
இந்தியாவில் உள்ள நகரங்களில் குடி மக்களின் வாழ்நிலை மற்றும் அவர்களுக்கான உரிமைகள் எப்படி உள்ளன என்பது குறித்த ஒரு புதிய ஆய்வின் முடிவுகள் வந்துள்ளன. குடியுரிமை, சமத்துவமின்மை மற்றும் நகர்ப்புற நிர்வாகம் (CIUG) என்ற இந்த ஆய்வானது, இந்திய ஆராய்ச்சியாளர்களும், அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதில் இந்தியாவில் உள்ள 14 நகரங்களில் 31,803 வீடுகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வர்க்கம், சாதி மற்றும் மதம் எவ்வாறு மனிதர்களை வடிவமைக்கிறது, எவ்வாறு குடிமக்கள் பொது சேவைகளை பெறுகிறார்கள், அவர்களது அரசியல் பங்கேற்பு எப்படி உள்ளது என்பதையெல்லாம் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் முன்னணி காரணியாக வர்க்கம் உருவெடுத்துள்ளது என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் நகர்ப்புற இந்தியர்கள் எப்படி வாழ்கிறார்கள், தண்ணீர் மற்றும் சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளை எந்த விகிதத்தில் பெறுகிறார்கள் என்பதையும் படம் பிடித்துக் காட்டியுள்ளது. பொது வாழ்வில் எந்த அளவில் பங்கேற்க முடிகிறது மற்றும் பொது சேவைகளை எந்த அளவு பெற முடிகிறது எனும் இரண்டு அம்சங்கள் இந்தியாவில் உள்ள நகர்ப்புற குடிமக்கள் சமமாக நடத்தப்படுகிறார்களா என்பதை பகுப்பாய்வு செய்வதற்கான அடிப்படைகளாக கருத்தில் கொள்ளப்பட்டன.
வர்க்கத்தின் அளவுகோலாக வீட்டின் வகைகள்!
இந்த ஆய்வில் வர்க்கத்துக்கான வகை மாதிரியாக வீட்டின் தன்மை பயன்படுத்தப்பட்டது. குடிசைகள், சேரிகளில் உள்ள முறைப்படி அமையாத வீடுகள் முதல் உயர் வர்க்கத்தினரின் வீடுகள் வரை ஐந்து வகையான வீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. நகரங்கள் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில் முறைசாரா வீடுகள் பெருமளவில் வளர்ந்து வருகின்றன. மும்பையில் முறைசாரா வீடுகளில் அதிகப்படியான மக்கள் வசிக்கின்றனர்.
எனவே இத்தகைய வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவோமோ என்ற அச்சமும் அங்கு வசிப்பவர்களிடம் அதிக அளவில் உள்ளது. கொல்கத்தாவில் இத்தகைய பயம் குறைவாகவும், ஜலந்தரில் அதிக அளவிலும் உள்ளது. நகரத்துக்கு நகரம் இதில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பட்டியல் சாதியினரான எஸ்சி பிரிவினர் 45%, எஸ்டி பிரிவினர் 37 %, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 16 சதவீதம் என்ற அளவில் முறைசாரா வீடுகளில் வசிக்கின்றனர். உயர் வர்க்கத்தார் வசிக்கும் பகுதிகளில் எஸ்சி & எஸ்டி பிரிவினர் மிகவும் குறைந்த அளவே வசிக்கின்றனர்.
அம்பேத்கரின் கனவும், இன்றைய உண்மை நிலையும்!
டாக்டர். அம்பேத்கர், கிராமப்புறங்கள் தலித்துகளுக்கு கழிவு நீர் கிடங்குகள் போல இருப்பதாகவும், நகரங்கள் விடுதலைக்கான இடங்களாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார். எனவே அவர் தலித் மக்களை நகரங்களை நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் இன்றைய நிலையில் நகர்ப்புறங்களில் பெரும்பாலான பகுதிகளில் சாதி சமத்துவமின்மை நீடிக்கவே செய்கிறது.
