பத்திரிக்கைச் செய்தி


நாள் 18-2-22

அன்புடையீர் வணக்கம்!
13-2-22 அன்று சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட சென்ற லட்சுமி என்ற பெண் பக்தரை தீட்சிதர்கள் ரவுடிகள் போன்று சூழ்ந்து கொண்டு சாதியை சொல்லி திட்டியதுடன் துன்புறுத்திய காட்சி அனைவரையும் பதறச்செய்துள்ளது. இந்த சம்பவத்திற்காக தீட்சிதர்கள் மீது சிதம்பரம் காவல் துறை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. ஆனால் இதுவரை எந்த தீட்சிதரும் கைது செய்யப்பட வில்லை. இதை மக்கள் அதிகாரம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். தீட்சிதர்கள் சிற்றம்பல மேடையில் பக்தர்கள் யாரும் தமிழில் தேவாரம் பாடக்கூடாது என்பதோடு அல்லாமல் மேலே ஏறி வழிபடுவதற்கே தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர். இதில் யாரும் தலையிட உரிமையில்லை என ஆணவமாக தீட்சிதர்கள் பத்திரிக்கையில் அறிவித்துள்ளனர்.

தில்லை சிற்றம்பல மேடையில் ஏறி தமிழில் பாடும் உரிமையை சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் 2000 த்தில் துவங்கிய போராட்டம் 2008 மார்ச் 2 அன்று வரலாற்று தமிழகத்தின் பார்ப்பன ஏதிர்ப்பு மரபு வெற்றியைப் பெற்றது. நூற்றுக்கணக்கான போலீசார் புடைசூழ சிவனடியார் ஆறுமுகசாமியை யானைமீது ஏற்றி ஊர்வலமாக அழைத்து சென்று சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமையை நிலைநாட்டினோம். அந்த அரசாணைக்கு எதிராக இன்று தீட்சிதர்களின் உத்திரவு என்பது நகைப்புக்குரியது. தில்லைக்கோவில் தீட்சிதர்களின் தனிப்பட்ட சொத்தல்ல. அது தமிழக மக்களின் சொத்து. அரசின் சொத்து. நீதிமன்றத்தில் நாங்கள் வயிற்று பிழைப்பிற்கு என்ன செய்வோம் என்ற காரணத்தை சொல்லிதான் இன்றுவரை அரசின் தயவில் நிர்வாகத்தை வைத்துக் கொண்டு கொட்டமடிக்கின்றனர்.
தமிழன் கட்டிய கோவிலில் தமிழன் நுழையக்கூடாது. தமிழில் பாடக்கூடாது என தீண்டாமையை கடைபிடிக்கும் தீட்சிதர்களுக்கு, தமிழர்களின் காசு மட்டும் தட்சணையாக கொட்ட வேண்டுமா?. சரியாக 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் வருகிற அதே மார்ச் 2 அன்று சிற்றம்பல மேடையில் தமிழ்பாடும் உரிமையை நிலைநாட்டுவோம். அதற்குள் தீட்சிதர்கள் தாங்களாகவே முன்வந்து பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏறிவழிபடுவதை தடுக்க மாட்டோம் என அறிவிக்க வேண்டும். இல்லை என்றால் மார்ச் 2 2008 உரிமைப் போராட்டம் மீண்டும் தில்லை கோவிலில் நடக்கும். மேலும் வரும் 23-2-22 அன்று முதற்கட்டமாக சிதம்பரத்தில் ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும், தீட்சிதர்களை கண்டித்தும், ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானித்துள்ளோம்.

