“நண்டு கொழுத்தால் வலையில் தங்காது” என்று ஒரு பழமொழி உள்ளது அது யாருக்கு பொருந்துமோ பொருந்தாதோ, ‘ மூளை வீங்கிகளாக’ தங்களை கருதிக் கொள்ளும் பார்ப்பன கும்பலுக்கு 100% பொருந்தும் என்பதை அந்த கூட்டத்தின் பிரதிநிதியாக தொடர்ந்து பேசி வருகின்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் நிரூபித்துக் கொண்டுள்ளார்.

தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் பதிப்பகம் சார்பில், ‘மகா பெரியவா’ நூல் வெளியீட்டு விழா, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, பாரதீய வித்யா பவன் அரங்கில் கடந்த 11ஆம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கீழ்க்கண்டவாறு திருவாய் மலர்ந்துள்ளார்.

“நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதாக 2019ஆம் ஆண்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை 2024இல் வந்தது. அப்போது நூல் கொள்முதலில் இனி மோசடி நடக்காமல் இருக்க பல்வேறு வழிகாட்டுதல்களை நான் தீர்ப்பில் வழங்கியிருந்தேன். ஆனால் 2025இல் பெரியார் அறிவுலகத்தில் மீண்டும் முறைகேடு நடந்திருக்கிறது என்றால், எனக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும். பெரியார் அறிவுலகத்தில் உள்ள அனைத்து ரேக்குகளில் அகல்விளக்கு புத்தகங்கள் தான் இருக்கிறது. அந்த பாவம் கழிய வேண்டுமென்றால் மகா பெரியவருடைய புத்தகங்களை அந்த ரேக்குகளில் அடுக்கி வைக்க வேண்டும்” என்று மகா பெரியவா பெருமையை பரப்ப முயற்சித்துள்ளார்.

இத்தகைய பேச்சு மூலம் மகா பெரியவா என்ற கொடூரமான சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பார்ப்பன பயங்கரவாதிக்கு காவடி தூக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் அது மட்டுமின்றி அவரது உள்ள கிடக்கையான சனாதன தர்மத்தை நிலை நாட்டுகின்ற முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் அதற்கு எதிர் வினையாக மகா பெரியவாவின் லீலைகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் உலா வரத் தொடங்கி விட்டன.

ஆதிசங்கரன் சௌந்தர்ய லஹரி பாடிய காலத்திலிருந்து தற்போது கடைசியாக மாண்டு போன ஜெயந்திர சரஸ்வதி என்ற எம் சுப்பிரமணியன் வரை பார்ப்பன கும்பலின் தலைவர்களாக இருந்த சனாதன பயங்கரவாதிகள் இந்து மதத்தின் தலைவர்கள் என்று பிரபலப்படுத்தப்பட்டார்கள்.

இந்து மதம் என்பதே பார்ப்பன கும்பலின் ஆதிக்கத்தை மனமுவந்து ஏற்றுக் கொள்கின்ற அடிமைத்தனத்தை போதிக்கின்ற கருத்தியல்கள் மற்றும் நடைமுறைகளின் தொகுப்பு தான் என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும்.. மகா பெரியவா காலத்தில் அவர் பேசிய அபத்த சரக்குகள் அனைத்தும் தெய்வத்தின் குரல் என்று புத்தகங்களாக போட்டு விற்றுக் கொண்டுள்ளது பார்ப்பன கும்பல்.

படிக்க: காஞ்சி சங்கர மடத்துக்கு புதிய சங்கராச்சாரி தேர்வு! பார்ப்பனர்கள் மட்டுமே சங்கராச்சாரியாவது ஏன்?

