சில நாட்களுக்கு முன்பு நகரப்பேருந்தை நிறுத்தி “டீ குடித்த” குற்றத்திற்காக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் மீது பணியிட மாற்றல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் பகுதியில் இருந்து குண்டலபுலியூருக்கு அரசு நகரப் பேருந்து இயங்கி வருகிறது. இதில் வழுதரெட்டியை சேர்ந்த குபேரன்(50) ஓட்டுநராகவும் ஆர்.பி. நகரைச் சேர்ந்த பாலசுந்தரம்(45) நடத்துநராகவும் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்திலிருந்து செல்லும்போது அசோகபுரி என்ற இடத்தில் வழியில் பேருந்தை நிறுத்திவிட்டு டீ குடித்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

பணியில் ‘ஒழுங்கீனமாக’ நடந்து கொண்டதாக கூறி பணிமனை மேலாளர் இவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி சங்கராபுரத்திற்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

இதனை கண்டித்து நடத்துநர் பாலசுந்தரம், ஓட்டுநர் குபேரன் ஆகிய இருவரும் விழுப்புரம் தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள உயர் கோபுரத்தின் மீது ஏறி உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என விவரிக்கிறது  தினகரனின் ஆக.4- பதிவு.

“டீ குடித்தது” குற்றம் ஆகுமா?

மேற்குறிப்பிட்ட நகரப் பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் ஏதோ ஒரு சாலையோர டீக்கடையில் வண்டியை நிறுத்தி டீ குடித்தது தான் குற்றம் என்கிறது பணிமனை நிர்வாகம்.

பயணிகளின் நேரத்தை வீணாக்க கூடாது என்ற பொறுப்புணர்ச்சியையோ  அல்லது பயணிகளுக்கு தரமான சிற்றுண்டி தேநீர் கிடைக்க வேண்டும் என்ற அக்கறையையோ  இது வெளிப்படுத்துகிறதா? இதில் எதுவும் துளியளவு கூட கிடையாது. சாலையோரங்களில் பேருந்து நிறுத்தி டீ குடிப்பதன்  பின்னே பல ஆயிரம் கோடிகள் புழங்கும் கார்ப்பரேட்டுகளின் மிகப்பெரும் வர்த்தகம் அடங்கியுள்ளது.

நகரப் பேருந்து விட்டு விடலாம்; நாம் பெருநகரங்களுக்கு இடையே பயணிக்கும் தொலைதூர பேருந்துகளை எடுத்துக் கொள்வோம். இந்தப் பேருந்துகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட மோட்டல்களில் மட்டுமே அதாவது தேசிய நெடுஞ்சாலை ஒரங்களில் உள்ள குறிப்பிட்ட சில உணவகங்களில் (ஹோட்டல்களில்) மட்டுமே நின்று செல்கின்றன.

இத்தகைய உணவகங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் தரமானதாக உள்ளது என்றோ, அங்கு விற்கப்படும் பண்டங்கள் தரமாகவும் நியாயமான விலையில் தான் கிடைக்கிறது என்றோ உறுதிப்படுத்தியா போக்குவரத்து கழகங்கள் பயணிகளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கின்றன.

கோடிகள் புரளும் தொழில்!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) 1972 ஆம் ஆண்டு அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களை போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் இணைக்கப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கு  41,000 க்கும் அதிகமான பேருந்துகளை TNSTC கொண்டுள்ளது. உள்நாட்டில் மட்டும் 19,500 வழித்தடங்களில் சேவையை தந்து வருகிறது.

அதிகார வர்க்கம் எந்த அளவு கேடுகெட்டு உள்ளது என்பதற்கு வெளியூர்களுக்கு பயணிப்பவர்களின் அனுபவமே போதிய புரிதலை தரும்.

