“தீண்டாமை ஷேமகரமானது” என்று திமிர்த்தனமாக முன்வைத்த பார்ப்பன கும்பலின் தலைவன் சங்கராச்சாரியின் சங்கரமடம் முன்வைக்கும் ஆலோசனைகள், சனாதன வழிமுறைகள் சட்டப்படியே அமுலாகத் துவங்கியுள்ளது.
இந்தியாவின் பூர்வ குடிமக்களான பட்டியலின மக்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள், அவமானப்படுத்தப்படுதல்கள், இழிவுபடுத்தப்படுதல்கள் ஆகியவை பாசிச பாஜகவின் ஆட்சியில் சொல்ல முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பார்ப்பன பாசிசம் என்பது பயங்கரவாதமானது என்று நாம் வரையறுத்து முன் வைக்கிறோம். ஆனால் இந்தியாவில் நிலவுகின்ற பார்ப்பனியமே ஒரு பாசிசம் தான் என்று ஆந்திராவின் சமூக செயல்பாட்டாளரும், பேராசிரியருமான காஞ்சா அய்லைய்யா கூறுவது உண்மை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சார்ந்த ஒருவர் துவங்கி உயர்ந்தபட்ச தலைமை பொறுப்பான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பி.ஆர். கவாய் வரை நிகழ்த்தப்படும் சாதி தீண்டாமை வன்கொடுமைகள் இந்திய சமூக அமைப்பின் அவமானகரமான இழிவாகவே தொடர்கிறது.
சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தேர்வாகியுள்ள நீதிபதி பி.ஆர்.கவாய் நாட்டின் இரண்டாவது பட்டியலின தலைமை நீதிபதியாக தேர்வாகியுள்ளார். இதற்கு முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 2007 இல் முதல் பட்டியலினத்தைச் சேர்ந்த தலைமை நீதிபதியாக பணியாற்றினார்..
தனிப்பட்ட வழக்குகளில் சரி தவறுகளை ஆய்வு செய்து நீதி வழங்குவதில் அவரது வர்க்கத்தன்மை காரணமாக சில குறைபாடுகள் நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் பெரும்பான்மையான தீர்ப்புகளில், அவர் சொல்லிக் கொள்ளப்படும் நீதியின் பக்கமே நின்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப்பற்றிய பகுப்பாய்வு இந்த கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது என்பதால் இத்துடன் முடிக்கலாம்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி பூஷன் கவாய் பல வரலாற்று சிறப்புமிக்க வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். ”மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 2023 ஆம் ஆண்டில் உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வில் பி.ஆர். கவாயும் இடம் பெற்றிருந்தார்.
பண மதிப்பிழப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கும் போது, “இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(2) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளையும் தடை செய்யப் பயன்படுத்தலாம். இந்தப் பிரிவில் பயன்படுத்தப்படும் ‘ஏதேனும்’ என்ற வார்த்தையை குறுகிய அர்த்தத்தில் புரிந்துக் கொள்ள முடியாது” என்று நீதிபதி கவாய் கூறியிருந்தார்.
2024 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இடஒதுக்கீடு கட்டமைப்பிற்குள் துணை வகைப்பாடு அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படுகிறது என்ற ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. நீதிபதி பூஷன் கவாய் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தார்.
அப்போது, நீதிபதி கவாய் உட்பட நான்கு நீதிபதிகள், SC மற்றும் ST இடஒதுக்கீடுகளுக்குள் கிரீமி லேயர் விதியை அறிமுகப்படுத்தலாம் என பரிந்துரைத்தனர்.
“அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவக் கொள்கையை நிறுவுவதில் இந்த நடவடிக்கை முக்கியமானதாக இருக்கலாம். இருப்பினும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) வழக்கைப் போலவே, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) ஆகியோருக்கும் கிரீமி லேயரை செயல்படுத்துவதற்கான குறிப்பிட்ட அளவுகோல்களை அரசாங்கம் நிறுவ வேண்டும். OBC மற்றும் பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான அளவுகோல்கள் வேறுபடலாம்” என்று கவாய் கூறியிருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வானது தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் நன்கொடையாளர்களின் பெயர் வெளியிடப்படாதது அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a) இன் கீழ் குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக தீர்ப்பு வழங்கிய அந்த அமர்வின் ஐந்து நீதிபதிகளில் நீதிபதி பி.ஆர். கவாய் ஒருவராக இருந்தார்.
