92 ஆயிரம் கோடி மதிப்பிலான, 166 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயல்படுத்தப்படும் மாபெரும் திட்டத்தை கிரேட் நிக்கோபார் தீவில் ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட போதே இயற்கை வளம் நிறைந்த அந்த தீவை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக மாற்றுவதற்கு எனக் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இத்திட்டத்தை எதிர்த்து வழக்கும் கொடுத்துள்ளனர்.
பெரிய நிக்கோபார் தீவு வளர்ச்சித் திட்டம் 4 முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அவை 1. சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம், 2. பன்னாட்டு விமான நிலையம், 3. மின் உற்பத்தி நிலையம், 4. புதிய நகரம் (டவுன்ஷிப்). ஆகும்.
கலாத்திய விரிகுடாவில் 14.2 மில்லியன் TEU திறன் கொண்ட துறைமுக முனையத்தை அமைப்பதற்கு மோடி அரசு திட்டமிடுகிறது. அதேபோல் ஒரு மணி நேரத்திற்கு நான்காயிரம் பயணிகளை கையாளும் திறன் கொண்ட சிவில் விமான நிலையத்தையும், மேலும் ராணுவ பயன்பாட்டுக்கான வசதியை உள்ளடக்கியதாகவும் தான் கிரேட்நிக்கோபரில் பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்கிறது.
450 மெகா வாட் திறன் கொண்ட எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தையும் சூரிய சக்தி மின் நிலையத்தையும் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.
16,610 ஹெக்டேர் பரப்பளவில் மிகப்பெரும் குடியிருப்பையும், சுற்றுலா தளங்களையும், வணிக மண்டலங்களையும் உள்ளடக்கியதாக புதிய நகரியத்தை (டவுன்ஷிப்பை) கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளது மோடி அரசு.
இத்தகைய ,பெரிய நிக்கோபார் தீவு வளர்ச்சித் திட்டத்திற்காக, பல்வேறு டெண்டர்கள் விடப்பட்டு வருகின்றன. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒருங்கிணைந்த மேம்பாட்டு கழகம் மூலமாகவும், என் டி பி சி மற்றும் அந்தமான் நிகோபர் நிர்வாகத்தின் அரசு தளத்தின் மூலமாகவும் இந்த டெண்டர் கோரும் வேலைகள் நடக்கின்றன.
விதிகள் எதற்கு? லாபம் ஒன்றே குறிக்கோள்!
வன உரிமை சட்டத்தை மீறி இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவற்றையெல்லாம் துளியும் மதிக்காமல் அடுத்த கட்ட நகர்வை மோடி அரசு முன்னெடுத்துள்ளது.
திட்டத்தை அமல்படுத்துவதற்கு, முதலில் எல்லைகளை வரைமுறைப்படுத்த நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும் .அதற்காக 166 சதுர கிலோமீட்டர் பகுதியை அடையாளப்படுத்த, எல்லைகளில் வலுவூட்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் எல்லை தூண்களை அமைக்கும் முதல் கட்ட வேலையை மோடி அரசு முன்னெடுக்க தயாராகி ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.
படிக்க: நிக்கோபார் தீவை நிர்மூலமாக்கும் நாசகார ஒன்றிய அரசின் திட்டம்!
அந்தமான் பொதுப்பணி துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தால், அதாவது கேம்பில் பேயிலிருந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டது. வருகின்ற நவம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அந்தமான் நிக்கோபார் வளர்ச்சி திட்டம் குறித்த விசாரணை நடக்க உள்ளது. இறுதி விசாரணை வரை காத்திருக்காமல் அதன் தீர்ப்புகளுக்கு கட்டுப்பட வேண்டியுள்ள பொறுப்பை உதாசீனப்படுத்தி முன்கூட்டியே ஒப்பந்த புள்ளியை கோரியுள்ளது மோடி அரசு.
