ருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், பிஜேபியை சேர்ந்த மாநில விளையாட்டுப்பிரிவு அணித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜகவின் குட்டு வெளிப்படத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் நிதி நிறுவன மோசடிகள் பல காலமாக நடந்தாலும் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டாலும் மக்களுக்கு அவர்கள் இழந்த பணம் திரும்ப கிடைத்ததா என்பது கேள்விக் குறி?

பொதுவாக மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பவர்களை, கொள்ளைக்காரர்கள் அல்லது திருடர்கள் என்று தான் அழைப்பார்கள். ஆனால் நிதி நிறுவன வழக்கில் குற்றம் செய்தவர்கள் பணம் படைத்தவர்கள், தொழிலதிபர்கள் என்ற காரணத்தினாலேயே அவர்களை நிதி மோசடி செய்தவர்கள் என்று ஊடகமும், அரசும் குறிப்பிடுவதே அயோக்கியத்தனம். அவர்கள் மக்கள் பணத்தை களவாடிய திருட்டு கொள்ளைக் கும்பல்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் என்ற நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்ததை நம்பி,மக்கள் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளார்கள். ஆரம்பத்தில் வட்டி கொடுத்து மக்களை நம்ப வைத்து அதிக முதலீடுகளை ஈர்த்த பின்னர் அனைத்து பணங்களையும் சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளது,ஆருத்ரா நிறுவனம். கிட்டத்தட்ட 2,438 கோடி களவாடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த கொள்ளை குறித்து ஆருத்ரா நிதி நிறுவன நிர்வாகிகளைப் பிடிக்க 7 டிஎஸ்பிக்கள் தலைமையிலான தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது தமிழ்நாடு காவல்துறை. 1 லட்சம் ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக (வங்கிகள் தரும் அதிகபட்ச வட்டி 1 லட்சம் ரூபாய்க்கு 7 ஆயிரம் தான்) கூறும் பொழுதே காவல்துறை உஷாராகியிருக்க வேண்டாமா? அந்த அளவுக்கு மக்காகவா இருந்திருக்கும் தமிழ்நாடு காவல்துறை. இது முதல்முறையும் அல்ல… இது குறித்து காவல்துறைக்கு தெரியாமலும் இல்லை.

கடந்த 2022 மே மாதம் 24 ஆம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 26 இடங்களில் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 3 கோடியே 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கொள்ளை அடித்தது பல ஆயிரம் கோடி! கிடைத்ததோ சொற்ப பணம்!. நிதி நிறுவனத்தின் பதினோரு வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டதாம்.

இது தொடர்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குநர்களில் பாஸ்கர் மற்றும் மோகன்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள 6 பேரை தான் 7 பேர் கொண்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வருகிறது.

இந்த கொள்ளையை அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கம் துணையில்லாமல் செய்வது சாத்தியமில்லை. இந்த விவகாரம் வந்த நாள்முதல், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் பெயர் அடிப்பட்டுக் கொண்டு தான் உள்ளது. ஆனால் சரியான சாட்சியங்கள் இல்லை. தற்போது பாஜக நிர்வாகியின் கைது அதனை உறுதிபடுத்தியுள்ளது.

நக்கீரன் அட்டைப்படம்

வடமாவட்டங்களை மையமாக வைத்து ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ், வி.ஆர்.எஸ் போன்ற போலி நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி பணத்தை அபேஸ் செய்து எஸ்கேப் ஆகியுள்ளது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்ததுடன் சரி. மக்களுக்கு அவர்களுடைய பணம் திரும்ப கிடைக்கவில்லை.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரீஸ், பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலாளராக உள்ளார். ஆனால் பாஜகவோ அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பதவியை ஏற்கவில்லை என்றும் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும் சொல்கிறது. பதவி ஏற்காதவர் எப்படி பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்? பாஜக தமிழக மக்களின் காதில் பூ சுற்ற நினைக்கிறது.

ஹரீஸ் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து 210 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்து அவரது வங்கி கணக்கின் மூலம் ஆருத்ரா நிதி நிறுவனத்திற்கு அனுப்பியதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சொல்கிறது. பாஜகவின் ஹரீஸுடன் சேர்த்து மாலதி என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலையுடன் கைது செய்யப்பட்ட ஹரீஷ்

இந்த ஹரீஸ் கடந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி, அதாவது ஆருத்ரா நிதி நிறுவன பிரச்சினை பூதாகரமாக வெடித்துக் கொண்டிருந்த நேரத்தில், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். இது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது அவர் அந்த நிறுவனத்தில் இயக்குநராக இல்லை என்றும், பங்குகள் எதையும் வைத்திருக்கவில்லை என்றும் பாஜக விளையாட்டு அணித் தலைவரான அமர்பிரசாத் ரெட்டி பதிலளித்தார்.

