
ஜெயமோகனின் ஒரு சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை படம் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அது தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில் சிலவற்றை அழுத்தமாக காட்சிப்படுத்துகிறது.
முதல் பாகத்தில் போலீசாரின் தேடுதல் வேட்டை, கொட்டடி சித்திரவதைகள் என அரசுத் துறையின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார் இயக்குநர் வெற்றிமாறன்.
இரண்டாம் பாகத்திலோ கீழத்தஞ்சை பகுதியில் பண்ணைகளின் காம வெறியாட்டம், கூலி ஏழை விவசாயிகளின் உழைப்பை சுரண்டுவது ஆகியவற்றை தட்டி கேட்டு வேர்பிடித்த கம்யூனிச இயக்கத்தை காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இடதுசாரிகளின் செங்கொடி இயக்கத்தில், இடது திசைவிலகல் ஏற்பட்டு தனிநபர் அழித்தொழிப்பை நோக்கி நகர்ந்ததையும் பதிவு செய்கிறார்.
படத்தின் நாயகனாக வரும் பெருமாள் வாத்தியார் உழைக்கும் மக்களை கொல்பவர்களை, மக்களுக்காக குரல் கொடுக்கும் போராளிகளை கொல்பவர்களை நாமும் கொல்ல வேண்டும் என நிலை எடுத்து தனிக்குழுவை உருவாக்குகிறார்.
அந்தப் பாதையில் நடந்த குண்டுவெடிப்பு, அதில் ஏற்பட்ட பாதிப்பு மறுபரிசீலனையும் செய்கிறார்.
இதற்குள் ஏற்கனவே செய்த அழித்தொழிப்பு படுகொலைகளின் விளைவாக அரசின் தேடுதல் வேட்டையும், போலி என் கவுண்டர்களும் தொடங்கி விட்டதால், தொடர்ந்து தலைமறைவாகவே செயல்படுகிறார்.
மலை கிராமத்தில் வைத்து கைது செய்த காவல்துறை அவரை எப்படி நடத்துகிறது என்பதாக விடுதலை இரண்டாம் பாகம் செல்கிறது.
இதிலும் அரசின் தலைமை பொறுப்பில் உள்ள தலைமைச் செயலாளர் தொடங்கி, கீழ்மட்ட காவல்துறை அதிகாரிகள் வரை புரையோடிப் போய் உள்ள பதவி வெறி, சுயநலன், துரோகம் போன்ற பண்புகளை அழுத்தமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இப்படம் உழைக்கும் மக்களின் சார்பில் பழைய நிலப்பிரப்புத்துவ கட்டமைப்பின் – பண்ணைகளின் மீதும், தற்போதைய அதிகார வர்க்கத்தின் அரச பயங்கரவாதத்தின் மீதும் தனது கண்டனங்களை அழுத்தமாக பதிவு செய்கிறது.
கென் கருணாஸ் சில நிமிடங்கள் படத்தில் வந்தாலும் கூட, பெருமாள் வாத்தியாரின் பாதைக்கு கென் கருணாஸின் வாழ்க்கை துவக்க புள்ளியாக அமைகிறது.
துணிச்சலான திரைக்கதை!
இப்படத்தில் கதையை சொல்லி இருக்கும் திரைக்கதை உத்தி சுவாரசியமாக இருப்பதால் படத்தை ரசிக்க தூண்டுகிறது.
மார்க்சிய லெனினிய அமைப்பின் தலைவராக வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து வழி காட்டுபவராக உள்ள அனுராக் கதாபாத்திரம் சாருமஜீம்தாரை நினைவுபடுத்துகிறது.
பெருமாள் வாத்தியார், பாலத்திற்கு குண்டு வைப்பு என காட்சிப்படுத்தி இருப்பது தமிழகத்தின் புரட்சிகர இயக்கத்தில் இருந்து தமிழினவாத பாதைக்குச் சென்ற புலவர் கலியபெருமாள், தமிழரசன் போன்றவர்களை நினைவூட்டுகிறது.
