
பீகாரில் 75 லட்சம் பெண்களுக்கு முக்ய மந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனாவின் முதல் தவணையாக ரூ.7500 கோடி ரூபாயை வழங்க உள்ளார் பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. பீகார் பெண்கள் தங்களுக்கு பிடித்த வேலையை தொடங்க உதவுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
பீகார் முதலமைச்சர் அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பிரதமர் மோடி தலா ரூ10,000ஐ (Direct Benefit Transfer) மூலம் 75 லட்சம் பெண்களுக்கு வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பீகாரில் நடைபெறவுள்ளது. மோடி வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் இதில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 வருடங்களாக ஆட்சியில் இருக்கும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வித்தரம், உட்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் போதுமானதாக் இல்லை. சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பல கிராமங்களுக்கு கிடைக்காமல் பின்தங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காகண்டா, கோசி ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இது விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. இதைப்பற்றி நிதிஷ்குமார் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டாகவும் உள்ளது. மேலும் அதிகரிக்கும் ஊழல் மற்றும் நிர்வாக குறைபாடு மற்றும் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாமல் முடக்கியது, இவையெல்லாம் ஆளும் நிதிஷ்குமார் – பாஜக கூட்டணி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மறைக்கவே 10,000 ரூபாய் பெண்களுக்கு வழங்கி மக்களின் வாயை பணத்தால் அடைக்கப் பார்க்கிறது.
2015 ஆம் ஆண்டு நடப்பெற்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மகாபந்தன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இக்கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியும் அமைத்தது. அடுத்த 2 ஆண்டுகளில் மகாபந்தன் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டார். 2020 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிதிஷ்குமார் பாஜகவின் சூழ்ச்சியால் மூன்றாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. பாஜகவோ இரண்டாம் இடத்தை பிடித்தது. லோக்ஜனசக்தி கட்சியை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட வைத்தது. கூட்டணியில் இருந்துக் கொண்டே சகுனி வேலையை பார்த்தது பாஜக. அதனாலேயே நிதிஷ்குமாரின் கட்சி தனது செல்வாக்கை இழந்தது. நிதிஷ்குமாரின் முதுகில் சவாரி செய்து தனது கட்சியை வளர்த்துக் கொண்டது. தற்போதும் அதே பாணியை தான் கையாள்கிறது பாஜக.
பாஜகவுக்கு நிதிஷ்குமாரின் தயவு தேவைப்படுகிறது. மத்தியில் ஆட்சி தொடர வேண்டுமானால் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் நிதிஷ்குமார் ஆட்சியில் தொடர பாஜகவின் ஆதரவும் தேவை என இருவரும் தங்கள் சந்தர்ப்பவாத அரசியலையே செய்துவருகிறார்கள். மறுபுறம் பாஜக ஐக்கிய ஜனதா தளத்தை விட செல்வாக்குப் பெற்ற கட்சியாக பீகாரில் வளர்ந்து வருகிறது. தற்போது மோடி அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் தனித்த செல்வாக்கின் மூலம் பாஜக பீகாரில் ஆட்சியை பிடிக்க எத்தனிக்கிறது.
படிக்க:
♦ பீகார்: இலவசங்கள், கவர்ச்சி திட்டங்களின் மூலம் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கும் பாசிச மோடி கும்பல்!
♦ பீகார் சிறப்பு தீவிர திருத்தமும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலும்!
