மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்” என்று 1967 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் பரப்புரைகளில் வாக்குறுதி அளித்தது. 1960 களில் தமிழகத்தில் நிலவிய பஞ்சம் காரணமாக பட்டினி கிடந்த ஏழை உழைக்கும் மக்களுக்கு அது புதிய நம்பிக்கையை தந்தது. அதற்கு முன்னர், 1950 களில் காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது பள்ளிகளில் ஏழை மாணவர்களின் பசியைப் போக்க மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

இப்படி பிரதமர் மோடி ஒழிக்க நினைக்கும் ‘ரெவடி’ (இலவசங்கள்) கலாச்சாரம் தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இது போன்ற திட்டங்கள் தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கும் பரவின. தற்போது அவை காலத்துக்கு ஏற்றாற்போல் பல மாற்றங்களை அடைந்துள்ளன. இத்தகைய திட்டங்களை ஒழிக்கத்தான் ஒன்றிய மோடி அரசும், உச்ச நீதிமன்றமும் துடியாய் துடிக்கின்றன.

கடந்த ஜூலை மாதம் அஸ்வினி குமார் உபாத்யாய் என்ற முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு முன்னாள் தலைமை நீதிபதி N.V. ரமணாவால் முக்கியத்துவம் கொடுத்து விசாரிக்கப்பட்டது. அஸ்வினி குமார் உபாத்யாய் தொடுத்த வழக்கு என்பது மிக்சி, கிரைண்டர், லேப்டாப் போன்ற பொருட்கள் தருவதை எதிர்த்து மட்டுமல்ல, மின்சாரத்திற்கு கொடுக்கப்படும் மானியம், உதவித்தொகைகள், ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் குறிவைத்துள்ளது. அந்த மனுவில் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலைக்குச் செல்பவர்கள் “வெட்டி அரட்டை அடிப்பது, மொபைல் கேம் விளையாடுவது” என்பதையே செய்கிறார்கள் என்றும், இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக்கி உழைப்பு சக்திகளை வீணடிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டுகிறது.

ஒன்றிய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா இந்த இலவச கலாச்சாரம் “பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தும். தேர்தல் கமிசன் இது பற்றி சிந்திக்க வேண்டும். உங்களிடம் எங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறோம்.” என்று கூறினார்.


இதையும் படியுங்கள் : ஒன்றிய அரசே ! ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களிடம் அடிக்கும் வரிக்கொள்ளையை நிறுத்து!


இதனை வைத்துக்கொண்டே உச்சநீதிமன்றம் “பகுத்தறிவுக்கு பொருந்தாத இலவசங்களை ஒழிக்க வேண்டும். இது பற்றி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் ஒன்றிய அரசும் சிந்திக்க வேண்டும்” எனக்கோரியது. தேர்தல் ஆணையம் இத்தகைய வரையறுத்தல் தனது சட்ட வரம்புக்குள் வராது என ஒதுங்கிக் கொண்டது. பிரதமர் மோடியோ இந்த இலவசத் திட்டங்களை ஒழிக்காமல் போனால், அது நாட்டின் வளர்ச்சியையும் இளைஞர்களையும் பாதிக்கும் எனப் பேசினார். பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இலவச கேஸ் சிலிண்டர், பெண்களுக்கு உதவித்தொகை போன்ற திட்டங்களை அமல்படுத்துகின்றன என்பது மோடியின் பேச்சில் உள்ள முரண்பாட்டை காட்டுகிறது.

திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில் “மூன்று ஆண்டுகளில் அதானி குழுமத்திற்கு ரூ.72,000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதையும், 2017-2022 காலகட்டத்தில்  பொதுத்துறை வங்கிகளில் ரூ.7.27 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி இவை கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்படும் இலவசமாகாதா? கார்ப்பரேட்டுக்களுக்கு பெரும் வரி குறைப்பு தொடர்ந்துகொண்டே ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் உணவு, கல்வி, போக்குவரத்து ஆகியவற்றுக்கான மானியங்களை தடுக்க முயல்வது எந்த வகையில் சரியானது” எனக் கேள்வியெழுப்பி உள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் “மக்களுக்கு கொடுக்கப்படும் இலவச கல்வியும், மருத்துவமும் தேவையற்றதாகிவிடுமா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். ஊடகங்களில் பேசிய தமிழக நிதியமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் ஒன்றிய மோடி அரசின் யோக்கியதையையும் உச்சநீதிமன்றத்தின் அதிகார மீறலையும் ஊடகங்களில் சிறப்பாக அம்பலப்படுத்தினார். அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்காத முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி N.V. ரமணா “நீங்கள் மட்டும் தான் அறிவாளி கட்சி என நினைத்துக் கொள்ளாதீர்கள், வெளியில் நீங்கள் பேசுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்” எனப் அதிகார போதையில் பிதற்றினார். தற்போது அந்த வழக்கு கூடுதல் பரிசீலனை தேவைப்படுவதாகக் கூறி மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

**********

இலவசங்கள், மக்கள் நலத்திட்டங்கள் பற்றிய விவாதத்தை தொடங்கி வைத்தது ரிசர்வ் வங்கி. கடந்த ஜுன்  மாதம், ரிசர்வ் வங்கி மாநிலங்களின் நிதி பற்றாக்குறை குறித்த அறிக்கையை வெளியிட்டது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போல் இந்தியாவின் மாநிலங்களும் நெருக்கடிக்குள்ளாகும் எனத் தெரிவித்திருந்தது. அதற்கு அந்த அறிக்கை சொன்ன காரணங்கள்- வரி வருவாய் குறைந்தது; பெரும் செலவீனங்கள், மானியங்கள் அதிகரித்தது; கொரோனா பாதிப்பு ஆகியவற்றுடன் புதிதாக கொடுக்கப்படும் தகுதியற்ற இலவசங்கள் (Non-Merit Freebies), பழைய ஒய்வூதியத் திட்டத்துக்கு திரும்புவது; மின் வாரியங்களின் கடன் ஆகியவை ஆகும்.

அந்த அறிக்கை மிக முக்கியமாக – தகுதியற்ற இலவசங்கள், மானியங்கள், இலவச மின்சாரம், கடன் தள்ளுபடி ஆகியவற்றையே. மாநிலங்களின் கடன், நிதி பிரச்சினைகளுக்கு முன்வைத்தது. அவற்றை குறைப்பது அல்லது இல்லாமல் செய்வதே தீர்வாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை மாநிலங்களின் வரி வருவாய் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து பரிசீலிக்கவில்லை. திட்டமிட்டே அதனை தவிர்த்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (GST) அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட மாநிலங்களின் நிதி நிலைமைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மறந்தும் குறிப்பிடவில்லை. மாறாக, மாநிலங்கள் வரியல்லாத பிற வருவாயை அதிகரிக்க வேண்டும் என ஆலோசனை கூறுகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டுதான் மோடியும் உச்சநீதிமன்றமும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களை எதிர்த்துப் பேசுகின்றனர். மாநிலங்களின் கடன் சுமை பற்றிக் கவலைப்படும் உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி- இரண்டும்  GST மூலம் மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமை பறிக்கப்பட்டது குறித்தும், ஆண்டொன்றுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை, தள்ளுபடி செய்யப்படுவது குறித்தும் கவலைப்படவில்லை.

இந்த ரிசர்வ் வங்கி அறிக்கை, மக்கள் நலத்திட்டங்களை ’தகுதியற்ற’ இலவசங்கள்,  தகுதியுள்ள மக்கள் நலத் திட்டங்கள் என்று பிரித்து ‘தகுதியற்ற’ இலவசங்களை நிறுத்தச் சொல்கிறது. இதையே முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழிமொழிந்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்   ‘தகுதியுள்ள’ திட்டங்கள் எது?, ‘தகுதியற்ற’ திட்டங்கள் எது? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். நீதிமன்றங்கள் தீர்மானிக்க முடியாது; அது நீதிமன்றங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டது என ஊடகங்களில் பேசினார். அந்த பேச்சு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

இன்னொருபுறம் நிதி ஆயோக் முன்னாள் தலைவர் ராஜிவ் குமாரும் “மாநிலங்கள் தங்கள் நிதி திறனுக்கு அதிகமாக மக்கள் நலத் திட்டங்களில் செலவிடக் கூடாது” என வலியுறுத்துகிறார்.

