காலிஸ்தான் பிரிவினைவாத இயக்க தலைவர் ஹர்ஷ்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கனடாவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது எனக் குற்றஞ்சாட்டி அவர்களை நாட்டை விட்டு வெளியேற கூறியது கனேடிய அரசு. அதற்கு பதிலடியாக இந்திய அரசும் கனேடிய தூதரக அதிகாரிகளை வரும் சனிக்கிழமைக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. இதன் மூலமாக இரு நாடுகளிடையேயான உயர்மட்ட தூதரக உறவு ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளது.
இந்த உறவில் ஏற்பட்டுள்ள பின்னடைவு கனடா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரையும், கல்வி, வேலைக்காக கனடா சென்றுள்ள இந்தியர்களையும் கடுமையாக பாதிக்கவுள்ளது. இந்த பிரச்சினையை பற்றி இந்திய கார்ப்பரேட் ஊடகங்கள் இதற்கு சமகாலத்திலேயே அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பண்ணுன் என்ற காலிஸ்தான் இயக்க தலைவரை நிகில் குப்தா என்பவர் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய வழக்கைப் பற்றி பேச மறுக்கின்றன. இரண்டும் வெவ்வேறான வழக்குகள் எனினும் தொடர்பற்றவை அல்ல. இரண்டுமே காலிஸ்தான் இயக்க தலைவர்கள் தொடர்பானது. இரண்டுமே வெளிநாட்டு மண்ணில் இந்திய அரசு அதிகாரிகள் கொலை செய்ய திட்டம் தீட்டியதாக வழக்கு.
அமெரிக்காவுக்கு ஒத்துழைக்கும் இந்தியா கனடாவுடன் ஒத்துழைக்கவில்லை!
கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் இயக்க தலைவர் ஹர்ஷ்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஆண்டு ஜுன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா என்ற கனேடிய மாகாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலையில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என அப்போதே கனேடிய அரசு குற்றஞ்சாட்டி இருந்தது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என இந்திய அரசு மறுத்தது. இரு தரப்பும் தூதரக உறவுகளை குறைத்துக் கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு தொடர்பான பேச்சவார்த்தையும் நின்று போனது.
நிஜ்ஜார் படுகொலை நடந்த அதே காலகட்டத்தில் அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பண்ணுன் என்ற காலிஸ்தான் பிரிவினை இயக்க தலைவரை படுகொலை செய்ய நிகில் குப்தா சதித்திட்டம் தீட்டினார் என்று அமெரிக்க அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. நிகில் குப்தா சட்ட விரோத கும்பல் ஒன்றை பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தினார் என்றும், இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே இதை செய்துள்ளார் என்றும் FBI குற்றஞ்சாட்டி உள்ளது. அந்த வழக்கில் இந்திய அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்க அரசுடன் ஒத்துழைக்கும் மோடி அரசு கனேடிய அரசுடன் அதே மாதிரியான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
இதைப் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது இந்திய அரசால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட காலிஸ்தானி பிரிவினைவாதிகளுக்கும், பல கிரிமினல்களுக்கும் கனேடிய அரசு அடைக்கலம் தந்து வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு வரும் அச்சுறுத்தலை தடுக்கவில்லை. அதனால் அவர்களுடன் ஒத்துழைப்பது என்பது சாத்தியமில்லை என்று பதிலளித்தார்.
இந்த கருத்து அப்பட்டமான மழுப்பல். இந்திய அரசால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட குர்பத்வந்த் சிங் பண்ணுன் மீது அமெரிக்க அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய அரசாலும் இன்டர்போலிடம் அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர் என நிறுவ இயலவில்லை. இதில் இருந்து தெரிவது என்னவெனில் மற்றவர்களிடம் வீராப்பு காட்டுவது போல் பெரியண்ணனிடம் (அமெரிக்கா) மோடி அரசு காட்டாது என்பதுதான்.
நிஜ்ஜார் படுகொலையும் கனேடிய அரசின் விசாரணையும்
எட்மண்டனில் வசிக்கும் கரன் பிரார், கமல்ப்ரீத் சிங்,, மற்றும் கரன்ப்ரீத் சிங் ஆகியோர் நிஜ்ஜாரைக் கொன்ற குழுவில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கனேடிய போலிசால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கொலை மற்றும் கொலைக்குச் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய செய்தி நிருபரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மோடி அரசு!
