கோரகர் என்றால் துளு மொழியில் சூரியன் என்று பொருள். கொரகர் பழங்குடிகள் தென்கர்நாடகாவின் உடுப்பி குண்டபூர், மங்களூர் சுளுயா பெத்தலங்காடி ஆகிய இடங்களில் செரிவாகவும், காசர்கோடு, வடகன்னடா, குடகு, சிமோகா ஆகிய பகுதிகளிலும் கணிசமாக வழ்கிறார்கள்

கொரகர் பழங்குடிகள் மாயமந்திரங்களில் கைதேர்ந்தவர்கள். அதற்காக சிறப்பு வழிபாடுகளை வைத்திருப்பவர்கள். அதில் பூதவழிபாடு மிகவும் முக்கியமானது அவற்றுள், பஞ்சுருளி கல்லுருட்டி ,குலிகா, கொரத்தி ஆகியவை முதன்மையானவை, முக்கியமானவை.

கொரகர்கள் கூடைமுனைதல் வேட்டையாடுதல் ஆகிய பணிகளோடு துப்புரவுப்பணியையும் செய்கிறார்கள். சாதி இந்துக்களால் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிற ஒரு பழங்குடி சமூகம் கோரகர்கள். மாட்டின் மாமிசமும் பன்றியின் மாமிசமும் அவர்களுக்கு பிடித்தமான உணவுகள் குறிப்பிட்ட காலத்துக்கு பின்புதான் அவர்கள் மாட்டு மாமிசத்தை உண்ணத்தொடங்குகிறார்கள். இந்த துப்புரவு பணி அவர்கள்மேல் கட்டாயமாக பணிக்கப்பட்ட ஒன்று.

கோரகா பழங்குடியினர்

கோரகர்களின் ஊர் தலைவனின் பெயர் குன்னிகாரன். குன்னிக்காரன் கட்டளையிடாமல் எந்த சடங்கும் அங்கு நடக்காது. கோரகர்கள் மரங்களையும். குறிப்பிட்ட செடிகளையும் முன்னோர்களின் ஆவிகளையும் (பூதங்களையும்) வணங்குகிறார்கள்

கம்பலா திருவிழாவுக்கு முன்பு அவர்களை எருமைகளைப் போல ஓட வைக்கிற வழக்கம் சமீபகாலம் வரை இருந்துவந்தது அதற்கு முன்பு நுகங்களை சுமந்துகொண்டு கம்பாலாவில் சேற்று வயலுக்குள் ஓடும் வழக்கம் இருந்தாக ஒரு செய்தி இருக்கிறது.

இவை மட்டுமல்ல அவர்களை இழிவாக கருதி பழிப்பது, முடி, நகங்கள் அல்லது வேறு ஏதேனும் சாப்பிட முடியாத அல்லது அருவருப்பான பொருட்களை உணவில் கலந்து, அந்த உணவை உண்ணச் சொல்லி கட்டாயப்படுத்துவது ஆகிய கொடூரங்கள் 2000 ஆம் ஆண்டுவரை துளுநாட்டில் நடைமுறையில் இருந்தது.

இதற்கென்று பிரத்யோகமாக PROHIBITION OF AJALU PRACTICE ACT, 2000 என்ற சட்டம் வந்த பின்தான் இவையெல்லாம் ஒரு கட்டுக்குள் வந்தது.

ஜூன் 17, 2017 தென் கர்நாடகாவில் உள்ள கண்டமக்கியில் கொரகர் பழங்குடியின் திருமணம் ஒன்று நடந்தது. திருமணத்தில் மாட்டுக்கறி விருந்து வைப்பது கொரகரின் வழக்கம். மாட்டுக்கறி விருந்துவைக்ககூடாது என்று பண்ட் சமூகத்தினர் கோரகரின் திருமணத்தில் புகுந்து பந்தலை அடித்து வீட்டரை உதைத்து கலவரக்காடாக்கினார்கள். இது பண்ட் சமூகத்தின் காருண்யங்களுக்கும், அவர்கள் எதை நோக்கி குவிந்திருக்கிறார்கள் என்பதற்கும் ஒரு மோசமான உதாரணம்.

பண்ட் சாதிகளின் கோவில்களில் நடக்கும் தெய்யங்களில் ஒரு கிலோமீட்டர் தள்ளிதான் இவர்கள் நின்று பறை இசைக்கமுடியும் அப்படி நெருங்கிப்போன கொரகர்களை பண்ட் சமூகத்தினர் தலைகீழாக கட்டிவைத்து மயங்கும்வரை அடித்த சம்பவங்கள் நிறைய உண்டு.

