வெள்ளை மாளிகையில்
உலக சக்ரவர்த்தி கையால்
மோடிமஸ்தானுக்கு
அம்பானி மகிந்திரா சுந்தர்பிச்சை புடைசூழ,
பாலிவுட் பாடல்களோடு
விருந்தோ விருந்து !

காவி இதயத்தில்
காவிக் குங்குமப் பூ பதித்த
ரிசாட்டோ* பொங்கல் சோறு !

அமர்ந்துண்ணும் மேசைகளில்
இந்தியக்கொடியை நினைவுபடுத்தி
காவிப் பூ வண்ண அலங்காரம்
சேர்க்க மறக்கவில்லை மிஸ்ஸி பைடன்.

நேசம் மறக்காத ” பாரத ” நெஞ்சம்
மிஸ்ஸி பைடனுக்கு வைரங்களை
நேரம் குறித்துப் பரிசாக அளிக்க
A முதல் Z வரை
எல்லாம் சுபோஜெயமாய் முடிந்தது !

000

நாட்டில் என்ன நடந்தால் என்ன,
யார் எதைக் கழுவி ஊற்றினால் என்ன,
எல்லாம் போகட்டும் கண்ணனுக்கே–
சொன்னவனும் கண்ணன், கேட்டவரும்
ஆர்எஸ்எஸ் மோடிக் கண்ணனே.

அமெரிக்காவுக்கு ஏற்ற
பலப்பல ஒப்பந்தங்களில்
கைநாட்டு போட்டுத் திரும்பிய மோடி
புது நாடாளுமன்ற அரங்கத்துக்கு
மெருகேற்றும் திட்டங்களை நவுத்துகிறார் —
முக்கியவேலை, எதிரிக்கட்சிகளின்
தலைகளைச் சீவிடுவது,
சிஷ்யன் சந்திரகுப்தனின்
வாளைக் கொண்டே
அரசியல் சாணக்கியனாய்ச் சீவிடுவது;
பிறகு
கண்ணுக்குப் புலனாகாத
குடுமியை உதறிச் சீவி
ஒருநாள் புதிய அரங்கில்
குடுமியை முடிந்துகொண்டு பூச்சூடி
சர்வ அதிகாரியாய்
அரியணை ஏறுவதும் நடந்தேறும் !

000

மோடிக்கு அளிக்கப்பட்ட
அமெரிக்க விருந்து கண்டோ,
இந்திய – அமெரிக்க ஒப்பந்தங்கள் கண்டோ
சீனா — ரசியா கலங்கவில்லை ;
இப்படி எத்தனையோ அயிட்டங்கள்
வரும் போகும் ;
சதுரங்க ஆட்டத்தின்
அடுத்த நகர்வுகளை அவைஆரம்பிக்கின்றன;
குவா குவா குவாட் மெல்ல அசையட்டுமே,
பார்த்துக் கொள்ளலாம் என்று
ஷாங்காய் கூட்டுறவு எனும்
மூங்கில் கிலுகிலுப்பையை
சீனா ஆட்டுகிறது.
ராணுவத் தளவாட எலும்புத்துண்டுகளை
ரசியா காட்டுகிறது.
உலகமக்களின் மொத்தச் செல்வமும்
அவர்களின் பந்தயத்தில்
சூதாடப்படுகிறது……..

000

இந்த நாடு
‘பாரதப்’ படிக்கட்டில்
தேவ யுகங்களின் வழியே
வேகமாய்ச் சறுக்கிப்
பின்னேறிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கப் பயண விருந்துக்குப்பிறகு
சவர்க்காரம் போட்டுத் துவைத்த
காவிச் சால்வை
தேசியக்கொடியாய் ஆட,
மணிப்பூர் சிறுபான்மை மதத்தவரை
மிரட்டுவதற்கான எரிநெருப்பில் குளிர்காய்ந்து
வைதீக மருந்து எடுக்கிறார்
மௌனசாமி மோடி ராசா !

  • புதிய திருமூலன்

குறிப்பு : ரிசாட்டோ என்பது அரிசி அல்லது சிறுதானியத்தில் பொங்கிய குழைந்த சோறு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here