puplic memory is short lived ! என்பார்கள்.

காவிரி கோபத்தை ஜல்லிக்கட்டு
அணைத்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு கோபத்தை கதிராமங்கலம் அணைத்துவிடுகிறது.
கதிராமங்கலம் கோபத்தை அனிதா சிதைத்தீ அணைத்துவிடுகிறது. அனிதா கோபத்தை,  இந்தியத் தொலைக் காட்சிகளில் முதன்முறையாக ரிலீசாகிற
உப்புமா சினிமா அணைத்துவிடுகிறது.

ஒரு கோபத்தை பற்றவிடாமல் , அதில் தண்ணீர் ஊற்ற , போலீஸ், சட்டம், சினிமா, டிவி, பாட்டு, கூத்து நிறையவே கண்டுபிடித்திருக்கிறார்கள்!

ஆனால் , இது எல்லாமே சாதாரணவர்களுக்குதான். புரட்சியாளன் ஒருவனது கோபத் தீ அப்படி எளிமையாய் அணைந்துவிடுவதில்லை.

ஒரு கோபத்தை எப்படிப் பாதுகாப்பது? கோபத்தை எப்படி தக்கவைத்திருப்பது? கோபத்தை எப்படி செயல்படுத்துவது ? என்பதை ஒவ்வொரு இந்தியரும் அறிந்து கொள்ள, ஒரு கலைப்படைப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அதுதான் சர்தர் உத்தம் திரைக்காவியம் .

அரசியலில் நடிப்பு சுதேசிகளையும், போலி தேசபக்தர்களையும், வாய்ச்சவடால் பேர்வழியும் பார்த்து சலித்த நமக்கு, இப்படி ஒரு சுத்த வீரன் நம்மிடம் வாழ்ந்திருக்கிறானே! என இருமாப்பை ஏற்படுத்துகிற படம் சர்தார் உத்தம் .

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் எழுதப்பட்ட வரலாறுகள் பலவும் ,
அதை, காந்தி, நேரு, கோகலே, திலகர் போன்றோரின் சாகசமாக ஒற்றை இழையிலேயே காட்டி வந்திருக்கின்றன. ஆனால், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு பல்வேறு உள்ளிழைகளைக் கொண்டது.

இசுலாமியர்கள், சீக்கியர்கள், தலித்துகள், பெண்கள் ஆகியோரின் விடுதலைப் போராட்ட பங்களிப்புகளை வரலாறு திட்டமிட்டு மூடி மறைத்திருக்கிறது .

சர்தர் வல்லபாய் பட்டேலுக்கு விண்முட்ட சிலை எழுப்பியவர்கள் பகத்சிங், உத்தம்சிங்கை வெறும் சடங்காக மட்டுமே நினைவு கோருகிறார்கள்.

இந்திய சுதந்திரம் ஏதோ கத்தியின்றி ரத்தமின்றி கிடைத்ததாக ஒரு மாபெரும் புனைவு வரலாற்றை சூழ்ந்திருக்கிறது. உண்மை அவ்வாறு இருக்கவில்லை. என்பதன் ரத்த சாட்சி சர்தார் உத்தம் திரைப்படம்.

வெள்ளையர்க்கெதிராக கோபம் வளர்ந்து, விடுதலைக் கனல் கொழுந்துவிட்டபோது, இந்தியர் மனங்களில் புரட்சித் தீ பற்றிக்கொண்டது.

விடுதலைக் கனவோடு பொதுவுடமை சிந்தனையும் இளைஞர்கள் மனங்களை ஆட்கொள்ளத் தொடங்கியது .

‘போல்ஷ்விக்குகள், ஜெர்மன், ரஷ்யா,புரட்சி!’ என வெள்ளை அரசாங்கம் பதறியது. பிறகு, அது ராணுவ ஜெனரல்களுக்கு ரௌலட் சட்டத்தையும் , புதிய துப்பாக்கிகளையும் அளித்தது!

1919 ஏப்ரல் 13 பஞ்சாப், ஜாலியன் வாலாபாக்கில் ஒரு கூட்டம். யாரிடமும் ஆயுதங்களில்லை. அவர்கள் அபலைகள், நிராயுதபாணிகள் .