உதாரணத்திற்கு சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு பேருந்தில் ஏறினால்     அது விக்கிரவாண்டியில் உள்ள உணவகத்தில் நிற்கும்.  சுமார் இரண்டு மணி நேரம்  சென்ற பின் பேருந்து தேடி போய் நின்ற இடத்தில் இறங்கினால் சிறுநீர் கழிக்க கூட ஐந்து ரூபாய் கேட்டனர் என்பதும், மட்டமான தேநீர் 20 ரூபாய்க்கும், மட்டமான காப்பி அல்லது அளவு மிகவும் குறைவாக உள்ள சுமாரான காப்பி முப்பது ரூபாய்க்கும் விற்கப்பட்டது பயணிகளுக்கு தெரியும். முதலில், அங்கு விற்கப்படும் பொருட்கள் அனைத்துக்கும் எம்ஆர்பி விலைக்கும் கூடுதலாகவே விலை வைக்கப்பட்டன.

பயணிகளைக் ‘கடத்திச் சென்று’ காசு பறிக்கும் மோட்டல்கள்! கண்டு கொள்ளாத கழகங்கள்!

இத்தகைய இடங்களில் வண்டி நிறுத்தியதற்காக ஓட்டுநர் நடத்துனரை பயணிகள் கோபித்துக் கொண்டனர். “இவனுங்க ஓசியில் திங்கிறதுக்கும் கமிஷன் அடிக்கிறதுக்கும் நாம தான் கிடைச்சோமா?” என்று ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

பயணிகளின் புகார்களை தொடர்ந்து, பல பேருந்துகளில் ஓட்டுநர் நடத்துனருடன் வாக்குவாதங்கள் அதிகரிக்கத் தொடங்கியதை தொடர்ந்து, தான் அம்பலமாகும் நிலையை கணக்கில் எடுத்துக்கொண்ட அதிகார வர்க்கம் மோட்டல்களில் மென்மையாக தலையிட்டது.

கழிவறைக்கு கட்டணம் இல்லை !

வலுக்கட்டாயமாக பேருந்தில் பயணிக்கும் பயணிகளை ‘கடத்திக் கொண்டு‘ போய் தேர்ந்தெடுத்த உணவங்களுக்குள் நிறுத்தும் போக்குவரத்துக் கழகமும், அரசும், நுகர்வோர் நீதிமன்றமும்  தனது நேர்மையை நிரூபிக்க கழிவறைக்கு கட்டணம் இல்லை என்ற பலகையை அனைத்து உணவுகளிலும் வைக்க உத்தரவிட்டுள்ளது.

நேற்று வரை சிறுநீர் கழிக்க கழிவறைக்கு செல்லாமல் ஒதுக்குப்புறமாக ஒதுங்குபவர்களை விசில் அடித்தும், டார்ச் லைட் அடித்தும் எச்சரித்து கட்டாயமாக கழிவறைக்கு செல்ல வைத்து வசூலில் கல்லா கட்டிய உணவகங்கள் தற்போது “கட்டணமில்லா கழிவறை” என்று வேறு வழியின்றி போர்டை வைத்து, ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

எம்.ஆர்.பி விலைக்கு மேல் பொருட்களை விற்றால் நடவடிக்கை பாயும் என ‘கடுமையாக எச்சரித்து’ நுகர்வோரின் உரிமையை பாதுகாத்துள்ளது அரசு. இந்த உத்தரவுகள் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும்.

படிக்க: அரசுப் போக்குவரத்து கழகத்தை பாதுகாப்போம்!

மோட்டல் உணவகங்களில் விற்கப்படும் உணவுகளுக்கு உணவகங்களே தீர்மானிப்பது தான் எம்ஆர்பி. குறைந்தது 100 ரூபாய் இல்லாமல் பயணிகள் சாப்பாடு தட்டில் கை வைக்கவே முடியாது. சாலையோரங்களில் 30 ரூபாய்க்கு கிடைக்கும் தரத்திலான, அளவிலான உணவுதான் தேசிய நெடுஞ்சாலை உணவகங்களில்  100 முதல் 120 ரூபாய் விலையில், அதாவது 3 மடங்குக்கும் மேலாக ‘எம்ஆர்பி விலையில்’ விற்கப்படுகிறது.

அதிகார வர்க்கம் நேர்மையானதா ?

துளி கூட நேர்மையாக இல்லை என்பதுதான் தினந்தோறும் பயணிக்கும் லட்சக்கணக்கானோரின் அனுபவமாக உள்ளது.

