1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் வாங்கியதாக கூறிக்கொண்ட காலத்தில் இருந்து இன்று வரை கீழமை நீதிமன்றங்கள் துவங்கி உச்சநீதிமன்றம் வரை செயல்படுகின்ற நீதிபதிகள் நீதி பரிபாலனத்தின் கீழ் வழங்கப்படும் தீர்ப்புகள் எந்த விதமான விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்ட அக்மார்க் முத்திரையுடன் கூடிய தீர்ப்பு தான் என்று அடித்துச் செல்ல முடியுமா?

நாட்டின் சொத்துக்களை சூறையாடுகின்ற பெரும் நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள் முதல் கார்ப்பரேட் முதலாளிகள் வரை அவர்களின் நலனுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் தீர்ப்புகளை வழங்குகின்ற நீதியரசர்கள், எப்போதாவது தனது மனசாட்சிக்கு நேர்மையாக ஒன்றிரண்டு தீர்ப்புகளை வழங்கி இருப்பார்களே ஒழிய பெரும்பான்மையான தீர்ப்புகள் வர்க்க சார்பு உடையது என்பதை நிரூபிக்க பல்வேறு ஆதாரங்கள் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 10 லட்சம் மக்களுக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதத்தில் தான் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து 2002 ஆம் ஆண்டு அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தொடுத்த வழக்கு ஒன்றில் 2007 ஆம் ஆண்டுக்குள் இந்த விகிதத்தை பூர்த்தி செய்யுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் 2024 வரை இந்த விகிதம் மாறவே இல்லை. இதன் காரணமாகவே நீதிபதிகளுக்கு அதிகமாக பணி அழுத்தம் அதிகரித்துள்ளது என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

நாட்டின் பெரும்பான்மை மக்கள் பணி, வெயில், இரவு, பகல் பாராமல் இரத்த வியர்வையை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கும் போது இந்த நீதித்துறை கோமான்களோ குளிரூட்டப்பட்ட வீடுகளில் இருந்து கிளம்பி, குளிரூட்டப்பட்ட கார்களிலேயே தனது நீதிமன்ற சேம்பர்களுக்கு செல்கின்றனர். அங்கே சில மணி நேரம் நீதி பரிபாலனம் செய்கின்றனர். அதன் பிறகு மீண்டும் தனது உல்லாசபுரிக்கு திரும்பி விடுகிறார்கள்.

நாளொன்றுக்கு அதிகபட்சம் 5, 6 மணி நேரம், ஆண்டுக்கு உச்சநீதிமன்றமானது 190-193 நாட்களும், உயர் நீதிமன்றங்கள் சுமார் 210 நாட்களும் மட்டுமே உழைக்கின்ற இந்த உழைப்பையே கடும் உழைப்பை செலுத்துவதாகவும், பணி அழுத்தம் அதிகரித்து இருப்பதாகவும், நீதிபதிகளின் சங்கம் தன் மீது பரிதாப உணர்ச்சியை உருவாக்குவதற்கு வழக்கு போட்டு நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது. இது ஒரு புறமிருக்க நீதிபதிகளின் கை சுத்தம் என்பது ஊரறிந்த உண்மை.

“கடந்த 05 ஆண்டுகளில் (01.01.2017 முதல் 31.12.2021 வரை), நீதித்துறையின் செயல்பாடுகள், நீதித்துறை ஊழல் உட்பட, மையப்படுத்தப்பட்ட பொது குறைதீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பில் (CPGRAMS) 1631 புகார்கள் பெறப்பட்டு, “உள்ளக வழிமுறை”யின் கீழ் நிறுவப்பட்ட நடைமுறையின்படி, முறையே தலைமை நீதிபதி /உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டன.” இந்தத் தகவலை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜு 2021 ஆம் ஆண்டு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

“இந்த காலகட்டத்தில் முன் வைக்கப்பட்ட புகார்கள் மட்டுமல்ல! கடந்த 1947-லிருந்து 2015-வரை சுமார் 67 வருடங்களாக எந்த ஒரு ஊழல் நீதிபதியாவது விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் உத்தமர்களா?

