சீயோனிச ஆக்கிரமிப்பாளர்களால் பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களின் மீதான தாக்குதல் கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியோடு ஓராண்டைத் தாண்டியுள்ளது. தங்கள் நாட்டின் மீது ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி என்று சியோனிஸ்டுகள் கூறினாலும் அவர்களின் நோக்கம் எஞ்சியிருக்கும் பாலஸ்தீன பகுதிகளான காசா மற்றும் மேற்குக்கரை பகுதிகளை முற்றுமுழுதாக தமது ஆக்கிரமிப்புகள் கொண்டு வருவதும் அங்குள்ள பாலஸ்தீன மக்களை அங்கிருந்து ஜோர்டன் முதலிய நாடுகளுக்கு விரட்டியடிப்பதும்தான்.  அதனால்தான் தமது கொலைவெறி அடங்காமல் சாதாரண மக்கள் தஞ்சம் புகுந்துள்ள முகாம்களிலும், உணவுக்காக கூடும் குழந்தைகள் மீதும், பள்ளிகள், மருத்துவமனைகள் மீதும் போர்விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி கொன்று குவிக்கின்றனர்.  சீயோனிச இனவெறியர்களால் நடத்தப்படும் இந்த தாக்குதலில் இதுவரை சுமார் 41802 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 95000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.  அதிலும் குறிப்பாக பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்து நடத்தப்பட்டுவரும் தாக்குதலில் சுமார் 6000 பெண்களும், 11000 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு புறமும் சுற்றிவளைக்கப்பட்டு அப்பாவி பொதுமக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுகிறது. காசா பகுதி முழுவதும் உள்ள அனைத்து கட்டிடங்களும் குண்டுவீச்சின் மூலம் தகர்க்கப்பட்டு அப்பகுதியே ஒரு சுடுகாடாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவெல்லாம் போர் குற்றங்கள் என்று வெளிப்படையாக தெரிந்தாலும் அமெரிக்காவின் தாளத்திற்கு ஆடும் ஐ.நா. சபையோ அவ்வப்போது கண்டன அறிக்கைகள் வெளியிடுவதோடு நிறுத்திக் கொள்கிறது. மனித உரிமைகள் குறித்து வகுப்பெடுக்கும் அயோக்கிய ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவின் எடுபிடிகளான அடிமை அரபு நாடுகளும், பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளும் சீயோனிச வெறியர்களின் பட்டவர்த்தனமான இனப்படுகொலையை ஒன்றுமே நடவாததுபோலக் கடந்து செல்கின்றன. 2009-ல் இலங்கையில் 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலையை எப்படி சர்வதேச சமூகம் மௌனமாக வேடிக்கை பார்த்ததோ அதேபோல பாலஸ்தீனத்தில் நடைபெறும் மிகப்பெரும் இனப்படுகொலையையும் அதே குரூர மனதுடன் வேடிக்கை பார்க்கிறது. ஏவுகணை தாக்குதல்களால் ஒன்றுமறியா இளம்பிஞ்சுகளின் உயிரற்ற சிதைந்து போன உடல்கள், பச்சிளம்மாறா குழந்தைகளின் அலறல்கள், குழந்தைகளை, கணவர்களை இழந்த பெண்களின் கூக்குரல்கள்,  குடும்பத்தினரை இழந்த ஆண்களின் அழுகுரல்கள் விண்ணைப்பிளந்து கேட்டபோதும் இடதுசாரிகள் ஆட்சி அமைத்துள்ள பிரேசில், கொலம்பியா, வெனிசுவேலா, தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர மற்ற நாடுகள் இந்த மாபெரும் மனித படுகொலையை நிகழ்த்தும் சியோனிச இஸ்ரேலை கண்டிக்காமல் மவுனம் காக்கின்றன.

முதல் உலகப்போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் ஆயுதங்களை உற்பத்தி செய்து போரிடும் நாடுகளுக்கு விற்பனை செய்ததன் மூலம் தன்னை வளமாக்கிக் கொண்ட அமெரிக்கா தற்போதும் அதே போல கொலைகார இஸ்ரேலுக்கு பல பில்லியன் டாலர் கணக்கில் ஆயுதங்களை வழங்கி வருகிறது. அமெரிக்காவின் அடிவருடிகளான ஐரோப்பிய நாடுகளும் பாலஸ்தீன மக்களை அழித்து ஒழிக்க ஆயுதங்களை வழங்கி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது “விஸ்வகுருவின்” இந்தியாவும் இணைந்துள்ளது.

வடக்கு காசாவில் பஞ்சம்: இஸ்ரேல் யூத இனவெறியர்கள் உருவாக்கியது!

