ட்டுப்படியாகும் விலை தரக்கோரி பால் உற்பத்தியில் உள்ள விவசாயிகள் பாலை சாலையில் கொட்டியும், கருப்புகொடி ஏற்றியும் போராடுகின்றனர். தினமும் விடிந்தவுடன் பால், டீ, காபி குடிக்கும் நாமோ இதையெல்லாம் கவனிக்காமல் கடந்துபோகிறோம். அது சரியல்ல!

தமிழகத்தில் பால் உற்பத்தியானது அதிக அளவில் சிறு, குறு விவசாயிகளால் கிராமங்களில்தான் நடக்கிறது. இரண்டாவதாக, சில குடும்பங்கள்; உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனையை சில நகரங்களில் நேரடியாக செய்துவருகின்றன.  மூன்றாவதாக; நவீன பண்ணைகளிலும்,பால் உற்பத்தி நடக்கிறது. உத்தரவாதமான மாத வருவாயை தருவதாக மாடுவளர்ப்பு – பாலுற்பத்தி உள்ளது. இதில் இயற்கை சார்ந்து, பொது மேய்ச்சல் நிலம் இல்லாமல்தான் கறவைமாடு வளர்ப்பு நடக்கிறது. நகரங்களில் சுவரொட்டிகளையும் மேய்கின்றன.

விவசாயத்தில் வந்துள்ள மாற்றத்தால் கால்நடைக்கான தீவனத்தை மரபுவழியில் பெறமுடியாமல், பணம் தந்து புல், வைக்கோல், புண்ணாக்கு வாங்கியே வளர்க்கின்றனர். அதிக பாலை தரக்கூடிய வெளிநாட்டு கலப்பின மாடுகளோ நம் நாட்டு வெயிலை தாங்கக்கூடியதாக இல்லை என்பதால் கொட்டிலில் வைத்து நிழலில் வளர்க்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்துக்கு பொதுவில் விலைவாசி உயர்வும், குறிப்பாக தீவன விலை உயர்வும் ஒரு காரணம்.

அதிகரிக்கும் தீவன விலை!

சராசரியாக நாளொன்றுக்கு 12 முதல் 22 லிட்டர் வரை கறக்கும் கலப்பின மாடுகளே விரும்பி வளர்க்கப்படுகின்றன. இவற்றுக்கு போடப்படும் கால்நடைத் தீவனங்கள் மூட்டை ஒன்றுக்கு 400 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. 60 கிலோ மூட்டை புண்ணாக்கு ரூ. 2,350க்கும், தவிடு 50 கிலோ மூட்டை ரூ.1,350 க்கும், வைக்கோல் ஒரு கட்டு 250 ரூபாய்க்கும் விற்கிறது. அதிகரிக்கும் தீவன விலைக்கு ஏற்ப பால்கொள்முதல் விலையையும் உயர்த்தக் கோரியே போராட்டம் நடக்கிறது.

ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பாலையும், குறிப்பாக கோவையில் மட்டுமே 1 லட்சம் லிட்டர் வரையும் கொள்முதல் செய்கிறது. 26.4% கொழுப்புடன் உள்ள பசும்பாலுக்கு 35 ரூபாய்வரையும், எருமைப்பாலுக்கு 44 ரூபாய் வரையிலும் விலை கிடைக்கிறது. தனியார் நிறுவனங்கள் இதற்கும் குறைவான விலையைத்தான் தருகின்றனர். இதையே  ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூபாய் 50 எனவும், எருமை பாலுக்கு ரூபாய் 75 எனவும் விலை நிர்ணயம் செய்யச் சொல்லி தற்போது கேட்டுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் பாலவளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் பாலுக்கான உரிய விலை அறிவிக்காததால்தான் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வளைக்க காத்திருக்கும் கார்ப்பரேட்டுகள்!

ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில்  நோயின் காரணமாக கறவை மாடுகள் பலியானது பால் உற்பத்தியை பாதித்துள்ளது. அங்கிருந்து வரும் பால் குறைந்துள்ளதால் ஆவின் பாலுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதே நேரம் கோடை காலம் என்பதால் பால் நுகர்வும் அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதலை அதிகரிக்க களமிறங்கினர். பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை 34 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தியும் தந்துள்ளனர் .ஆனால் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை.

தற்போது ஆயிரம் மாடுகளை ஒரே இடத்தில் வளர்க்கும் வகையில் பெரும் பண்ணைகள் மெதுவாக நுழைகின்றன. அதற்கு சந்தையை திறந்து விட தற்போது உள்ள சிதறியும், பரவலாகவும் நடக்கும் கறவை மாடு வளர்ப்பை மொத்தமாக ஒழித்தாக வேண்டும். கார்ப்பரேட்டுகள் பால் உற்பத்தியை மொத்தமாக கைப்பற்றும் முதல் கட்டமாகவே காலநடைத்தீவன உற்பத்தியில் களமிறங்கியுள்ளன. ஆவின் போன்ற வலுவான அடித்தளமுள்ள  கூட்டுறவு அமைப்புகளின் வேரை அசைத்துப்பார்க்கின்றன.

