
ஈரான் மீது குண்டு வீச்சு : உலகைப் போர் பதற்றத்தில் தள்ளி உள்ள அமெரிக்கா!
இஸ்ரேலை தூண்டி விட்டு வளைகுடா நாடுகளில் தாழ்நிலை போரை நடத்தி வந்த அமெரிக்கா இன்று பகிரங்கமான ராணுவத் தாக்குதில் குதித்துள்ளது. ஜூன் 21- சனி மாலை அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஸ்டெல்த் வகை போர்விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரானின் மீது குண்டுகளை வீசி திரும்பிக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்கா மத்திய கிழக்குக்கான தனது அடியாளாக இஸ்ரேலை வளர்த்து விடுகிறது என்றால், உலக மேலாதிக்கத்திற்கு போட்டியாக களத்தில் நிற்கும் ஏகாதிபத்திய ரஷ்யாவும் நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனாவும் ஈரானை ஆதரித்து நிற்கின்றன. எனவே தற்போது அமெரிக்க விமானத் தாக்குதலை எதிர்த்து இவைகளும் களமிறங்க வாய்ப்புகள் உள்ளன.
அது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான பகிரங்க போராக மாறுமா? அல்லது, தனது ஆயுத தளவாட மற்றும் பொருளாதார உதவிகளை வாரி வழங்குவதும் மூலம் தமது செல்வாக்கின் கீழ் உள்ள நாடுகளை அடித்துக் கொள்ள தூண்டி விடும் தாழ்நிலைப் போராகவே தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பூமியை பிளந்து பாயும் குண்டுகள்!
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் GBU-57 ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இது கைடட் பாம் யூனிட் (Guided Bomb Unit) என்பதைக் குறிக்கிறது. 57 என்பது வடிவமைப்பின் வகை ஆகும்.
GBU-57 ஐ அமெரிக்காவால் மட்டுமே திறம்பட பயன்படுத்த முடியும். ஏனென்றால் இதற்கு ஸ்டெல்த் அமைப்பு தேவை. அதேபோல் இந்த எடையை சுமக்கும் அளவிற்கு பாமர் வகை விமானங்கள் தேவை. B-2 ஸ்பிரிட் மூலம் மட்டுமே இதை செய்ய முடியும். மிசோரியில் உள்ள வைட்மேன் விமானப்படை தளத்தில் (Whiteman Air Force Base) இருந்து B-2 ஸ்பிரிட் (B-2 Spirit) ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் மூலம் இதற்காக நேற்று மாலை ஏவப்பட்டது.

வைட்மேனில் இருந்து 8க்கும் மேற்பட்ட குண்டுகள் கொண்ட ஸ்டெல்த் விமானங்கள் ஏவப்பட்டதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
எளிமையாகச் சொன்னால், ஒரு இலக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை எப்படி தாக்குவது என்று உறுதி செய்த பின், அதை தாக்க வேண்டிய சரியான நேரத்தில் தாக்குவார்கள். துல்லியமான வழிகாட்டலுக்கு செயற்கைக்கோள் பயன்படுத்தப்படுகிறது.
மிக அதிக உயரத்தில், அதாவது சுமார் 50,000 அடி உயரத்தில் இருந்து அதிகமான குண்டு வீசப்படுவதால் கடுமையான சேதங்கள் இருக்கும். அதிக உயரம் காரணமாக இந்த குண்டுகள் அதிக இயக்க ஆற்றலைப் பெறுகிறது. இந்த ஆற்றல் குண்டினை ஆழமாக ஊடுருவிச் செல்ல உதவுகிறது. இதன் மூலம் 200- 300 அடிக்கு கீழ் உள்ள இலக்குகளை கூட தாக்க முடியும் என் விவரிக்கிறது one India.
கொக்கரிக்கும் அமெரிக்க அதிபர்!
டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “ஈரானில் உள்ள மூன்று அணு sites மீது நாங்கள் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி முடித்துவிட்டோம். ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன.
— Donald J. Trump (@realDonaldTrump) June 21, 2025
ஃபோர்டோவில் உள்ள முக்கியமான தளத்தில் முழு அளவிலான வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பத்திரமாக திரும்புகின்றன. இந்த சாதனையை நிகழ்த்திய அமெரிக்க வீரர்களுக்கு எனது வாழ்த்துகள். உலகில் இதை செய்யக்கூடிய ராணுவம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமைதிக்கு இதுவே சரியான நேரம்” என்று கொக்கரிக்கிறார்.
ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களின் மீதோ அல்லது அணுகுண்டு தயாரிப்புக்கான புளூட்டோனியம் உற்பத்தி ஆலைகளின் மீதோ தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? இந்த அடிப்படையான கேள்வியை தான் உலக அமைதியை விரும்பும் உலக நாடுகள் எழுப்ப வேண்டும்.
