நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைக்கேட்டை கண்டித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் இந்திய ஒன்றிய பிரதமர் மோடியை மிரள வைத்துள்ளது.
நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு பிரதமர் மோடி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 3 நிமிடம் ஓடும் அந்த காணொளியில்,
“வினாத்தாள் கசிவு என்பது சிறிய விஷயம் அல்ல. இது லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. நீட் (NEET) வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களுக்குப் பிறகு, மாணவர்களின் ஓராண்டு கல்விக்காலம் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களது உடனடி முன்னுரிமையாக இருந்தது. இதற்காகத்தான் சுமார் 22 லட்சம் மாணவர்களுக்கு மிகக்குறுகிய காலத்தில் மறுதேர்வு நடத்தி, அதன் முடிவுகளை ஜூலை 19 அன்று அறிவித்தோம்.
இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கைகளால் மட்டும் நான் திருப்தி அடையவில்லை. எனவே, வினாத்தாள் கசிவு வழக்குகளைக் கையாள விரைவு நீதிமன்றங்களை (fast-track courts) அமைக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கவும் புதிய சட்ட வரைவைத் தயாரிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன்.
அதிகாரிகள் இரவு பகலாக உழைத்து அந்த வரைவு அறிக்கையை வியாழக்கிழமை நள்ளிரவில் என்னிடம் சமர்ப்பித்துள்ளனர். இது இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கப்படும். வரும் திங்கட்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாவது வாரத்திலேயே, இந்த மசோதாவை இரு அவைகளிலும் நிறைவேற்ற நாங்கள் முழு முயற்சி எடுப்போம்.”
என பேசியுள்ளார்.
மோடி பேசிய வீடியோ லிங்க் 👇🏽
More strict actions against paper leaks to come in tomorrow’s Cabinet! pic.twitter.com/NRysBukk5U
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
போராடும் மாணவர்களின் கோரிக்கை குறித்து மோடி எதுவும் பேசவில்லை. அதனால் போராட்டக்காரர்கள் மோடியின் பேச்சை இடது கையால் புறந்தள்ளியுள்ளார்கள்.
“திரு. மோடி, எங்கள் மாணவர்கள் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை கோருகிறார்கள். இந்த பரிதாபகரமான நள்ளிரவு வீடியோவை வெளியிட்டு அவர்களின் அறிவை அவமதிக்காதீர்கள்,” 1. தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்யுங்கள். 2. மாணவர்களை தாக்கியவர்களுக்கு தண்டனை வழங்குங்கள்.
3. பொதுமக்களிடமும் மாணவர்களிடமும் மன்னிப்பு கேளுங்கள்.” என்கின்றனர்.
மோடியின் பேச்சிலிருந்து ஒன்றை மட்டும் புரிந்துக் கொள்ளலாம். மாணவர்களும் இளைஞர்களும் நடத்துகின்ற இந்த போராட்டம் பாசிஸ்டுகளை மிரள வைத்துள்ளது. மோடி ஆட்சியமைத்த பின் 12 ஆண்டுகளில் எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளது. விவசாயிகள் வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், தொழிலாளர்கள் தொழிலாளர் சட்டத்தொகுப்பு மசோதாவிற்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ, என் ஆர்.சி போராட்டம் என இந்தியாவெங்கும் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளன.
படிக்க:
🔴 நீட் எனும் ஆட்கொல்லித் தேர்வை ஒழித்துக் கட்டுவோம்!
ஆனால், மேற்கண்ட எந்த போராட்டத்தையும் மோடி அரசு கண்டுக் கொள்ளவில்லை. மாறாக எல்லா போராட்டங்களையும் காவல்துறை, இராணுவத்தை வைத்து அடக்குமுறைகளை ஏவியது. விவசாயிகளின் போராட்டத்தில் பொய்யான வாக்குறுதியை கொடுத்து விவசாயிகளை ஏமாற்றியது துரோகம் இழைத்தது.
