சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடியை விமர்சிக்கின்ற பொழுது, அவரோடு சேர்த்து நீரவ் மோடி, இன்னும் ஓரிரு மோடிகளின் கொள்ளையை இணைத்து ‘மோடி என்ற பெயர் கொண்டோர் அனைவருமே இப்படித்தான் இருப்பார்கள் போல…’ என்ற பாணியில் உரையாற்றி இருந்தார். ஓட்டுக் கட்சி அரசியல் நடவடிக்கைகளில் இது மிகவும் ஒரு சாதாரண விமர்சன உரை. அப்போது ராகுல் காந்திக்கு ‘மோடி’ என்றதொரு சாதி இருக்கின்றது என்பதே தெரியாது.
இந்நிலையில் ராகுல் காந்தி, அதானி குறித்தான இந்திய நாட்டையே சூறையாடும் பிரச்சினை குறித்து, நாடாளுமன்றத்தில் கடுமையாகச் சாடி திரைகிழித்துப் பேசி இருந்தார். இவ்வுரை அனைத்து எதிர்க்கட்சிகளாலும் மக்களாலும் வரவேற்கத்தக்க ஒன்றாக அமையப்பெற்றது. உடனே அதானி- மோடி – ஆர் எஸ் எஸ் கூட்டம் சதித்திட்டம் ஒன்றை தீட்டியது. எந்த வகையிலும் இனி ராகுல்காந்தியை நாடாளுமன்றத்திற்குள் நுழையவே விடக்கூடாது என்பதுதான் அவர்களின் சதித் திட்டம்.
அதற்கு இணக்கமான பாஜக சார்ந்த ஒரு நபரை குஜராத்தில் தேர்வு செய்து, அப்போதே இரண்டரை ஆண்டுகளுக்கு முன் நடந்த… ‘கர்நாடகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகின்ற பொழுது எங்களது ‘மோடி’ சாதியைத் தரந்தாழ்த்திப் பேசி விட்டார்; எனவே, ‘மோடி’ இனத்தை இழிவு படுத்திய ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிய தண்டனை வழங்க வேண்டும்…’ என்ற பாணியில் குஜராத் கீழமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரச் செய்தது இந்த காவி(லி)ப்படை.
உடனே கீழமை நீதிமன்றம் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பொழுது கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
உடனே பாசிச பாஜக மோடி அரசு, ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை – தனக்கு இருந்த பெரும்பான்மை பலத்தைக் கொண்டு – இழக்கச் செய்தது. மறுநாளே ராகுல்காந்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டினைக் காலி செய்ய உத்தரவிட்டு, உடனேயே வெளியேற்றப்பட்டார். பின்பு டெல்லியில் வேறொரு முக்கிய இடத்தில் குடியேற ராகுல் காந்தி முற்பட்ட பொழுதும் கூட அதற்கும் வக்கிரமான முறையில் தூண்டிவிட்டு முட்டுக்கட்டை போட்டனர்.
ஆக, ஒன்றுமில்லாத ஒரு சாதாரண பிரச்சனைக்காக பாஜகவின் எதிர்க்கட்சிகள் மீதான கொடும் தாக்குதலின் ஒரு பகுதியாக ராகுல்காந்தியை பலி வாங்கியது பாசிச மோடி அரசு. அதன் பிறகு ராகுல்காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, சில காலம் கடந்தே குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடையாணை பெற்றார்.
ராஜா- வின் மீதான இரண்டு வழக்கிலும் தற்போது அவரால் எப்படி எளிதாக கடந்து செல்ல முடிகிறது?
2018-ல் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திரிபுராவில் எப்படி தற்போது லெனின் சிலைகள் தகர்க்கப்பட்டனவோ, அதேபோன்று தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் பெரியார் சிலைகளும் தகர்க்கப்படும்’ எனத் தினாவட்டாகப் பதிவிட்டிருந்தார்.
