“விவேகானந்தன் பழனிசாமி நாயுடு” என்று பெருமை பொங்க தமது பெயரை போட்டுக் கொண்டு, கம்மவார் கலாச்சார கழகத்தை நடத்தி வரும் நபர், பீளமேடு பள்ளி மாணவனின் தற்கொலை தொடர்பாக நீதி கேட்டு நடந்து வரும் போராட்டங்களை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்று முகநூலில் விஷத்தை கக்கி உள்ளார்.
“பேட்ரியாட்டிக் வாரியர்ஸ் குரூப்” என்ற ஒன்றையும் சாதி வெறியாளர் விவேகானந்தன் பழனிச்சாமி நடத்தி வருகிறார். அது நாட்டுப்பற்று கொண்ட போராளிகளால் நடத்தப்படுவது அல்ல; சுயசாதி வெறியர்களை உள்ளடக்கியதாகவே இருக்கும் என்பதை அவரின் காணொளியே உணர்த்துகிறது. அவரது முகநூல் பக்கத்தில் உள்ள பதிவுகளைப் பார்க்கையில் அவரது ஆர்.எஸ்.எஸ் – பின்னணி வெளிப்படையாக தெரிகிறது. அன்னாரது முகநூல் பக்கம்- https://www.facebook.com/share/19dKman4Zs/
திருவாளர் விவேகானந்தன் முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். முகநூலின் விவரக் குறிப்பை பரிசீலித்த வகையில் பி எஸ் ஜி சர்வஜன மேல்நிலைப் பள்ளியில் ஏதோ ஒரு பொறுப்பில் இருக்கிறார் என்றும் தெரிகிறது. பாம்பின் கால் பாம்பு அறியும் என்ற சொல்லாடலுக்கு ஏற்ப அதே ஊரில் இருக்கும் மற்ற நாயுடுகளின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் பள்ளியில் நடப்பதை அவரால் சரியாகவே கணிக்க முடியும்.
வீடியோவில் எதைப் பேசி உள்ளார் விவேகானந்தன்?
+1 மாணவனின் இறப்புக்கு ஆசிரியர்கள் “காரணமாக இருந்தால்” தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார். மாணவனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறார்.
அவர் முன் வைத்ததை கொஞ்சம் உற்றுப் பரிசீலியுங்கள். மாணவன் அகிலனின் தற்கொலைக்கு ஆசிரியர்கள் காரணமா இல்லையா என்பது இனிமேல் தான் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற தொனியில் மற்றுமொரு நாயுடு பள்ளியின் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கும் விவேகானந்தன் தமது கருத்தை முன்வைக்கிறார்.
பரவாயில்லை. அவருக்கு உறுதியாக தெரியாத விஷயத்தில் இப்படி மேலோட்டமாக தான் கருத்தை சொல்ல முடியும். அதை நாமும் ஏற்றுக் கொள்வோம். சம்பவம் நடந்து நான்கு நாட்களாகியும் இன்னுமா அவருக்கு உண்மை தெரியாமல் இருந்திருக்கும்?
நேரில் பள்ளிக்குச் சென்று என்ன நடந்தது என்பதை விசாரித்து தெரிந்து கொண்டு நீதியின் பக்கம் – மகனை பறிகொடுத்து தவிக்கும் அகிலனின் குடும்பத்தின் பக்கம் நிற்பதற்கு எது இவரை தடுக்கிறது?
விவேகானந்தன் ஏன் களத்திற்கு வரவில்லை?
காரணம் எளிமையானது. மகனைப் பறிகொடுத்து தவிப்பவர்கள் தாழ்த்தப்பட்ட சாதி என்பதும், காலம் காலமாக தமக்கு ஏவல் வேலை செய்யும் “கீழ் தட்டு மக்கள்” என்பதும் தான் காரணம்.
பின்னர் எதற்காக முகநூலில் இந்த பிரச்சனை குறித்து வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார் விவேகானந்தன் என்ற கேள்வி வருகிறதா? அதைப்பற்றி பார்ப்போம்.
“சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்று கிராமங்களில் சொல்வார்கள். அது இந்த நாயுடு விவேகானந்தன் பழனிச்சாமிக்கு பொருந்தவே செய்கிறது.
ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனை சாதி ரீதியாக வன்கொடுமை செய்து தற்கொலை வரைக்கும் தள்ளியதன் மூலம் சக நாயுடு (KKநாயுடு ) பள்ளி நிர்வாகமும், அதன் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களும், குற்றவாளிகளாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.
இலை மறை காய் போல் சாதிய வன்கொடுமைகளை மூடி மறைத்து அமல்படுத்தி வந்த மேற்கு மண்டலத்தின் ஆதிக்க சாதிவெறி கும்பல், தான் அம்பலப்படுகிறோம் எனும் பொழுது பதை பதைக்கிறது. அதுதான் விவேகானந்தன் பழனிச்சாமியின் வீடியோவிலும் வெளிப்படுகிறது.
உண்மையில் நீதியின் பக்கம் நிற்க விரும்பினால் திருவாளர் விவேகானந்தன் என்ன செய்ய வேண்டும்? அந்தப் பள்ளியின் நிர்வாகத்தினரின் மீதும், ஆசிரியர்களின் மீதும் பகிரங்க விசாரணை நடத்தி விரைவில் தண்டியுங்கள்; முதல் கட்டமாக கைது செய்யுங்கள் என்று வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும். அதற்கு பதிலாக யாரை குற்றவாளி கூண்டில் ஏற்றி உள்ளார் என்பது தெரியுமா? அதையும் பார்ப்போம்.
கொல்வது குற்றம் இல்லை: நீதி கேட்பதுதான் குற்றம்!
திருவாளர் விவேகானந்தன் பழனிச்சாமியின் வீடியோவுக்கான தேவை எங்கிருந்து வருகிறது என்றால், மாணவனின் மரணத்திற்கு நீதி கேட்டு களமிறங்கியுள்ள அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகளிலிருந்து தான் வந்துள்ளது.
பள்ளியின் பெயரிலேயே எதற்கு சாதி? மாணவனின் பதிவேடுகளில் எதற்காக சாதி குறிப்பிடப்படுகிறது? என்று தாக்குதல் இலக்காக சாதியை நிறுத்தியுள்ளனர் களத்தில் நிற்கும் அமைப்பினர். இவர்களில் சமூக அக்கறை கொண்டவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக களமாடி வருபவர்களும், பகுத்தறிவாளர்களும், கம்யூனிஸ்டுகளும் அடங்குவர்.
தான் படித்த படிப்பின் மூலமும் அல்லது தான் செய்து வரும் தொழிலில் மூலமும் தொழிலில் தான் அடைந்துள்ள வெற்றியின் மூலமும் பெரும், மதிப்பையும் கௌரவத்தையும் விட தனது சாதிப் பெருமையும் கௌரவத்தையுமே உயர்வானதாக கருதும் இழி பிறவிகளாகத்தான் விவேகானந்தன் பழனிச்சாமி போன்றோர் உள்ளனர். எனவே தான் சாதி பெயரை குறி வைக்கும் போது இவர்கள் பதறுகின்றனர்.
தமது சுயசாதி பற்றி அல்லது சுயசாதி வெறியை நிலைநாட்ட தனித்து களமாட முடியாத புறநிலையை உணர்ந்துதான் விவேகானந்தன் பழனிச்சாமி தமது முகநூல் வீடியோவின் வழியாக நைச்சியமாக கவுண்டர்களையும், தேவர்களையும், நாடார்களையும், பிள்ளைமார்களையும் கூட துணைக்கு அழைக்கிறார்.
மேலும் படிக்க :பள்ளி மாணவன் தற்கொலை : கோவையின் வெள்ளைக்காலர் கொலையாளிகள்!
பிற சாதியினரும் கூட தத்தமது சாதிப் பெயர்களில் தான் பள்ளி கல்லூரி தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்; வரலாற்றில் சுதந்திரத்திற்காக போராடிய வ.உ.சி கூட பிள்ளைமார் தான்! அப்படி அவர்களின் பெயராகவே மாறிவிட்ட ஒன்றை எப்படி நீக்க சொல்லி கேட்க முடியும்? யாருக்கு அந்த உரிமையுள்ளது? என்று கொதிக்கிறார்.