இப்படி ஒன்றிய மோடி அரசு, உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக் ஆகிய மூன்றும் மக்கள் நலத் திட்டங்களை ஒழிக்க களமாடுவதற்கு காரணம் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை அரசு மக்களுக்கு கொடுக்கும் மானியங்கள், செலவீனங்களை குறைக்க சொல்கிறது. இந்தியாவில் உள்ள தேர்தல் கட்சிகள் பலவும் அந்த கொள்கையையே பின்பற்றினாலும் தேர்தல் வெற்றி, மக்களின் பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாக சமாளிப்பது ஆகியவற்றுக்காகவாவது இதுபோன்ற நலத்திட்டங்களை அறிவிக்கின்றன.

***********

2014ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தவுடன் MNREGA எனும் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தேவையற்ற சுமை, மன்மோகன் சிங் ஆட்சி தோல்வியின் அடையாளம் எனப் பேசினார். ஆனால், வேலையின்மை, வருமானம் குறைந்தது ஆகியவற்றின் காரணமாக அவர் அதை தொடர வேண்டிய நிலை உள்ளது. அதுவும் கொரொனா  ஊரடங்கு காலத்திற்குப் பிறகு அது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.  அந்த திட்டம் 2008க்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, கிராமப்புற வேலையின்மை காரணமாக மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. இப்படி ஒவ்வொரு நலத் திட்டங்களும் அமலுக்கு வந்தன.

இந்த மக்கள் நலத் திட்டங்களுக்குப் பின் ஒரு நீண்டதொரு வரலாறு உள்ளது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் சிக்கின. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்னொருபுறம், சோவியத் ரசியா மக்களின் துயரங்களைப் போக்கி இருந்தது. பல்வேறு நாட்டு உழைக்கும் மக்களும் சோவியத் ரசியாவை தங்களுக்கான மாடலாக பார்ப்பது அதிகரித்தது.  புரட்சியை நோக்கி உழைக்கும் மக்கள் சிந்திப்பது அதிகரித்தது. அந்த கம்யூனிச அபாயத்திலிருந்து தப்பிக்க “மக்கள் நல அரசு” என்ற வடிவம் முன்வைக்கப்பட்டது. பிரிட்டன் 1945ஆம் ஆண்டு தன்னை ஒரு “மக்கள் நல அரசு” என அறிவித்துக் கொண்டது. பல்வேறு நாடுகளும் அதனை பின்தொடர்ந்தன.  இந்த மக்கள் நல அரசு என்பது பெரும்பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து மக்களுக்கு நல உதவிகள் செய்யும் வடிவமாகும்.

இந்தியாவில் “அதிகார மாற்றத்திற்குப்” பிறகு இயற்றப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழிகாட்டும் நெறிமுறைகள் இந்திய அரசு “மக்கள் நல அரசு” என்ற பாதையில் பயணிக்க வழிகாட்டியது. புரட்சிகரமான மாற்றங்களுக்கு மாற்றாக, இந்த சீர்திருத்த வடிவம் முன்வைக்கப்பட்டது.

1947 ஆம் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை சார்ந்து இருந்தனர். அதிலும் நிலமற்ற, கூலி ஏழை விவசாயிகளும், துண்டு நிலங்கள் மட்டுமே கொண்ட குறு விவசாயிகள் எண்ணிக்கையே அதிகம். நாடு  ‘சுதந்திரம்’ அடைந்தாலும் மக்கள் நிலப்பிரபுத்துவ அடிமைத் தளையிலேயே சிக்கித் தவித்தனர். அந்த மக்களின் விடுதலைக்கு அடிப்படையாக “உழுபவனுக்கு நிலம்” என்பது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். நில உச்சவரம்பு சட்டங்கள் செயல்திறனற்று கிடந்தன. சொற்பமான நிலங்களை எடுத்து ஏழை மக்களுக்கு கொடுத்தன.