உதாரணத்திற்கு சேலத்தை நோக்கி செல்லும் சில வழித்தடங்களில் நள்ளிரவை கடந்து அதிகாலை நேரங்களில்  பேருந்தை ஓட்டுநர் தான் விரும்பும் சிறிய பேக்கரியின் முன்பு நிறுத்துகின்றனர். அந்தக் கடைகளில் 15 ரூபாய்க்கு வழக்கமான டம்ளர்களிலேயே  டீ கிடைக்கிறது. அதுவும் சுண்டை காய்ச்சிய பாலில் போடப்படும்  தரமான தேநீராக உள்ளது. அங்கு விற்கப்படும் தின்பண்டங்களும் நியாயமான விலைகளிலேயே உள்ளன.

மோட்டல்கள் எப்படி  தப்ப விடுகின்றன?

நள்ளிரவில் தாண்டிய சூழலில் பெரும்பாலான பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார்கள். அத்தகைய நேரத்தில் வண்டிகளை எந்த மோட்டல்களில் நிறுத்தினாலும் ஒரு சிலர்தான் இறங்கி வந்து எதையாவது வாங்கி குடிப்பார்கள், கொறிப்பார்கள்.  அத்தகைய நேரத்தில் பெரும் வியாபாரம் நடக்காது. எனவே அத்தகைய நேரத்தை கணக்கில் கொண்டும்  போனால் போகட்டும் என்று பெரிய மனதுடன் விட்டு வருகின்றனர். அதிக வருமானம் தர முடியாதவையாக சில வழித்தடங்கள் உள்ளன.    அதுபோன்ற பகுதியில் மோட்டல்கள் அதிகமாக முளைப்பதில்லை. பேருந்துகள் தெரிந்தே தப்ப விடப்படுகின்றன.

ஏன் வியாபாரம் நடக்காது?

பயணிகளின் வாழ்க்கை தரம் என்று ஒன்று உள்ளது. தேவையே இருந்தாலும் கூட அனைவரும் மோட்டல்களில் டீ குடிக்க விரும்புவதில்லை. சாதாரண ஏழை எளிய மக்கள் 10 ரூபாய் டீயை 20 ரூபாய் கொடுத்து குடிப்பதா என்று விலையை கேட்டவுடன் டோக்கனை வாங்காமல் பின்வாங்கி விடுவர்.

படிக்க: போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட ஒன்றுபடுவோம்!

அத்தகைய ஏழை உளைக்கும் மக்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில், வருமானம் குறைவான மக்கள் பயணிக்கின்ற வழித்தடங்களில் மோட்டல்கள் அதிகமாக முளைப்பதில்லை. அத்தகைய வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளும் கூட பழையதாக, பிற போக்குவரத்து பணிமனையில் இருந்து கழித்துக் கட்டப்பட்டு விற்கப்பட்ட, இரண்டாம் தரத்தில் ஆனதாகவே இருப்பதையும் நாம் பார்க்க முடியும்.

பெருநகரங்களில் வாழும் மக்களை, கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்து லட்சங்களில் சம்பளம் வாங்கும் பிரிவினரை, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுப்பவர்களை சுயதொழில் செய்பவர்களை கல்லூரி மாணவர்களை இலக்காக வைத்து, அத்தகைய நகரங்களுக்கு இடையில் பயணிக்கும் பேருந்துகளை மோட்டல்களுக்கு தட்டி தூக்குவதன் மூலம்  பணத்தை அள்ளுகின்றனர் மோட்டல்களை நடத்தும் கார்ப்பரேட்டுகள்.

இதையும் முறைப்படி கப்பம் கட்டி தனக்கு குறிப்பிட்ட பேருந்துகளை குறிப்பிட்ட நேரங்களில் கொண்டு வந்து, பயணிகளை வாடிக்கையாளராக சப்ளை செய்ய வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டே அமல்படுத்துகின்றனர்.  இந்த வேலை சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க தமது அதிகாரியை மோட்டல்களில் டேபிள் சேர் போட்டு உட்கார வைத்து நோட்டில் ஓட்டுனர் / நடத்துனரிடம் கையொப்பமும் வாங்குகின்றனர்.