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து அவர்கள் ”வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து பெங்களூரில் 50 கோடிக்கு வீடு கட்டியுள்ளார்” என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள் புகார் தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். யார் நடவடிக்கை எடுப்பது?

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரங்கநாத் மிஸ்ரா, கே.என்.சிங், A.M.அகமதி, M.M.புன்சி, A.S.ஆனந்த், Y.K.சபர்வால் உள்ளிட்ட எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என முன்னாள் சட்ட அமைச்சர் சாந்திபூசன், வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்தனர். இன்றுவரை அம்மனு விசாரிக்கப்படாத மர்மம் என்ன?

கிரானைட் கொள்ளை வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் ”சகாயம் விசாரணைக்கு உத்தரவிட்டு வழக்கு நடந்து வரும்போது நீதிபதிகள் சி.டி.செல்வம், ராஜா, கர்ணன், தனபாலன்-வேலுமணி (Junior Judge) ஆகியோர் கிரானைட், தாதுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது ஏன்?

படிக்க: “என் உயிருக்கு பாதுகாப்பில்லை”, முன்னாள் ஐஏஎஸ் சகாயம் உயர்நீதிமன்றத்தில் கதறல்!

தமிழக மக்களின் வேர்வை சிந்திய வரிப்பணம் ரூ 22,000 கோடியைக் கொள்ளையடித்தது பன்னாட்டு நோக்கியா கம்பெனி. எட்டப்பன்போல் ஸ்டே கொடுத்து, ஓடிப்போக உதவி செய்கிறார் நீதிபதி பி.ராஜேந்திரன். இது தேசத் துரோக குற்றமல்லவா?

உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் என்னாயிற்று?

நீதிபதி கர்ணன் மீது கொடுத்த லஞ்சப் புகார்களை உண்மையென ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், இன்றுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் மர்மம் – கர்ணன் பல நீதிபதிகளின் ஊழலை அம்பலப்படுத்துவார் என்பதால்தானே?

அமித்ஷா வழக்கில் தீர்ப்புச் சொல்லி – முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் ஆளுநர் பதவி பெறுவது சரியா?

சென்னை உயர்நீதிமன்ற ஊழியர்கள் தேர்வில் நீதிபதிகளின் உறவினர்கள், சாதிக்காரர்கள் நியமிக்கப்பட்டிருப்பது நீதியானதா?

வழக்கறிஞர்களுக்கு அடிக்கடி நேர்மையை உபதேசிக்கும் நீதிபதி பி.என்.பிரகாசு அவர்கள் கொள்ளையர்கள் வைகுண்டராஜன், ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்திற்கு முன் ஜாமின் வழங்கியது மனுநீதிப்படியா?

படிக்க: தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜன் மீது சிபிஐ வழக்கு பதிவும், தமிழக அரசியல் சூழலும்.

நீதிபதி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி பெண் ஊழியர்களிடம் அத்துமீறல் செய்த நீதிபதி டாக்டர் தமிழ்வாணன் மீதான நடவடிக்கை என்ன?

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை அடிமைகளை விடக் கேவலமாக நடத்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதி வழங்கத் தகுதியானவர்களா?

சட்டத்தை விட, நியாயத்தை அதிகம் பேசும் நீதிபதி இராமசுப்பிரமணியன் அவர்கள் நீதித்துறையை சீரழித்த புரோக்கர் வக்கீல் சங்கத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதன் காரணம் என்ன?”

போன்ற கேள்விகளை அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு சார்பாக மதுரையில் 2015 ஆம் ஆண்டு பேரணி நடத்தி 10 ஆண்டுகள் ஆகியும் மேற்கண்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் இன்று வரை கிடைக்கவில்லை? இவையெல்லாம் நீதிமன்றத்தின் மாண்புகளை கேள்விக்கு உள்ளாக்கவில்லையா?

