சேப்பியன்ஸ்: மனித இனத்தின் சுருக்கமான வரலாறு எனும் நூலை 46 வயதான யுவால் ஹராரி 2011 -ல் வெளியிட்டார். மிக அதிக அளவில் 2 கோடி பிரதிகளுக்கு மேலாக இந்த நூல் விற்பனையானது. அதன் தொடர்ச்சியாக ஹோமோ டியூஸ் – நாளைய சுருக்கமான வரலாறு – என்ற நூலை 2015 – ல் வெளியிட்டார். சேப்பியன்ஸ் கடந்த காலத்தையும், ஹோமோ டியூஸ், பூமியில் ஆதிக்கம் செலுத்தும் மனிதர்களின் செயல்களால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் பேசுகிறது.

நூலாசிரியர் ஹராரி அவரது முனைவர் பட்டத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் 2002 – ல் பெற்றவர். தற்போது ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார். சேப்பியன்ஸ் நூல் வெளிவந்து 11 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்றும் அவர் சர்ச்சைக்குரிய நபராகத்தான் உள்ளார். மனிதகுல வரலாற்றை கற்காலம் முதல் நவீன காலம் வரை சேப்பியன்ஸ் நூல் ஆராய்வதாக ஹராரி கூறுகிறார். இந்த வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரித்து விவரிக்கிறார்.

01. அறிவாற்றல் புரட்சி – 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,

02. விவசாய புரட்சி – 12,000 ஆண்டுகளுக்கு முன்பு,

03. மனித குல ஒன்றிணைப்பு – 2000 ஆண்டுகளுக்கு முன்பு,

04.அறிவியல் புரட்சி – 500 ஆண்டுகளுக்கு முன்பு.

முதல் நூல் மாபெரும் வெளியீட்டு வெற்றியைப் பெற்றது. உலகின் பல பகுதிகளிலும் அவரது பெயர் பரிச்சயமானது. இந்தப் புத்தகங்கள் மனிதனின் பரிணாம வளர்ச்சி, மனித நடத்தை மற்றும் பண்பாடு போன்றவை இயற்கை அறிவியலோடு எப்படி பொருந்தி வளர்ந்தது போன்றவற்றை ஆராய்வதாக கூறுகின்றன. உலகின் 65 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ள சேப்பியன்கள், புனைகதையாக இல்லாமல் புத்திசாலித்தனமானதாக இருப்பதாக நம்பப்படுவதால் பலராலும் போற்றப்படுகிறது. முக்கியமாக மெட்டாவின் ( Facebook) மார்க் ஜுக்கர்பர்க், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா போன்றவர்களும் இவரது புத்தகங்களை பாராட்டி பலருக்கும் பரிந்துரைத்தனர்.

நூலில் உள்ள உயிரியல் ரீதியான தவறுகள்!

இருப்பினும் சில விஞ்ஞானிகள் அவரது புத்தகங்கள் மற்றும் விரிவுரைகளில் பல குறைபாடுகளை சுட்டிக் காட்டுகின்றனர். நடத்தை நரம்பியல் விஞ்ஞானியான தர்ஷனா நாராயணன், ஹராரி ஒரு ஜனரஞ்சக அறிவியலாளர் மற்றும் ஒரு வல்லமை வாய்ந்த கதை சொல்லி என்றும், சுவாரசியமான கதைகளுக்காக அறிவியலின் உண்மைகளைத் தியாகம் செய்கிறார், திரித்துப் புரட்டுகிறார் எனவும் விமர்சிக்கிறார்.

தர்ஷனா நாராயணன்

ஹராரி, அவரது நூலில் ஓரிடத்தில் “ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்ததுதான் மனித குலத்தின் அறிவாற்றல் புரட்சிக்கு வழி வகுத்தது. மேலும் பழங்காலத்தில் உணவு தேடியவர்கள் உயிர் வாழ வேண்டி இருக்கும்போது அவர்கள் நம்மைப் போலவே அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி ரீதியாக குறிப்பிடத்தக்க நுண்ணறிவை பயன்படுத்தினர்” என்கிறார். ஆனால் இவர் சேப்பியன்ஸ் எழுதுவதற்கு முன்பாகவே இவரது இத்தகைய ஊகங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன.

