நாள் 13-10-2022

தோழமை ஜனநாயக சக்திகளுக்கு ஒரு வேண்டுகோள்!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய எமது தோழர் ராமலிங்கம் 80 நாட்களுக்கும் மேலாக பிணை மறுக்கப்பட்டு திருச்சி சிறையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பவும் இதே கள்ளக்குறிச்சி வழக்கில் ஏனைய பல இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் விடுதலைக்கும் ஆதரவு குரல் எழுப்ப கோருகிறோம்.

தோழர் ராமலிங்கம் எமது அமைப்பின் மூத்த தோழர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பொது உடமை கருத்துக்களை சங்கராபுரம் சுற்று வட்டார பகுதியில் பரப்பி அரசியல் பணியில் ஈடுபடும் தோழர். மக்கள் அதிகாரம் அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளராக உள்ளார். கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை.

தோழர்.ராமலிங்கம், வயது 56, அவரும் அவரது மனைவியும் தினக்கூலி வேலை மற்றும் 100 நாள் வேலையின் மூலம் குடும்பம் நடத்தி வருகிறார்கள். அவரது மகள் செண்பகம் எஸ்.வி. பாளையம் அரசினர் மேல் நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தோழர்.ராமலிங்கம் உடல்நிலை சரியில்லாதவர், எந்த உடல் உழைப்பும் தற்போது செய்ய இயலாதவர். அவருக்கு அவ்வப்போது வலிப்பு வரும். இந்த நோய்க்காக அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மனைவியின் வருமானத்தை மட்டும் வைத்துதான் குடும்பம் நடத்தி வருகிறார்.

தோழர் ராமலிங்கம் மீது குண்டர் சட்டம் போடுவதை நிறுத்தக்கோரி பல்வேறு கட்சி பிரமுகர்கள் ஊர் முக்கியஸ்தர்களுடன், அவரது மருத்துவ சான்றிதழ்களை இணைத்து மனைவி உஷா கடந்த 19-9-2022 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். “ஆதாரம் இல்லாமல் யாரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்திரவிடமாட்டேன் இதுவரை ராமலிங்கம் பெயரில் எந்த கோப்பும் என்னிடம் வரவில்லை என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலீசாரின் தவறான மோசமான பரிந்துரையை ஏற்று தோழர்.ராமலிங்கம் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு 28-9-2022 அன்று உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி வழங்க கோரி பல்வேறு அமைப்பினரும் போராடினார்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்க தவறியதால்தான் 17-7-2022 அன்று போராட்டம் வன்முறையாக மாறியது. தோழர் ராமலிங்கம் கடந்த 18-7-2022 அன்று கைது செய்யப்பட்டு இன்று வரை 80 நாட்களுக்கும் மேலாக திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்க போலீசார் சொல்லியுள்ள காரணங்கள் மிக ஏற்கமுடியாத மோசமானவை.

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை வழக்கில் முதலில் கு.எண்.238/22 வழக்கில் கைது செய்தனர். பிறகு இரண்டு மாதம் கழித்து அதே சம்பவத்திற்காக மேலும் ஒரு வழக்கில் கு.எண்.236/22 கைது செய்து பிணையில் வர விடாமல் வேண்டுமென்றே போலீசார் சிறையிலடைத்தனர். கள்ளக்குறிச்சி கலவர சம்பவத்தில் அவர் எந்த விதத்திலும் ஈடுபடவில்லை. மக்கள் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் பிரசுரம் விநியோகிப்பது என செயல்படுவாரே தவிர இது போன்ற சம்பவங்களில் மனதளவிலும், அவர் ஈடுபட்டதில்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

குண்டர் சட்டத்தில் அடைப்பதற்காக போலீசார் சொல்லி உள்ள காரணங்கள் மிக கேவலமானவை உதாரணமாக சில வரிகள் “தான் ஒரு பெண் காவலரின் தலைமுடியை பிடித்து இழுத்து வந்ததாகவும், பெண் காவலரை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியதாகவும் அப்போது காவல் துறையினர் வானத்தை நோக்கி சுட்டார்கள் எனவும், தான் பயந்து கொண்டு பெண் காவலரை விட்டு விட்டு ஓடிவிட்டதாகவும் அதன் பிறகு காவல் துறையினரை தாக்கியதாகவும் தாக்குதலில் நிறைய காவல் துறையை சேர்ந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கலக கும்பல் கீழே விழுந்த காவலர்கள் தொப்பிகளை திருடியது எனவும் தானும் ஒரு தொப்பியை எடுத்து சென்றதாகவும் சிலர் காவல் துறையின் லத்தி ஷீல்டு ஆகியவற்றை திருடி சென்றதாகவும் தான் எடுத்து சென்ற தொப்பியை ஏரிகோடியில் மறைத்து வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டதாகவும் “. என இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலத்தை எழுதி கொண்டு கிரிமினல் சமூக விரோதி போல் சித்தரித்து குண்டர் சட்டத்தில் அடைத்திருப்பது போலீசார் செய்யும் பழிவாங்கும் செயல்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் உண்மை குற்றவாளிகள் தப்ப வைப்பது, பள்ளி நிர்வாகிகளுக்கு ஆதரவான போலீசாரின் ஒரு சார்பான நடவடிக்கை, எண்ணற்ற அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது செல்போன் இருசக்கரவாகனங்கள், பல ஆயிரம் ரொக்கம் என அனைத்தும் போலீசாரால் சூறையாடப்பட்டது. பல இளைஞர்கள் கை உடைக்கபட்டது என கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீசின் பல குற்றங்கள் உள்ளன.

அவற்றை மறைக்க திசை திருப்ப மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பு பெயரை கேடாக இந்த கலவரத்தில் சம்பந்தபடுத்தவே தோழர் ராமலிங்கத்தின் மீது இத்தகைய அடக்கு முறைகளை போலீசார் ஏவியிருக்கின்றனர். இதே போல் பல இளைஞர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவி உள்ளனர். எனவே தாங்கள் தலையிட்டு எமது தோழர் உள்ளிட்ட அனைவரின் விடுதலைக்கும் இத்தகைய அநீதியை கண்டித்தும் ஆதரவு குரல் கொடுக்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்:
வழக்கறிஞர்.
தோழர்.சி.ராஜு
மாநிலப் பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு-புதுவை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here