இப்போது கைது செய்யபட்டிருக்கும் ஹரீஷிற்கு அமர்பிரசாத் ரெட்டி கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி அனுப்பியதாக கூறப்படும் கடிதம் ஒன்று பாஜக ஆதரவு சங்கி கும்பல்களால் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஹரீஷ் பல கேள்விகளுக்கு பதிலளிக்காததால், அவருக்கு அளிக்கப்பட்ட பொறுப்பிலிருந்து நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதே ஜூன் 22 ஆம் தேதிதான் அமர் பிரசாத் ரெட்டி ஹரீஷிற்கு ஆதரவாக டிவிட்டர் பதிவையும் வெளியிட்டுள்ளார். இதிலிருந்து தமிழக பாஜக,ஆருத்ரா நிதி நிறுவனம் மக்களிடம் அடித்த கொள்ளையில் தனக்கு இருக்கும் பங்கை மூடி மறைப்பது, முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைக்க முடியாமல் திணறுவதைப் போலவே இருக்கிறது!

மே 21 2022 அன்று கட்சியிலிருந்து தன்னால் நீக்கப்பட்டதாக கூறும், அமர்பிரசாத் ரெட்டி ஸ்டிங் ஆப்ரேசனில் சிக்கிய மாதேஷுக்கு, ஆதன்தமிழில், ஹரீஷ் குறித்து நேர்மையானவர், innocent, நான் ஒன்றிய கார்ப்பரேட் அமைச்சகம் வரை விசாரித்து விட்டேன் என்று ஜூன் 16 2022 அன்று எப்படி பேட்டி கொடுக்க முடியும்?

அதுமட்டுமில்லாமல் மே 21 கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் ஹரீஷ் மே 26 ஆம் தேதி தமிழகம் வந்த மோடியை வரவேற்கும் குழுவில் இடம்பிடித்தது எப்படி?

பிரதமர் மோடியை வரவேற்கும் பட்டியலில் குற்றவாளி ஹரீஷ் பெயர்

தமிழக பாஜகவில் அண்ணாமலை பதவியேற்ற பிறகு ரவுடிகளையும், கிரிமினல் குற்றவாளிகளையும் கட்சியில் சேர்த்துக் கொண்டு அவர்களது வழக்குகளை முடித்து வைத்தார். அதே நோக்கத்துடன் தான் ஹரீஷும் ஆருத்ரா நிதி நிறுவன பிரச்சினை பெரிதாக ஆரம்பித்ததும் கொடுக்க வேண்டியதை கொடுத்தால் எல்லாவற்றையும் அண்ணாமலை பார்த்துக் கொள்வார் என்று பிஜேபியில்தன்னை இணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அண்ணாமலைக்கு ஆருத்ரா நிதி நிறுவனம் 100 கோடி கொடுத்ததாக சொல்லப்படுவது உண்மையா? என்பது விசாரணையில் தான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்:

இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அண்ணாமலையின் அல்லக்கை அமர்பிரசாத் ரெட்டி கைது செய்யப்படாமல் இருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. காவல்துறை ஆர்.எஸ்.எஸ் தலையீடு இன்றி இந்த விசாரணையை கொண்டு செல்லுமா? என்பது சந்தேகமே. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண விவகாரத்தில் பள்ளியின் தாளாளரான ஆர்.எஸ்.எஸ்-காரருக்கு ஆதரவாகவே தமிழக காவல்துறை செயல்பட்டது. அதே நிலை ஆருத்ரா நிதி நிறுவன விவகாரத்தில் நடக்கலாம்.

ஊழல் அற்ற ஆட்சியைத் தருவதாக மேடை தோறும் முழங்கிவிட்டு, பாசிச பாஜக கும்பல் ஒரு பக்கம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி வரி விதிப்பின் மூலமும், மக்களின் சேமிப்பு பணத்தை வங்கிகள் மூலமும் அதானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு தாரை வார்க்கிறது. இது அரசே நடத்தும் கொள்ளை. இன்னொரு புறம் நிதி நிறுவனங்கள் மூலம் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கிறது தமிழக பாஜக கும்பல்.

இந்த கொள்ளையர்களை விசாரணை மூலமோ, நீதிமன்றம் மூலமோ தண்டித்து விட முடியாது. அனைத்து இடங்களிலும் பாசிச கும்பலுக்கு ஆதரவான நபர்களை அமர்த்தியுள்ளார்கள். ஆகையால் இவர்கள் மக்கள் மன்றம் முன்னே நிறுத்தப்பட்டு, அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட வேண்டும்..

  • நலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here