இப்படி கொரகர்களை பண்ட் சமூகம் நடத்துவதற்கு காரணம் இருக்கிறது

15 ஆம் நூற்றாண்டில் ஹப்பாசிகா என்றொரு கொரக பழங்குடியின தலைவன் இருந்தான். நீண்ட கடல் பகுதியையும் வனப்பகுதியையும் ஒருசேரக் கட்டி ஆண்டான். மாயமந்திரங்களில் கை தேர்ந்தவன். எந்த மன்னர்களுக்கும் மண்டியிடாதவன்.

பிற மன்னர்களை நடுங்கவைத்த மயூரவர்மன் ஹப்பாசிகாவை அடக்க நினைத்தான். அதற்காக கணிசமான படைகளோடு போர் தொடுத்தான். குப்சுக்கு அருகில் படைகளை சந்தித்த ஹப்பாசிகா பல்வேறு வியூகங்களை வகுத்து தாக்குதலை தொடங்கினான். வீரஞ்செரிந்த அந்தப் போரில் மயூரவர்மனை தோற்கடித்தான். இந்த மயூரவர்மன் வைதீக பிராமண அறிஞர் என்றும் இவர் பல்லவர் படையில் தளபதியாக இருந்ததாகவும் ஒரு வரலாறு இருக்கிறது இப்படிப்பட்ட மயூர வர்மனை வீழ்த்திய ஹப்பாசிகா அதன்பின்பு எல்லோரும் மெச்சும்வண்ணம் 11 ஆண்டுகள் கடலோரத்தையும் காட்டுப்பகுதிகளையும் ஆட்சி செய்தான்.

ஒரு கொரகனின் வெற்றியை அவமானமாகக் கருதிய மயூரவர்மனின் மைத்துனன் லோகாதித்யன் மீண்டும் போர்நடத்தி ஹப்பாசிகாவையும் அவனது மக்களையும் தோற்கடித்தான்.

நிராயுதபாணியாக நின்ற ஹப்சிகாவும் அவனது மக்களும் அடர்வனத்துக்குள் நுழைந்து தலைமறைவு வாழ்க்கை நடத்திவந்தார்கள் .

நல்ல சூழ்நிலைக்காக ஹப்பாசிகா காத்திருந்தான். பல்வேறு திட்டங்களை தீட்டினான் மயூரவர்மனால் தோற்கடிக்கப்பட்டவர்களோடு ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டான். தீண்டத்தகாதவர்கள் என்று அவர்களால் ஒதுக்கப்பட்டவர்கள் அனைவருடனும் பேசினான். தன் பழங்குடிகளுக்கு நம்பிக்கையூட்டினான் பின் இவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து சமவெளியை ஊடறுத்து , தந்திரமாக போர்தொடுத்தான். இறுதியில் மங்களூரையும் மஞ்சேஸ்வரத்தையும் வென்று மீண்டும் தன் வீரத்தை நிலை நிறுத்தினான் என்று வரலாறும் துளுவின் வாய்வழிஇலக்கியமும் பேசுகிறது.

அதன் பின் மயூரவர்மனின் பரம்பரை ஒரு சூழ்ச்சி செய்தது. ஹப்பாசிகாவின் முக்கிய கூட்டாளிகளையும் ஹப்பாசிகாவையும் ஒரு சமாதான விருந்துக்கு அழைத்தது. அதற்கென்று பிரத்யோகமாக நிறுவப்பட்ட மண்டபத்தில் ஹப்பாசிகா கம்பீரமாக வந்தமர்ந்தான். தடபுடலாக விருந்து முடிந்தது . ஓய்வாக உரையாடல் மண்டபத்தில் அமர்ந்து சகாக்களோடு பேசித்தொடங்கினான். ஆயுதங்களோடு நூற்றுக்கணக்கானவர்கள் அவர்களை சூழ்ந்து வந்தார்கள் வெளியே எட்டிப்பார்க்கிறான் மண்டபத்தை சுற்றிலும் காலட் படைகள் நிற்கிறது. என்ன நடந்திருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டு சுதாகரிக்கும் முன்பு ஹப்சிகாவையும் அவனது சகாக்களையும் வாளால் தாக்குகிறார்கள். அவர்களை கொடூரமாக கொன்று கண்டதுண்டமாக வெட்டி திக்குக்கு ஒன்றாய் பிணத்துண்டங்களை வீசினார்கள்.

