகவும் நாசுக்காக தனது இடது கை விரல்களால் துடைத்துவிட்டு, புன்னகையுடன் திரும்பி எங்களையும் பார்த்து சிரித்தார் அவர்…நான் காட்டிய அந்த புகைப்படத்தில், தனது கணவர் தோழர்: PRC, நடுவில் தனது இளைய மகன் விஜயசங்கர் குறுந்தாடியுடன் நிற்கும் காட்சி அவரது நினைவுகளை கிளறியிருக்கக் கூடும்…..

நாங்கள் அவர் அருகில் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்… எனது மனைவி, மூத்த மகள்,இளைய மகள் ஆகியோர் புகைப்படத்திற்காக அருகில் சென்று நின்ற போது, மூவரின் கரங்களையும் வாஞ்சையுடன் இறுகப் பற்றியிருந்தார்…
வேறு எந்த உரையாடலும் இல்லை..ஆனாலும் நாங்கள் நிறைய பேசிக்கொண்டோம், மௌனமாக…….. நாங்கள் கிளம்பிய போது, வாசலில் வந்து நின்று, எங்களை வழியனுப்பி வைத்த போது, எனது கண்கள் நிறைத்திருந்தன……

நன்றி:
சாகுல் ஹமீத்,
முகநூல் பகிர்வு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here