அப்பாவி பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேலுக்கு பதிலடியாக ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா போராளிகளும், ஈராக்கில் செயல்படும் அரசு எதிர்ப்புப்படைகளும் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கட்டுப்படாத ஈரான் மற்றும் துருக்கி நாடுகள் சீயோனிச இஸ்ரேல் நடத்தும் இனவெறி படுகொலைகளைக் கண்டித்து வந்தன. அக்டோபர் 1 அன்று ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய தாக்குதல்களால் இனவெறி பிடித்த இஸ்ரேல் கள்ளைக் குடித்த குரங்காக லெபனான் மீதும் சிரியாவின் மீதும் தாக்குதலை நடத்தி அங்குள்ள மக்களை கொன்றும் கட்டிடங்களை தரைமட்டமாக்கியும் வெறியாட்டம் போடுகிறது. ஈரானைத் தாக்கவும் தயாராகி வருகிறது. ஒருவேளை அப்படி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தினால் அது அணுகுண்டு தாக்குதல் வரைக்கும் கொண்டு சென்று மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று போர் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது ஐ.நா. சபையின் பொதுச்செயலாளரான ஆண்டோனியோ குட்டரசை தம் நாட்டிற்குள் நுழையத் தடைவிதித்துள்ளதோடு மட்டுமல்லாமல் ஐ.நா.-வின் பாலஸ்தீன மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்பான UNRWA-வையும் ஒரு தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இவ்வளவு படுகொலைகள் நடந்த பிறகும் இஸ்ரேலை சுற்றி இருக்கும் மற்ற அரபு நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கட்டுப்பட்டு அடிமைகளாக இருக்க ஒப்பந்தம் போட்டுள்ளதால் அப்பாவி பாலஸ்தீன மக்களை, அதுவும் தமது சகோதர முஸ்லிம்களை கொன்று குவிக்கும் யூத இனவெறி இஸ்ரேலை கண்டிக்க துப்பில்லாமல் மூச்சு விடாமல் இருக்கின்றன. எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக அமெரிக்கா முதல் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளால் கொம்புசீவி விடப்பட்டு எத்தனை போர் குற்றங்களை இஸ்ரேலிய சீயோனிஸ்டுகள் நிகழ்த்தினாலும் எப்போதும் முழு ஆதரவை அளித்து வருகின்றன. கூடவே அப்பாவி மக்களை கொன்று குவிக்கத் தேவையான ஆயுதங்களையும் தடையில்லாமல் வழங்கி வருகின்றன.

யார் வீழ்த்தப்பட வேண்டும்! ஹமாஸா? இஸ்ரேல் ஜியோனிசமா?

இஸ்ரேலின் இந்த கொடிய இனவெறியானது இரண்டு அடிப்படையான அம்சங்களின் மீதுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அது அவர்களது மதப் புத்தகமான தோராவிலும், கிறிஸ்தவர்களின் மத நூலான பைபிளிலும் “இஸ்ரேல் என்பது கடவுளால் யூதர்களுக்கு கைகளிக்கப்பட்ட நிலம்” என்று அவர்களாகவே எழுதி வைத்துள்ளதை பிறகு வந்த யூதர்களும், உலகத்தின் பெரும்பான்மை மதத்தவராகிய கிறிஸ்தவர்கள் நம்புவதும், உலகின் மிகப்பெரிய நிதி மூலதனம் மற்றும் ஊடகங்கள் யூதர்கள் வசம் உள்ளதும்தான். பாலஸ்தீன நிலப்பகுதி முழுவதையும் தங்களுக்கு கையளிக்கப்பட்ட நாடு என்பதை நம்பி அங்குள்ள பாலஸ்தீனர்களை ஒழித்துக் கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்த சீயோனிச வெறியர்களுக்கு சாதகமாக அமைந்ததுதான் ஹமாஸ் போராளிகள் அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்.

தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து மண்ணின் மைந்தர்களான பாலஸ்தீன மக்களை அகதிகளாக வேறு நாடுகளுக்கு விரட்டி அடிக்கும் நோக்கத்தோடு இந்த இனப்படுகொலையை நடத்தி வரும் இஸ்ரேலின் பிரதமரான நவீன ஹிட்லரான பெஞ்சமின் நெதன்யாகுவையும், யூத இனவெறி கொண்டு அலையும் அவரது அமைச்சரவை சகாக்களையும், அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலிய ராணுவத்தையும், பிற யூத இன வெறியர்களுக்கும், ஆயுத உற்பத்தி இடையறாது நடக்க போர்களை தூண்டிவிடும் ஆயுத உற்பத்தியாளர்கள்- வியாபாரிகளுக்கும், உலகை தங்களுக்குள் பங்கிட்டு கொள்ள துடிக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் முடிவுரை எழுதுவதுதான் இதைப் போன்ற அவமானகரமான இனப்படுகொலைகளையும், ஏகாதிபத்திய போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும். அந்த வரலாற்றுக் கடமையை செய்யக்கூடிய சக்தி உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்கும், பாலஸ்தீன, இஸ்ரேலிய பாட்டாளி வர்க்கத்திற்கும்தான் உள்ளது. அந்த வரலாற்றுக் கடமையை அவர்களுக்கு உணர்த்தும் பொறுப்பும் கடமையும் உலக பாட்டாளி வர்க்கத்துக்கும், பாட்டாளி வர்க்க கட்சிகளுக்கும் உண்டு.

ஜூலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here