இவ்வளவுக்குபின்னும் வெறி அடங்காத லோகாதித்யன், கோரகர் பகுதிக்கு சென்றான். அவர்களை சிறைபிடித்தான். கணிசமான கோரகர்களை அடிமைகளாக வைத்துக்கொண்டு சிதறிக்கிடந்த மீதி கோரகர்களை கொடூரமாக தாக்கி இன்னும் தொலைதூர காட்டுக்குள் விரட்டிவிட்டான்.

****

கோரக மொழியில் பஞ்சுருளி, என்பதற்கு காட்டுப்பன்றியின் ஆவி என்று பொருள். அந்தப்பஞ்சுருளிக்கு தெய்வீக சக்திஇருப்பதாக கொரகர்கள் நம்பினார்கள்.

வனப்பொருட்களை சேகரிப்பதன் மூலமும் வேட்டையின் மூலமும் தன் உணவுத் தேவையை தீர்த்துவந்த ஹப்பாசிகாவின் ஆதிசமூகம், அடுத்தகட்டமாக நகர்ந்து வேளாண்மைக்கு வருகிறது.அப்போது அவர்கள் பல நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். அதில் காட்டுப் பன்றியும் ஒன்று .

பஞ்சுருளி (panjuruli)

மூர்க்கமாக வந்த காட்டுப்பன்றிக்கூட்டங்கள் கொடிகிழங்குகளுக்காவும் கோரைக்கிழங்குகளுக்காகவும் பயிர்களை அடிக்கடி தோண்டியது. விளைந்து அறுவடைக்கு காத்திருக்கும் பயிர்களை சாய்த்து தானியங்களை உண்டது. கிடைத்த காய்களை பழங்களை மிச்சம் வைக்காமல் சங்காரம் செய்தது. ஆரம்பத்தில் அதை ஒரு பொருட்டாக நினைக்காத கொரகர்கள் உணவுக்கு நெருக்கடி வந்த ஒரு பஞ்ச காலத்தில் அவற்றை கட்டுப்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தார்கள். உணவுக்காக அவற்றை வேட்டையாட ஆரம்பித்தார்கள். அப்போதும் அதன் எண்ணிக்கை கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை ,பன்றிவிரட்டில் பல கோரகர்கள் தாக்குண்டு இறந்து போனார்கள். நேருக்கு நேர் முட்டியதில் எலும்புடைந்து நூற்றுக்கணக்கானவர்கள் ஊனமானார்கள் ,

இப்படியாக பன்றியின் பராக்கிரமங்களை கண்ட கோரகர்கள் தங்களை விட அது பலம் பொருந்தியது என்று நம்பத்தொடங்கினார்கள். ஒருகட்டத்தில் காட்டுப்பன்றியை தெய்வமாக்கி வணங்கினார்கள் .

பயிர்களை காக்கவும் விளைச்சலை பெருக்கவும், அதனிடமே பிரார்த்தனை செய்யவும் வேண்டுகோள் வைக்கவும் ஆரம்பித்தார்கள் .அவற்றிற்கு பிடித்த, ,கோரை கிழங்குகள் தானியங்களை பல்வேறு பூசைகளோடு படையலிட்டார்கள். அது நிகழ்தகவாய் பலிக்கவும் தொடங்கியது . பின்பு வழிவழியாக இப்பன்றி வழிபாட்டை பழங்குடிகள் தொடர்ந்தார்கள். கூடவே பன்றிவேட்டையையும் தொடர்ந்தார்கள்.

இது இயல்பானதாகவும் அறிவியல் பூர்வமாகவும் இருக்கிறது துளுநாட்டுப்புற இலக்கியவடிவமான பாட தானாக்கள் மூலம் இவற்றை உறுதிப்படுத்தக்கொள்ள முடிகிறது.

இன்றும் பன்றியின் ஆவி தெய்வம் வந்து தீர்ப்பு சொல்கிற திருவிழா துளுநாட்டில் நடக்கிறது. பன்றியின் உருவமேற்றிக்கொண்டு கொரக சாமியாடிகள் தெய்யமாடும் விழாதான் பூதகோலா. காந்தாரத்தில் நாம் பார்த்தது அதுதான்

காலப்போக்கில் இந்துமதம் இந்த தொன்மத்தை உள்வாங்கி அதற்கு புதிதாக ஒரு புனைவையும்ஏற்படுத்திவைத்தது.