ஆனால் அது மறு சீரமைக்கப்பட்ட புதிய வடிவங்களில் இருப்பதை ஆய்வு உறுதி செய்கிறது. மேலும் சில நகரங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பொதுப் பிரிவினர் போலவே வசிப்பதையும் பார்க்க முடிகிறது. எனவே இந்த வகையில் பார்க்கும்போது வர்க்கம் என்பது சாதிப் பாகுபாட்டை பெருமளவு குறைத்துள்ளதைக் காண முடிகிறது.
வாக்காளர் பதிவும் வர்க்க அடிப்படையில்தான் நடைபெறுகிறது. மும்பை, ஜலந்தர் மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் வாக்களிக்கப் பதிவு செய்ய விரும்பியவர்களால் அவ்வாறு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. முறைசாரா வீடுகளில் வசிப்பவர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். மறுபுறம் உயர் வகுப்பு வீடுகளில் இந்தப் பதிவானது 74 சதவீதமாக உள்ளது.
அனைத்துப் பிரிவு மக்களையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய ஜனநாயகத் தேர்தல்களில் கூட வர்க்கப் பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது. ஆய்வில் கணக்கெடுக்கப் பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் புலம் பெயர்ந்தவர்கள் ஆவர். முறைசாரா வீடுகளில் வசிக்கும் இவர்களில் பெரும்பாலோர் எஸ்சி, எஸ்டி வகுப்பினர். இவர்கள் இத்தகைய இடங்களில் 10 முதல் 15 ஆண்டுகளாக வசிக்கின்றனர். இதற்கு மாறாக உயர் வர்க்கப் பிரிவினர் நீண்ட கால மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களாக உள்ளனர்.
காவல்துறையினர் மக்களை அணுகுவதில் உள்ள பாகுபாடு பற்றிய கருத்தும் அளவிடப்பட்டது. மத மற்றும் சாதிய முக்கியத்துவம் காணப்பட்டாலும், வர்க்கம் தான் இங்கும் பிரதானமான காரணியாக உள்ளது. அடிப்படை சேவைகளைப் பெறுவதிலும் நகரங்களில் சீரற்ற தன்மைதான் நிலவுகிறது. அறிக்கையின்படி பாவ் நகர், கொச்சி மற்றும் வடோதரா போன்றவை சிறப்பாகவும், சென்னை மும்பை போன்ற நகரங்கள் தண்ணீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தில் குறைவான செயல்பாட்டையும் கொண்டுள்ளன எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
படிக்க:
♦ ஜிஎஸ்டி வரி குறைந்ததால் பசியும் பட்டினியும் மறைந்து போனதா?
♦ சாதீய போதையும் சமூகத்தின் மனநிலையும்!
மூன்றில் ஒரு பங்கு வீடுகள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே நீரைப் பெறுகின்றன. நீரை சேமிக்க வாளிகளை மட்டுமே நம்பி இருக்கும் பெரும்பாலான குடும்பங்களுக்கு இது பெரிய சிக்கல்தான். சுகாதார வசதிகளும் நகரத்துக்கு நகரம் வேறுபடுகிறது. அகமதாபாத் மற்றும் டெல்லி போன்றவை ஒப்பீட்டளவில் சிறப்பாகவும் மும்பை மிகவும் மோசமான நிலையிலும் உள்ளது.
மேலும் அனைத்து நகரங்களிலும் கிட்டத்தட்ட 90 சதவீத அளவில் முறை சாரா வீடுகளில் உள்ளவர்களுக்கு போதுமான சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை. குடிமக்கள் பொது சேவைகளை பெறுவதில் சாதி, மதத்தை விட வர்க்கம்தான் தீர்மானகரமான சக்தியாக உள்ளது.
சிறுபான்மையாக உள்ள முஸ்லிம்களின் நிலை!
