மாரிதாஸ் கைது : அவதூறு பரப்புவதெல்லாம் கருத்துரிமையா?


சமீபத்தில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத், தமிழகத்தின் குன்னூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்தபோது, அவர் பயணித்த ஹெலிகாப்டர் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அவரோடு பயணித்த 13 பேர் அகால மரணமடைந்தனர். ஒருவர் (விமானி) மட்டும் உயிருக்கு போராடுகிறார்.

இந்த விபத்தையொட்டி பலரும் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்து வரும் நிலையில், மாரிதாஸ் என்பவர் தனது டிவிட்டரில் தமிழகம் காஷ்மீராக மாறி வருகிறது, இங்கு பிரிவினைவாதிகளின் நடமாட்டம் அதிகரிக்கிறது என்பதைப் போன்று பதிவிட்டார். அதாவது இது விபத்தல்ல, இதன்பின் தீவிரவாத சதி உள்ளது என்பதை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். தன்னைக் கைது செய்ய போலிசு வருகிறது எனத் தெரிந்தவுடன் அந்தப் பதிவை நீக்கி விட்டார். கைது செய்ய வந்த போலிசுடன் பிஜேபி – யினர் வாக்குவாதம் செய்தனர். பிறகு காவல்துறை ஜீப்பில் ஏற்றாமல் பிஜேபி நிர்வாகியின் காரில் ஏற்றி ராஜ மரியாதைதோடு அழைத்து சென்றனர்.

யார் இந்த மாரிதாஸ்?

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ” நான் ஏன் மோடியை ஆதரிக்கிறேன்” என்ற புத்தகம் எழுதி, கிழக்கு பதிப்பகம் பத்ரி வெளியிட்டு, அதை ரஜினியிடம் கொடுக்கும்போது அவரோடு புகைப்படம் எடுத்து அதையும் வெளியிட்டு, இப்படியாக பொது வெளியில் அறிமுகமானவர். இவர் தன்னை கட்சி சாராதவர் எனக் கூறிக்கொண்டாலும், அவரது தொடர் பதிவுகள் அவரை அப்பட்டமான சங்கி என அடையாளம் காட்டின.

பாசிச பிஜேபி -யின் இந்துத்துவ நச்சுக் கருத்துகளை தமிழகத்தில் விதைக்கவும், இங்கு வேரூன்றியுள்ள பெரியாரிய, இடதுசாரி முற்போக்கு கருத்தியலை சிதைக்கும் நோக்கிலும் நன்கு திட்டமிடப்பட்டு இறக்கிவிடப்பட்ட ஊடக அடியாள்தான் இந்த மாரிதாஸ். இவரின் கீழ் இயங்கும் ஆயிரக்கணக்கான வானரப் படைகள் வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியுப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தீயாக வேலை செய்கின்றன. அப்பட்டமான அவதூறுகளை, பொய்களை, புரட்டுகளை பரப்புவதே இவைகளின் முழுநேரப் பணி.

திமுக – வுக்கும், பாகிஸ்தான் தீவிர வாதிகளுக்கும் தொடர்புள்ளது, தப்லீக் ஜமாத் மாநாட்டின் மூலம்தான் இந்தியாவில் கொரோனா பரவியது, முஸ்லிம்கள் வேண்டுமென்றே எச்சில் துப்பி கொரோனாவை பரப்புகிறார்கள், தேசவிரோத சக்திகளுக்கு சீனாவிலிருந்தும், அமெரிக்க மெஷினரிகளிடம் இருந்தும் பணம் வருகிறது என்பது போன்ற பல்வேறு ஆதாரமற்ற அவதூறுகளை அன்றாடம் பரப்புகின்றனர்.

தங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை ஆன்ட்டி இந்தியன், தேசவிரோதி, இஸ்லாமிய கைக்கூலி, அர்பன் நக்சல் எனப் பல வகைகளில் முத்திரை குத்துவது, தொலைக் காட்சியில் பணிபுரியும் ஓரளவு நேர்மையான நெறியாளர்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி அவர்களது வேலைக்கு வேட்டு வைப்பது போன்ற இழிசெயல்களில் ஈடுபடுவதே இவர்களுக்கான அஜெண்டா.