அதே 2018 ஆம் ஆண்டில் கனிமொழி கருணாநிதி மீது மிகவும் இழிவான கருத்துக்களை உள்ளடக்கிய அவதூறுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த இரண்டு பிரச்சனைகளின் மீதும் தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டன. அவ்வழக்குகள் எம்எல்ஏ – எம்.பி.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. எச்.ராஜா இவ்வழக்கு விசாரணைக்குத் தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும், டெல்லி உச்சநீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்த பொழுது அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இறுதியில், எச்.ராஜாவோ ட்விட்டர் பதிவுகளை தான் மேற்கொள்ளவில்லை என்றும், தமது அட்மின் தனக்குத் தெரியாமல் இத்தவற்றினை செய்துவிட்டார் என்றும் முழுப் பூசணியை சோற்றில் மறைத்த கதையாக முழுமையாகப் பொய் சொன்னார்.
எச்.ராஜா தரப்பு வழக்கறிஞரோ, ‘பெரியார் சிலையை அவர் உடைப்பேன் என்று பதிவிட்டதற்கான எந்த ஆதாரங்களும் கிடையாது; கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியானது; அவரே புகார் அளிக்காத நிலையில் மூன்றாம் நபர் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்’ என்று வாதிட்டார்.
ஆனால் காவல்துறையோ ‘அவர்தான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்’ என்ற உண்மையையும், குற்றச்சாட்டுகளையும் போதுமான ஆதாரங்களுடன் நிரூபித்துவிட்டனர்.
சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பும்- தப்பிக்க வழி செய்த நீதி பரிபாலனமும்:
காவல்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் தமது 41 பக்கங்கள் மற்றும் 21 பக்கங்கள் அடங்கிய இரண்டு தீர்ப்புகளில் எச்.ராஜாவை குற்றவாளி என அறிவித்தது.
அதன்படி கனிமொழி மீதான அவதூறு வழக்கின் மீது ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.3000/- அபராதமும், பெரியார் சிலையை உடைப்பேன் என்று பதிவிட்டதற்கான வழக்கில் ஆறு மாதம் சிறைத்தண்டனையும் ரூ.2000/ அபராதமும் ஆக மொத்தம் ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.5000/- அபராதமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.
படிக்க: மதம் : ஹெச்.ராஜா, பா.இரஞ்சித் மற்றும் பெரியார்
ஆனால் நீதிமன்றமோ, எச்.ராஜா மேல்முறையீடு செய்ய வாய்ப்பளித்து, தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தது. இதற்கிடையில் அவர் தமது – சொந்த சங்கிகளின் அரசியல் பலத்தை வைத்து – சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இத்தகையதோர் சலுகை நடிகை கஸ்தூரி பாணியில் இவருக்கு கூடுதலாகவே வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் எல்லாம் ‘அவாள்’ சாம்ராஜ்யம் அன்றி வேறு எதுவும் இல்லை.
நீதித்துறை அம்மணமாக நிற்கிறதா? இல்லையா?
இதே எச்.ராஜா முன்பு ஒரு போராட்ட நேரத்தில் காவல் துறையுடன் மோதல் போக்கை வீதியில் நின்று நடத்திய தருணத்தில் காவல்துறை, உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை அவரிடம் சுட்டிக்காட்டிய பொழுது, காவல்துறையையும் சாடியது மட்டுமல்லாமல், ‘போங்கய்யா… உயர் நீதிமன்றமாவது; மசுராவது’ என்று வாய்க்கொழுப்பெடுத்துப் பேசியவர்தான் இந்த பாஜகவின் எச்.ராஜா. பின்பு அது தொடர்பாக வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்த நிலையில் அவர் நீதிமன்ற விசாரணை அறையிலேயே தான் ஒரு குற்றவாளி என உணராமல் தான் பாஜக – RSSகாரன், தேசிய செயலாளர் என்ற மிதப்பில், வழக்கறிஞர்களுடன் நாற்காலியில் அமர்ந்த போது, எண்ணற்ற வழக்கறிஞர்கள் அவரது அச்செய்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததும், பின்பு அவர் அசடு வழிய எழுந்து நின்றதும், நீதியரசர் முன் – அவர்களின் மூதாதையர் சாவர்க்கர் பாணியில் – தமது அநாகரிகப் பேச்சுக்கு பகிரங்க மன்னிப்புக் கேட்டு விடுதலையானதும் அது ஒரு தனி வரலாறாகிப் போன விடயம்.
படிக்க: கிரிமினல் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவை பாதுகாக்கும் உச்சநீதிமன்றம்!