அதிகார வர்க்கத்தின் கார்ப்பரேட் விசுவாசம்!

தினந்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் பேருந்தில் பயணிக்கின்றனர். அவர்களை அள்ளிச்சென்று ஹோட்டல்களுக்குள் திணித்து காசை பறிக்க துணை போகின்றன அரசு போக்குவரத்துக் கழகங்கள். இந்த பிரம்மாண்டமான சந்தையில் நமது பொதுத்துறை நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் எதுவும் கண்ணிலேயே படுவது கிடையாது.

உதாரணத்திற்கு ஆவின் நிறுவனத்தின் 10 ரூபாய் பால் பிஸ்கட் சுவையிலும் தரத்திலும் பிரிட்டானியாவின் மில்க் பிக்கிஸை விட மேம்பட்டதாகவே உள்ளது. ஆவினை நிர்வகிப்பதும் அரசு அதிகாரிகள் தானே. ஏன் மோட்டல்களில் பொதுத்துறை நிறுவனத்தின் பொருட்களை விற்பனைக்கு அனுப்புவதில்லை. கோடை காலங்களின் பகல் வேலைகளில் தென்னை, பனையில் இருந்து இறக்கப்படும் நீரா எனப்படும் பதநீரை சென்னை மற்றும் பனை பொருட்களை உற்பத்தி செய்யும்  கூட்டுறவு அமைப்புகளின் மூலம் பாக்கெட்களில் அடைத்து  ஏன் விற்பனைக்கு அனுப்புவதில்லை?  ஆவின் சில்லறை விற்பனையகங்கள் ஏன் போடப்படுவதில்லை? இதற்கு நேர்மையாக பதில் சொல்ல அதிகாரவர்க்கும் முன் வருமா?

ஒன்றிய அரசுதான் ரயில்வே துறையில் கார்ப்பரேட்டுகளின் சரக்கை மட்டுமே விற்க வேண்டும் என்று தெளிவாக உத்தரவிட்டுள்ளது. மாநில தி.மு.க. அரசும் கார்ப்பரேட் விசுவாசியாக, மோடி அரசின் பாதையில்தான் பயணித்தாக வேண்டுமா என்பதை விடியல் அரசுதான் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

பயணிகளுக்கு தரமான பொருள் சரியான நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என்று கருதி இருந்தால் பொதுத்துறை நிறுவனத்தின், வேளாண் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களையும் மோட்டல்களில் விற்பனைக்கு வைத்திருக்கலாம். இதை செய்யாததற்கு அதிகார வர்க்கத்தின் கார்ப்பரேட் வர்க்க நலனே அடிப்படையாக உள்ளது. ஆளும் கட்சிகளும் கார்ப்பரேட் விசுவாசிகளாகவே அவதாரம் எடுக்கின்றனர்.

படிக்க: அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமையை புறக்கணிக்கும் தமிழக அரசு!

நாடு முழுவதும் பயணிகளிடம் கட்டாயமாக “மோட்டல் வழிப்பறி” மூலம்  தனது பாக்கெட்டை நிரப்பிக் கொள்ளும் அதிகார வர்க்கம் தான் விழுப்புரத்தில் சாமானிய நகரப் பேருந்து நடத்துனர், ஓட்டுனர் மீது பாய்கிறது. அதன் மூலம் விக்கிரவாண்டிகளில்  சட்டபூர்வ மோட்டல் வழிப்பறிக்கு துணை போகும் அதிகார வர்க்கத்தினரின் அக்கிரமங்களை மூடி மறைத்து தனது நேர்மையை நிரூபிக்க முயல்கிறது.

தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன?