‘ இது எங்கள் தேசம். நாங்கள் சுதந்திரமாகப் பேசவேண்டும், எழுதவேண்டும், இம் மண்ணில் அடிமைகளாய் மடிந்துவிடாமல் சுயமரியாதையோடு மானத்தோடு வாழவேண்டும்!’ எனச் சிந்தித்தக் கூட்டமது. சிறுவர்களை, முதியவர்களை ,
பெண்களைக் கொண்ட கூட்டம்.

அன்றுதான், ஜெனரல் டயர் என்கிற மிருகத்தின் வன்மத்தை வரலாறு
கருப்பு எழுத்துகளால் குறித்துக்கொண்டது!

கூட்டத்தை ஒழுங்குபடுத்தி தவித்து வந்தவர்களுக்கு ,தண்ணீர் கொடுத்தான்
ஓர் இளைஞன் . அவன் உத்தம்சிங்!

அவன் ஜெனரல் டயரைப் பார்த்தான். அதிகாரம் டயருக்கு ஆயிரம் தலைகளை
நான்காயிரம் துப்பாக்கிகளைக் கொடுத்திருப்பதைக் கண்டான்.

ரௌலட் சட்டம், ‘துப்பாக்கியே நீதி!’ என்றது. 1650 குண்டுகள் இந்திய
வெறுப்பை உமிழ்ந்தன. அமிர்தசஸ் நகரின் ஹர்மந்திர் சாஹிப்பின்
நான்கு கதவுகள் திறந்தேயிருக்கும் . இறையை தரிசிக்க எம்மதத்தவரும் செல்லும் ஆலயமது.

அங்கு வாசிக்கப்படும் குரு கிரந்த் சாகிப்பை , குழந்தைகள், முதியோர்,
பெண்களின் குருதி நனைத்தது. இருபது வயது உத்தம் சிங்கால்
வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அவனிடம் துப்பாக்கி இல்லை. கோபமிருந்தது!

சாதாரண கோபமல்ல 7665 நெடிய நாட்களானாலும் , ஆறாத தீராப் பெருங் கோபமது. அக்கோபத்தில் மழை தூறியது. பனி பொழிந்தது வெய்யில் காய்ந்தது. இருள் வெருட்டியது. ஆனாலும் வாலாபாக் நகரில் வழிந்த ரத்தத்தில் கோபம் எரிந்தபடி இருந்தது .

அவன் துப்பாக்கியை, ஜெனரல் டயரைத் தேடி ஆப்ரிக்கா போனான் .
நைரேபி போனான் . அமெரிக்கா போனான் . பாகிஸ்தான், ஆஃப்கான், ரஷ்யா என பனிவழியும் சாலைகளில் நடந்தே போனான்.

ஒவ்வொரு முறையும் புதுப் பெயரோடு போனான். கோபமும் புதிதாகவே இருந்தது. இறுதியாக ஜெர்மன், இத்தாலி , ஃபிரான்ஸ் , சுவிட்சர்லாந்து , வழியாக லண்டனடைந்தான்.

யாரைக் கொல்ல எண்ணினானோ அதே டயரிடம் வேலைக்கு சேர்ந்தான். அவரை வீட்டிலேயே கொன்றிருப்பான். அப்படி செய்திருந்தால் அது ஒரு சம்பவமாக மட்டுமே உலகம் மறந்திருக்கும். ஆனால் உத்தம் சிங் அதை ஒரு சரித்திரமாக மாற்ற விரும்பினான்.

இடையில் எவ்வளவு தூரம். எவ்வளவு காலம். இப்படியொரு இந்தியக் கோபம் கூட்டத்திலிருப்பது தெரியாமல் கிழக்கிந்தியச் சங்கத்தில் பேசத் தொடங்கினான் ஜெனரல் ஓ டயர். ஒரு தேவகுமாரனைப்போல எழுந்தான் உத்தம்சிங்.

21 ஆண்டுகளுக்குப்பின் தன் ஆறாத கோபத்தோடு கேக்ஸ்டான் ஹாலில் வைத்து ஓ டயரைப் சுட்டான் உத்தம். கூட்டம் நிசப்தமாக இருந்தது.
உலகம் என்றுமே மறந்துவிடாதபடி,
நிதானமாக, கவித்துவமாக ,விடுதலை அழகியலாக, ஓ டயர் மீது துப்பாக்கியால்
நீதியை எழுதினான் உத்தம்.