பெண் அடிமைத்தனத்தையும், ஆணாதிக்க வக்கிரத்தையும், சனாதனத்தை உயர்த்திப்பிடித்து தீண்டத்தகாதவர்கள் எந்த விதமான உயர்ந்த சோப்பு போட்டு குளித்தாலும் அவர்களின் பிறவி அழுக்கு போகாது என்று திமிர்த்தனத்துடன் வார்த்தைகளை உதிர்த்த மகா பெரியவா எழுதிய புத்தகங்களை பெரியார் நூலகத்தில் வைக்க வேண்டும் என்பதற்கு பார்ப்பன கொழுப்பு மற்றும் திமிர் அடிப்படையாக உள்ளது.

பல நூற்றாண்டுகளாக பார்ப்பன கும்பலின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடி போராடி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் பார்ப்பனரல்லாத சமூகம் முன்னேறி கொண்டுள்ளது.

பார்ப்பனர்களுக்கு அடிமையாக காவடி தூக்கிய மன்னர்கள் தனது குல குருக்களாகவும், சித்தாந்த வழிகாட்டிகளாகவும் பார்ப்பனர்களை ஏற்றுக் கொண்டதன் காரணமாக சனாதனத்தை கட்டி காத்து வந்தனர் என்பதும், அதற்கு எதிராக போராடுகின்றவர்களை கழுவில் ஏற்றியும், வாளுக்கு பலியாக்கியும் கொன்று ஒழித்தனர் என்பதும் தான் வரலாறு.

இத்தகைய கொடுங்கோன்மைகளில் இருந்தும், அடக்குமுறைகளில் இருந்தும் போராடி பகுத்தறிவுடன் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு கற்றுக் கொடுத்த தந்தை பெரியாரின்  பெயரில் இயங்குகின்ற பெரியார் நூலகத்தில் நூல் கொள்முதல் செய்வதில் சில ஊழல்கள் நடந்துள்ளது என்ற ஒரே காரணத்தைக் காட்டி நூலகத்தை இழுத்து மூடுவதற்கு முயற்சிக்கின்றனர், அதற்கு பதிலாக பார்ப்பன பண்டாரங்களில் அருள் வாக்குகளை புதுப்பித்து மூளையில் திணிப்பதற்கு ஆர்எஸ்எஸ் பாஜகவின் அடியாள் படை கிளம்பியுள்ளது என்பதுதான்  ஜி. ஆர். சுவாமிநாதன் பேச்சு நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

படிக்க: ஜி ஆர் சுவாமிநாதன் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கொடுக்கப்பட்டுள்ள புகார் மீது விசாரணை நடத்து!

நீதிபதிகளை விமர்சிக்க கூடாது என்று வாய்பூட்டுச் சட்டம் போடுவதன் மூலம் அவர்களின் வானளாவிய அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்காமல் கையைக் கட்டி வாயை பொத்தி அடிமையாக வாழ்வதற்கு உகந்த வகையில் ஆர்எஸ்எஸ் பாஜக பார்ப்பன சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு துடித்துக் கொண்டுள்ளது.

பார்ப்பன (இந்து) மதத்தின் கொடுங்கோன்மைகளையும் அதன் சனாதன அடக்குமுறைகளையும் பற்றி ஆயிரக்கணக்கில் வெளிவந்துள்ள அனைத்து புத்தகங்களையும் பெரியார் நூலகம் உள்ளிட்ட அனைத்து நூலகங்களிலும் நிரப்புவதற்கு போராடுவோம். நமது அடுத்த தலைமுறைகளுக்கு டிஜிட்டல் முறையில்  இவை அனைத்தையும் மீண்டும் மீண்டும் வாசிக்கின்ற பழக்கத்தை கற்றுக் கொடுப்போம்.

வரலாற்றுப் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் பார்ப்பன மேலாதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குகின்ற வகையிலும், கருத்து முதல்வாதம் என்ற வகையில் இந்திய சமூக அமைப்பில் ஒவ்வொரு மனிதனின் மூளைக்குள்ளும் நிரம்பிக் கிடக்கின்ற சாதிய, வர்ணாசிரம இழிவுகளை துடைத்தெறிகின்ற வகையிலும் அறிவுப் புரட்சியை தொடர்ந்து நடத்துவோம்.

  • பார்த்தசாரதி.

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here