மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு
தடையாக 10% EWS இட ஒதுக்கீடு! கலகம் செய்!


பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சமூகத்தை ஆதிக்கம் செய்து வரும் பார்ப்பனக் கும்பலுக்கு மோடி அரசு வழங்கும் வெகுமதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மருத்துவ முதுகலை படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கையை உடனே நடத்த வேண்டும் என்று பயிற்சி மருத்துவர்கள் கடந்த ஒரு வார காலமாக போராடினார்கள். இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான முதுகலை பட்டதாரிகள் சேர்க்கை ஜனவரி மாதமே நடந்திருக்க வேண்டியது டிசம்பர் வரை இன்னமும் நடைபெறவில்லை.

போராடிய மருத்துவர்களை கைது செய்த டெல்லி போலீஸ்.

முக்கியமாக இந்த சேர்க்கை “அரிய வகை ஏழைகள்” என்று சித்தரிக்கப்படும் பார்ப்பன குலக் கொழுந்துகள் சேர்வதற்கு சட்டத்தையே மோசடி செய்து 10% இட ஒதுக்கீடு அறிவித்ததன் விளைவாக இன்று இந்த மருத்துவ மாணவர்களின் சேர்க்கை தடைபட்டு நிற்கிறது.

இதிலும் கேலிக்கூத்தாக ஆண்டுக்கு எட்டு லட்ச ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்கள் தான் வறுமைக்கோட்டை விட கீழே உள்ளவர்கள் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது வாதமாக முன்வைத்துள்ளது.

எட்டு லட்ச ரூபாய் என்று வரம்பு நிர்ணயித்ததில் என்ன அடிப்படை? ஒவ்வொரு மாநிலத்திற்கும் வருவாய் வேறுபடுகிறது? எந்த அடிப்படையில் இதை தீர்மானித்தார்கள் என்று நீதிபதி சந்திரசூட் தலைமையிலான விசாரணையில் வாயை திறக்காமல் எந்த தரவுகளையும் தராமல் மருத்துவ கல்வியில் இந்த ஆண்டே 10% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக அமல்படுத்துவோம் என்ற திமிர் தனத்தில் நிற்கிறது பாசிச பாஜக அரசு. பல முறை வாய்தாவிற்கு பிறகு இது அரசின் கொள்கை முடிவு நீதிமன்றத்திற்கு வேலையில்லை என்று உச்ச நீதிமன்றத்தின் முகத்தில் துப்பியுள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மருத்துவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு துணையாக முதுநிலை படிக்கின்ற 80 ஆயிரம் மாணவர்கள் உதவி செய்கிறார்கள் இந்த மாணவர்களை வைத்துக்கொண்டு தான் பெரும்பான்மையான அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் இந்தியாவில் இயங்கி கொண்டிருக்கிறது. இந்த சூழலில் புதிதாக மாணவர்களை மருத்துவக் கல்விக்கு அனுமதிக்காவிட்டால் மிகப் பெரிய அபாயத்தில் இந்தியா சிக்க போகிறது என்று எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள்.

ஒமிக்கிரான் பரவல் மற்றும் கொரானா மூன்றாவது அலை உருவாகி விட்டது என்றெல்லாம் கடந்த ஒரு வாரமாக ஊடகங்களில் மத்திய அரசும், சுகாதாரத் துறையும் எச்சரித்துக் கொண்டிருக்கிறது இரண்டாவது அலையில் மிகக் கடும் பாதிப்புக்குள்ளான இந்தியா போன்ற ஏழை நாடுகளில் மருத்துவ சேவை செய்கின்ற மருத்துவர்களுக்கு உதவியாக இந்த முதுகலை பட்டதாரிகள் இருக்கிறார்கள்.

இவர்கள் COVID-19 வைரஸ் தாக்காமல் கவச உடை அணிந்து கொண்டு ஏறக்குறைய நாற்பத்தி இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக வேலை செய்கிறார்கள். இவ்வாறு வேலை செய்பவர்களின் பணிச்சுமை அடுத்த சில வாரங்களில் மிக அதிகரிக்கப் போகிறது. இதற்கிடையில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 6-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. மத்திய அரசு இதில் எந்த அக்கறையும் காட்டாமல் போராடும் மாணவர்களை ஒடுக்குகிறது. மெட்ரோ ரயில் திறப்பு, தேர்தல் பிரச்சாரம் என்று ஊர் சுற்றி வருகிறார் பிரதமர் மோடி.

இவை அனைத்தையும் விடக் கொடுமையாக கடந்த 29-12-2021 அன்று போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது பாசிச மோடி கும்பல். விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைத்து மண்ணைக் கவ்வியது. ஆனாலும் இன்னும் பாசிசத் திமிர் அடங்காமல் போலீசு மற்றும் இராணுவத்தை வைத்துக்கொண்டு அரசு பயங்கரவாத அடக்கு முறைகளின் மூலம் போராட்டங்களை நசுக்கி விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

இது மருத்துவ மாணவர்களின் போராட்டம் நமக்கென்ன என்று நாம் ஒதுங்கி இருக்க முடியாது ஏனென்றால் இன்றுள்ள கட்டமைப்பிற்குள் ஏழை மக்களின் உயிரை காப்பாற்றுகின்ற ஒரே வாய்ப்பாக உள்ளது அரசு மருத்துவமனைகள் மட்டும்தான். அதில் பணிபுரியும் மருத்துவர்களும் இவ்வாறு ஒடுக்கப்பட்டு விட்டால் அல்லது அதிக பணிச்சுமை காரணமாக விரக்தி அடைந்து விட்டால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்படுவது உறுதி. அத்தகைய கொடுமை நேராமல் விழித்துக் கொண்டு போராடுவோம்.

வீதியிலிறங்கி போராடும் மருத்துவ மாணவர்களுடன் கரம் கோர்ப்போம்.

சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here