அதாவது இத்திட்டத்தின் முதற்கட்டமாக 43.4 கிலோமீட்டர் எல்லையை இது வரையறுக்க உள்ளது. 20 மீட்டர் இடைவெளியில் கான்கிரீட் எல்லைக்கம்பங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்காக தற்காலிக பாதைகள் அமைக்கப்பட உள்ளன. குறுக்கிடும் ஓடைகளை தாண்டுவதற்கான பாலங்களை கட்ட உள்ளனர். காடுகளை அழித்து சமப்படுத்த உள்ளனர். மரங்களை வெட்டி அகற்ற உள்ளனர். இத்தகைய வேலைகளுக்கான நவீன இயந்திரங்கள் நிக்கோபார் தீவுக்குள் நுழைய உள்ளன.
இந்தப் பணிகளை முன்னெடுப்பதற்கு தேவையான நீர் விநியோகத்தையும் உத்திரவாதப்படுத்த வேண்டி உள்ளது. அதற்காக சீமாநல்லாவிலிருந்து காந்திநகர் லட்சுமி நகர் மற்றும் சாஸ்தி நகர் ஆகிய பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்தி இருப்பு நிலையங்களுக்கு சுமார் 25 கிலோமீட்டர் நீளமுள்ள HDPE குழாய் பதிப்பதற்கான டெண்டரையும் வெளியிட்டுள்ளது மோடி அரசு.
நடக்கின்ற திட்டப் பணிகளை கண்காணிப்பதற்கு, ஊழியர்கள், அதிகாரிகள் தங்கிப் பணி செய்ய வேண்டும். அதற்கு ஒரு அலுவலகம் தேவை. அதற்காக ஒரு மாநாட்டு மண்டபம் கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளியும் கோரப்பட்டுள்ளது.
பன்னாட்டு சுற்றுலா பயணிகளை வரவைத்து, சொகுசாக தங்க வைத்து சுற்றிக் காட்ட உள்ளார்கள். இதற்காக தெற்கில் கலாத்திய விரிகுடாவில் இருந்து வடக்கில் கேம்பல் விரிகுடா வரையில், அதாவது கிழக்கு கடற்கரையோரமாக சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்க போகிறார்கள். கார்ப்பரேட்டுகளின் சரக்குகள் கை மாறுவதற்கான இடமாகவும் இந்திய அரசின் விமான, ராணுவ தளமாகவும்கூட இந்த பகுதி மாறப்போகிறது.
வெளிநாட்டினர் இங்கு குடியேறுவதன் மூலமும், சுற்றுலாப் பயணிகளாக வந்து தங்குவதன் மூலமும் அந்தமானின் வருமானம் பெருகுமாம். அதற்காகவே மாசுபடாத மற்றும் பாதுகாக்கப்பட்ட சூழலில் ஓய்வெடுத்து மகிழ்வதற்கான ஒரு கடற்கரை சுற்றுலாத்தலமாக இதை உருவாக்க உள்ளார்கள். இதில் இயற்கை மற்றும் பல்லுயிர் சுற்றுலாவும் உண்டு. மேலும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சாகசங்களுடன் கூடிய சாகச சுற்றுலாவும் உள்ளதாம். அது போக வணிகச் சுற்றுலா, சூதாட்டச் சுற்றுலா, கருப்பொருள் பூங்காக்கள், நீர் பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்களை உள்ளடக்கி ,குடும்பமாக வந்து பொழுது போக்குவதற்கான மையங்களை கொண்டதாக இத்திட்டம் விரிவடைகிறது. அதாவது மொத்த தேசிய வருமான மேம்பாட்டு திட்டமாகவே இதை முன்னெடுக்கிறார்களாம்.
பழங்குடியினருக்கு பாடை கட்டு!
அந்தமான் மற்றும் கிரேட் நிக்கோபர் தீவுகளில் வாழும் பழங்குடியினத்தை இந்த திட்டம் மொத்தமாக நசுக்கி அழித்து விடப்போகிறது. அடர்ந்த வனங்களில் இருக்கும் உயிரினங்களும் விலங்குகளும் கூட தப்பி பிழைக்க முடியாது . இது நிலப்பரப்பில் வாழும் மனிதர்களையும் உயிரினங்களையும் விலங்குகளையும் பாதிப்பதோடு நிறுத்தாமல் கடலையும் மாசுபடுத்தும். கடல் வாழ் உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். எனவே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கிரேட் மற்றும் லிட்டில் நிகோபர் பழங்குடியினர் சபையும் கூட இந்த திட்டத்தை எதிர்க்கிறது.