மானுடவியலாளர் ஹால் பைக் (Hall pike) “டேனியல் எவரெட் எனும் மொழியியலாளர் 1970களில் அமேசான் காடுகளில் வாழும் பைராஹா எனும் பழங்குடிகளைச் சந்தித்தபோது, அவர்களுக்கு எண்கள் குறித்தோ, கடந்தகாலம், எதிர்காலம், கட்டுக்கதைகள் மற்றும் கதைகள் பற்றியோ எந்தப் புரிதலும் இல்லை. அவர்களைச் சுற்றி உள்ள எதார்த்த நிகழ்கால புரிதல் மட்டுமே இருந்தது” என்பதைக் கண்டறிந்தார்.

எனவே ஹராரி கூறுவதைப் போல ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட், தி பேரோடாக்ஸ் ஆப் குவாண்டம் பிசிக்ஸ் போன்ற நூல்களை மனிதர்கள் 30,000 – 70,000 ஆண்டுகளுக்கு முன்பே எழுத முடிந்திருக்கும் என்பது இயலாத காரியம் என நிரூபணம் ஆகிறது. மேலும் பெரிய மனிதக் குழுக்களில் சமூகத் தொடர்பு மூலம் மட்டுமே மொழி வளர்ச்சி அடைந்தது என்கிறார் ஹால் பைக்.

அடுத்து, கடந்த காலங்களின் அரச சாம்ராஜ்யங்கள், தங்களது குடிமக்களின் நிதித் தரவுகளை அணுகியதன் மூலம் அவர்களை கட்டுப்படுத்தியதைப் பற்றி ஹராரி பேசுகிறார். இது குறித்து தர்ஷனா, “இது கண்காணிப்பு முதலாளித்துவத்தின் ஒரு பகுதிதான். கூகுள் கண்டுபிடித்த மற்றும் ஃபேஸ்புக்கால் முழுமையாகப்பட்ட ஒரு புதிய பொருளாதார மாதிரி தான் இது” என்கிறார். இன்றைய செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பமானது மனிதர்களை விட புத்திசாலியாக மாறுகிறது என சிலிக்கான் பள்ளத்தாக்கின் கோடீஸ்வரர்களால் பிரச்சாரம் செய்யப்படும் சித்தாந்தத்துடன் ஹராரியின் எண்ணங்கள் ஒத்துப் போகின்றன. ஆனால் மனிதனின் கூட்டுச் சமூக செயல்பாட்டின் மூலம் மட்டுமே அறிவு வளர்ச்சி ஏற்படுமே தவிர எந்த நிலையிலும் தொழில்நுட்பமானது மனித அறிவை விஞ்சிவிட முடியாது என்பதே உண்மை.

புத்தகத்தின் வேறு ஒரு பகுதியில், ஒரு நிறுவனத்தை நிறுவத் தேவையான சட்டங்களைப் போலவே, மதம் மற்றும் கடவுள்கள் உருவாக்கவும் சில வழிமுறைகள் தேவைப்படுகிறது. இரண்டு விஷயங்களிலுமே மக்களை நம்ப வைக்கும் வகையிலான கதைகள் தேவைப்படுகிறது என வாதிடுகிறார். நிரூபிக்க முடியாத கட்டுக்கதைகள் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வருவதும், வரையறுக்கப்பட்ட நடைமுறைகள் மூலம் செயல்படும் சமுதாய கட்டமைப்புக்கும் முடிச்சு போடும் அவரது குழப்ப நிலை மானுடவியளாளர்களின் கோபத்தை தூண்டுகிறது. பத்திரிகையாளர் ஷான் வான்டோர், ஹராரியிடம், சிலிக்கான் பள்ளத்தாக்கு ஏன் உங்களது படைப்புகளை அதிகமாக வியந்து போற்றுகிறது என கேட்டதற்கு, தனது கருத்துக்கள் அவர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பது காரணமாக இருக்கலாம் என்றார்.

ஹராரியின் எழுத்துக்களில் உள்ள புனைவுகள்!

ஹோமோ டியூஸ் நூலில் ஹராரி, “தொற்று நோய்களின் விளைவால் மனிதகுலம் உதவியற்ற நிலையில் நின்ற சகாப்தம் முடிந்து விட்டது” என்கிறார். ஆனால் உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இன்று உலகளாவிய கோவிட் இறப்பு 6 மில்லியனைத் தாண்டி விட்டது என தர்ஷனா சுட்டிக் காட்டுகிறார். இந்த நாட்களில் ஹராரி, கோவிட் தொற்றிலிருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்து உயர்மட்ட ஆலோசனைகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித வரலாறு, சிந்தனை மற்றும் பண்பாடு பற்றி எழுதிய எழுத்தாளர் ஜெரமி லென்ட் (Jeremy Lent) ஹராரியின் நூல்களில் நான்கு முக்கிய புனைவுகளை ( கட்டுக்கதைகளை) சுட்டிக்காட்டுகிறார். முதலாவதாக, இயற்கையை கணக்கீடுகளுடன் சமப்படுத்துவது எனும் 17ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றிய ஒரு கட்டுக் கதையை நம்புவது. இப்படி இயற்கையானது தொழில்நுட்பத்தை போலவே செயல்படுகிறது என நம்புவதால் இயற்கையை விட தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை நம்மை தேடச் சொல்கிறார்.