தற்போது நடைபெறும் மாணவர்கள், இளைஞர்களின் வீரம் செறிந்த போராட்டம் ஆளும் பாசிச கும்பலை நிலைகுலைய வைத்துள்ளது.அதிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்க ஊதுகுழலாக இருந்த மேல் நடுத்தர வர்க்க பிரிவினர் களமிறங்கியது மோடி அரசை ஆட்டம் காணச் செய்துள்ளது. அந்த மாணவர்களும், இளைஞர்களும் காவல்துறை, இராணுவம் அனைத்தையும் துணிவோடு எதிர்த்து நிற்கிறார்கள். தோழர் பகத்சிங்கை போன்று மரணத்திற்கு அஞ்சாமல் போராடுவதை பார்த்து பாசிசம் அஞ்சுகிறது.
லத்தியில் ஆணியை சொருகி அடித்தார்கள்; காலாவதியான கண்ணீர் புகை குண்டுகளை மாணவர்கள் மீது வீசினார்கள்; பெண்களை மானபங்கப்படுத்தி தாக்கினார்கள்; குண்டர்படைகளை கொண்டு கொடூரமாக அடித்தார்கள்; பாகிஸ்தான் கைக்கூலி என்றார்கள்; தேசத்துரோகி என்றார்கள்; அப்ஜித் திப்கேவை அமெரிக்காவின் ஏஜென்ட் என்றார்கள்; போராட்டத்தில் கலந்துக் கொண்ட சிறுவர்களை கூட கண்மூடித்தனமாக தாக்கினார்கள்; போராட்டத்தில் கலந்துக் கொள்ள கூடாது என்பதற்காக மெட்ரோ ரயில் சேவையை நிறுத்தினார்கள்; தகவல்கள் பரவக் கூடாது என்பதற்காக இணைய சேவையை துண்டித்தார்கள்; கோடி மீடியாக்களை உள்ளே அனுப்பி போராட்டத்தை சீர்குலைப்பதற்கு ஏதாவது செய்தி கிடைக்குமா? யாராவது தவறாக பேசுவார்களா என நாய் போல திரிய வைத்தார்கள்; கிடைத்த செய்திகளை பரப்பி தேசிய வெறியை உருவாக்க முயற்சித்தார்கள். இது எதுவுமே பலிக்கவில்லை என்று தான் கடைசியாக பிரதமர் மோடி பேசிய காணொளியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். தனது எக்ஸ் பதிவில் “இப்போதுதான், மத்திய அமைச்சர்களான திரு. ஜே.பி. நட்டா, டாக்டர் ஜிதேந்திர சிங் மற்றும் லே-லடாக்கின் Apex Body-யின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், 26 நாட்கள் நீடித்த எனது உண்ணாவிரதத்தை முடித்தேன். இதற்கு முன்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான் உண்ணாவிரதத்தை முடிக்க வேண்டும் என்று நேரில் வந்து கேட்டுக்கொண்டதோடு, அதற்காக கடிதங்களிலும் கையெழுத்திட்டிருந்தனர். பல்வேறு நிபந்தனைகள் குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதன் பின்னரும், நாட்டில் வன்முறை ஏற்படக்கூடிய சூழலைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது…” என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த 21 ஆம் தேதி மாணவர்களின் 3 நிபந்தனைகளை நிறைவேற்றினால் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற தயார் என சோனம் வாங்சுக் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படிக்க:
🔴 நீட் தேர்வில் முறைகேடு! ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் நீட் தேர்வு முறையை ஒழிப்பதே தீர்வு!!
🔴 நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா?
மோடி நள்ளிரவு 12.30 மணிக்கு பேசியது. சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தது எல்லாம் மோடிக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதன் வெளிப்பாடே. ஆனால் நீட் தேர்வு என்ற முறைகேட்டை கைவிடுவதோ அல்லது மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவோ மோடி இதுவரை முன்வரவில்லை.
டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு மோடி-அமித்ஷா கும்பல் பொறுப்பேற்க வேண்டும். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்றால் போராட்டத்தை வாபஸ் பெற மாணவர்கள் தயாரில்லை. இதனை கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அப்ஜித் திப்கேவும் தெளிவுப்படுத்தியுள்ளார். டெல்லிப் போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் நடைபெறும் போராட்டங்கள் நீட் தேர்வுக்கு முடிவுரை எழுத வேண்டும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதும் சரியான வழியே.
நலன்







