உழவர்களின் இயக்கத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய ஈரோட்டு மாநாடு.

1947இல் நாடு விடுதலை பெற்ற பின், பல்வேறு வகையான போராட்டங்களை இந்திய நாடு சந்தித்து வந்துள்ளது. இந்தப் போராட்டங்கள் மக்களின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் உருவாக்கியுள்ளது.

2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், அதிரடியாக இந்திய நாட்டின் வேளாண் விளை நிலங்களையும், நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பையும் கார்ப்பரேட்டுகளின் கையில் ஒப்படைக்கும் கொடியே சட்டங்களை மோடி அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த வேளான் சட்டங்களுக்கு எதிராகவும் வேளாண்மையின் அடிநாதமாக இருக்கிற மின்சார உரிமையைப் பறிக்கிற சட்டத்திற்கு எதிராகவும் இந்தியாவில் குறிப்பாக வடபுலத்தில் வீரம் செறிந்த போராட்டம் நடந்து வருகிறது.

தற்போது நடைபெறுகிற போராட்டம் எந்த தனி ஒரு சங்கமோ, தனி ஒரு அடையாளம் பெற்ற தலைவரோ முன்னின்று நடத்தாமல் அனைத்து விவசாய சங்கங்களும்
“ஐக்கிய விவசாயிகள் முன்னணி” என்ற கூட்டமைப்பை உருவாக்கி அதன் தலைமையின் கீழ் மிகவும் கட்டுப்பாட்டோடும், ஜனநாயக நெறிகளோடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சம்யுக்தா கிசான் மோர்ச்சா

எஸ். கே. எம். என்று அழைக்கப்படும் இந்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி உலக மக்களையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் பத்து மாதங்களைக் கடந்து நாட்டின் தலைநகரை முற்றுகையிட்டு, நெடுஞ்சாலைகளில் வீடுகள் அமைத்து, குடியிருந்து போராடி வருகின்றனர். சொல்லப்போனால் ஒரு இணை அரசை உழவர் பெருமக்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த உழவர்களின் போராட்டத்தை அனைத்துப் பிரிவு மக்களும் ஆதரித்து கைகோர்த்து நிற்கின்றனர். பிளவுவாத அரசியலை முன்வைத்து நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றியது பாரதிய ஜனதா கட்சி. இந்து, முஸ்லீம் என்ற மத வேறுபாட்டை பயன்படுத்தி உழவர் பெருமக்களை மோதவிட்டு அதிகாரத்துக்கு வந்தது பாரதிய ஜனதா கட்சி. இன்று அதே மக்கள் சீக்கியர்களும், இந்துக்களும், முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைந்து மாபெரும் மக்கள் சக்தியாக எழுந்து நின்று முசாபர்நகரில் புதிய பண்பாட்டை உருவாக்கியுள்ளார்கள்.
செப்டம்பர்-5 முசாபர்நகர் எழுச்சி எல்லா மாநிலங்களிலும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியை கட்ட வேண்டும் என்ற செய்தியை பறைசாற்றியது.

அந்த வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் இயங்கி வந்த கூட்டமைப்பில் இருந்த பல்வேறு விவசாய சங்கங்களும் இணைந்து, செப்டம்பர் 21ஆம் தேதி ஈரோட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் அமைப்பு மாநாட்டை நடத்தினர் .

மாநாட்டுப் படங்கள்:

 

 

இந்த மாநாட்டிற்கு மாநாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுவரும் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார் . டெல்லி போராட்டத்தை வழிநடத்தி வரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினர் திரு ஹன்னன் முல்லா அவர்கள் தமிழ்நாடு அமைப்பை தொடங்கிவைத்து டெல்லி போராட்டம் குறித்து உரையாற்றினார்கள். இந்த மாநாட்டில் வரவேற்புக் குழுவின் சார்பில் கி.வே.பொன்னையன் வரவேற்புரையாற்றினார். மாநாடு தொடங்கும்போது 10 மாத காலத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு சுடரேற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. விவசாய தொழிலாளர் சங்கங்களும் விவசாயிகள் முன்னணியோடு இணைந்து செயல்பட இந்த மாநாட்டில் ஒப்புதல் அளித்தனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் (சிபிஎம்) பொதுச் செயலாளர் பி.சண்முகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ )தலைவர் குணசேகரன் உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் சொல்லேர் உழவன் செல்லமுத்து, தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கே. வி. இராஜ்குமார், இந்திய விவசாயிகள் மகாசபையின் தலைவர் சந்திரமோகன்,
தமிழ் மாநில விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நா. பெரியசாமி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லாசர், விவசாயிகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரங்கசாமி, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் இளங்கீரன், தமிழ் விவசாய சங்கத்தின் தலைவர் நாராயணசாமி, களஞ்சியம் உழவர் அமைப்பின் சார்பாக பொன்னுத்தாய், வாழ்க விவசாயிகள் இயக்கத்தின் சார்பாக மேரி லில்லி பாய், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன், ஈரோடு மாவட்டத்தின் மிக மூத்த தலைவர்களான இ.ஆர்.குமாரசாமி, பி .காசியண்ணன், கி.வடிவேல், பொறியாளர் இராமசாமி, பா.அ.சென்னியப்பன் போன்ற பெரியவர்கள் மாநாட்டில் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
பல அமைப்புகளின் தலைவர்களும் உரை ஆற்றினார்.

இந்த மாநாடு இரண்டு முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றியது :

1)டெல்லி முற்றுகை போராட்டத்தை பத்து மாதங்களுக்கு மேலாக மிக வெற்றியாக நடத்திவரும் எஸ்.கே.எம்(SKM) என்கிற ஐக்கிய விவசாயிகள் முன்னணியை தமிழ்நாட்டிலும் நிறுவி டெல்லி தலைமையோடு இணைந்து செயல்படுவது.

2 ) இந்தியா முழுவதும் செப்டம்பர் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள முழு அடைப்புப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றியாக்க சாலை மறியல், இரயில் மறியல், ஆர்ப்பாட்டங்கள், கடை அடைப்பு என எல்லா வழிகளிலும் மக்களின் எதிர்ப்பை பாஜக மோடி அரசுக்கு தெரிவிப்பது.

மாநாட்டு வரவேற்புக் குழுவின் சார்பில் சுப்பு அவர்கள் நன்றி உரையாற்றி மாநாட்டை நிறைவு செய்து வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here