நீண்ட நாள் ஓய்விலிருந்த பார்வதி, ஊர்வலம் போக ஆசைப்படுகிறாள். மலைகளுக்குள் உள்ள காட்டின் வழியே போகும் போது ஒரு காட்டுப்பன்றிக் குட்டியை காண்கிறாள். அது அனாதையாக இருந்ததை கண்ட பார்வதி, குட்டியை பிடித்துக்கொண்டுபோய் கைலாசத்தில் செல்லப்பிராணியாக வளர்க்கிறாள். வித விதமான உணவினைக்கொடுத்து அதனை ஒரு குழந்தையைப்போல் கவனிக்கிறாள்

ஆனால் அந்தக்குட்டி, அடிக்கடி கைலாசத்திலிருந்த தோட்டங்களில் புகுந்து கிழங்குகள் தோண்டியும், செடிகளை பிடிங்கியும் கலவரத்தை ஏற்படுத்தியது .பொறுத்துப்பார்த்த சிவன், ஒரு நாள் கோபமடைந்து குட்டியை கொன்றுவிடுகிறார். இதை அறிந்து மிகவும் கோபமுற்ற பார்வதி, சிவனிடம் முகம் கொடுக்க மறுத்தாள்.. பார்வதியை சமாதானப்படுத்த நினைத்த சிவன், அதை மீண்டும் உயிர்ப்பித்து, “மக்களைக் காத்து தீமையிலிருந்து நன்மைக்கு வழிநடத்தவும்’’ என்று அதன் காதில் மூன்று முறை சொல்லி பூமிக்கு அனுப்பிவைத்தார். அதுவே பஞ்சுருளி என்று மாற்றி கதையை முடித்துவைத்தது நிறுவனமாக்கப்பட்டஇந்துமதம்.

         ***

தெய்யம் என்பது ஒரு சடங்காட்டம்.

ஒரு ஆட்டக்கலை இதை ஆடுவதற்கென்றே தனிக்குழுக்கள் வடகேரளத்திலும் தென் கர்நாடகத்திலும் நிறைந்துகிடக்கிறார்கள் ஆனால் எல்லா தெய்யமும் ஒடுக்கப்பட்ட சாதிகளால் பழங்குடிகளால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது ஏனென்றால் தெய்யம் வெறும் ஆட்டம் மட்டும்மல அது வழிவழியாக தங்களது சொல்லமுடியாத வரலாற்றை, சம்பவங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் ஊடகமாக, அவர்களது வரலாற்றை சேமிக்கும் கலனாக இருந்துவருகிறது

பண்ட் சமூகம் என்பது துளு பகுதியில் உள்ள நிலவுடமை சாதிகளை மொத்தமாக குறிக்கிறது. இதில் ஷெட்டிகளும் உள்ளடங்குவார்கள் என்பதை நினைவுபடுத்திக்கொண்டு வாசிக்க வேண்டுகிறேன்

கொரகரின் இன்னொரு தெய்யம் கல்லுருட்டி தெய்யம் 

கல்லுருட்டி ஒரு பழங்குடி பெண். அநேகமாக அவள் கொரகராக இருக்கலாம் கல்லுருட்டிக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தனர் அவர்கள், இருவரும் பஞ்சுருளி என்றே அழைக்கப்பட்டனர் ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த அன்பை வைத்திருந்தனர்.

கல்லுருட்டியின் கையில் எப்போதும் ஒரு கல் இருக்கும். அது ஒரு மாயம் நிறைந்த கல். அந்தக் கல்லை அவள் உருட்டும்போது, மரங்கள் ஒதுங்கி வழிவிடும் குருவிகள் பழங்களை கொண்டுவந்து தரும். மழை நின்றுகொள்ளும் அவளுக்கு கீழ்படிந்து. இயற்கை அவள் சொன்னதற்கெல்லாம் தலைவணங்கும் , யாராவது அவளைத் துன்புறுத்த முயன்றால், சூறாவளியை உருவாக்கி அவர்களை சுக்குநூறாய் ஆக்கிவிடும். கல்லை உருட்டி வினைபுரிவதால் அவளுக்கு கல்லுருட்டி என்று பெயர் நிலைத்துவிட்டது. அந்த மாயக்கல்லை பறிக்க பல வசதியானவர்கள் தளபதிகள் மன்னர்கள் தந்திரம் செய்தார்கள் ஆனால் அந்தக்கல்லை அவள் உயிர்போல காத்துவந்தாள்.