இந்த மாரிதாஸ் கைதுக்கு முன்பே இவரது சகாக்களான கிஷோர் சாமியும், கல்யாணராமனும் குண்டர் சட்டத்தில் கம்பி எண்ணுகின்றனர். இவர்களும் வாய்க்கொழுப்பு பேச்சாலும், பெண்களுக்கு எதிரான ஆபாச கருத்துகளை தொடர்ந்து வெளியிட்டதாலும் கைது செய்யப் பட்டனர். மாரியின் கைதையொட்டி பாஜக – வின் அண்ணாமலையும், எச். ராஜாவும் தமிழக அரசு கருத்துரிமைக்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

எதெல்லாம் கருத்துரிமை ?

ஒரு விசயத்தில் கருத்து கூற அனைவருக்கும் உரிமையுண்டு. ஒரு கருத்துக்கு எதிர்கருத்தும் வைக்கலாம். ஆனால் அவதூறை எதிர்கொள்வது எப்படி? அது சட்டப்படி குற்றம் என்ற வகையில்தானே அணுகமுடியும்.

பிஜேபி ஆளும் மாநிலங்களில், அரசின் மோசமான செயல்பாடுகளை விமர்சித்த பத்திரிகையாளர்கள் உட்பட பலரை சிறையில் அடைத்துள்ளனர். உண்மையை உரைத்தவர்களுக்கு ஏற்பட்ட கதி இதுதான். பீமா கோரெகான் வழக்கில் எவ்வித ஆதாரமுமின்றி 15 க்கும் மேற்பட்ட அறிவுஜீவிகளை பிணையில் வரமுடியாத கொடிய சட்டங்களில் கைது செய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைத்து அகம் மகிழும் பாசிச மோடியின் பாதம் தாங்கிகள் இங்கு அவதூறை மட்டுமே அள்ளிவீசிய, பொய்யை மட்டுமே கடைபரப்பிய கயவனின் கைதுக்கு கண்டனம் தெரிவிப்பது வேடிக்கைதான்.

புராண, இதிகாசங்களில் உள்ள ஆபாசக் குப்பைகளை அம்பலப்படுத்திய கருப்பர்கூட்டம், ஆண்டாள் குறித்து ஏற்கனவே ஒருவர் கூறியதை குறிப்பிட்டு எழுதிய வைரமுத்து, மனுநீதியில் பெண்கள் குறித்து உள்ள இழிவான கருத்துகளை எடுத்துச்சொன்ன திருமா, கோவில்களில் காணிக்கை செலுத்துவதைப் போல பள்ளிகளுக்கும் உதவவேண்டும் என பேசிய ஜோதிகா போன்றோர் மீதெல்லாம் வெறிநாய் கூட்டம் போல விழுந்து பிராண்டிய ஜந்துக்கள் இன்று மாரிதாஸின் அவதூறு கருத்துக்கு எதிரான நடவடிக்கையை கருத்துரிமை மீதான தாக்குதல் என கதறுவதுதான் மாபெரும் காமெடி. மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி, உங்களுக்கு வந்தா ரத்தமா? நல்லா இருக்குடா உங்க நியாயம்.

நீதிபதி கையில் Bjp கொள்கை அறிக்கை

ஆனாலும் மத்தியில் ஆட்சியில் உள்ள துணிச்சலில்தான் இவர்கள் இந்த ஆட்டம் போடுகின்றனர். நீதித்துறையும் இவர்களுக்கு ஆதரவாகவே உள்ளது. மாரிதாஸ் மீதான இந்த வழக்கை ரத்து செய்துள்ளது மதுரை உயர்நீதிமன்றம். எச்.ராஜா, பாண்டே, அண்ணாமலை, அர்ஜுன் சம்பத் போன்றோர் கைது செய்யப்படாமல் இருப்பதும் இவர்களது துணிச்சலை அதிகரித்துள்ளது. எப்படியாவது தமிழகத்தையும் உ.பி யாக மாற்றிவிட வேண்டும் என துடிக்கின்றனர். எனவேதான் தீவிரவாத பூச்சாண்டி காட்டி ஆட்சியைக் கலைக்க எத்தனிக்கின்றனர். இந்த காவிகளின் ஒவ்வொரு அசைவிலும் உள்ள சதியை புரிந்துகொண்டு முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

ஆக்கம் : குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here