படிக்க: நிக்கோபார் காடுகளை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தளிக்கும் மோடி அரசு!
இந்தப் பகுதியில் வாழும் மக்களை என்ன செய்வது என்கின்ற கவலை பாசிச மோடி அரசுக்கு இல்லை. அவர்களை அவர்களின் “மூதாதையர் நிலங்களுக்கு” இடம் மாற்றம் செய்வோம் என்கிறது மோடி அரசு. அதாவது பூர்வ குடிகளை இந்தப் பகுதியில் இருந்து அடித்து விரட்டி விட்டு கார்ப்பரேட்டுகள் தமது கையாட்களை குடியேற்ற போகிறார்கள்.
வன உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து நிர்வாக வேலைகளையும் முடித்து விட்டதாக அந்தமான் மற்றும் வடக்கு அயர்லாந்து நிர்வாகம் கடந்த ஆகஸ்ட் 2022ல் சான்றிதழ் வழங்கி விட்டது. ஆனால் பெரிய மற்றும் சிறிய நிகோபர் பழங்குடியினர் மன்றம் இதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த சட்டபூர்வ ஒப்புதல் குறித்து தவறானதகவல்களைத் தந்து பெறப்பட்ட முறைகேடான ஒப்புதல்களின் அடிப்படையில் அறிவிப்பை நிர்வாகம் வெளியிட்டு இருப்பதாகவும், இந்தத் திட்டத்திற்காக தங்களது தடையில்லா சான்றிதழை திரும்ப பெறுவதாகவும் பலமுறை கடிதம் எழுதியிருந்ததாக பழங்குடியினர் மன்றம் அறிவித்துள்ளது .
நாட்டின் நடுவில் உள்ள மலைகளை காக்கவே பழங்குடி மக்களால் முடியாமல் தொடர் போராட்டங்களை ஆண்டு கணக்கில் நடத்தி வருவது தான் வரலாறாக உள்ளது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கார்ப்பரேட் திட்டங்களின் திணிப்பானது ஒரு இன அழிப்பை நோக்கி போய்க்கொண்டிருக்கும் சூழலில், இந்திய நிலப்பரப்பிலிருந்து மிகவும் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு அந்தமான் மற்றும் கிரேட் நிக்கோபார் தீவில் வாழும் சொற்ப எண்ணிக்கையிலான பழங்குடியினர்களால் கார்ப்பரேட்டுகளின் திட்டத்தையோ கார்ப்பரேட்டுகளின் நல விரும்பியான மோடி உள்ளிட்ட பாசிச கும்பலின் தாக்குதலையோ எதிர்த்து நிற்க முடியுமா? அந்தமான் கிரேட் நிக்கோபர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் அது அந்த பழங்குடியினரின் போராட்டத்தால் மட்டும் சாத்தியமாகாது. அது இந்திய மக்களின், உலக மக்களின் ஒருங்கிணைந்த போராட்டமாகவும் விரிவடைய வேண்டும். வனங்களை கடல் வளத்தை சுற்றுச்சூழலை அழித்து முன்னெடுக்கப்படும் திட்டங்களால் உலக மக்கள் தான் அதற்குரிய விலையை தந்து கொண்டுள்ளனர்.
கடல் மட்டம் உயர்ந்தால் இயற்கை பேரழிவுகள் தொடர்ந்தால் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்களும் கூட கேள்விக்குள்ளானதாகவே மாறும். கார்ப்பரேட் கொள்ளைக்கு கொள்ளை போவதில் இருந்து உலகத்தை காப்போம்! நிக்கோபரையும் காப்போம்!
இளமாறன்