உக்ரானி ஒரு படைத்தளபதி. உக்ரானியை சந்திக்கும் வரை, கல்லுருட்டிக்கோ பஞ்சுருளிகளுக்கோ அவளுடைய ஊரார்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது . உக்ரானி ஆற்றைக் கடந்து, அவர்களின் காடுகளுக்கு வந்தபோது , பிரச்சனை தொடங்கியது. வனவாசிகளின் அமைதியான வாழ்க்கை கலைந்துபோனது.

காட்டுக்குள் வந்த உக்ரானி, போதை வஸ்துகளை தயாரிப்பதும் விளைவிப்பதும் முழுநேர தொழிலாக வரித்துகொண்டான் போதை லாகிரிகளை கடத்தவும் சுமந்துபோகவும் பஞ்சுருளி சகோதரர்களை பயன்படுத்த ஆரம்பித்தான்.

கல்லுருட்டிக்கு கோபம் தலைக்கேறியது. ஆனால் அவள் உக்ரானியை கொல்ல நினைக்கவில்லை திருத்தவே நினைத்தாள். ஒரு நாள் நேருக்கு நேர் சென்று சண்டையிட்டாள், சாபமிட்டாள். அதன்பிறகு சகோதர்களை ஒரு எல்லைக்கு மேல் வெளியே விடாமல் பார்த்துகொண்டாள். அத்தோடு நில்லாமல் போதை வஸ்த்துகளை அழிக்கவும் தீயிட்டு கொளுத்தவும் செய்தாள். கல்லுருட்டிக்கு பாடம் கற்பிக்க நினைத்த உக்கரானி பஞ்சுருளிகள் மீது பொய்க்குற்றம் சாட்டி கைது செய்து உயரமான கோபுரத்தில் உள்ள ஒரு கூண்டில் அடைத்துவிட்டு கெக்கலித்து சிரித்தான். பஞ்சுருளிகளை காணாத கல்லுருட்டி காடும் மேடும் அவர்களை தேடி அலைந்தாள். நீண்ட நேரத்துக்கு பின்பு அவர்கள் இருவரும் பிரச்சனையில் இருப்பதை தெரிந்துகொண்டாள்

அவர்களை காப்பாற்ற செல்லும் வழியில் பல சிரமங்களை எதிர்கொண்டாள் ஆனால் தன்னிடம் உள்ள அந்த மந்திரக் கல்லைப் பயன்படுத்தி உக்ரானியை வீழ்த்தி தன் சகோதரர்களை விடுவித்தாள்

இதை அவமானமாக கருதிய உக்ரானி கல்லுருட்டியை பழிவாங்க தக்க சமயத்துக்கு காத்திருந்தான். ஒரு நாள் காட்டுவழியில் கல்லுருட்டி வந்துகொண்டிருந்தாள். தனது அடியாளுடன் அவளை வழிமறித்த உக்ரானி, அவளை மானபங்கப்படுத்த முயன்றான். கல்லுருட்டி தன்னிடமிருந்த மந்திரக்கல்லை மடியில் கைவிட்டு தேடினாள். ஆனால் அந்தக்கல் கிடைக்கவில்லை.வரும் வழியில் எங்கோ அக்கல்லை தவறவிட்டிருந்தாள்.அதிர்சியை வெளிக்காட்டிக்கொள்ளாமல், மனதை திடப்படுத்திகொண்டு அவர்களோடு கடுமையாக போராடினாள்.

உக்ரானியிடம் தன்னை இழந்துவிடும் சூழல் வந்ததை உணர்ந்த கல்லுருட்டி , உயரமான பாறையின் மீதேரி கீழே குதித்து உயிரைவிட்டுவிடுகிறாள்.

சமபவம் அறிந்த பழங்குடிகள் தவறவிட்ட அந்தக் கல்லை கண்டுபிடித்து அவள் இறந்த இடத்தில் வைத்து கல்லுருட்டியை தெய்வமாக வணங்கத்தொடங்கினார்கள். இப்போதும் கல்லுருட்டியை பழங்குடிகள் ஒரு தெய்வமாக கொண்டாடுகிறார்கள் .

