அகில இந்திய SKM நவம்பர் 26 அன்று அனைத்து மாநிலங்களில் உள்ள ஆளுநர் மாளிகைகளை நோக்கி அந்தந்த மாநில விவசாயிகள் அணி திரண்டு சென்று ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு, உழவர்களுக்கு பாஜக ஒன்றிய அரசு வாக்குறுதிகளைக் கொடுத்து நிறைவேற்றாத நிலையில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்ற அறைகூவலைக் கொடுத்தது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் நவம்பர் 26 அன்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாகச் செல்வது எனவும், கோரிக்கை மனுவைத் தலைவர்கள் நவம்பர் 25ம் தேதி கொடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டு, அதற்கான அனுமதி கேட்டு 23ம் தேதியே ஆளுநர் மாளிகை அலுவலகத்திற்குக் கடிதம் கொடுக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் பல தடவைகள் தொலைபேசி வாயிலாக நினைவூட்டியும், வேண்டுகோள் விடுத்தபோதும் எந்தவித பதிலும் வரவில்லை.

இதையும் படியுங்கள்: விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாத ஒன்றிய அரசை கண்டித்துசென்னை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி

26ம் தேதி விவசாயிகள் பேரணி இராஜரத்தினம் விளையாட்டரங்குக்கு அருகில் பேரணி நடத்த வேண்டும் என்றும் ஆளுநர் அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைவர்கள் மனு கொடுப்பதற்கான ஏற்பாட்டை செய்வதாகவும், சென்னை காவல்துறையின் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

அந்த அடிப்படையில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டு முடிவில் SKMஇன் தலைமை தோழர்களைக் காவல்துறையினர் தங்கள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர். ஆனால் தலைவர்களை ஏற்றி ஆளுநர் மாளிகைக்குச் செல்லாமல், கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றனர். மனுவை RDOவிடம் கொடுக்குமாறும், அவர் அதை ஆளுநர் மாளிகைக்கு அனுப்புவார் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் சொன்ன காரணம், ‘ஆளுநர் மாளிகையில், விவசாயத் தலைவர்களிடமிருந்து மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள்’ என்பதாகும்.

தாங்கள் காவல்துறை அதிகாரிகளாலும் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்த தலைவர்கள் கிண்டி வட்டாட்சி அலுவலக வளாகத்திலும், பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 6 மணிவரை GST சாலை அருகிலும் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு தலைமைச் செயலகத்தில் மக்கள் தொடர்பு மற்றும் துயர் துடைப்பு செயலாளர் திரு ஜெகநாதன் அவர்கள் மூலமாக மனுவைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர்கள் SKM தலைவர்களிடம் கோரிக்கை மனுவை வாங்கிக் கொண்ட நிலையில் தமிழகத்தில் மட்டும், ஆளுநர் R.N.ரவியின் எதேச்சதிகாரமான, அடாவடித்தனமான போக்கை வெளிக்காட்டும் வகையில் SKM தலைவர்களிடம் மனுவை வாங்கிக் கொள்ள மறுத்தார்.

பாஜக தலைவர்களை சந்திப்பதை தினசரி வாடிக்கையாகக் கொண்ட ஆளுநர் ரவி விவசாய சங்கத் தலைவர்களை சந்திக்க மறுத்ததை SKM மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

ஐக்கிய விவசாயிகள் சங்கம்.
தமிழ்நாடு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here