இரண்டாவதாக, மனிதர்களின் அமைப்புகளானது வேறு எந்த மாற்றுப் பாதையையும் பின்பற்றுவதில்லை என்கிறார். அதற்கு உதாரணமாக, கம்யூனிசத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு தாராளமயம் மட்டுமே எஞ்சியுள்ளது என்றும் அது இன்றைய பிரச்சனைகளுக்கு சரியான தீர்வினை வழங்குவதில்லை என்றும் கூறுகிறார். மூன்றாவதாக வாழ்க்கையே அர்த்தமற்றது என்றும் நமது செயல்களும் வேண்டாதவை – அதாவது எந்தப் பயனோ குறிக்கோளோ அற்றது – என்கிறார். இதில் ஹராரி, ஆசிய தத்துவவாதிகள் மற்றும் போலிச் சாமியார்களின் கருத்துகளையும் எதிரொலிக்கிறார். இது பல லட்சக்கணக்கான ஆண்டுகளின் மனித அறிவின் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுடன் முரண்படுகிறது. நான்காவதாக மற்றும் இறுதியாக ஹராரியின் விபாசனா பயிற்சியின் காரணமாக, எதார்த்தத்தை அதன் உண்மைத் தன்மையில் அப்படியே கவனிக்க முடிகிறது என்றும், இது எதார்த்தத்தை குறித்த ‘மாய’க் கணிப்புதான் உண்மையில் எதார்த்தமாகிறது என்ற முடிவுக்கும் அவரை வர வைக்கிறது.

ஹராரி அறிவியல் பூர்வமான நோக்கில் எழுதுவதாக கூறினாலும், அறிவியல் பற்றிய அவரது புரிதலானது இயற்கையை ஒரு எந்திரம் என்று நம்பும் புனைவைச் சுற்றித்தான் உள்ளது. எனவே அவரது முழு வாதமும் ஒரு முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டு குறைபாடோடுதான் இருக்கிறது என்கிறார் லென்ட். ஆக்ஸ்போர்ட் பல்கலையில் ஹராரேவின் முன்னாள் பிஎச்டி ஆலோசகர் ஸ்டீவன் ஹண், “ஹராரே மிகப்பெரிய, நீண்ட கேள்விகளை கேட்பதன் மூலம் நிபுணர்களின் விமர்சனத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறார்” என்கிறார். ஏனெனில் அந்தக் கேள்விகளுக்கு யாரும் திட்டவட்டமான பதிலை அளிக்க முடியாது.

2014 ஆம் ஆண்டு, சேப்பியன்கள் நூலின் மதிப்பாய்வில், தத்துவ ஞானியும் இலக்கிய விமர்சகருமான கேலன் ஸ்ட்ராசன், இந்நூல் மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவும், பரபரப்பான வகையிலும் உள்ளது என்கிறார். அடுத்து மொழிப் பிரச்சனையில், அனைத்து குரங்கினங்கள் உள்ளிட்ட பல விலங்குகளுக்கு குரல் மொழிகள் உள்ளன என்கிறார் ஹராரே. “நான் பத்தாண்டுகளாக சிறுவகை புதிய உலகின் குரங்கினமான மர்மோசெட்டுகளின் குரல் தொடர்பாக ஆய்வதற்காக பத்து ஆண்டுகளை செலவிட்டேன். (எப்போதாவது அவைகள் என்னுடன் தொடர்பு கொள்வது அவைகளின் சிறுநீரை என் திசையில் தெளிப்பதுதான்) நான் முனைவர் பட்டம் பெற்ற பிரின்ஸ்ட்டன் நரம்பியல் பல்கலையில், பரிணாம வளர்ச்சி மற்றும் உயிர் இயக்கவியல் நிகழ்வுகளின் தொடர்புகளில் இருந்து குரல் நடத்தை ( Vocal behaviour) எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் நாங்கள் ஆய்வு செய்தோம்” என்கிறார் ஸ்ட்ராசன்.

