ருடந்தோறும் இயற்கையாக பெய்கின்ற மழை காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்ற மாவட்டங்களில் கன்னியாகுமரி மாவட்டமும் ஒன்று. இயற்கை சீற்றத்தாலும், மோடி அரசின் கார்ப்பரேட் விவசாயக் கொள்கையாலும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும், வாழ்வாதாரங்களை இழந்தும் நிற்கின்றது.

தமிழகத்தின் தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் 91.75 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மக்களைக் கொண்ட மாவட்டமாகும். ஆனால் இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் இயற்கையை சார்ந்து உள்ளதால் மாவட்டத்தின் மக்கள் தொகையான 20 லட்சம் பேருக்கு பொருத்தமாக வேலை வாய்ப்பு இல்லை.

கடற்கரை ஓரத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான இந்த கன்னியாகுமரியில் அரபிக் கடல் மற்றும் இந்து மகா சமுத்திரம் இரண்டும் சந்திக்கின்ற பகுதியில் மீன் பிடி தொழிலை செய்து பெரும்பான்மையான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் முன்னோடிகளாகவும், கடலுக்குச் சென்றால் ஒரு மாத காலம் வரை தங்கி மீன் பிடிக்கின்ற ஆற்றல் கொண்டவர்களாகவும் உள்ளனர்.

மற்றொருபுறம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ரப்பர் தோட்டங்களில் சுமார் 3 லட்சம் பேர் தமது வாழ்க்கை தேவைக்காக உழைப்பை செலுத்தி வருகின்றனர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த கேரளாவின் கோட்டையம் மற்றும் தமிழகத்தின் பகுதிகளில் 1902 ஆம் ஆண்டு ஐரிஷ் நாட்டைச் சேர்ந்த ஜான் ஜோசப் மார்பி என்பவரால் ரப்பர் உற்பத்தி செய்வதற்கு பொருத்தமான இயற்கை சூழலும் வளமும் இருப்பது கண்டறியப்பட்டது. அவரால் தனியார் ரப்பர் தோட்டம் ஒன்றும் அமைக்கப்பட்டது.

அதன் பிறகு ரப்பர் உற்பத்தியில் விவசாயிகளும் ஈடுபடத் துவங்கினர். அரசு மற்றும் தனியார் மூலமாக ஏறக்குறைய ஒரு லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. கன்னியாகுமரியில் உற்பத்தி செய்யப்படும் ரப்பர் உலகில் முதல் தரம் வாய்ந்தது.

உலகில் ரப்பர் உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த ரப்பர் உற்பத்தியில் இயற்கையாக கிடைக்கின்ற ரப்பர், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சுமார் 81% உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 95 சதவீதம் ரப்பர் உற்பத்தி நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, தோவாளை ஆகிய வட்டங்களில் உள்ள ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, பாலமோர், சுருளோடு, பேச்சிப் பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, இரணியல் போன்ற பகுதிகளில் ரப்பர் உற்பத்தியில் ஈடுபடுகின்ற 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு நாள் இரவும் தலையில் டார்ச் லைட்டை கட்டிக் கொண்டு மரத்திலிருந்து ரப்பர் பால் வெட்டும் தொழிலில் இறங்கி அதிகாலை வரை கடுமையாக உழைத்து ரப்பர் பால் எடுப்பதன் மூலம் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 1000 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.

தமிழக அரசு நடத்துகின்ற ரப்பர் தோட்டங்களில் சுமார் 4000 பேர் மட்டுமே வேலை செய்து வருகின்றனர். ஆனால் பத்து சென்ட் முதல் ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்களை கொண்டுள்ள சிறு, குறு விவசாயிகள் மூன்று லட்சத்திற்கும் மேல் உள்ளனர். இவர்கள் தமது தோட்டங்களில் இருந்து ரப்பர் பால் வெட்டுதல், தோட்டங்களை பராமரித்தல், ரப்பர் சீட் பதப்படுத்தி எடுத்தல், ஏற்றுமதி செய்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை நிலைநாட்டி வருகின்றனர்.

நமது நாட்டிலேயே கிடைக்கின்ற இயற்கை ரப்பரை பயன்படுத்துவதற்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து செயற்கை ரப்பர் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டில் உள்ள ரப்பர் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
மற்றொருபுறம் சிறு, குறு விவசாயிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரப்பர் விவசாயத்தை விழுங்குவதற்கு இந்தியாவில் உள்ள எம்ஆர்எப், சியட், அப்பல்லோ, டிவிஎஸ் ஆகிய நான்கு பெரிய கார்ப்பரேட் டயர் நிறுவனங்கள் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய ரப்பர் கொள்கை என்று அறிவிக்கப்பட்டு மதுரையில் நடந்த மாநாட்டில் பேசிய தேசிய ரப்பர் வாரியத்தின் தலைவரான சாவர் கனான்யா “அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்துறையின் முழுமையான வளர்ச்சியை எதிர்பார்க்கிறது. இது 2030 ஆம் ஆண்டிற்கான வரைபடம் ஆகும். ரப்பர் உற்பத்திக்கு இதுவரை உள்ள நிலங்கள் மட்டுமின்றி, பயன்படுத்தப்படாத நிலங்களையும் ரப்பர் சாகுபடியின் கீழ் கொண்டு வர ரப்பர் தொழிலில் ஈடுபட்டுள்ள கேரளா, தமிழ்நாடு, அசாம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் மாநில பணிக்குழுவை அமைக்க வாரியம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 98 சதவீத ரப்பர் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் கிடைக்கிறது. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு டயர் மையம் ஒன்றை மதுரையில் நிறுவுவதற்கு ரப்பர் வாரியம் முயற்சிப்பதாக” அறிவித்திருந்தார்.