வீச்சரிவாள்களுடன் வளம் வரும் ஊரறிந்த தாதா, பேனா கத்தியை செய்யும் ஒரு சிறிய திருடனை போட்டு துவைத்தெடுப்பதை நாம் கொண்டாட முடியுமா? உலகிலேயே அதிக அணு ஆயுதங்களை செய்து, அதை ஏவுகணைகளில் நிரப்பி, தன் நாட்டையும் கடந்து உலகம் முழுக்க நிற்க வைத்து அச்சுறுத்தி வருவது அமெரிக்கா தானே. “நீ யார் ஈரானை தாக்குவதற்கு?” என்று நாம் குரல் எழுப்ப வேண்டாமா?
உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியமானது தனது பாணியில் அணு ஆராய்ச்சியில் ஈடுபடவும், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யவும் யாராவது முனைந்தால் அவர்களை குறி வைத்து தாக்குகிறது.
இந்தியா பெரக்ரானில் பரிசோதனைக்காக அணுகுண்டை வெடித்த போதும்கூட ஆத்திரப்பட்டது அமெரிக்கா. ஆனால் நம் மீது தாக்குதலுக்கு வராமல் பொருளாதாரத் தடையை ஏவி நம்மை அச்சுறுத்தியதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் அன்று ஆட்சி பொறுப்பில் இருந்த வாஜ்பாய் ஒரு தீவிர ஏகாதிபத்திய எதிர்ப்பாளரோ, நாட்டுப் பற்றாளரோ அல்ல; அவர் கார்ப்பரேட் சேவகர் என்பதுதான் அடிப்படை.
அதாவது அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் உலக அமைதிக்கானது! ஆனால் பிற உலக நாடுகள் ஆராய்ச்சி செய்தாலோ ஆயுதங்கள் செய்தாலோ அது உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது! – என குதிக்கிறது அமெரிக்கா. அதாவது, சாத்தான் வேதம் ஓதுகிறது.
எவ்வளவுதான் முயற்சித்தாலும் உலக நாடுகளை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டின் கீழே வைத்து பராமரிக்க முடியாமல், அவ்வப்போது மண்ணை கவியுள்ளது அமெரிக்க ஏகாதிபத்தியம்.
ஈரானின் வரலாறு கற்பித்துள்ள பாடம்!
அமெரிக்காவின் சொல்படி நடந்த ஈரான் மன்னர் பகிரங்கமாக இஸ்ரேலை ஆதரித்தார். முன்னர் பிரிட்டிஷாரால் சூறையாடப்பட்ட ஈரானின் எண்ணை வளங்கள் அமெரிக்கா நிறுவனங்களுக்கும் திறந்து விடப்பட்டன. இதை கெடுக்கும் வகையில் ஒரு ஆட்சி மாற்றம் நடந்தது.
பிரிட்டிஷ் எண்ணை நிறுவனங்களின் சூறையாடலுக்கு எதிராக ஈரான் அரசாங்கம் களமிறங்கியது. பிரிட்டிஷ் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்களை அரசுடமையும் ஆக்கியது. இதை செய்தவர் தான் முகமது மொசாடெக்.
ஈரானின் 30 ஆவது பிரதமராக 1952 இல் ஆட்சிக்கு வந்த முகமது மொசாடெக் இஸ்ரேல் உடனான தூதரக உறவை துண்டித்தார். ஈரானனை மேலாதிக்கும் செய்து வந்த அமெரிக்காவுடனான உறவையும் துண்டித்தார். தனது நாட்டில் தொழில் செய்யும் நிறுவனங்களின் மீது அதிக வரிகளை போட்டு அதை நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்தினார்.
படிக்க:
🔰 ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!
🔰 ஈரான் மீதான யூத, ஜியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதப் போர்! பாகம் 1
ஏகாதிபத்தியங்களின் தத்துப் பிள்ளையான ஈரான் மன்னர் மற்றும் தனது கையாட்கள் மூலம் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தி, பிரதமர் மொகாடெக்கை கைது செய்து தனிமை சிறையில் அடைத்து கொல்ல வைத்தது அமெரிக்கா. மீண்டும் அமெரிக்காவின் கைப்பாவை ஆட்சியாளர்களால் ஈரான் சீரழிக்கப்பட்டது.
காலச்சக்கரம் சுழன்றது; காட்சியும் மாறியது. ஈரானிய புரட்சியின் மூலம் மீண்டும் ஆட்சி மாற்றம் நடந்தது. இம்முறை அதிகாரத்துக்கு வந்தவர்கள் தமது நாட்டை விருப்பம் போல் ஆட்டிப்படைத்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் பிராந்திய அடியாராக வளர்ந்து வரும் இஸ்ரேலையும் பகிரங்கமாக எதிர்த்தனர். இதே ஈரான்தான் பொக்ரான் அணுகுண்டு வெடிப்புக்கு எதிராக ஐநாவில் இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை தோற்கடிக்க உதவிக்கரம் நீட்டிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இது அமெரிக்காவின் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரானதாகவும், இஸ்ரேலின் யூத மதத்துக்கு எதிரானதாகவும், இஸ்லாமிய கடுங்கோட்பாட்டுவாதமாகவும் வெளிப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்கா இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூக்குரல் எழுப்ப ஆரம்பித்தது. அதன் நீட்சியாகத்தான் இன்று ஈரான் மீதான அமெரிக்காவின் விமான தாக்குதலும் நடந்துள்ளது. இதற்கு முன்னரே ஈராக்கில் சூடுபட்ட நாடு தான் அமெரிக்கா.