முஸ்லிம் மக்களுக்கு பொதுச் சேவைகளைப் பெறுவதில் பற்றாக்குறை நிலவுகிறது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 14 நகரங்களில் 10-ல் முஸ்லிம்கள் முறைசாரா குடியிருப்புகளில் தான் அதிகம் வசிக்கின்றனர். உயர் வர்க்கத்தார் வசிக்கும் இடங்களில் இவர்களது எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. ஆனால் கொச்சி, சென்னை, போபால் மற்றும் டெல்லி ஆகிய நான்கு நகரங்களில் இது மாறுபட்டு காணப்படுகிறது.
மேலும் நகரங்களைப் பொறுத்த வரை டெல்லியில் ஷாகீன் பாக், சென்னையில் திருவல்லிக்கேணி போன்ற ஒரு குறிப்பிட்ட பகுதியில் முஸ்லிம்கள் குவிந்து வசிப்பதையும் பார்க்க முடிகிறது. முஸ்லிம் மக்களை சமூகத்திற்கு எந்த பங்களிப்பும் செய்யாதவர்களாக காட்டும் பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவா கும்பலின் வகுப்புவாத பிரச்சாரத்திற்கு மாறாக அரசியல் மற்றும் சமூக பங்களிப்பில் இந்துக்களை விடவும் முறையான ஈடுபாட்டை முஸ்லிம்கள் காட்டுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறைந்து வரும் சமூக உறவுகள்!
இந்தியாவில் பல ஆண்டுகளாக நகரமயமாக்கல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய நகரங்களில் சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகமாகவே உள்ளன. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் தங்கள் சாதி மற்றும் மதக் குழுக்களுக்குள் மட்டுமே நட்பைப் பேணுவதாக பெரும்பாலோர் தெரிவித்தனர். சென்னை மற்றும் கொச்சி மட்டுமே இதில் விதிவிலக்காக இருந்தது. சில சிறிய நகரங்களில் மட்டுமே மதங்களுக்கு இடையிலான நல்லுறவைக் காண முடிகிறது. டெல்லி சமூக ரீதியாக மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நகரமாக கண்டறியப்பட்டது. இங்கு குழுக்களுக்கு இடையிலான சமூக உறவுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
காகிதத்தில் மட்டுமே சமத்துவம்!
இந்தியாவில் குடியுரிமை என்பது காகிதத்தில் மட்டுமே சமத்துவமாக உள்ளது என்பதை ஆய்வு முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. ஆனால் நடைமுறையில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சாதியினர் அடிப்படை சேவைகள் மற்றும் உரிமைகளை பெறுவதில் மிகவும் பின்தங்கிய நிலைதான் உள்ளது. முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகள் வர்க்கம், சாதி மற்றும் மதத்தால் பெரிதும் கட்டுப்படுத்தப் படுகின்றன.
இந்திய அரசியலமைப்பு சமமான குடியுரிமையை அனைத்து மக்களுக்கும் உறுதி செய்தாலும், அதன் நகர்ப்புற நிர்வாக அமைப்புகள் ஏற்றத்தாழ்வான குடியுரிமையைத்தான் வழங்குகின்றன. ஒருவரின் நிலையை நிர்ணயிக்கும் மிகப்பெரிய காரணியாக வர்க்கம் இருப்பதால், சிறுபான்மை சாதி மற்றும் மதம் இரண்டும் நகர்ப்புற சமூகத்தில் போராட வேண்டிய நிலையே உள்ளது. எனவே நகர்ப்புறங்கள் சாதி ரீதியான படி நிலையில் இருந்து வர்க்கரீதியான படிநிலைக்கு மாறுவதற்கான வாய்ப்பைத்தான் மக்களுக்கு அளிக்கின்றன.
முதலாளித்துவ சமூகத்தில், நகர்ப்புறங்களிலும் கூட சாதி, மதம் மற்றும் வர்க்க ரீதியான வேறுபாடுகள் நீடிக்கவே செய்கின்றன. அதிலும் குறிப்பாக கார்ப்பரேட் காவிப் பாசிச ஆட்சி இவற்றை பாதுகாக்கும் வேலையில்தான் தீவிரமாக ஈடுபடுகிறது. நாம் அமைக்க விரும்பும் சோசலிச மற்றும் கம்யூனிச சமூகத்தில் தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க முடியும்.
- குரு