ஆனால் இதற்கு நேர் மாறாக திரிபுரா மாநிலத்தையும் அதை ஒட்டியுள்ள 7 வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் ரப்பர் சாகுபடி செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. அது மட்டுமின்றி வடகிழக்கு மாநிலங்களை அஷ்டலட்சுமி மாநிலமாக மாற்றப் போவதாக பியூஸ் கோயல் அறிவித்திருக்கிறார். இதற்காக ATMA அமைப்பில் உள்ள நான்கு பெரிய டயர் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூபாய் ஆயிரம் கோடியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் 2019 முதல் மூன்று ஆண்டுகளுக்கான ஊதிய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்தினர். ரப்பர் தோட்ட தொழிலாளர்களை ஒன்றிணைத்து போராடுகின்ற அனைத்து ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கம் 1942 முதல் செயல்பட்டு வருகிறது. இது குறைந்தபட்ச கூலி கேட்டு போராடி வருவதால் இந்தியாவில் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் பெறுகின்ற ஊதியத்தில் ஒப்பீட்டு அளவில் குறைந்தபட்ச கூலியை பெற்று வந்தனர். தற்போது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்பட வேண்டிய சம்பள உயர்வு நான்காண்டுகளாக கொடுக்கப்படாததால் ரூபாய் 40 சம்பளத்தை உயர்த்தி கொடுக்க கோரி 2022 நவம்பர் மாதத்தில் தொடர்ச்சியாக போராடினர். ஆனால் ரப்பர் உற்பத்தியில் தனியார்மயத்தை ஆதரிக்கின்ற அரசு, தொழிலாளர்களின் கோரிக்கையை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்ற ரப்பர் தோட்டத் தொழில் இயற்கை சீற்றத்தால் அதாவது மழைக் காலங்களில் தனது உற்பத்தியை நடத்த முடியாமல் பாதிப்பதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக தொடர்ச்சியாக பெய்து வருகின்ற மழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் உற்பத்தி தொழில் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஒடிசா-மாலிபார்பத் பழங்குடிகளின் மீதான கார்ப்பரேட் பாசிச தாக்குதல்களை தடுப்போம்.

அது மட்டுமன்றி அக்டோபர் மாதம் வரை ரூபாய் கிலோவிற்கு 200 என்ற விலைக்கு விற்று வந்த ரப்பர் நவம்பர் மாதத்தில் ரூபாய் 145-க்கும், டிசம்பர் மாதத்தில் ரூபாய் 122-க்கும் விலை வீழ்ச்சி அடைந்தது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை விட மிகப்பெரும் நெருக்கடியில் ரப்பர் தொழில் சிக்கி உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் கதறுகின்றனர்.

ரப்பர் விலை ரூபாய் 100க்கும் கீழே சென்று விட்டால் முன்பு ஒருமுறை நெருக்கடி ஏற்பட்டபோது ரப்பர் தோட்டங்களை வெட்டி வீசிவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தனது நிலத்தை காவு கொடுத்ததைப் போன்ற ஒரு அபாயம் மீண்டும் நெருங்குகிறது என்று கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் முன்வைத்து அச்சமடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரப்பர் உற்பத்தியில் 40% மையமாக வைத்து மதுரை பகுதியில் டயர் மையம் ஒன்றை உருவாக்கப் போவதாக ஒரு புறம் கூறிக் கொண்டே இயற்கையால் பாதிப்பை அடைந்துள்ள அந்த மக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பையோ, உரிய நஷ்ட ஈட்டயோ வழங்குவதற்கு இந்திய ஒன்றிய அரசும், தமிழக அரசும் தயாராக இல்லை. ஆனால் சென்னையைக் காட்டிலும் குறைந்த கூலிக்கு தொழிலாளர்களும், குறைந்த விலைக்கு நிலமும் கிடைக்கும். இங்கே தொழில் தொடங்க வாருங்கள் என்று கார்பரேட்டுகளை அறைகூவி அழைக்கின்றனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகமாக உள்ள கன்னியாகுமரி மாவட்டம் தற்போது பொருளாதார ரீதியாக மிகவும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

ஏற்கனவே கடலோரத்தில் உள்ள மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்குச் செல்லும் போதெல்லாம் இலங்கை கப்பற்படையால் விரட்டப்பட்டு கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்ற சூழலில் மற்றொரு வாழ்வாதாரமான ரப்பர் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி மக்கள் கடும் மன உளைச்சலுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சொந்த உழைப்பின் காரணமாக அந்நிய செலாவணியை ஈட்டி தருகின்ற அளவிற்கு உழைத்துக் கொடுக்கும் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கண்ணதிரே சரிந்து விழுவதையும், வீழ்ச்சி அடைவதையும் சகித்துக் கொண்டு இருக்க முடியாது.

ரப்பர் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை பாதுகாக்கின்ற வகையில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம். கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளை பேரழிவில் இருந்து பாதுகாப்போம்.

  • கிறிஸ்டோபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here