ஆக தமிழ்நாட்டில் செல்லாக்காசாகிப் போன எச்.ராஜா பாரதூரமான குற்றங்கள் செய்திருப்பினும் அவர் எளிதான முறையில் நீதிமன்ற தண்டனைகளிலிருந்து தப்பிக்க வழி செய்கிறது நீதிமன்றம். இவர் ‘அவாள்’ என்பது மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் – பாஜக – மத வெறியன் என்பதும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. அதே நேரத்தில் சூத்திர பஞ்சம வகுப்புகளைச் சேர்ந்தோர் இதே குற்றத்தைப் புரிந்திருந்தால் நீதிமன்றம் இவ்வாறு விடுதலை செய்திருக்குமா என்பதனை நாம் உணர முடியாத விடயம் அன்று.
அதேபோன்று, ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முக்கிய தலைவர்களில் ஒருவராக செயல்படுபவர். ஆனால் அவர் மீது அப்பட்டமானபொய் குற்றம் சுமத்தி பாஜகவின் கைப்பாவையாக விளங்கிய குஜராத் கீழமை மற்றும் உயர்நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்க வழிவகை செய்தார்கள். இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்றால் தான் அவரது பதவி பறிக்கப்படவும், நான்கு ஆண்டுகளுக்கு தேர்தல் களத்தில் நிற்க முடியாமல் தடுக்கப்படவும் முடியும் என்பதாலேயே அவ்வித இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கச் செய்தார்கள். இதன் மூலம் அதானி-மோடி கும்பல் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்துத்துவக் காவிக் கூட்டமும் குதூகளித்தது! ஆக, இவற்றின் மூலம் நீதித்துறை முழு அம்மணமாகி காவித்துறையாகி விட்டதை உணர முடிகிறது அல்லவா?
கடந்த 2024 தேர்தலுக்கு முன்பே இவிஎம் வாக்கு இயந்திரத்தில் மோசடிக்கு வாய்ப்பு உண்டு; என்பதை ஆதாரப்பூர்வமாக சுட்டிக் காண்பித்து மனுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் மனுதாரர் தரப்பில் வாக்குச்சீட்டு முறையை உடனே அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கையாக வைக்கப்பட்ட பொழுது, உச்ச நீதிமன்றம் இதில் ‘பரவசம்’ காட்டுவது போல் பாவனை செய்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளை உச்சநீதிமன்றத்துக்கே வரவழைத்து, அவர்களும் தாங்கள் செட்டப் செய்து கொண்டு வந்திருந்த EVM வாக்கு இயந்திரத்தை கொண்டு 0.1 சதவீதம் கூட தவறே நடக்காது என்று ‘சத்தியம் செய்து நிரூபித்துச் சென்றனர்’ . அத்துடன் வழக்கும் முடிவுற்றது. ஆனால் அகில இந்திய ரீதியில் எண்ணற்ற மோசடிகளும் தில்லுமுல்லுகளும் நடந்தேறியதை பல்வேறு ஊடகங்கள் ஆதாரபூர்வமாக வெளியிட்டன. அதனால் யாதொரு பயனும் உண்டாகவில்லை.
அண்மை உதாரணம், மகராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது வாக்கு பதிவு நடந்து முடிந்ததும் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளுக்குப் பிறகு திடீரென 76 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளதாக வாக்கு எண்ணிக்கையின் போது அம்பலம் ஆகியுள்ளது. இதற்கெல்லாம் உச்சநீதிமன்றம் யாரேனும் வழக்கு தொடர்ந்தால் மட்டும் தான் தலையிட முடியுமா? ஏன் இதனை ஒரு சூமோட்டோ (Suo-moto) வழக்காகப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கூடாது? ஏனெனில் நீதித்துறை, தேர்தல் ஆணையம் உட்பட அனைத்துத் துறைகளும் காவிமயமாய் விட்ட சூழ்நிலையில் அனைத்துமே அம்மணமாகி நிற்கின்றன என்பது நிதர்சன உண்மையாகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் – ஹேமந்த் சோரன் – செந்தில் பாலாஜி மீதான ED பாய்ச்சலும் கைதுகளும்! வேடிக்கை பார்த்தது நீதித்துறை!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முதலானோர் தேர்தல் நேரத்தில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதலமைச்சர் பதவிகளையும் இழக்கச் செய்தனர். இதற்கு இந்த காவிக் கூட்டமே காரணம் என்பதும் அனைவரும் அறிந்ததே! அதேபோல தமிழ்நாட்டில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்து ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைத்தது. இவர்கள் அனைவருமே தற்போது பிணையில் வெளிவந்து விட்டனர். ஹேமந்த் சோரன் அண்மையில் நடைபெற்ற மாநில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகவும் ஆகிவிட்டார்.