பயணிகள் மீது ஏவப்படும் இத்தகைய அயோக்கியத்தனங்களை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களோ, அவர்களின் தொழிற்சங்கங்களோ  கண்டிப்பதில்லை. எப்படியோ நமக்கு சம்பளம் வந்தால் போதும், ஓய்வு பெற்றவர்களுக்கு சேரவேண்டி பண பலன்களை அரசு போக்குவரத்து கழகங்கள்  தாமதிக்காமல் கொடுத்தால் போதும் என்று வரம்பிட்டே வண்டியை ஓட்டுகின்றனர். இதன் மூலம் தமது வாழ்வாதாரமான அரசு போக்குவரத்து கழகங்களையும் பயணிகளையும் கைவிடுகின்றனர்.

இவர்கள்  ஓய்வு பெற்ற பின்னரும் சும்மா இருப்பதில்லை. தனக்கு அடுத்த தலைமுறையினர் நிரந்தர வேலை பெறுவதை தடுக்கும் வகையில் தினக்கூலிகளாக மாறி, மீண்டும் சீருடை அணிந்து கொண்டு பரிசோதகர்களாக அவதாரம் எடுக்கின்றனர்.

இத்தகைய சூழல்தான்   “டீ குடித்த குற்றத்துக்கு” இட மாறுதல் தண்டனையைப் பெற்ற ஓட்டுனரும் நடத்துனரும் தற்கொலை மிரட்டல் விடுத்து நீதிக்காக தனித்து போராட வேண்டிய அவலத்தை உருவாக்கியுள்ளது.

அதிகார வர்க்கத்தையும், அரசாங்கங்களையும் நோக்கி கேள்விகளை எழுப்பாமல் எதுவும் மாறாது.  நமது அடிப்படை உரிமைகளை – தரமான பொருளை விரும்பிய படி தேர்வு செய்து நுகரும் அடிப்படை உரிமையை – சாலையோரங்களிலும் மீட்டெடுப்போம். ஓட்டுநர் நடத்துனர்களுக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து புரிய வைப்போம்.

  • இளமாறன்

2 COMMENTS

  1. கட்டுரையாளருக்கு வணக்கம். இந்த பிரச்சினையை நானும் பலமுறை அனுபவித்திருக்கிறேன். ஆனால் கட்டுரையில் நீங்கள் கூறியிருப்பது போல் இது கார்ப்பரேட் நலன் என்று பார்க்க முடியாது. அதிகாரத்தில் இருக்கும் கட்சி இப்போது திமுக முன்பு அதிமுக யார் அதிகாரத்தை கைப்பற்றி கொள்கிறார்களோ அவர் கட்சி ஆட்களுக்கு மோட்டல் உரிமம் வழங்கப்படுவதுடன் குறிப்பிட்ட மோட்டல்களில் பேருந்து நிறுத்தப்படுவதும் அந்த அடிப்படையில் தான்‌. தனியார் பேருந்துகள் தான் ஹைடெக் ஹோட்டல்களில் நிறுத்தப்படுகிறது. கட்டுரை சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும் இந்த அடிப்படையில் விமர்சனம் செய்வதே சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

    • ” கட்டுரையில் நீங்கள் கூறியிருப்பது போல் இது கார்ப்பரேட் நலன் என்று பார்க்க முடியாது. அதிகாரத்தில் இருக்கும் கட்சி இப்போது திமுக முன்பு அதிமுக யார் அதிகாரத்தை கைப்பற்றி கொள்கிறார்களோ அவர் கட்சி ஆட்களுக்கு மோட்டல் உரிமம் வழங்கப்படுவதுடன் குறிப்பிட்ட மோட்டல்களில் பேருந்து நிறுத்தப்படுவதும் அந்த அடிப்படையில் தான்‌. தனியார் பேருந்துகள் தான் ஹைடெக் ஹோட்டல்களில் நிறுத்தப்படுகிறது.”

