மக்கள் கலை இலக்கியக் கழகம் — தமிழ்நாடு

கண்டன அறிக்கை

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் ‘இரும்புக்கரமும்’, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை மடைமாற்றும் சதியும்!


திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 27, 2026) பிறப்பித்துள்ள உத்தரவு — உச்சிப் பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்படும் தீபத்தின் சுடரைக் கொண்டு நாளை (நவம்பர் 28) தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருப்பது, கோவில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்து முன்னாள் நீதிபதிகளை ரிசீவர்களாக நியமித்திருப்பது, சி.ஆர்.பி.எஃப் (CRPF) படையினரைக் குவிக்க ஆணையிட்டிருப்பது மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியிருப்பது — தமிழ்நாட்டின் அரசியல் சூழலிலும் சமூக நல்லிணக்கத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் நகர்வாகும். இந்த உத்தரவை மக்கள் கலை இலக்கியக் கழகம் கூர்மையாகவும் விமர்சனபூர்வமாகவும் அணுகுகிறது.

எங்கே போனது உங்களின் ‘இரும்புக்கரம்‘?

“நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாததை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்” என்று உச்ச நீதிமன்றம் இன்று முழங்குகிறது. ஆனால், வரலாறு நெடுகிலும் இந்த ‘இரும்புக்கரம்’ யாருக்காக நீண்டது, யாருக்காக முடங்கியது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை:

காவிரி நீர் உரிமை: நீங்களே தீர்ப்பளித்த காவிரி நீரை, கர்நாடக அரசிடமிருந்து இரும்புக்கரம் கொண்டு எங்களுக்குப் பெற்றுத் தந்ததே இல்லையே?

சபரிமலை தீர்ப்பு: சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உங்களுடைய சொந்தத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்ட சபரிமலை கோவில் நிர்வாகத்தையும் சங் பரிவாரக் கும்பலையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கத் துணிந்ததே இல்லையே?

பாபர் மசூதி இடிப்பு: உங்களுடைய உத்தரவை மீறி, உங்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறி, பட்டப்பகலில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, “அங்கே மீண்டும் பாபர் மசூதி கட்டித் தரப்படும்” என்று உங்களுடைய இரும்புக்கரம் அன்று நீளவே இல்லையே?

மக்கள் விரோதச் சட்டங்கள்: நீட் (NEET), பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு (EWS), காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துப் பறிப்பு மற்றும் பிரிவினை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) முறைகேடுகள், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த (SIR) முறைகேடுகள் போன்ற எண்ணற்ற அநீதிகளுக்கு எதிராக மௌனம் காக்கும் உங்களால், ஒரு மத நல்லிணக்கத்தைக் குலைக்காமல் அமைதியாக இருக்க முடியாதா?

பொறுப்பான ஆட்சியாளர்களைத் தப்பவைத்து, அதிகாரிகளை மட்டும் குறிவைக்கும் போக்கு: நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டது அமைச்சரவையும், முதலமைச்சரும் (உள்துறைப் பொறுப்பும், ஆட்சியின் தலைமைப் பொறுப்பும் கொண்டவர்) மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும்தான். அரசு அதிகாரிகள் என்பவர்கள் ஆட்சியாளர்களின் உத்தரவுகளைச் செயல்படுத்துபவர்களே. ஆனால், இவர்களை வெறும் “பொலிட்டிக்கல் பாஸ்” (Political Bosses) என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டு, அரசு அதிகாரிகளை மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது அடிப்படைப் பொறுப்புக்கூறலிலிருந்து ஆட்சியாளர்களை விலக்கி வைக்கும் முயற்சியாகும். முதலமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர்களையும் நேரடிப் பொறுப்பாளர்களாகக் கருதாமல் விலக்கி வைப்பது, “அதிகாரிகள்தான் தவறு செய்தார்கள், முதலமைச்சரும் அமைச்சரவையும் தவறு செய்யவில்லை” என்ற ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கவே வழிவகுக்கும்.

விஜய் அரசு மீது பரிதாபத்தை உருவாக்கும் கருத்துருவாக்கம்: 

இந்த விவகாரத்தை மேலும் மேலும் கிளறி விடுவதன் மூலம், “அரசு என்னதான் மதச்சார்பின்மையைக் காக்க முயற்சி செய்தாலும், நீதிமன்றத்தை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது” என்ற பொதுக் கருத்தை உருவாக்கி, தவெக அரசின் மீதும் நடிகர் விஜய் மீதும் மக்களிடையே ஒரு பரிதாப அலையை உருவாக்கும் முயற்சி நடக்கிறது. தேர்தல் கணக்குகளுக்காகவும், வாக்கு வங்கியைத் தக்கவைப்பதற்காகவும் எடுக்கப்படும் தற்காப்பு நகர்வுகளை, பாசிச எதிர்ப்பு அல்லது மதச்சார்பற்ற போராட்டமாகக் காட்டி, ஆட்சியாளர்களுக்குப் பரிதாபத் தளத்தை அமைத்துக் கொடுக்கும் இத்தகைய போக்கை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களின் துன்ப துயரங்களை மறக்கடிக்கும் வேலைத்திட்டம்: 

இன்று தமிழ்நாட்டில் தீபம் ஏற்றுவதுதான் மக்களின் முதன்மையான பிரச்சினையா? நாளுக்கு நாள் சீரழிந்து வரும் சட்டம் – ஒழுங்கு, கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரச் சீர்கேடு, வேலைவாய்ப்பின்மை என உழைக்கும் மக்களின் அன்றாடத் துன்ப துயரங்கள் பெருகி வருகின்றன. இத்தகைய அடிப்படை மக்கள் பிரச்சினைகள் முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டு, மறக்கடிக்கப்படுவதற்கும்; இந்த விவகாரத்தின் வழியாக இந்துத்துவ – சனாதன அஜெண்டா முன்னெடுக்கப்படுவதற்கும் இது ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் நிலைப்பாடு: ஒன்றியத்தில் பாஜக ஆட்சியும், மாநிலத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியும் நீடிக்கும் வரை, உழைக்கும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் கிடப்பில் போடப்படுவதும், மத – பண்பாட்டுப் பதற்றங்கள் உருவாக்கப்படுவதும் தொடரும்.

எனவே, இந்த அரசியல் சூழ்ச்சிகளையும், கருத்துருவாக்க மாயைகளையும் தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்துத்துவ சக்திகளையும், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறும் கவர்ச்சிவாத – கார்ப்பரேட் ஆட்சியாளர்களையும் அதிகாரத்திலிருந்து அகற்றி, உழைக்கும் மக்களுக்கான மாற்று அரசியல் அதிகார மையத்தை நோக்கி மக்கள் அணிதிரள்வதே அனைத்துப் பிரச்சினைகளுக்குமான நிரந்தரத் தீர்வாகும்.

இவண்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.
27.11.2026

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here