“ஜனநாயகன்” ரிலீஸ் செய்தார்களா? திருடி வெளியிடப்பட்டதா?
இணையத்தில் ஜனநாயகன் படத்தை பதிவேற்றியவர்கள் பரப்பியவர்கள் யார் என்பதை சைபர் கிரைம் கண்டுபிடித்துக் கொள்ளட்டும். நாம் அந்த புலனாய்வுக்குள் போகப் போவதில்லை. ஆனால் இந்த படம் தியேட்டரிலோ அல்லது இணையத்திலோ பரப்பப்பட்டிருப்பதன் பலன் யாருக்கு என்றால், அதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படமானது  சென்சார் போர்டின் அனுமதி மறுப்பால் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதன் ரிலீஸ் தேதிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டன. தேர்தல் நடக்க சில வாரங்களே உள்ள நிலையில் படமானது இணையத்தில் பரவிட்டது.

கசிந்த ஓட்டை எது?

இந்தப் படம் சென்சார் போர்டில் இருந்து கசியவில்லை என தணிக்கை வாரியம் அறிவித்துவிட்டது. கசிந்துள்ள பிரதியில் இருக்கும் குறியீடுகளில் இருந்து “இது எடிட்டரிடம் இருந்து கசிந்துள்ளது. இது எடிட்டர் காபி தான்” என்று முன் வைக்கிறார் இயக்குனர் அமீர்.

இதற்கு முன்னரும் இப்படி இணையத்தில் பல படங்கள் கசிந்துள்ளன சரத்குமார் கூட தான் தயாரித்த படம் இப்படி கசிந்து பெரும் நஷ்டத்தை சந்தித்ததை முன்வைத்துள்ளார். அதற்கு ஆளும் கட்சியை குறை சொல்வது பொருத்தமற்றது என்கிறார்.

இணையத்தில் ஜனநாயகன் படத்தை பதிவேற்றியவர்கள் பரப்பியவர்கள் யார் என்பதை சைபர் கிரைம் கண்டுபிடித்துக் கொள்ளட்டும். நாம் அந்த புலனாய்வுக்குள் போகப் போவதில்லை. ஆனால் இந்த படம் தியேட்டரிலோ அல்லது இணையத்திலோ பரப்பப்பட்டிருப்பதன் பலன் யாருக்கு என்றால், அதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், படமானது முழுக்க முழுக்க விஜயை ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடிய மிகப்பெரும் ஆற்றல் கொண்ட நபராக உயர்த்திப் பிடிக்கிறது என்று பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

500 கோடி இழப்பா ? அரசியல் ஆதாயமா?

சுமார் 500 கோடி செலவில் உழைப்பில் உருவானதாக சொல்லப்படும் ஒரு படத்தை, பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டதாக சொல்லப்படும் ஒரு படத்தை  இப்படி இணையத்தில் ரிலீஸ் செய்துள்ளது பலரின் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

திரைப்படத் தயாரிப்பின் மீது மிகப்பெரும் தாக்குதலையும் அச்சுறுத்தலையும் உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் காட்டமாக பதிவிடுகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட இத்தவறை செய்தவர்களை கடுமையாக கண்டித்து பேசியுள்ளார்.

ஜனநாயகன் தான் விஜயின் இறுதி படம் என்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில் தற்போது கசிந்துள்ள படத்தின் தரத்தை பார்த்தால்  தளபதியின் ரசிகர்கள் தலையில் அடித்துக் கொண்டு தான் அழ வேண்டும் போல் உள்ளது பகவந்த் கேசரி என்ற படத்தை ரீமேக் செய்துள்ளார்கள் என்றும், அதில் காட்சிக்கு காட்சி அப்படியே வைத்து பொருத்தம் இல்லாமல் வெட்டி ஒட்டி ஒரு மசாலாவை தந்துள்ளார்கள் என்றும் புலம்புகிறார்கள்.

இந்தப் படத்தை பதிவிறக்குவதோ பகிர்வதோ பார்ப்பதோ குற்றம் என்று ஒரு பக்கம் அச்சுறுத்தல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் சாமானிய மக்கள் அதை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் போனில் பார்க்கவே செய்கிறார்கள். ஏனென்றால் ஒவ்வொருவராலும் ஒரு டிக்கெட்டுக்கு 500,  1000 என்று செலவிட முடியாத வறுமை தான் எதார்த்தம்.

படிக்க:

 கரூர் படுகொலை: தவெக தலைவர் விஜயை ‘Victim’ஆக சித்தரிப்பது அயோக்கியத்தனம்!

 தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 38க்கும் மேற்பட்டோர் பலி! நடிகர் விஜய்-ஐ உடனடியாக கைது செய்!

“சின்ன பசங்க சொன்னா கேட்கணும்” என்று அங்கங்கே பஞ்ச் டயலாக்குகளை வைத்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த திரைப்படம்.

இந்தத் திரைப்படம் அதிமுகவை நேரடியாக தாக்குகிறது. போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பச்சை படுகொலை செய்ததை காட்சிப்படுத்தியுள்ளார்கள். அதேநேரம் எம்ஜிஆரை  உயர்த்திப் பிடித்து அவரின் வாரிசாகவே விஜய் இருப்பது போல் பிம்பத்தை கட்டமைத்துள்ளார்கள் என்பது படம் பார்த்தவர்களின் கருத்து.

மறுபுறம், அரசியல் ஆதாயத்திற்காக பதவி வெறிக்காக மக்களை மதரீதியில் பிளவு படுத்தி ஒருவர் மீது மற்றொருவரை ஏவி கலவரங்களில் பலியாக்கி காரியம் சாதிக்க நினைப்பவர்களை எதிர்ப்பதாக படத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. இது நேரடியாக பிஜேபியை தான் தாக்குகிறது. திமுக அதிமுக பிஜேபி என்று அனைத்து தரப்பினரையும் தாக்கி, ஓட்டு போட்ட மக்களையும் இடித்துரைத்து, மாற்றம் வேண்டுமென்றால் தளபதிக்கு வாக்களிக்க வேண்டும் என்று படம் முழுக்க அரசியல் பிரச்சாரம் தான் விரவிக் கிடைக்கிறது எனச் சொல்கிறார்கள்.

எப்படியோ தேர்தலுக்கு முன் படம் மக்களிடையே பரவி வரும் நிலையில், அதற்கு போட்ட முதலீடு 500 கோடியை திரும்ப சம்பாதிக்கும் வகையில் அரசியலில் விஜய் உடனடி அறுவடையை சாதிப்பாரா? அல்லது 500 கோடி “நீண்ட கால முதலீடாக” மாறிப் போய்விடுமா?  பொறுத்திருந்து பார்ப்போம்.

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here