ஒரு உண்மையை மறந்து விட்டீர்கள் விவேகானந்தன் அவர்களே! ஜி.டி. நாயுடு என்று திமுக அரசாங்கம் மேம்பாலத்துக்கு பெயர் சூட்டியிருக்கலாம். அதற்கு கடும் எதிர்ப்பும் வந்தது. அவரின் குடும்பத்தினர் பெரியாரின் வழியில் நின்று “ஜிடி” என்று குறிப்பிடுவதை தான் விரும்புகின்றனர்.
மதமும் சாதியும் மனிதனை மிருகமாக்குகிறது என்ற புரிதலில் இருந்து தான் தற்போதைய தலைமுறையினர் சாதியைக் குறிப்பிடுவதை கேவலமாக கருதுகின்றனர். திருவாளர் விவேகானந்தனின் முப்பாட்டன்களின் காலத்தில் பெரியார் போன்றவர்கள் களமாடி இருக்கவில்லை. எனவே பார்ப்பனிய திணிப்பான சாதிப்பற்று மற்றும் வெறிக்கு எதிரான இத்தகைய விழிப்புணர்வு வந்திருக்கவில்லை. அல்லது பகுத்தறிவாளர்களும் முற்போக்காளர்களும் அவர்களின் காலத்தில் வலிமையாக களம் ஆட வில்லை.
நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்திருக்க வேண்டிய விவேகானந்தன் தற்போது தப்பி பிறந்திருக்கிறார். பகுத்தறிவும் சுயமரியாதையும் நிலைநாட்டப்பட்ட மண்ணில் கூச்சநாச்சமே இன்றி சாதியை உயர்த்திப் பிடிக்கிறார். ஒரு பச்சை படுகொலைக்கு நீதி கேட்பவர்களை அர்பன் நக்சல்கள் என்றும், அவர்களை கொடூரமாக ஒடுக்க வேண்டும் என்றும் கொதிக்கிறார்.
ஒரு பள்ளி மாணவனைத் தற்கொலை வரைக்கும் தள்ளிய, சக உயர்சாதி ஆசிரியர்களின் மீது வராத கோபம், சக நாயுடு பள்ளி நிர்வாகத்தின் மீது வராத கோபம், கைதே செய்யாத காவல்துறையின் மீது வராத கோபம், சாதிப்பெயரை நீக்கு என்று கூறியவுடன் “அர்பன் நச்சல்கள்” என்று அலறியபடி பீறிட்டு கோபம் கொப்பளித்து வருகிறது என்றால், இவர் எப்பேர்பட்ட கடைந்தெடுத்த கேடுகெட்ட சங்கியாக இருக்கிறார் என்பது புலனாகிறது.
இத்தகைய சாதி வெறியர்களை மூலதனமாகக் கொண்டுதான் கொங்கு மண்ணில் ஆர்எஸ்எஸ் பிஜேபி முளைவிடப் பார்க்கிறது. அவர்களுக்கு இந்த நாயுடுவும் புரவலராக இருக்கிறார் என்றே நாம் நம்பலாம். அதேபோல் பொள்ளாச்சி மகாலிங்க கவுண்டர்களும் புரவலர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களைத்தான் அர்பன்- நச்சல்களை எதிர்ப்பதற்கான கூட்டணி கட்ட அழைப்பு விடுக்கிறார் விவேகானந்தன் பழனிச்சாமி.
அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒரு அணி சேர்க்கை அமையும் போது, அகிலனை கொன்றவர்களின் தரப்பினரும் ஒரு கூட்டணியை வெளிப்படையாகவோ ரகசியமாகவோ அமைப்பார்கள்தான். அதை தடுப்பதும், பலவீனப்படுத்தி தகர்ப்பதும், ஜனநாயகவாதிகளின்- முற்போக்காளர்களின் -புரட்சியாளர்களின் கடமை .
இளமாறன்