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான ஆர் பி கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பை வீசியபோது அதனை எதிர்த்து ஊடகங்களோ அல்லது நீதித்துறை மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று கூச்சலிடுகின்ற சக நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வாயை திறக்கவில்லை. காரணம் அவர் பிறப்பால் தலித் என்பதுதான்; ஆனால் அவரே அந்த விஷயத்தில் பெருந்தன்மையாக நடந்து கொண்டார் என்று மட்டையை கட்டி விட்டனர்.

படிக்க: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் மீது செருப்பு வீச்சும்! சனாதன பயங்கரவாதத்தின் உண்மை முகமும்!

சமீபத்தில் தான் வாங்கிய லஞ்சப் பணத்தை கட்டு கட்டாக வீட்டில் வைத்திருந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா ரெய்டுக்கு பயந்து அதனை எரித்தது அம்பலமாகி ஊரே சந்தி சிரித்தது. அவ்வாறு அம்பலமான பிறகும் அவர் மீது நீதித்துறை உயர்மட்ட உறுப்புகள் எடுத்த எந்த நடவடிக்கைகளுக்கும் அவர் கட்டுப்படவில்லை. லஞ்சம் வாங்கிக் கொண்டு நீதி வழங்குகின்ற இத்தகைய ஊழல் பேர்வழிகளுக்கு இன்னமும் நீதிபதிகளின் செங்கோல் சாய்ந்து கொண்டிருப்பது எதனால்? இதனால் நீதிமன்றத்தின் மாண்புகள் சீர்குலையவில்லையா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை மீது கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படுத்திய சுற்றுப்புறச் சூழல் பாதிப்புகளுக்கு வெறும் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆலையை தொடர்ந்து நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது. அபராதம் விதித்து தன்னை யோக்கியனாகக் காட்டிக் கொள்ள முயன்றுள்ளது.

ஐந்து மாவட்ட மக்களை உயிரோடு கொன்று புதைக்கக்கூடிய பேரபாயம் கொண்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு ஈடாக வெறும் 100 கோடி ரூபாய் அபராதமாக விதித்து தனது கார்ப்பரேட் சேவையை காட்டிக் கொண்டனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஸ்வதன் குமார் மற்றும் பரிக்ஷித் சிங்! இந்த நடவடிக்கை நீதிமன்ற மாண்புகளுக்கு எதிரானது இல்லையா?

படிக்க: ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பும்! கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக  தொடரும் மக்கள் போராட்டமும்.

இந்தியாவின் 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் ஊழல் செய்தவர்கள்.” நீதிமன்றம் உட்பட நாட்டின் பல நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விமர்சித்துள்ளார். 2009ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அமைச்சர் சாந்தி பூஷண் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததையும் அவர் குறிப்பிட்டு இந்தியாவின் முந்தைய 16 தலைமை நீதிபதிகளில் 8 பேர் நிச்சயமாக ஊழல் செய்தவர்கள் என்கிறார். இதனால் நீதிமன்ற மாண்பு குறையவில்லையா?

பாலியல் சீரழிவுகளில் ஈடுபட்ட நீதிபதிகள்; தீர்ப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய நீதிபதிகள்; நீதித்துறையில் உள்ள கீழ்மட்ட அலுவலர்களையும், பார்ப்பனரல்லாத பிறசாதி ஊழியர்களையும் இழிவுபடுத்துகின்ற நீதிபதிகள்; கார்ப்பரேட் கொள்ளைக்கு நேரடியாகவே உதவி செய்கின்ற நீதிபதிகள்; பல்வேறு கிரிமினல் கொலைக் குற்றங்கள் புரிந்த மாஃபியா கும்பலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகின்ற நீதிபதிகள் என்று ஏராளமானவர்கள் நிரம்பி வழிகின்ற நீதிமன்ற படிக்கட்டுகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் ரத்தக்கரை படிந்த அநீதிமன்றங்கள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இத்தகைய நீதிபதிகளை பற்றி விமர்சிப்பதும்; அவர்களைப் பற்றி கட்டுரைகள் எழுதுவது, ஓவியங்கள் தீட்டுவது, கேலிச்சித்திரங்கள் வரைவது ஆகியவை அனைத்தும் சட்டவிரோதமானவை என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்றும், பிரிட்டன் காலனி ஆதிக்கத்தில் கொண்டுவந்த சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு பம்மாத்து காட்டுகிறார்கள்.

