2008ஆம் ஆண்டு முதல் மீள முடியாத நெருக்கடியில் சிக்கிய ஏகாதிபத்திய முதலாளித்துவம் மற்றும் நிதி ஆதிக்க கும்பல்கள் உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக அரசு கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில் தோன்றிய முதலாளித்துவம்  பாசிசமாக வடிவெடுத்து உள்ளது. பாசிசம் என்பதே முதலாளித்துவத்தின் தோல்வியிலிருந்து, ஆளத் தகுதியற்ற நிலைமைகளிலிருந்து பிறக்கிறது.

சுதந்திரப்போட்டியை முன்வைத்து நிலப்பிரபுத்துவ உற்பத்தியை, கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கிய முதலாளித்துவம், ஏகபோக உற்பத்தியின் மூலம் ஒரு சில நிதி ஆதிக்க கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் சிக்கித் தவித்து வருகிறது. திணறி வருகிறது.

தற்போதைய சூழலில் நிதி மூலதனத்தின் ஆகக் கேடான இழிந்த வடிவமாக உருவெடுத்துள்ள பாசிசம், 1930 களில் ஜெர்மனியில் ஹிட்லர், இத்தாலியில் முசோலினி போன்றவர்கள் முன்வைத்த பாசிசம் மற்றும் நாசிசம் என்பதை போல அவ்வளவு இளமையானது அல்ல.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற கோட்பாட்டை முன்வைத்த ஜார்ஜ் டிமிட்ரோவ் தனது உரையில் பாசிசத்தின் தோற்றத்திற்கான அரசியல், பொருளாதார அடிப்படைகளையும், அதன் கொடூரமான அம்சங்களையும் வரையறுத்து கூறியுள்ளார். எனினும் அந்த வரைவிலக்கணத்தை அப்படியே ஒவ்வொரு நாட்டுக்கும் பொருத்துவது மார்க்சிய லெனினிய கோட்பாட்டை பருண் மையான சூழலில் பருண்மையாக அமல்படுத்த தயாராக இல்லாத சித்தாந்த வறட்சி நிலைமையாகும்.

ஜார்ஜ் டிமிட்ரோவ்

30 களில் உருவான பாசிசம்; முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாகவும், உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக, ஏகபோக ஆதிக்கத்தின் கீழ் போர்களை நடத்திய, ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் தோல்வியிலிருந்து பிறந்தது.

தற்போதைய உலகமயம்: சந்தைகளை கைப்பற்றிக் கொண்டு உற்பத்தி, விநியோகம், வேலைப் பிரிவினை அனைத்தையும் சர்வதேச மயமாக்கியுள்ள சூழலில் தோன்றியுள்ள பாசிசமானது, நவீன வடிவத்தில் மக்களை அடக்கி ஒடுக்குகிறது. கொன்று ஒழிக்கிறது. அதுவே நவீன பாசிசமாக உருவெடுத்து உள்ளது.

இந்த நவீன பாசிசமானது காலனி, அரைக் காலனி, மறு காலனிய நாடுகளில் உள்ள படு பிற்போக்கு சக்திகளான மத அடிப்படைவாதிகள், இன வெறியர்கள் மற்றும் நிற வெறி கூட்டத்துடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டு பெரும்பான்மை மக்களுக்கு எதிராக, சர்வாதிகாரமாகவும் கொடூரமாகவும் செயல்படுகிறது. சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக உரிமைகளை நசுக்கி வருகிறது.

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் கூடாரத்தில், இத்தகைய நவீன பாசிசம் ,  ‘ட்ரம்ப் பிசமா’க வெளிப்படுகிறது. தென் அமெரிக்கா கண்டத்தில் ‘போல்சனரு’ வடிவத்தில் வெளிப்படுகிறது.

அரேபிய நாடுகளில் இஸ்லாமிய மத பிற்போக்கு குழுக்களின் ‘காட்டுமிராண்டித்தனமாக’வும், இந்தியா போன்ற நாடுகளில் பார்ப்பன (இந்து) மத வெறியர்களின் சாதி, தீண்டாமை உள்ளிட்ட வர்ண கோட்பாடுகளை உள்ளடக்கிய, ‘மனுவாதமாக’வும் வெளிப்படுகிறது.


இதையும் படியுங்கள் : உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!


இத்தகைய காலனிய, அரைக் காலனிய, மறுகாலனிய நாடுகளில் பாசிசத்தை வீழ்த்துவதற்கு பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற விவசாயிகள், தொழிலாளர்கள் மட்டுமின்றி  குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினராகிய முதலாளித்துவ வாதிகள் உள்ளிட்ட, அனைவரையும் ஒன்றிணைத்த பரந்த ஐக்கிய முன்னணியின் மூலம் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் மார்க்சிய லெனினியக் கோட்பாடு.

முதலாளித்துவ நாடுகளைப் போல, பாசிசம் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு கையாளுகின்ற பல்வேறு வழிமுறைகளைப் போலவே காலனி, அரைக்காலனி, மறுகாலனிய நாடுகளிலும் கையாளும் என்று புரிந்து கொள்வதும், வியாக்கியானம் செய்வதும், மார்க்சியத்தை பற்றி அடிப்படை புரிதல் இல்லாத தற்குறித்தனமாகும்.

நூறாண்டுகளுக்கு முன்பு ஏகாதிபத்திய நிதி மூலதனம் இருந்த நிலைமையும், தற்போது உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் மீமிகு உற்பத்தி தன்மையும், அது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் தன்மையும் வேறு வேறாகும்

தற்போதைய ஏகபோக நிதி மூலதனம் அதன் அரசியல் வடிவமாக உருவெடுத்துள்ள பாசிசமும் ஜெர்மனியில் ஹிட்லர், இத்தாலியில் முசோலினி முன்வைத்த அதே தன்மையில் இருக்கும் என்று வரையறுப்பது தற்கொலை பாதையாகும்.

  • வைத்தீஸ்வரன்

–தொடரும்…

நன்றி: vinaiseiblogspot

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here