“அமெரிக்க செனட், ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதில் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதும் அடங்கும்.

ரஷ்யாவின் எரிசக்தியை அதிகம் வாங்கும் நாடுகளில் சீனாவும் இந்தியாவும் உள்ளன. மேலும், இரான் மீதான தடைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்த மசோதாவை செனட்டர் லிண்ட்சே கிரஹாம் அறிமுகப்படுத்தினார். குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் ஆதரவும் இதற்குக் கிடைத்தது. இறுதியில், 86-க்கு 11 என்ற வாக்கு வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது”. என்று பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.

உலக மேலாதிக்க போட்டியில் தனது ஒற்றைத் துருவ ஆதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்து வருகின்ற சீனா மற்றும் ரஷ்ய கூட்டணியை அதாவது முதலாளித்துவ ஜனநாயகத்தை உயர்த்தி பிடிக்கின்ற தாராளவாதிகள் அங்கீகரிக்கின்ற பல் துருவ கூட்டமைப்பை ஒழித்துக் கட்டுவதற்கு அமெரிக்க தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.

தற்போது உலகை சூறையாடி வருகின்ற அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான கூட்டணியோ அதற்கு எதிராக அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறிக் கொள்கின்ற சீன,ரஷ்ய தலைமையிலான கூட்டணியோ ஒரு போதும் உலக மக்களை பாதுகாக்கப் போவது கிடையாது என்பது தான் புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடு.

இடதுசாரிகள் என்ற தங்களை தாங்களே அழைத்துக் கொள்கின்ற குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை சேர்ந்தவர்கள் சீன, ரஷ்ய கூட்டணியானது ஏதோ ஏகாதிபத்திய முதலாளித்துவத்திற்கு எதிரானது என்பது போலவும் பெரும்பான்மை மக்களுக்கு சாதகமாக அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை இவை முன்வைக்கின்றன என்பது போலவும் திட்டமிட்டு பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தை பொருத்தவரை தனது கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதற்கு பொருத்தமாக அமெரிக்க மேல்நிலை வல்லரசுடன் குறிப்பிட்ட சில அம்சங்களில் ஒத்துப் போவதும், வேறு சில அம்சங்களில் சீன, ரஷ்ய கூட்டணியுடன் ஒத்துப் போவதும் என்ற இரட்டை நிலைப்பாடு எடுத்து இதையே ராஜதந்திர நடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து மக்களையும் ஏமாற்றி வருகிறது.

அமெரிக்காவின் அதிபராக பாசிச டொனால்ட் டிரம்ப் தனது இரண்டாவது ஆட்சிக் காலத்தில் முன்வைத்துள்ள பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கை “அமெரிக்கா முதன்மை வர்த்தகக் கொள்கை” (America First Trade Policy) என்று அழைக்கப்படுகிறது. இது பொருளாதார தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்டது.

படிக்க: 

 ரஷ்யா உக்ரைன் மோதல் 2014-ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது!

 உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்: உலகம் முழுவதும் நடக்கும் போர் எதிர்ப்பு போராட்டங்களின் வரைபடம்

90-களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை உலகத்தின் மீது திணித்த அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் அதன் நட்பு நாடுகள் தற்போது காப்பு வாதம் என்ற பெயரில் தனது நாட்டின் பொருளாதாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பொருளாதார தேசிய வாதத்தை முன் எடுத்து கொண்டுள்ளனர் என்பதையும் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தி வருகிறது.

இந்த கேடுகெட்ட சுரண்டல் ஆதிக்க நலன் கொண்ட கொள்கையானது அமெரிக்காவுக்கு எதிராக பல்துருவ கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படுகின்ற பிரிக்ஸ் நாடுகள் ஒப்பந்தத்தின் கீழ் செயல்படுகின்ற நாடுகள் அனைத்தும் தனது ஆதிக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு வரி விதிப்பை திணித்து அவர்களை மிரட்டி வருகிறது அமெரிக்க மேல்நிலை வல்லரசு.

இன்றைய நிலையில் ரஷ்யாவின் எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனங்களான ரோஸ்னெப்ட் (Rosneft): ரஷ்யாவின் முதன்மையான அரசு முதலாளித்துவ எண்ணெய் உற்பத்தி நிறுவனம் ஆகும். அதற்கு அடுத்தபடியாக லுகாயில் (Lukoil): பல நாடுகளில் கிளைகளைக் கொண்ட பெரிய தனியார் எண்ணெய் கார்ப்பரேட் நிறுவனம் மூன்றாவது நிலையில் உள்ள காஸ்ப்ரோம் நெஃப்ட் (Gazprom Neft): காஸ்ப்ரோம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் எண்ணெய் பிரிவு.சுர்குட்நெஃப்டெகாஸ் (Surgutneftegas): கச்சா எண்ணெய் எடுப்பதில் ஈடுபடும் முக்கிய நிறுவனம்.டாட்நெஃப்ட் (Tatneft): தட்டாரஸ்தான் பகுதியில் செயல்படும் முன்னணி நிறுவனம்.பாஷ்நெஃப்ட் (Bashneft): நாட்டின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களாகும்

இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை உத்தரவாதப்படுத்துகின்ற வகையில் அவர்களிடமிருந்து இந்தியாவிற்கு தேவையான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை இறக்குமதி செய்து வந்த இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் மீது அமெரிக்க மேல்நிலை வல்லரசு கட்டாயமாக 100% வரிவிதிப்பை திணித்துள்ளது.

உள்நாட்டில் கனிம வளங்கள் வேட்டையாடப்படுவதை எதிர்த்துப் போராடுகின்ற நாட்டுப் பற்றாளர்கள் அனைவரையும் நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள், அர்பன் நக்சல்கள் என்றெல்லாம் முத்திரை குத்தி கடுமையாக ஒடுக்குவது; நீண்ட கால சிறையில் அடைப்பது என்று பாசிச வெறியாட்டம் போட்டு வரும் ஆர்எஸ்எஸ் பாஜக பயங்கரவாத கும்பல் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எண்ணெய் இறக்குமதியின் ரஷ்ய எண்ணெய் கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதை அனுமதிக்கின்றனர்.

படிக்க:

♦ ரஷ்யாவிலிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி: லாபத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசு!

 அமெரிக்காவின் பதிலிப் போர் உத்தி! ரஷ்யாவுக்கு உக்ரைன்; சீனாவுக்கு தைவான்!

அதுவும் அவர்களது புரவலரான அதானி மற்றும் அம்பானி குழுமத்திற்கு தேவையான எண்ணெய் இங்கிருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத உலக மேலாதிக்க வெறிபிடித்து அலைகின்ற அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் அதன் அதிபரான பாசிச ட்ரம்ப் ஆட்சி எண்ணெய் இறக்குமதியை வைத்து இந்தியாவின் இறையாண்மையின் மீது தாக்குதல் தொடுப்பதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது.

அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா சீன கூட்டணி உலக பொருளாதாரத்தில் காலனிய நாடுகளின் மீதான சுரண்டலை கைவிட்டு விட்டு பரோபகாரிகள் போல உதவுகிறார்கள் என்று பித்தலாட்டம் புரிகின்ற போலி இடதுசாரிகள் மற்றும் முதலாளித்துவ அறிஞர்களின் வாதங்களை முறியடிக்க வேண்டியதும் நமது கடமையாக மாறியுள்ளது.

ஆல்பர்ட்

புதிய ஜனநாயகம் தினசரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here