ஹர்ஷ்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கை விசாரித்த கனடாவின் போலிசு (Royal Canadian Mounted Police) கனடாவில் உள்ள இந்திய ஹைகமிஷனர் சஞ்சய் வெர்மா உள்ளிட்ட 6 இந்திய அதிகாரிகளுக்கு நிஜ்ஜார் கொலையில் தொடர்புள்ளதற்கு ஆதாரங்கள் உள்ளன என்று இந்த அக்டோபர் மாதம் தெரிவித்தது. பொதுவெளியில் பகிர்வதற்கு முன்பாக இந்திய உயர் அதிகாரிகளிடம் இந்த தகவலை பகிர்ந்துள்ளது.
ஒட்டாவாவில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய RCMP உதவி ஆணையர் பிரிஜிட் கௌபின் “நிஜ்ஜார் கொலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் பயன்படுத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது, மேலும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்தான் காரணம். அந்த பிஷ்னோய் குழு இந்தியாவின் முகவர்களுடன் தொடர்புடையது.” எனக் குற்றஞ்சாட்டினார்.
RCMP கமிஷனர் மைக் டுஹேம், செய்தியாளர் சந்திப்பின் நேரத்தில், “எங்கள் பல தொடர்ச்சியான விசாரணைகளின் மூலம், கனடாவில் கடுமையான குற்றச் செயல்களில் இந்திய அரசாங்கத்தின் முகவர்களின் ஈடுபாடு குறித்த நாங்கள் கண்டறிந்தவற்றைப் பற்றி பொதுவெளியில் பேச நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை கட்டாயப்படுத்துகிறது என்றும், செப்டம்பர் 12ஆம் தேதி இந்திய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அச்சுறுத்தல் குறித்து கனேடிய குடிமக்களை எச்சரிக்க வேண்டிய கட்டாயத்தில் கனேடிய அரசு உள்ளது” என்று கூறினார். மேலும் கனடாவில் இந்திய அரசாங்க முகவர்கள் “கொலை, மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் மற்றும் வற்புறுத்தல்” ஆகிய குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.
அதற்கும் மேலாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ “கனடா நாட்டில் நடக்கும் குற்றச் செயல்களில் குறிப்பாக, தெற்காசியாவில் இருந்து கனடாவில் குடியேறியவர்களுக்கு எதிரான வன்முறையில் இந்திய அரசு அதிகாரிகள் பங்கு உள்ளது. அதை பற்றி விசாரிக்க இந்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. மேலும் எங்கள் நாட்டின் குடிமக்களின் வாழ்வில் பிற நாடுகள் சட்டவிரோதமாக தலையிடுவதை ஏற்க முடியாது” என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரெஞ்சு நீதிபதிகளின் ரபேல் ஒப்பந்த ஊழல் வழக்கு விசாரணைக்கு அஞ்சும் மோடி அரசு!
மேலும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் கனடாவில் உள்ள இந்திய தூதர்கள் சீக்கிய பிரிவினைவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த உளவுத் தகவல் சேகரித்து இந்தியாவின் உளவுத்துறை நிறுவனமான RAW (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு) க்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த தகவல்கள் பிஷ்னோய் தலைமையிலான கிரிமினல் சிண்டிகேட் தாக்குதல்களுக்கான இலக்குகளை அடையாளம் காண கொடுக்கப்பட்டுள்ளது என்று RCMPயின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இந்த கொலையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் RAW உயரதிகாரி ஒருவருக்கும் தொடர்பிருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது என்றும் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. RCMPயின் விசாரணைக்கு அமெரிக்க அரசின் FBI உதவியதாக அந்த கட்டுரை தெரிவிக்கிறது. இது பற்றிய தகவல்களை இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் கனேடிய அதிகாரிகள் கொடுத்துள்ளதாகவும் அதே கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது முக்கியமானதாகும்.
இந்திய அரசின் விளக்கமும் பிஷ்னோய் கும்பலும்
“ஜஸ்டின் ட்ருடோ வாக்கு அரசியலுக்காக இப்படி குற்றஞ்சாட்டி வருகிறார். கனடா நாட்டில் இந்திய பிரிவினை கோரும் காலிஸ்தானி தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருகிறார். அவரது குற்றச்சாட்டு அபத்தமானது, ஏற்புடையதல்ல” என்று மறுக்கிறது இந்திய அரசு.
இந்திய அரசு சொல்வது போலவே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தனது வாக்குவங்கி அரசியலுக்காக ஹர்ஷ்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கை பொதுவெளியில் ஊதிப்பெருக்குகிறார் என வைத்துக் கொள்வோம். கனடா நாட்டின் மக்கள் தொகையில் சீக்கியர்களின் 2 சதவீதம்தான் என்பது தனிக்கதை. அமெரிக்காவில் காலிஸ்தான் இயக்க குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொலை செய்ய முயற்சி நடந்ததற்கும் நிஜ்ஜார் படுகொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதாக எப்படி ஏற்பது?