ஒரு நீதிபதி கொடுத்த தீர்ப்பை இரு நீதிபதிகள் மாற்றுகிறார்கள்; இரு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை ஐந்து நபர் கொண்ட பெஞ்ச் மாற்றுகிறது; கீழமை நீதிமன்றங்களில் கொடுத்து தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் மறுக்கின்றது; உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் நிராகரிக்கிறது. இவை அனைத்திலும் ஒரே சட்டம் படித்த நீதிபதிகள் தான் பணிபுரிகிறார்கள் என்றாலும், ஒவ்வொரு இடத்திலும் ஒரே குற்றத்திற்கு தண்டனையும் அல்லது அதிலிருந்து விடுதலையும் எவ்வாறு மாறி மாறி கிடைக்கிறது என்று கேள்வி எழுப்பினாலே கிரிமினல் குற்றம் என்பதைப் போல பேசுவதும், நீதிபதிகளிடையே இவ்வாறு வேற்றுமை உருவாவதற்கு காரணம் என்ன என்று எதிர் கேள்வி எழுப்பினாலே நீதிமன்ற மாண்பு குலைந்து விட்டதாக வானளாவிய அதிகாரத்தின் கீழ் குதிப்பதும், தற்போதைய பாசிச அரசு கட்டமைப்பின் கீழ் மிகப்பெரும் அபாயமாகவும் உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியுள்ளது என்பது தான் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டிய அம்சமாகும்.

படிக்க: இந்திய நீதித்துறையின் அவலமும் – பாசிசக் காவிக் கூட்டத்தின் ஆட்டமும்! 

இன்னொரு பக்கம் நீதிமன்றத்தின் மாண்புகளையும், நீதியரசர்கள் கொடுக்கின்ற உத்தரவுகளையும், நீதியரசர் உயிரையும் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் பாஜக படாத பாடுபட்டுக் கொண்டிருப்பதைப் போல ஒரு பித்தலாட்டத்தை தைரியமாக அடித்து விடுகின்றனர்.

சோராபுதின் என்கவுண்டர் வழக்கில் தற்போதைய உள்துறை அமைச்சர் மீது வழக்குப் பதியப்பட்டு அதனை நடத்தி வந்த நீதிபதி லோயா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் அமித்ஷாவிற்கும் தொடர்பு உள்ளது என்று தொடர்ச்சியாக பல்வேறு ஆதாரங்கள் வெளியாகி ஒன்றும் செய்ய முடியவில்லை. கொலைக் குற்றவாளி விடுதலையானதால் உள்துறை அமைச்சராகி இருப்பது நீதிமன்ற மாண்புக்கு இழிவானதாக இல்லையா?

குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்திய ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர் படையையும் பாசிச மோடியையும் அம்பலப்படுத்தி கடுமையாக நடவடிக்கை எடுத்த சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் மோடிக்கு எதிராக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று வரை சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார். நீதிமன்ற மாண்பு சந்தி சிரிக்கிறது.

நீதியை காப்பாற்றுவதோ, நீதிமன்றத்தை பாதுகாப்பதோ, குறைந்தபட்ச ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிப்பதோ ஒருபோதும் பாசிச பாஜகவின் செயலாக இருந்ததில்லை. இந்த லட்சணத்தில் நீதிமன்ற மாண்புகளை பேசுவதற்கு அவர்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

அதுபோலவே நீதித்துறை மற்றும் நீதிபதிகள் எந்த விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற அப்பட்டமான அடிமைப்புத்தி காலனியாதிக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டது என்பதை சுட்டிக்காட்டி எதிர்த்துப் போராடுவோம்!

பார்த்தசாரதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here