இதையும் படியுங்கள்: குரங்குகளின் பிடியில் நவீன அறிவியல்!

குரங்குகளின் தொடர்பு என்பது மனிதத் தொடர்புகளைப் போல் அல்லாமல் நரம்பியல் அல்லது மரபணுக் குறியீடுகளில் முன்கூட்டியே பதியப்பட்டுள்ளது ( Pre programmed) என்ற கோட்பாட்டை உடைப்பதில் எங்களது பணி வெற்றி பெற்றது. உண்மையில் குரங்கின் குட்டிகள் தங்கள் பெற்றோரின் உதவியுடன் மனிதக் குழந்தைகள் கற்றுக் கொள்வதைப் போலவே கற்கின்றன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

மனிதர்களுடன் அனைத்து ஒற்றுமைகளும் இருந்த போதிலும், குரங்குகளுக்கு ஒரு மொழி இருப்பதாகக் கூற முடியாது.

மொழி என்பது ஒரு விதிக்கு உட்பட்ட குறியீட்டு அமைப்பாகும். இதன் குறியீடுகள், வார்த்தைகள், வாக்கியங்கள் மற்றும் படங்கள் போன்றவை, உலகில் உள்ள மக்கள், இடங்கள், நிகழ்வுகள் மற்றும் உறவுகளை குறிக்கின்றன. குரங்குகளின் அவசரகால அழைப்புகள் மற்றும் பறவைகள், திமிங்கிலங்கள் போன்றவற்றின் இசை ஒலிகள் தகவல்களை கடத்த உதவுகின்றன. ஆனால் நாம் ஜெர்மனிய தத்துவஞானி எர்னெஸ்ட் கேசிரர் கூறியதைப் போல, ஒரு குறியீட்டு அமைப்பைப் பெற்றதன் மூலம் எதார்த்தத்தின் புதிய பரிமாணத்தில் வாழ்கிறோம். மனிதர்கள் மட்டுமே பேசும் திறன் உடையவர்கள் என்ற வெளிப்படையான உண்மையை ஒரு சிந்தனையாளர் எனப் போற்றப்படும் ஹராரே எதற்காக மறுக்கிறார் என்பதே நியாயமாக எழுப்பப்பட வேண்டிய கேள்வி.

விற்பனையில் சாதனை புரிந்துள்ள இந்த நூல்களின் ஆசிரியர் யுவால் ஹராரே, நீட்சேவின் இருத்தலியல் தத்துவத்தின் அடிப்படையில் ஊகமான வாதத்தையே, அறிவின் அடிப்படையிலானது என நிறுவ முயல்கிறார். ஒட்டுமொத்த மனித வரலாற்றை இவ்வாறு விளக்க முயல்வது கேடான விளைவுகளை ஏற்படுத்தும். இது, அறிவுப் பூர்வமாக அனைத்தையும் விளக்கும் மார்க்சியக் கோட்பாட்டை மறுதலிக்கும் போக்காகும். ஹராரே தனது கருத்தியலை சுவாரசியமான நூலாக்கி, கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஊடகங்கள் மூலமாக பிரபலமாக்கிக் கொண்டார்.

உண்மையில் அவர் சரியான ஆய்வின் அடிப்படையில் அவரது நூல்களை படைக்கவில்லை என்ற முடிவுக்கு நாம் இதன்மூலம் வரமுடிகிறது. அடுத்து இவரது குழந்தைகளுக்கான படைப்பாக “எப்படி மனிதர்கள் இவ்வுலகை தன்வயப்படுத்திக் கொண்டனர்” என்ற நூல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன கட்டுக்கதைகளை உண்மை என்று வாதிட்டு இருப்பாரோ, நாளைய இளம் தலைமுறைக்கான சிந்தனையை அவை எப்படி சிதைக்குமோ என்ற அச்சம் நமக்கு எழுகிறது.

அறிவியலின் பெயரால் வைக்கப்படும் இதுபோன்ற வரலாற்றுத் திரிபு வாதங்களை நாம் கவனத்துடன் புரிந்து கொண்டு அம்பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் வரலாறு நம்மை மன்னிக்காது. உலகெங்கும் வலது சாரிகள் இந்த வேலையை திட்டமிட்டு செய்து வருகிறார்கள். இடதுசாரிகளும் முற்போக்கு சக்திகளும் இதை முறியடிக்க வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட இப்போது கூடுதலாக எழுந்துள்ளது.

செய்தி ஆதாரம்:

the print.in, mind matters.ai, current affairs.org

ஆக்கம் : குரு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here