மேற்சொன்ன கொரகர்களின் தொன்மங்களையும் வரலாற்றையும் பண்பாட்டையும் திரைப்படத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் காந்தாரம் அடிப்படையிலே எந்த ஆய்வும் செய்யாமல் மேலோட்டமான தகவல்களை வைத்துக்கொண்டு போலியான கருதுகோள்களை பார்வையாளர்கள் முன்பு வைக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

வடகேரளத்திலும் தென் கர்நாடகாவிலும் நூற்றுக்கணக்கான தெய்யங்கள் உண்டு அவற்றிற்கெல்லாம் தனித்தனி வரலாறு இருக்கிறது.அவை அப்பகுதிகளின் நிலவுடமை சமூகமாக இருந்த ஆதிக்க சாதிகளின் கோரமுகங்களையும் பல உண்மைகளை நேரிடையாகவும் இலைமறைவு காய்மறைவாகவும் பேசுகிறது. இவற்றையெல்லாம் உள்வாங்கி அந்தந்த சமூகங்களை இந்து தேசிய நீரோட்டத்தில் இணைக்க தத்துவ குருமார்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். என்பதற்கு காந்தாரம் ஒருசாட்சி.

காந்தாரா திரைவடிவம் பேசும் அரசியலும் அதன் நோக்கமும் 

1. காடுகள் ஆள்பவர்களின் சொத்து என்கிறது காந்தாரம்

காடுகள் என்றும் அரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததில்லை. அவர்கள் அதை ஆளவும் முடியாது அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முடியாது அங்கே அன்றும் இன்றும் என்றும் பழங்குடிகளின் ராஜ்ஜியம்தான்.. . அதன் வளங்களை சூழ்ச்சியாக அபகரிக்கவே அரசர்கள் அவர்களின் வாசலில் போய் பெண் கேட்டு நின்றார்கள். பெண்கொடுக்க மறுத்து போரிடும் மகட்பாற் காஞ்சி அவர்களிடத்திலிருந்துதான் தொடங்கியது.

2. கிழக்கிந்தியக்கம்பனி பிரகடனப்படுத்தியதுபோல் “வனம் அரசுக்கு சொந்தமானது பழங்குடிகள் எங்கள் வாடகையாளர்கள்” என்பதை வேறொரு வகையில் பிரேம் பை ப்ரேம் காந்தாரம் பிரச்சாரம் செய்கிறது . நூற்றாண்டு காலம் உங்களுக்கு துரோகம் செய்துவிட்டோம் மன்னித்துவிடுங்கள் என்ற முகவுரையுடன் தொடங்கும் வனச்சட்டம் 2005ன் சரத்துகளை பெரு நிறுவனங்களுக்காக நீக்கவும் சிதைக்கவும் குறுக்கு வழியில் முயலும் ஆளும் கட்சியின் பிரச்சாரத்தை ஷெட்டியின் காந்தாரம் கியூப்பின் மூலம் மக்களுக்குள் விதைக்கிறது

3. நிலச்சுவான்தார்களும் வனத்துறையும் , முதலாளிகளும் வனத்துறையும், பெருநிறுவனங்களும் வனத்துறையும், அந்தந்த கட்டத்தின் இரட்டை குழல் துப்பாக்கிகள். சொல்லப்போனால் வனத்துறையே இவர்களின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது. நிலச்சுவாதார்களிடமிருந்து மக்களை காக்கும் ஆபத்து பாந்தவனாக வனத்துறையை காந்தாரம் சித்தரிக்கிறது ஒருகாலத்திலும் அது ஆபத்து பாந்தவனாக அல்ல அணுக்கமாககூட இருந்ததில்லை வனச்சட்டம் 2005 பழங்குடிகளுக்கு வழங்கிய உரிமைகளை கைமாற்றி அளிக்காமல் காலம் கடத்ததவும் அதை சட்டத்திருத்தம் மூலம் நீர்த்துபோகவும் அரசும் அந்தத்துறையின் ஓய்வு பெற்ற அதிகாரிகளும்.பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் இந்த நேரத்தில்தான் காந்தாரம் ரிசர்வுகாட்டுக்கு உடல் பொருள் ஆவி எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு வெளியேறச்சொல்கிறது .