விளைநிலத்திலிருந்து விவசாயிகளை மொத்தமாக விரட்ட அதானி, அம்பானி போன்ற வேளாண் கார்ப்பரேட்டுகள் தங்களின் விசுவாசி மோடியை ஆட்டிவைத்து வேளாண் சட்டத்தை திருத்த முனைப்பு காட்டி வருவதை நாடே அறியும். சில்லறை விற்பனை சந்தையை கணிசமாக  திருமலா, ஆரோக்கியா, நந்தினி போன்ற கார்ப்பரேட்டு நிறுவனங்களே கட்டுப்படுத்துகின்றன. தமிழ்நாட்டில் பால்மாடுவளர்ப்பு இருக்குமா என்பதற்கு வட, மத்திய மாநிலங்களில் என்ன நடக்கிறது? என்பதை பார்க்க வேண்டும்.

அழிக்கப்படும்  ‘கோமாதா’ வளர்ப்பு!

வட இந்தியாவில் வயது முதிர்ந்து வத்தக்கறவையாகிய மாடுகளை இறைச்சிக்கு அடிமாடாக விற்க முடியாது. வருவாயை தராதநிலையில் மாடு சாகும்வரை தீவனம் போட்டு பராமரித்தாக வேண்டும். அதெல்லாம் முடியாது என வெட்டுக்கு லோடு வண்டியில் மாட்டை கொண்டு செல்வது தற்கொலைக்கு ஒப்பானது. யோகி போன்ற சங்கிகள் ஆளும் மாநிலங்களில் பசுப்பாதுகாவலர்கள் வலம்வருகின்றனர். மாட்டை வளர்க்க கொண்டு சென்றாலும்கூட காதுகொடுத்து கேட்க தயாரில்லாத காவி பாசிஸ்ட்டுகள் ரோட்டில் வைத்து அடித்தே கொன்று விடுவார்கள். வறிய விவசாயிகள் முன்னுள்ள ஒரே வழி அவர்கள் கைக்காசில் வண்டி வைத்து காவிகள் நடத்தும் கோசாலைக்கு அனுப்புவதுதான்.

சங்கிகளின் ஆட்சியின்கீழ் மாட்டை வெட்டுக்கு அனுப்பக்கூடாது என்ற நிபந்தனை சிறு விவசாயிக்குதான் பொருந்தும். ஏழை விவசாயி தனது வாழ்வாதரத்தை பாதுகாக்க, புதிய கன்றை வாங்கி வளர்க்க, வேறுவழியின்றி அடிமாட்டுக்கு அனுப்பும் ‘கோமாதாவை’ காக்க சூலாயுதம் ஏந்தும் பாஜக சங்கிகளோ, கார்ப்பரேட் பண்ணைகளில் வேறு அவதாரம் எடுக்கின்றனர். குஜராத், உபி சங்கிகளின் ஆசியோடுதான் இந்துக்களே இந்தியாவின் முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதியாளராகவும் உள்ளனர். இஸ்லாமியர்கள்தான் மாட்டை வெட்டி தின்பதாக கலவரம் நடத்திக்கொண்டாலும் இஸ்லாமியர்களின் பெ யரில் மொத்தமாக மாடுகளை வாங்கி வெட்டி ஏற்றுமதி செய்து நன்றாக கல்லாவும் கட்டுகிறார்கள்.

நமது கடமை எது?

ஆவின் நிறுவனம் தமிழகத்தில் உள்ள 9,376 கூட்டுறவு சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து வருகிறது. ஆவின் மூலம் லட்சக்கணக்கான சிறு விவசாயிகள், விவசாய கூலிகள் துணைத்தொழிலாக மாடு வளர்த்து பால் விற்பனையில் உத்தரவாதமாக வரும் வருமானத்தில் குடும்பத்தை நடத்துகின்றனர். ஆவின் பாலானது, நுகர்வோரான தமிழக மக்களின் முதன்மைத் தேர்வாக இருப்பதோடு, கலப்படமில்லாத பால் என்ற நம்பிக்கையையும் தக்கவைத்துள்ளது. தமிழக அரசு விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து சாத்தியமான விலை உயர்வை தர வேண்டும்.

இதையும் படியுங்கள்: ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய விவசாயிகள் !

ஆவின் நீடித்திருக்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் நாம் குரல் தரவேண்டிய நேரம் இது. உணவு உற்பத்தியை குறிவைக்கும் கார்ப்பரேட் பிடியிலிருந்து அனைத்தையும் மீட்டாக வேண்டும். கார்ப்பரேட் காவி பாசிசம் அதிகாரம் செலுத்தும் நிலையில் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் அரசு, பொதுத்துறை கூட்டுறவு நிறுவனங்களாக இருப்பவை கார்பரேட்டுகளால் விழுங்கப்படும் என்பதே எதார்த்தம்.  தமிழகத்தில் ஆவின், புதுச்சேரியில் பான்லே, குஜராத்தில் அமுல் போன்ற விதிவிலக்குகள் எத்தனை ஆண்டுக்கு ஊழலில் கரையாமல், லாபத்தில் இயங்க அனுமதிக்கப்படும் என்பது கேள்விக்குறிதான்.

விலை உயர்வு கேட்டு போராடும் சிறு விவசாயிக்கு இந்த அரசியல் தெரியாமல் இருக்க கூடும். பால் ஊற்றிய டீ, காபி குடிக்கும் நாம், நெருங்கிவரும் அபாயத்தை புரிய வைப்போம். நியாயமான கோரிக்கைக்காக போராடும் இவர்களை ஆதரிப்போம்.

  • இளமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here