1970-80 காலகட்டத்தில் இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினை இயக்கங்கள் பலமிக்கதாக இருந்தன. அரசு ஒடுக்குமுறை, மாறிய அரசியல் பொருளாதார சூழல் காரணமாக இந்தியாவில் ஏறக்குறைய காலிஸ்தான் இயக்கம் இறந்துவிட்ட நிலையில் –சமீபத்திய ஆண்டுகளில், கனடா உட்பட ஒரு சில சீக்கிய புலம்பெயர் சமூகங்களிடையே சிறிது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. அத்தகைய இயக்கங்களைத் தடை செய்யக் கோருகிறது மோடி அரசு. நாளை அத்தகைய குரல்கள் இந்தியாவிலும் ஒலிக்கும் என்பதால் அதனை கனடாவிலும் பிற நாடுகளிலும் தடுக்கும் தேவை மோடி அரசாங்கம் என்றில்லை இந்திய அரசுக்கே உள்ளது. ஆனால், கனடா போன்ற நாடுகள் பேச்சுரிமை என்றளவில் அவற்றை அனுமதிக்கின்றன. இது மோடி அரசுக்கு எரிச்சலூட்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த நிலையில், வெளிநாடுகளில் காலிஸ்தான் இயக்க தலைவர்கள் குறிவைக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்தியாவின் முதன்மையான புலனாய்வு அமைப்பு, பிரிவினைவாதியான சுக்தூல் சிங்கை அதன் தேடப்படும் பட்டியலில் சேர்த்த ஒரு நாளுக்குள், கனடாவின் வின்னிபெக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டார். ஹர்ஷ்தீப் சிங் நிஜ்ஜாருமே இந்திய அரசால் பயங்கரவாதி என முத்திரை குத்தப்பட்டவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுக்தூல் சிங் கொலைக்குப் பொறுப்பேற்ற பிஷ்னோய் கும்பல் சுக்தூல் சிங் “போதைக்கு அடிமை” என்றும், “அவரது பாவங்களுக்காக அவர் தண்டிக்கப்பட்டார்” என்றும் கூறினர்.
இந்த பிஷ்னோய் கும்பல்தான் சில ஆண்டுகள் முன்பு நடந்த பஞ்சாபி பாடகர் சித்து முசேவாலா கொலைக்கும், சில நாட்கள் முன் மஹாராஷ்டிராவில் நடந்த தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பாபா சித்திக் படுகொலைக்கும் பொறுப்பேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிஷ்னோய் கும்பல் போன்ற பல மாஃபியா கும்பல் பஞ்சாப் மாநிலத்தில் உருவாகியுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்த கும்பல்களுக்கு இடையே மோதல் நடப்பது வழக்கமாகியுள்ளது. இத்தகைய கும்பல்களை அரசியல் படுகொலைகளுக்கு பயன்படுத்துவது என்பது சாதாரணமாகிவிட்டது.
தற்போதும் லாரன்ஸ் பிஷ்னோய் என்ற ரவுடி குஜராத் சிறையில் தான் உள்ளான். ஆனால், அங்கிருந்தே அவன் கொலைகளுக்கான திட்டம் தீட்டி கொடுப்பதாக செய்திகள் வருகின்றன. அது நடக்க சாத்தியமில்லாத ஒன்றுமல்ல.
இது போன்ற கும்பலை மோடி- அமித் ஷா கும்பல் பயன்படுத்துமா எனில் நிச்சயம் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. அவர்களின் வரலாறு அத்தகையது. சோராபுதீன் ஷேக் போன்ற ரவுடிகளை வைத்துக் கொண்டு குஜராத் மாநிலத்தில் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டவர்கள் தான் இவர்கள்.
இந்த நிலையில், கனடா அரசு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதும் அமெரிக்காவில் குர்பத்வந்த் சிங் பண்ணுனை கொலை செய்ய உத்தரவிட்டவர்கள் யார் என்பது குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்படுவதும் இந்தியா-கனடா பிரச்சினையில் உண்மையை தெரிந்துகொள்ள அவசியமானது. அதை விடுத்து வெற்று வாய்சவடால் உண்மையை மறைக்கவும் சர்வதேச நாடுகளுடனான உறவையும் கெடுக்கவுமே செய்யும்.
ஒரு அயல்நாட்டின் குற்றச்சாட்டிற்காக இந்திய அரசு அதிகாரிகளை சந்தேகிக்கலாமா? அது தேசத்துரோகம் இல்லையா? என்று யோசிப்பதற்கு இடமில்லை. இந்த பிரச்சினையைத் தீர்க்கவும் உண்மையைத் தெரிந்து கொள்ளவும் வெளிப்படையான விசாரணை ஒன்றுதான் வழி
- திருமுருகன்