4. இங்கே விதந்தோதுபவர்கள் சொல்வதுபோல் நாட்டுப்புற கலைவடிவத்தின் தன்மையை மக்களுக்காகவோ கலைக்ககவோகூட பயன்படுத்தப்படவில்லை. அந்த வடிவத்தை புனைசுருட்டுகளை வரலாறாக்குவதற்கும் வனத்தின் வளங்களை சூறையாடுவதற்கும் காந்தாரம் ஊறுகாயாக பயன்படுத்தியிருக்கிறது. சுருங்கச்சொன்னால் பெரு நிறுவனங்களுக்காக சூழலியம் பேசும் தன்னார்வ நிறுவனங்கள் செய்துவருகிற மக்களில்லாத காடு பிரச்சாரத்தை. காந்தாரம் பஞ்சுருளியை வைத்து செய்திருக்கிறது.

5. இந்த பண்பாட்டை விஷ்ணுவின் மூன்றாம் அவதாரமான வராக அவதாரத்தோடு பொருத்திக்கொள்ள தூண்டுவதன் மூலமாக லிங்காயத்துக்கள் போன்றதொரு பிரச்சினையை எதிர்கொள்வதிலிருந்து கர்நாடகத்தை விடுவிக்கும் முயற்சியை காந்தாரம் செய்திருக்கிறது .

6. மேலும் இக்கதை நடப்பது 1847 என்கிறார் இயக்குநர் அது Pre history period அல்லம் 1799 திப்புவின் இறப்புக்கு பின்பு தென்கர்நாடகம் பிரிட்டீசாரின் கைகளுக்குள் போய்விடுகிறது 1805 ல் தற்போது கேரள கர்நாடக எல்லையில் உள்ள மாவிலாவில் பழசி சுட்டுக்கொல்லப்படுகிறார். அதன் பிறகு வடகேரளமும் ஆங்கிலேயர்களின் கைகளுக்குள் போய்விடுகிறது அதுவரை பாம்பே மாகாணத்தின் நிர்வாகத்தின் கீழிருந்த இப்பகுதிகள் 1862 வாக்கில் சென்னைமாகாண நிர்வாகத்தின் கீழ் மாற்றப்படுகிறது. ஆங்காங்கே குறுநில மன்னர்கள் பலர் பிரிட்டீசார்களை எதிர்த்து பின்வாங்கி காடுகளுக்குள் நின்று பழங்குடிகளின் ஆதரவோடு போரிட்டார்கள் சில இடங்களில் பழங்குடிகளே நேரடியாக போரிட்டார்கள் நிறைய மன்னர்கள் பிரிட்டீஷ் அரசின் கீழ் சம்பளம் பெற்று மேலாளர் போல் உயிர் வாழ்ந்தார்கள். வரலாறு தெளிவாக இருக்கிறது .அரசனையோ பழங்குடிகளையோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பேர் சுட்ட முடியாமல் போனதுதற்கு காரணம் வரலாறும் பூர்வீக அரசியலும் திரைக்கதைக்கு எதிராக நிற்க்கிறது எனபதை தவிர வேறு என்ன காரணம் இருக்கமுடியும் ?

****

நிறைய நண்பர்கள் காந்தாரத்தின் உருவாக்கம் பற்றி பேசுகிறார்கள்

அதன் உருவாக்கம் எவ்வளவு சொதப்பலானது என்பதற்கு படத்தில் பல காட்சிகளை சொல்லமுடியும். திரைத்துறையில் நெருங்கி பணியாற்றும் ஆய்வாளர் நண்பர் விசுவாமித்திரன் எழுதிய கட்டுரையின் ஒருபகுதியைஇங்கேபதிகிறேன்

1. படத்தில் சமகால நிலச்சுவான்தாராக வருபவரை நாம் ‘நிலத்தை அபகரிக்க விரும்புகிற சுயநலமி’ என்று எப்படி அறிந்துகொள்வது? எழுதப்பட்ட திரைக்கதையில் அதற்கு ‘வழியில்லாததால்’ அவரது மகனான உடலும் மனமும் நலிவுற்ற சிறுவனை வலுக்கட்டாயமாக தனக்கு முன்னே உட்காரவைத்து தனது திட்டத்தை சொல்லுகிறார். பாவம், இயல்பான மனோகதியைப் பெறாத அந்த சிறுவன்மீது அந்த திட்டத்தை கேட்டுத் தொலைக்கவேண்டிய வலுப்பொறுப்பு ஏன் திணிக்கப்படுகிறது? திணித்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் திரையரங்கில் சொல்வதையெல்லாம் நம்பும் அதிர்வுடன்கூடிய பொம்மைகளாக அமர்ந்திருக்கும் பார்வையாளர்களான நமக்கு தெளிவுபடுத்தியாக வேண்டுமே.