ஈராக்கில் “வளர்த்த கடா மார்பில் பாய்ந்த” கதை!
ஈராக்கிலும் ஈரானைப் போன்றுதான் சம்பவங்கள் நடந்தன. தனக்கு சாதகமாக செயல்பட மறுத்த ஆட்சியாளர்களை அரசாங்கத்தை தூக்கி எறிந்து விட்டு சதாம் உசேனை அதிபர் ஆக்கியது அமெரிக்க ஏகாதிபத்தியம். சதாம் உசேனுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களையும் வாரி வழங்கியது அமெரிக்கா.
சதாம் உசேனும் ஒரு கட்டத்தில் தனது நாட்டு எண்ணெய் வளங்களை உறிஞ்சிக் கொடுக்கும் அமெரிக்க கார்ப்பரேட்டுகளுடன் முரண்பட்டார். கச்சா எண்ணெயை டாலரில்தான் விற்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கட்டளையை மீறினார்.
அதிபர் சீனியர் புஷ்சின் பேச்சை கேட்க சதாம் உசேன் மறுத்தபோது நாசகார ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாக சொல்லி படை எடுத்து ஈராக்கை கைப்பற்றியது அமெரிக்கா. தானே வளர்த்து அதிகாரத்தில் அமர்த்திய சதாம் உசேனை தூக்கிலும் போட்டது.
எங்கே ரசாயன ஆயுதங்கள்? என்று கேட்டவர்களுக்கு எவ்வித ஆதாரத்தையும் காட்டாமல், ஒன்றும் கிடைக்கவில்லை என கையையும் விரித்து விட்டது.
பின்லேடனை வளர்த்து அல்கொய்தா மூலம் ஆப்கானிஸ்தானத்தில் மூக்கை நுழைக்க அனுப்பியது அமெரிக்கா. ஒரு கட்டத்தில் அல்கைதா அமைப்பும் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியது. பென்டகன் மீதும் உலக வர்த்தக கழகத்தின் இரட்டை கோபுரத்தின் மீதும் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது. இதய காரணமாக்கி தானே உருவாக்கிய பின்லேடனை பிடித்துக் கொல்ல பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்தது இதே அமெரிக்கா தான்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை மேலாதிக்கம் செய்ய உலக நாடுகளிடையே போர்களையும், பயங்கரவாத, தீவிரவாத தாக்குதல் குறித்த அச்சத்தையும், பதற்றங்களையும் உருவாக்கி பராமரித்து வருகிறது. இத்தகைய நாசகார சக்திகளின் பிடியிலிருந்து உலகை காக்கும் ஆபத்பாந்தவனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து எத்தனிக்கிறது.
பாசிஸ்டுகள் தனது கேடான நோக்கங்களுக்காக எதையும் செய்யத் துணிவார்கள் என்பதை வரலாறு தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறது. ஏகாதிபத்தியங்களால் தூண்டப்பட்டு வெடித்தெழும் போர்களுக்கு முடிவுகான நாம் ஏகாதிபத்தியங்களை சவக்குழிக்கு அனுப்ப வேண்டும்.
போர்களை ஒழிக்க வேண்டுமானால் ஏகாதிபத்தியங்களை ஒழித்தாக வேண்டும். ஏகாதிபத்தியங்களை பின்னிருந்து இயக்கும், பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி அழகு பார்க்கும் அயோக்கியர்களை தோலுரித்துக் காட்டியாக வேண்டும். போரின் விளைவுகளால் கொழுக்கப் போவது கார்ப்பரேட்டுகள். நாசமாக்கப்படுவது உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள். எனவே, அமெரிக்காவின் எலான் மஸ்க் இந்தியாவின் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளை உலக மக்களிடையே அம்பலப்படுத்தி மோதி வீழ்த்தி ஆக வேண்டும்.
தற்போதைய நிலைமையில் ஈரான் மீது நடத்தப்படும் ஏகாதிபத்திய போரை எதிர்த்து குரல் கொடுப்பது நம் அனைவரின் கடமை.
- இளமாறன்








உலக போலீஸ் ரவுடி அமெரிக்காவை அனைத்து நாடுகளும் ஐநா சபையும் ஒருங்கிணைந்து முறியடித்து மூன்றாம் உலகம் போருக்கு வித்திடும் அமெரிக்காவின் முகமூடியை கிழித்தெறிந்து பாடம் கற்பிக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை போதிக்கிறது. கட்டுரையாளர் தோழர் இளமாறன் அவர்களுக்கு பாராட்டுக்கள்!
வாழ்த்துக்கள்! 🤝