மறுபுறம் ஓட்டுத் திருட்டு பொதுவெளிக்கு வந்து அம்பலப்படுவதன் மூலமும் ராகுலின் யாத்திரை மூலமும் பாஜகவின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையெல்லாம் விட பாசிச மோடி அரசின் கார்ப்பரேட் பொருளாதார கொள்கையின் விளைவாக சமூக ஏற்றத்தாழ்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கமும் வறுமை, வேலையின்மையால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு முன்னேறிய மாநிலங்களே தடுமாறி வரும் சூழ்நிலையில் பீகார் போன்ற பொருளாதாரத்தில் பிந்தந்கிய மாநிலங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. மற்றொரு புறம் தேசியவெறியின் மூலம் மதவெறுப்பை உருவாக்கி சமூக அமைதியை கெடுத்து வரும் பாசிச கும்பலை மக்கள் ஏற்க தயாராக இல்லை என்பதையே கடந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் காட்டின. மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னும் மக்களின் வாழ்க்கையில் பெரிய மாறுதல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
மோடி கொடுக்கும் 10,000 மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
பீகாரில் 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 625 கோடி பெண்கள் உள்ளார்கள். பெரும்பாலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களே திருமணமானவர்கள் என வைத்துக் கொண்டால் கூட இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2.5 கோடியிலிருந்து 2.8 கோடி இருக்க வாய்ப்புள்ளது. மோடி அறிவித்துள்ள முக்ய மந்திரி மகிளா ரோஜ்கார் யோஜனா திட்ட்த்தின் கீழ், பீகாரின் ஊரக வளர்ச்சித் துறையானது 1.11 கோடிக்கு அதிகமான விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் 75 லட்சம் பெண்களுக்கு இந்த பணத்தை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் கொடுக்கும் 10,000 பணத்தை ஒரே தவணையாக வழங்குவதன் மூலம் அவர்கள் தங்கள் பொருளாதார வாழ்வை சரிசெய்வதற்காக வாங்கப்பட்ட கடன்களை அடைப்பதற்கே போதாது. ஒருவேளை கடன் இல்லாமல் இருப்பவர்கள் ஏதாவது பொருளை வாங்குவதன் மூலம் முதலாளிகளுக்கு வருமானத்தை பெருக்குவார்கள் மோடி அரசு கூறுவது போல் கிராமப் புற பெண்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பயன்படாது என்பதே எதார்த்தம். ஒருவேளை இதனை சரியாக பயன்படுத்துவது என எடுத்துக் கொண்டால் கூட 10,000 ரூபாயை வைத்து என்ன தொழிலை தொடங்க முடியும். அதுவும் 75 லட்சம் பெண்கள் எப்படி பலன் பெற முடியும்? இந்த கேள்வி அனைவரின் மத்தியிலும் உள்ளது.
ஏற்கனவே முத்ரா வங்கியின் மூலம் குறைந்த பட்சம் 50 ஆயிரம் முதல் 10,00,000 வரை கடன் பெறலாம் என மோடி அறிவித்திருந்த நிலையில் இதனை பயன்படுத்தி பீகார் மக்கள் பலன் பெற்றிருக்கலாமே? அப்படி எதுவும் நடக்காத பொழுது 10,000 ரூபாய் பணத்தை வைத்துக் கொண்டு சாமனிய உழைக்கும் மக்கள் என்ன முன்னேற்றத்தை அடையப் போகிறார்கள்.
மோடி அறிவித்திருக்கும் இந்த திட்டம் முழுக்க முழுக்க தேர்தலை மனதில் வைத்தே தொடங்கப்பட்டுள்ளது. பிரபல வழக்கறிஞரும் செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூசன் “இது தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு நேரடியாக லஞ்சம் கொடுப்பதாகும். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் ஊழல் நடைமுறையாகும்” என்று தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து பாஜகவின் ‘ஒரு பிரிவான தேர்தல் ஆணையம்’ எந்த நடவடிக்கையோ எடுக்கப் போவதில்லை என்பது அனைவரும் அறிந்ததே. கேட்டால் இன்னும் தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வரவில்லை என்று சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால் இதனை மக்களுக்கு உணர்த்த வேண்டிய பொறுப்பு எதிர்கட்சிகளான காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு உள்ளது. மோடி கொடுக்கும் 10,000 பணம் நம் வாழ்வை மேம்படுத்தாது, நம்மை அடிமையாக்கவே செய்யும் என்ற கருத்தை மக்களிடம் கடத்த வேண்டும். மேலும் இந்தியா கூட்டணி நினைப்பது போல் தேர்தலில் பாசிஸ்டுகளை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது என்பதை அவர்களின் செயல்பாடுகளில் இருந்து உணர்ந்து மக்களுக்கு மாற்றை முன்வைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
- நலன்