எனவே சிறுவன் அங்கே நிலச்சுவான்தாரை நமக்கு அம்பலப்படுத்தும் கதியற்ற கருவியாகிறான்.

2. அதேபோல, நாயகனின் தம்பியான சமகால சாமியாடியை தெய்வ நடனத்தின்போது நிலத்தை திரும்பத் தருவதாக சொல்லச் சொல்லி நிலச்சுவான்தார் வலியுறுத்தும் காட்சி அபத்தத்திலும் அபத்தம். பதிலுக்கு, தன் நிலத்தின் ஒரு பகுதியை அவனுக்குத் தருவதாக அவர் பேரம்பேசுகிறார். அவன் தன் இனப்பற்றாளன் என்பதும் தெய்வம் பொருந்தும் மனம் கொண்டவன் என்பதும் அவருக்குத் தெரியாதா? பேரம் அவனிடம் படியும்படி என்ன அடையாளத்தை அவன் அவருக்கோ நமக்கோ காட்டினான்? அப்படியொரு நம்பகச் சரடு படத்தில் இல்லை.

3. நிலச்சுவான்தாரோடு உடன்பட மறுக்கும் லட்சுவை நடுச்சாலையில் வைத்து (அந்த காட்சிக்கு முன் அவர்கள் இருவரையும் நாயகன் அடிக்கடி செல்லும் கொல்லம்பட்டறையாள் சாட்சியாகப் பார்த்திருக்கிறான் என்கிற உறைப்பில்லாமல்) அவர் தேவையற்றுக் கொல்வதும் தேர்ச்சியின்மையின் காட்சிக் கோர்வை. அப்படி ஒரு கொலை அவசியமெனில், சாட்சியாகப் பார்த்தவனையும் தேடிப்பிடித்து அந்த நிலச்சுவான்தார் கொன்றிருப்பான். அப்படியிருந்தால்தான் அவன் இரத்தமும் சதையுமானவன். திரையின் பின்புலமாய் இயங்கும் திரைக்கதைக்கும் வளம் சேர்ப்பவன்.

4. எழுதப்பட்ட திரைக்கதைக்குள் உயிரிழக்காமல் சாட்சியாக நடந்தவன் சும்மா இருப்பானா? நாயகனிடம் அவனது தம்பியின் கொலையைப்பற்றி கூறிவிடுகிறான். இந்தக் காட்சித் தொடர், படத்தை முடிக்கவேண்டும் என்பதற்காக குறுக்கு மறுக்காக ஓடி வலிந்து புனையப்பட்டிருக்கிறது. நல்ல திரைக்கதை என்பது தன் யதார்த்த களத்தின் வழியேதான் பயணிக்கும். உறுத்தலான இடைச்செருகல்கள் மறித்து நின்றால் அது தன் நேரிய ஓட்டத்தை இழந்து தேக்கம் கண்டுவிட்டது என்று பொருள்.

5. கதாநாயகன் ஓர் ஆதிச்சமூகத்தின் வழித் தோன்றலாக காட்டிலிருக்கும் பன்றிகளைக் கொன்று மரங்களை வெட்டி தனது சுகிப்பின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறானே ஒழிய, ஆதிக்குடியினனுக்கும் காட்டிற்கும் இடையேயான ஒத்திசைவுப் புரிதலை எந்தக் காட்சியிலும் தடப்படுத்தவில்லை.

6. அவனது பாரம்பரிய பன்றி வேட்டையாடலை அவனது அம்மா தடுக்கப்பார்க்கிறாள். முதலில் அந்த நடிகையின் உடல்வாகைப் பார்த்தால் அவனது அம்மாவாகத் தோற்றப்படவில்லை. பன்றி வேட்டையை மறுக்கும் அவளது மறுப்பு அரசியல் நிலைப்பாடு எங்கும் சுட்டப்படவில்லை. பன்றியே இறையுயிராக இருப்பதும், அதுவே உணவுக்காக பலியிடப்படுவதுமான தொன்மத் தொடர்பு படத்திற்குள் தெளிந்த கூறாக இடம்பெறவில்லை. நமக்கு நாமே அவர்களுக்கு சாதகமான விடயத்தை கற்பனை செய்துகொள்ளவே திரைக்கதை வழிகோலுகிறது.

  • ஒடியன் லட்சுமணன்

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here