      என்று வாசகர் வெங்கடேசன் முன்வைத்துள்ளார். இது சில இடங்களுக்கு பொருந்தும். அதே நேரம் சில மாற்றங்கள் வெறும் ஆளும் கட்சியினரின் பெயரோடு அவர்களின் ஆட்சி காலத்திற்கு உட்பட்டு மட்டும் இயங்குவதாக கட்டமைக்கப்பட்டதில்லை நீடித்து நிற்பதாக கோடிக்கணக்கில் முதலீடுகளுடன் உருவாக்கப்பட்டதாகவும் உள்ளது. அத்தகைய மோட்டல்கள் தனியார் பேருந்துகள் நிற்கும் இடம் என்பதாக மட்டும் சுருக்க முடியாது அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகளும் அத்தகைய மோட்டல்களில் தான் நிற்கின்றன. உதாரணத்திற்கு திருச்சியில் இருந்து சென்னை வரும் வழியில் உளுந்தூர்பேட்டை தாண்டி ஆச்சாரியா என்ற ஒரு உணவகத்தில் நிற்கிறது அங்கு உள்ளே நுழைந்தாலே டீ காபி சாப்பிட போனாலும் கூட, இருக்கைகளில் அமரும்படி கட்டாயப்படுத்துகின்றன. பணியாரம், வடை, போண்டா, பஜ்ஜி என ஏதாவது ஒரு தின்பண்டத்தை ஒரு பிளேட் வாங்கி சாப்பிட்டுவிட்டு ஒரு டீ குடித்தாலே பில் என்பது ரூபாயை தாண்டி விடுகிறது. இது போன்ற உணவகங்கள் தற்போது உள்ள திமுக அரசின் உதவியுடன் மட்டும் தற்காலிகமாக இயங்குவதாக இல்லை.

      முதலாளிகளுக்கு கட்சி முக்கியமில்லை. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் உரிய கமிஷனை தந்து தொழிலை தொடர்வதையே செய்கின்றனர்.

      ஒரு சிறிய பேக்கரி வைத்தாலே அதை தமது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து, அந்தக் கடையின் விளம்பர பெயர் பலகையின் முதற்கொண்டு உள்ளே பிரமாண்டமாக வைக்கப்படும் பிரிட்ஜ் வரை அனைத்தையும் தமது செலவில் ஏற்பாடு செய்து வருகின்றன கார்ப்பரேட் கம்பெனிகள். இதன் மூலம் பேக்கரிகளை தமது பொருட்களை விற்கும் இடமாகவும் மாற்றி அமைக்கின்றன. அப்படி இருக்கும் பொழுது பல்லாயிரம் பேர் வந்து செல்லக்கூடிய இத்தகைய நெடுஞ்சாலை உணவகங்களை கார்ப்பரேட்டுகள் விடுவார்களா என்ன?

      எனவே ஆளும் கட்சியின் தயவுடன் தற்காலிகமாக முளைக்கும் உணவகங்கள் ஒரு புறம் இருக்க, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளோடு தொலைநோக்காக தொடங்கி நடத்தப்படும் உணவகங்களும் இருக்கவே செய்கின்றன. அவர்களின் வருவாயை கணக்கிட்டால் அவர்கள் சிறு முதலாளிகள் என்பதாக இல்லாமல், பல கோடிகளை புரட்டும் கார்ப்பரேட்டுகளாக மாறி இருப்பதை புரிந்துகொள்ள முடியும். பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதையும் உணர முடியும்.

      இவர்கள் சங்கிலி தொடர் கடைகளையும் நடத்துவதற்கு வாய்ப்புகள் அதிகம். வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு நபர்கள் மூலம் உரிமம் பெற்றி நடத்தும் பட்சத்தில் மேலோட்டமாக பார்க்கும் நமக்கு தெரியாமல் போகலாம்.

      வாசகர் சுட்டிக்காட்டிய அடிப்படையில் சில மோட்டல்கள் இயங்குகின்றன என்றாலும், நாம் பரிசீலிக்க வேண்டிய மையமான விஷயமாக யாரின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது? யாரின் நலனுக்காக இயங்குகிறது? என்பதையே . கட்டுரையில் பரிசீலனைக்கு உரியதாக எடுத்துக் கொள்கிறோம் .

      மொத்தத்தில் சாலையோர விற்பனை என்பது கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள் சென்றுள்ளது என்பதை நாம் கணக்கில் எடுக்க தவறக்கூடாது.

      விமர்சனமாக சுட்டிக் காட்டிய வாசகருக்கு நன்றிகள் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here