  1. அனைத்து பக்தர்களும் சிற்றம்பல மேடையில் நின்று தமிழில் பாடி வழிபடும் உரிமை
  2. நமது முப்பாட்டன் நந்தன் நுழைந்த தெற்குவாயில் தீண்டாமைசுவரை அகற்ற வேண்டும். அகற்ற பட்ட நந்தன் சிலையை மீண்டும் அது இடத்தில் நிறுவ வேண்டும்.
  3.  இதுவரை தில்லைக்கோவிலில் தீட்சிதர்களால் நடத்தப்பட்ட நிர்வாக முறைகேடுகள், நடராசர் கோவிலின் தொன்மையை அழித்து உட்புறம் தீட்சிதர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்கள், மேல சன்னதி கோபுரம் அடியில் தீட்சிதர்கள் தோண்டிய போது கிடைத்த பழங்கால கட்டுமானங்கள் பற்றியும், மற்றும் விலை உயர்ந்த பொக்கிசங்கள் கிடைத்ததாக சொல்லப்படுவதை பற்றியும், முறைகேடாக கோவில் சொத்துக்களை விற்றது, தீட்சிதர்களின் கிரிமினல் குற்றங்கள், சாமி நகை களவு, கோவிலுக்கு வரும் பக்தர்களை தாக்கி அச்சுறுத்துவது, தில்லை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தை தொழிலதிபர்களுக்கு திருமண வரவேற்பு நடத்த வாடகைக்கு விட்டது, கோவிலில் வசூலான கோடிக்கணக்கான ரூபாய் வரவு செலவு பற்றிய கணக்கு, கோவிலில் பக்தர்களின் வழிபாட்டில் தீட்சிதர்களால் கடைபிடிக்கப்படும் மொழித்தீண்டாமை சாதி தீண்டாமை ஆகிய குற்றங்கள் இவையனைத்தை பற்றியும் முழுமையாக விசாரித்து தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணைக்கு தமிழக அரசு உத்திரவிட வேண்டும்.
  4. தில்லைக் கோவிலை தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுபாட்டில் கொண்டு வரவேண்டும்.
  5. 13-2-22 அன்று சிற்றம்பல மேடையேறி வழிபட சென்ற பெண் பக்தர் ஜெயஷீலா என்கிற லட்சுமியை சாதியை சொல்லி திட்டி துன்புறுத்திய ரவுடி தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36000 கோவில்களையும் சிதம்பரம் கோவில் போன்று பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் இந்துத்வா அமைப்புகள் முயற்சித்து வருகிறது. கோவிலை கைபற்றுவதன் மூலம் ஆன்மீகத்தை வைத்து மதவெறி அரசியலை தமிழகத்தில் செயல்படுத்த மூர்க்கமாக செயல்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்துள்ளது. இந்து கோவில்களில் அரசுக்கு என்ன வேலை? வெளியேறு என ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து பேசி வருகிறது. இவர்கள்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனத்தையும் எதிர்த்து வழக்கு நடத்துகிறார்கள்.

சிதம்பரம் கோவில் போன்று அனைத்து கோவில்களையும் அதன் பல ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் பார்ப்பனர்கள் பெயரில் மாற்றி சங்பரிவார் கும்பல் கைபற்றி கோவிலை காவி பாசிஸ்டுகளின் கூடாரமாக மாற்ற முயலுகிறது. இந்த அபாயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் போராட்டம் ஒன்றுதான் தமிழக கோவிலையும், கோவில் சொத்துக்களையும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் 1971 இயற்றினோம் இன்று வரை அமல்படுத்த முடியவில்லை. பார்ப்பனர்கள் நீதிமன்றங்களின் வழியாக கருவறைத் தீண்டாமையை பாதுகாத்து வருகின்றனர். என்பதை இதில் பொருத்தி பார்க்க வேண்டும்.. ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க இந்து பக்தர்களை தாக்கும் தீட்சித பார்ப்பனர்களுக்கு எதிராக எதுவும் பேச வில்லை. சிற்றம்பல மேடையில் வழிபாட்டு உரிமையை மறுப்பதற்கு எதிராக எதுவும் பேசுவதில்லை. அனைத்து சாதி அர்ச்சகருக்கு எதிராக நடைபெறும் வழக்கு பற்றி போராட்டம் பற்றி வாய் திறப்பதில்லை. ஆனால் மறைமுகமாக நியமனத்தை தடுக்கும் சதியில் ஈடுபட்டுள்ளனர். காவி பாசிஸ்டுகள் இந்து ஒற்றுமை என பேசுவது வர்ணசிரம, மனுதர்ம கோட்பாட்டை பாதுகாத்து தீண்டாமையை நவீன முறையில் அமல்படுத்துவது மட்டுமே.

தோழமையுடன்
வழக்கறிஞர்.சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
18-2-22

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here