மொத்தத்தில் விடுதலைக்காக ஏங்கும் அடக்கி ஒடுக்கப்படும் சுரண்டப்படும் மக்களின் வலிகளையும், அவர்களுக்காக களம் கண்டவர்களின் சிந்தனைப் போக்குகளையும் காட்சிப்படுத்துவதில் தனி முத்திரையை பதித்து உள்ளது. தமிழக வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தவற்றை கலவையாக்கி ஒரு புள்ளியில் இணைத்த திரைக்கதையாக அமைந்துள்ளது. அதனால் இது தனி ஒருவருடைய வரலாற்று கதையாக அல்லாமல், வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவாக வந்துள்ளது.
போராளிகளை இழிவாக சித்தரித்தும், போலீசாரையும் அதிகாரிகளையும் நேர்மையானவர்களாக உயர்த்திப் பிடித்தும் பல படங்கள் வெளிவந்த நிலையில், வெற்றிமாறன் எழுதி இயக்கி இருக்கும் “விடுதலை” படம் அவற்றிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. காவல்துறையின் உண்மையான முகத்தை பளிச்சென பதிவு செய்கிறது.
‘“தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள்”, “வன்முறை எங்க மொழியில்ல, ஆனா எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்” என்பது போன்ற வெற்றிமாறனின் வசனங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
படிக்க: வெற்றி நடைபோடும் ஜெயிலரின் யோக்கியதை என்ன?
மக்களுக்காக போராடும் போராளிகளின் வாழ்க்கை எப்படி தியாகப்பூர்வமானது என்பதை நன்றாகவே காட்சிப்படுத்தி உள்ளனர்.
போராளியின் வாழ்விலும், காதலுக்கும் மண வாழ்க்கைக்கும் உரிமை உண்டு என அழுத்தமாக கிஷோரின் கதாபாத்திரம் பதிவு செய்கிறது. விஜய் சேதுபதி மஞ்சு வாரியாரின் காதல் காட்சிகள் கதைக்கு மிகவும் பொருத்தமாகவே அமைந்துள்ளன.
புதிய பார்வை!
தமிழ் திரை உலகில் அரிதினும் அரிதாகத்தான் வணிக லாப நோக்கமற்று உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் படைப்புகள் வெளி வருகின்றன. அதில் ஒன்றாக விடுதலை பாகம் 2 அமைந்துள்ளது.
மலை மேல் கைதியாக இழுத்துச் செல்லப்படும் பெருமாள் வாத்தியாரின் கதையை கேட்ட காவலர்களில் சிலர் மனம் மாறுவதும் எதார்த்தமாகவே உள்ளது.
இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் என ஏதாவது உள்ளதா என்று சிந்திக்க வைப்பதாக பத்திரிக்கைகளுக்கு போடப்படும் உத்தரவும் பேருந்தில் வைத்து கைது செய்யப்படும் நிருபரின் வாதங்களும் உள்ளன.
பண்ணையார் குடும்பத்தில் இருந்தே ஒருவர் தலை மறைவு இயக்க போராளியாவது, காவல்துறையில் இருக்கும் சிலர் கூட நியாயத்தின் பக்கம் நிற்க விரும்புவது, ஊடகங்கள் விலை போய் விட்டுள்ள இன்றைய பாசிச சூழலில் நமக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கதையில் ஒரு தினசரி பத்திரிக்கையும், அதன் நிருபரும் உண்மையை உலகுக்கு சொல்ல துணிந்து செயல்பட்டு இருப்பதாக காட்சிப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று தான்.
தெளிவும் தடுமாற்றமும்!
அதாவது தனி நபரின் மீதான வெறுப்பாக இல்லாமல், அவர் சார்ந்த வர்க்கத்தை – அந்த வர்க்கத்தை வழிநடத்தும் சித்தாந்தத்தை – எதிரியாக காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். இந்த பார்வை தமிழகத்தின் திரைத் துறையில் அரிதிலும் அரிதான ஒன்று.
படிக்க: மனித உரிமைப் போராளி டாக்டர் ஜி.என். சாய்பாபாவுக்கு சிவப்பு அஞ்சலி.
மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார் விஜய் சேதுபதியை கடைநிலை கான்ஸ்டபிள் குமரேசன் என்கிற சூரி கைது செய்வதோடு விடுதலை படத்தின் முதல் பாகம் முடிந்திருந்தது. முதல் பாகத்தில் தமது துறையில் நடப்பது தவறு என தெரிந்தும் எதையும் செய்ய கையாலாகாதவனாக காட்சிப்படுத்தப்பட்ட சூரி இரண்டாம் பாகத்தில் கிளைமாக்ஸ்சில் அழுத்தமாக தனது முத்திரையை பதித்துள்ளார். தன் மனசாட்சிப்படி துணிந்து முடிவெடுக்கிறார்.
மக்களுக்காக, சமூக மாற்றத்திற்காக, புரட்சிக்காக போராடுபவர்கள் செல்ல வேண்டிய பாதை எது என்பதை பெருமாள் வாத்தியாரின் கதாபாத்திரம் அழுத்தமாக சொல்லவில்லை. சாகசவாதத்தை கையில் எடுத்த தமிழினவாதிகளின் குழப்பத்தையே விஜய் சேதுபதி ஏற்ற வாத்தியார் பாத்திரமும் வெளிப்படுத்தி உள்ளது. நம் நாட்டிற்கு பொருத்தமான, உண்மையான புரட்சிகரப் பாதை எது என தனது தோழர்களுக்கு பளிச்சென்று சொல்ல முடியாமல் பெருமாள் வாத்தியார் விடைபெறுகிறார்.
இளையராஜாவின் பின்னணி இசையும் வேல்ராஜின் ஒளிப்பதிவும், விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கிஷோர், சூரி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட நடிகர்களின் பொருத்தமான நடிப்பும் விடுதலை – 2 படத்தை வெற்றிப் படமாக்கி உள்ளன.
சென்சார் போர்டின் கத்தரிக்கு தப்பி வந்த இப்படத்தில் சில குறைபாடுகளாக மிகையான வன்முறை காட்சிகள், பிரச்சார பாணி இருந்தாலும் அதையும் தாண்டி படம் மனதில் நிற்கிறது. மொத்தத்தில் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
- இளமாறன்
உண்மையை உணர்த்தும் திரைவிமர்சனம் சிறப்பு!
அரசியல் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு எழுதப்பட்டுள்ள விமர்சனம்.
‘விடுதலை – 2’ திரைப்படம் தொடர்பான தோழர் இளமாறன் அவர்களின் திரை விமர்சனம் சிறந்த கண்ணோட்டத்தில் அமையப் பெற்றுள்ளது. நானும் ஒரு சில கட்டுரைகளை அக்காலம் முதல் ஓரளவு எழுதி வந்துள்ளேன். ஆனால் திரைப்பட விமர்சனம் என்ற கண்ணோட்டத்தில் எனது பதிவுகள் எப்பொழுதும் இடம் பெற்றதில்லை.
ஆனால் தோழர் இளமாறனின் விவ்விமர்சன
கட்டுரை ஆழமாகவும் நுட்பமாகவும் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு சாலச் சிறந்த முறையில் எழுதியுள்ளார். திரு வெற்றிமாறனின் திரைப்படத்துறையில் ஆகச்சிறந்த பங்களிப்பை அறியும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரைப்படத்தை குடும்பத்துடன் -தோழர்களுடன் விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது.
விமர்சனத்தை பார்க்கின்ற பொழுது ஆளும் வர்க்கத்தின் கொடும் வாளான ‘சென்சார் போர்டு’-வின் ‘கத்தரி’-யிலிருந்து இப்படம் எப்படி தப்பித்தது என ஆச்சரியமாக உள்ளது.
மொத்தத்தில் தோழர் வெற்றிமாறனுக்கும், அதில் நடித்த நடிகர்களுக்கும், சிறந்த விமர்சனம் எழுதி இப்படத்தை அனைவரையும் பார்க்கத் தூண்டியுள்ள தோழர் இளமாறன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!
விமர்சனம் அருமை… ஆனால் ‘அரசு’ என்ற வார்த்தையையே அனுமதிக்காத சென்சார் கத்திரி நாம் எதிர்பார்க்கும் படி அழுத்தமான கருத்தை திரைப்படத்தில் அனுமதிக்குமா என்று தெரியவில்லை…
எனினும் இயக்குனர் தன்னால் இயன்ற அளவு சொல்லியிருப்பதாகவே நினைக்கிறேன்.