‘அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்!’
நீதிபதியடம் தலைநிமிர்ந்து சொன்னான் .

உத்தம்சிங்காக நடித்திருக்கும் விக்கி கவுஷலின் கேரியரில் இது ஒரு முக்கியமான படம். புரட்சியாளர்கள் எத்தனை சாதுவானவர்களாக, மெல்லிய மனம் படைத்தவர்களாக, வலிமையான உள்ளம் படைத்தவர்களாக இருப்பார்கள், என்பதை அவரது ஒவ்வொரு அசைவும் பறைசாற்றுகிறது.

விசாரணை அதிகாரி பகத்சிங் பற்றி கேட்கிறார். ‘நீங்கள் உங்கள் 23 வது வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? பதிலுக்கு கேட்கிறான் உத்தம்.

‘ எனக்கு அப்போது திருமணம். துப்பறியும் பணியில் சேர்ந்திருந்தேன். வாழ்க்கை ஜாலியாக போனது! ‘ என்கிறான் அந்த அதிகாரி.

வாலிபத்தின் எந்த நறுமணத்தையும் அனுபவிக்காமல் தேசம் விடுதலையடைய வேண்டுமேயென, அந்த சின்ன வயதில் தூக்குக்கயிற்றை முத்தமிட்டவன் பகத்சிங்.

உத்தம் அந்த விசாரணை அதிகாரியை உற்றுப்பார்க்கிறான். ‘ உனக்கு பகத்சிங்கைப் பேச என்ன தகுதி இருக்கிறது? ‘ எள்ளி நகைக்கிறான்.

தூக்கு தண்டைனை விதிக்கப்பட்ட நிலையில் தன்னை சந்திக்கும் அதிகாரியிடம், ‘ இளமை என்பது வரம்! என என் குரு சொல்லியிருக்கிறார்.
நான் என் இளமைக்கு நியாயம் செய்திருக்கிறேன்! ‘ கர்வத்தோடு சொல்கிறான் உத்தம்.

காந்தி படத்தில் பகத்சிங் படத்தில் ஜாலியன்வாலாபாக் படுகொலையை பார்த்திருக்கிறேன். பகத்சிங் படத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் சர்தர் உத்தம் படக்காட்சி உலுக்கி எடுக்கிறது.

பதினைந்து நிமிடங்களாவது வரும் இந்தக் காட்சியில் உடைந்து அழுதேன். மனம் பேதலித்து திகிலடைந்திருந்தது. செய்வதறியாது திகைத்த என் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

குற்றவாளிகளான பிரிட்டிஷ்காரர்களால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? வரலாற்றின் மாபெரும் பாவம் அவர்களை சூழந்திருந்தது.

1997ஆம் ஆண்டு இரண்டாம் ராணி எலிசபெத் ஜாலியன்வாலாபாக் வந்து இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் .

2013ஆம் ஆண்டு பிரதமர் டேவிட் கேமரூனும் பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

2017 லண்டன் மேயர் சாதிக் கான், அமிர்தசரஸ் வந்திருந்தார். ‘ பிரிட்டன் மன்னிப்பு கேட்க வேண்டும்!’ என்றார். மன்னிப்பு கேட்டாலென்ன? கேட்காமல் போனாலென்ன?

ஜாலியன்வாலாபாக் ரத்தமும், அதற்கு பழியாக உத்தம்சிங் சிங் பறித்த ஓ டயரின் ரத்தமும் வரலாற்றில் அழியப்போவதில்லை.

இப்படி , ரத்தமும் சதையுமான சரித்திரத்தை, ஒரு காவியத் துயராக கண்முன்னே விரித்திரிக்கும் இயக்குனர் சுஜித் கிர்கர் பாராட்டுக்குரியவர்.

1940 ஜூலை 31. பென்டோன் சிறைத் தூக்குமரத்தில், ஒரு கனியைப் போல் தொங்குகிறான் உத்தம்சிங்.

படம் முடிகிறது.

‘அடடா! இப்படி கோபப்பட வேண்டும்!’
பார்ப்பவர்கள் பெருமிதமடைகிறார்கள் !

  • கரிகாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here