இவர்கள் அனைவருமே உண்மையில் குற்றம் செய்திருந்து நடவடிக்கை எடுக்கப்படுமாயின் எவரும் ஆட்சேபனை தெரிவிக்க முடியாது. செந்தில்பாலாஜியைப் பொறுத்தமட்டில் மீண்டும் அமைச்சரானதில், லண்டன் சென்று ‘மாபெரும் அரசியல் கல்வி’யைக் கற்று திரும்பியுள்ள அண்ணாமலையை கதிகலங்கச் செய்துள்ளது. கோவையைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட முடியும் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த வேளையில் மீண்டும் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து கோவையைத் தொடர்ந்து அவர் கைப்பிடிக்குள் வைத்திருக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டதே என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை தூண்டுதலிலேயே செந்தில் பாலாஜி பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்று அவரது அமைச்சர் பதவிப் பறிப்பினை மேற்கொள்ள சதித் திட்டம் போடுகிறார்கள். ஆனால் இவற்றில் காவி கூட்டத்தின் பழிவாங்கும் நடவடிக்கை மேலோங்கி இருப்பதாலேயே நாம் அவர்களை சாட வேண்டி உள்ளது.
உதாரணமாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத் துறையால் பல்லாயிரம் கோடி குற்றச்சாட்டுகளுக்கு இலக்கான எதிர்க்கட்சிக்காரர்கள் பாஜக-வில் தஞ்சம் புகுந்ததும், அமலாக்கத் துறையினரின் அனைத்து வழக்குகளும் இழுத்து மூடப்பட்டது ஏன்? என்பதுதான் நமது பிரதான கேள்வி. ஆக எந்த ஒரு ஊழல் குற்றவாளியும், பாலியல் குற்றவாளியும், கொலைகார கிரிமினல் குற்றவாளியும் பாஜக-வில் சங்கமம் ஆகிவிட்டால் அந்த (பாஜக) ‘வாஷிங் மெஷின்’, குற்றவாளிகள் அனைவரையும் தூய்மைப்படுத்தி விடுகிறது.
இது மட்டுமின்றி அமலாக்கத்துறையினரோ, வருமானவரித்துறையினரோ, சிபிஐ-யோ நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் பாஜகவினர் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவே இல்லையே ஏன்? பாஜக – ஆர்.எஸ்.எஸ் – காவிக் கூட்டம் அப்பழுக்கற்ற தூய்மையான கூட்டம் என்று மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமா என்ன? அவர்களுக்கு இணையான லஞ்ச லாவண்ய ஊழல் பேர்வழிகள் உலகில் வேறு எங்கனும் காண முடியுமா? பட்டியலிட்டால் ஒரு மாபெரும் புத்தகமே வெளியிடலாம்!
கார்ப்பரேட் – காவிப் பாசிசத்தை ஒழித்துக் கட்டாமல் மக்களுக்கு தற்காலிக விடுதலை என்பதுகூடக் கிட்டாது!
எனவே, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட எண்ணற்ற வரி உயர்வுகள், மின் கட்டண உயர்வு உள்ளிட்ட எண்ணற்ற உயர்வுகள், நாட்டின் பொதுச் சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்தல், அவர்களுக்கு லட்சக்கணக்கான கோடி கடன் அளிப்பதும், அவற்றை தள்ளுபடி செய்வதும் சாதாரணமாகிவிட்ட இழிந்த சூழல், அனைத்துத் துறைகளையும் காவிமயமாக்கி மோசடி தேர்தல்களில் தில்லுமுல்லுகள் பல செய்து தொடர்ந்து பதவிகளை தக்க வைத்துக் கொள்ளுதல்… இப்படி எண்ணற்ற வகைகளில் – மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்த கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வேரறுத்து ஜனநாயக கூட்டரசை உடனடியாக நிறுவாமல் மக்களுக்கு தற்காலிக விடியல் என்பது கூட கிட்டாது!
- எழில்மாறன்.