இதையும் படியுங்கள்: கார்ப்பரேட்டுகளுக்கு இலவச இந்தியா! மக்கள் தலையில் வரிச் சுமை!


இந்த நிலையில் திராவிட முன்னேற்ற கழகம், CPI, CPI(M) போன்ற கட்சிகள் இந்த கட்டமைப்புக்கு உட்பட்டு சில சீர்திருத்தங்கள், மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தின. மக்களின் போராட்டங்களும் அவற்றை நோக்கித் தள்ளின. அந்த நலத் திட்டங்கள் மக்களுக்கு பெருமூச்சு விட அனுமதித்தன.

உதாரணமாக, தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் 1967யில் ஆட்சிக்கு வந்த போது “ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி” கொடுக்க முயற்சித்து மாநிலத்தின் நிதி நிலைமை காரணமாக ஒரு ரூபாய்க்கு ஒரு படி மட்டும் கொடுத்தது. அது அன்றைய நிலையில் ஒரு படி நெல்லுக்கும் அரிசிக்கும் பண்ணையார்கள் வீட்டின் முன் நிற்க வேண்டிய தேவையை நிலமற்ற, ஏழை விவசாயிகளுக்கு குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படை தேவை காலம், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றிற்கேற்ப முன்னேறி இலவச மின்சாரம், முதியோர் ஒய்வூதியம், தொலைக்காட்சி, இலவச பேருந்து பயணம், மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என வந்துள்ளது. இவை ஏழை உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறிப்பிடத்தகுந்தது.

ஆனால் இன்னொருபுறம், 1990களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு பெயரளவுக்கு இருந்து வந்த  ’மக்கள் நல அரசு’ என்ற தன்மை ஒழித்துக்கட்டப்பட்டது. இன்னொருபுறம், பெரும் கார்ப்பரேட்டுகள், பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிகள் குறைக்கப்பட்டது; வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதுவே உலக வர்த்தக கழகம், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றுடனான ஒப்பந்தத்தின் அடிப்படை.

ஒன்றிய அரசாங்கத்துக்கான தேர்தல்களைவிட மாநில அரசாங்கத்துக்கான தேர்தல்களிலேயே இலவச பொருட்கள், மானியங்கள், மக்கள் நலத் திட்டங்கள் பலவும் அறிவிக்கப்படுகின்றன.  அவற்றை முடக்குவதே ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் நோக்கம். ஏற்கனவே மாநிலங்களுக்கான தேர்தல்களையும் ஒன்றியத்துக்கான தேர்தலையும் ஒரே நேரத்தில் வைக்க வேண்டும் எனப் பேசி வருகிறது. அதன்மூலம் மாநில தேர்தல்களுக்கான முக்கியத்துவத்தை குறைக்க முயற்சித்தது. மாநில அரசுகள் சொந்தமாக வரி விதிக்கும் உரிமை ரத்து செய்யப்பட்டது போலவே மாநில அரசுகள் சொந்தமாக மக்கள் நலத் திட்டங்கள் அமல்படுத்துவதையும் தடுக்கப் பார்க்கிறது.

எனவே நமது வரிப்பணத்தில் கொடுக்கும் பொருட்களை இலவசங்கள் என்று எவனாவது சொன்னால் உனக்கு தரும் சம்பளம் தண்டம் என்று முகத்தில் அறைவோம்! உழைத்து வாழும் நமக்கு தேவையான பொருட்களைக் கூட வாங்கும் சக்தியின்றி திண்டாடும் அளவிற்கு வைத்துள்ள அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தின் மீது காறி உமிழ்வோம்!

  • வேதநாயகம்

புதிய ஜனநாயகம்
செப்டம்பர் மாத இதழ் 

படியுங்கள்
பரப்புங்கள்! 

                                             

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here