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கையாண்ட 2 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நீதிபதி கவாய் தலைமை தாங்கினார். மனுக்களை விசாரித்த நீதிபதி, உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் சொத்துகளை அழிப்பது சட்டவிரோதமானது என்று கூறி, இடிக்கும் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறை பாதுகாப்புகளை உச்ச நீதிமன்றம் வகுத்தது.
படிக்க:
♠ முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமனை அச்சுறுத்தும் பாஜக!
♠ சங்கி ரவி அவர்களே! மதச்சார்பின்மை வேண்டாம்! சாதி- தீண்டாமைதான் வேண்டுமா?
முக்கியமாக, இந்த வழிகாட்டுதல்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் பொருந்தும் என்றும், இந்த விதிகளை செயல்படுத்துவதற்கு பொருத்தமான சுற்றறிக்கைகளை வெளியிடுமாறும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் அந்த அமர்வு உத்தரவிட்டது.” மேற்கண்ட வகையில் அவரது தீர்ப்புகளைப் பற்றி பிபிசியே எழுதியுள்ளது. அது மட்டுமல்ல, அரசாங்கம், நீதித்துறை இரண்டையும் விட அரசியலமைப்புச் சட்டம் தான் உயர்வானது என பேசத் துவங்கியுள்ளார்.
இந்த விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் அவர் ஓய்வு பெறப்போகும் 2025 நவம்பர் வரை பாசிச மோடி கும்பலுக்கு சிக்கல்தான். இதனாலேயே அவரை அவமானப்படுத்தவும் துணிந்துள்ளது. இதன் ஒரு பகுதியே மகாராஷ்டிராவில் அவருக்கு நிகழ்ந்த அவமானம்.
மகாராஷ்டிரம் மற்றும் கோவா பார் கவுன்சில் சார்பில் மும்பை தாதா அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, நாட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற பி.ஆர். கவாய், தனது சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தைத் தலைமை நீதிபதியாக முதன்முறையாக வந்திருந்தார்.
இந்நிலையில், மரபு நடைமுறைப்படி வரவேற்க வேண்டிய தலைமைச் செயலாளர், மாநில காவல் இயக்குநர், மும்பை போலீஸ் ஆணையர் ஆகியோர் யாரும் வரவில்லை. இதனால் நிகழ்ச்சியின் போது நேரடியாகவே, இந்த புறக்கணிப்பில் அவர் ஏமாற்றம் மற்றும் வருத்தம் தெரிவித்தார்.
அவர் பட்டியலினத்தை சேர்ந்த நீதிபதி என்பதுதான் இந்த புறக்கணிப்புக்கு காரணம். அவர் மீது இத்தகைய அவமானப்படுத்தல் நிகழ்ந்த சம்பவம் பேசுபொருளான பின்னர் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு அதிகாரிகள் விழுந்தடித்து ஓடினர் என்றும் செய்திகள் வெளியானது.
இதுதான் இன்றைய இந்தியாவின் உண்மை நிலையாக உள்ளது. இப்போது யார் சாதி பார்க்கிறார்கள் என்று கேள்வி கேட்கின்ற பார்ப்பனக் கும்பல் துவங்கி இடைநிலை சாதிகள் வரை இந்திய சமூக அமைப்பின் மீது கொடூரமான சாதிய வன்மத்தையும்,, தாக்குதலையும் தொடுத்து வருகின்றனர் என்பதன் பச்சையான வெளிப்பாடுதான் உச்சநீதிமன்ற நீதிபதியான ஆர்.பி.கவாய்க்கு இழைக்கப்பட்டுள்ள அவமானம்.
தீண்டாமை ஒரு குற்றம் என்று முன்வைக்கின்ற அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் நாம் கடந்து வந்த பாதையில் இந்த நாட்டின் பூர்வ குடிமக்கள் மீது இழைக்கப்படுகின்ற கொடுமைகள் எதையும் அரசியலமைப்புச் சட்டம் தடுத்து நிறுத்தவில்லை.
மாறாக பட்டியலின சமூகத்தில் இருந்து இப்படிப்பட்ட நீதிபதிகளும் மேலே வந்திருக்கிறார்கள் என்று பெரும்பான்மை பட்டியலின மக்களை திருப்தி கொள்ள வைப்பதற்கு தான் இந்த அரசியலமைப்பு சட்டம் பயன்பட்டுள்ளது.
இனியும் இத்தகைய கொடுமைகளை தாங்கிக் கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அபாரமான நம்பிக்கை வைத்திருப்பது தேவை தானா என்பதை பட்டியலின சமூக மக்களும், தலைவர்களும் சிந்திக்க வேண்டிய தருணம் இதுதான்.
◾ சீராளன்
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி
Fantastic article. Best wishes to Comrade Seeralan.👌