தீபாவளி பண்டிகையை கடனை வாங்கியாவது கொண்டாட வேண்டும் என்று சாதாரண உழைக்கும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அதேபோல் ‘குடிமகன்களும்’ அரசின் அபார ஒத்துழைப்புடன் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
ஒவ்வொரு தீபாவளி பண்டிகை, பொங்கல் பண்டிகை என்றால் இலக்கு வைத்து சாராய விற்பனை செய்து வந்த அரசு, அதன் மீது விமர்சனங்கள் அதிகமானதும் இலக்கு என்று சொல்லாமல் தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக்குகளில் 600 கோடிக்கான சாராயத்தை குவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 நாட்களில் 438 கோடிக்கு விற்பனையானதை அடுத்து இந்த ஆண்டு யார் எந்த சரக்கு கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுப்பதற்கு ஏதுவாகவே சாரயம் டாஸ்மாக்கில் குவிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப இந்த தீபாவளியில் சரக்கு விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும் விற்பனை நடந்துள்ளது. தீபாவளி பண்டிகை அன்று (ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. இதனை அரசு வேண்டுமானால் சாதனையாக கொள்ளலாம். குறிப்பிட்ட இலக்கை அடைந்ததற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுக்கலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு இது வெட்கக் கேடான விசயம்.
“கடந்த 18-ந் தேதி ரூ.230 கோடியே 6 லட்சத்திற்கும், 19-ந் தேதி ரூ.293 கோடியே 73 லட்சத்திற்கும் விற்பனை நடந்துள்ளது. தீபாவளி பண்டிகை அன்று (ரூ.266 கோடியே 6 லட்சத்திற்கும் என மொத்தம் ரூ.789 கோடியே 85 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது.”
2016 சட்டமன்றத் தேர்தலில் டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் காரணமாக திமுக பூரண மதுவிலக்கையும், அன்று ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படிப்படியான மதுவிலக்கையும் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தன. அந்த தேர்தலில் திமுக தோல்வியுற்று அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா முதலில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்தார். அதன் பின்பு மதுக்கடைகள் மூடப்படாமல் புதிய கடைகளை திறக்கப்பட்டது. 2025 மார்ச் நிலவரப்படி 4829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
டாஸ்மாக்கிற்கு எதிரான தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நடந்தாலும் குறிப்பிட்ட அந்த பகுதியில் இருந்து அகற்றப்படும் டாஸ்மாக் கடைகள் மற்றொரு இடத்தில் திறக்கப்படுகின்றன. திமுக 2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகும் டாஸ்மாக் கடைகளை குறைப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக விற்பனை அதிகரிப்பது எப்படி என்றே சிந்திக்கிறது. அதற்கேற்ப டெட்ரா பாக்கெட்டில் மதுபானங்களை கொண்டு வருவதாக அறிவித்து பின் வாபஸ் பெற்றது. மால்களில் சரக்கு கிடைப்பதற்கு ஏற்பாடுகளை செய்தது.
தமிழ்நாட்டில் அதிக பாதுகாப்புடனும் கண்காணிப்புடனும் செயல்படும் துறை என்றால் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் என்ற டாஸ்மாக் தான். பல இடங்களில் காவல்நிலையத்திற்கு அருகிலேயே சாராயக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகையால் குடிக்க வரும் ‘குடிமகன்கள்’ தக்க பாதுகாப்புடன் குடித்துவிட்டு செல்லலாம். இதுவும் அரசு தனது சாதனை என்று சொல்லிக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்ல குடிமகன்களின் சேவைகளுக்காக டாஸ்மாக் 24 மணிநேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குடிமகன்கள் தனது அவசர தேவைக்காக சட்டர் கதவை தட்டினால் போதும் எந்நேரமும் சாராயம் கிடைக்கும் வசதியுடன் தான் டாஸ்மாக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுபோல் கேவலமான சேவை எதுவும் கிடையாது. இதை யாராவது புகார் அளித்தால் எதுவும் தெரியாதது போல் அதிகாரிகள் கேட்டுக் கொள்வார்கள். நடவடிக்கை சிலநேரங்களில் புகார் அளிப்பவர்கள் மீதும் பாயலாம்.
ஏனென்றால் அதிகாரத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ள அதிகாரிகள் முதற்கொண்டு அமைச்சர் வரை தெரிந்தே நடந்துக் கொண்டிருக்கிறது. காலை நேரங்களில் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் தினக்கூலிகள் குடிக்கிறார்கள். இதனால் சமூகம் சீரழிவதோடு சம்பந்தப்பட்ட குடும்பமும் வாழ்வாதாரத்தை இழக்கிறது.
படிக்க:
♦ டாஸ்மாக்: தேசத்துரோக வழக்கிலிருந்து தோழர்கள் விடுதலை?
♦ உத்தரப்பிரதேசத்தில் பொங்கி வழியும் சாராயம் !
குடும்ப பெண்களுக்கு மாதம் ஆயிரம், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி இதையெல்லாம் செய்துக் கொடுத்தும் அவர்களுக்கு எந்த பயனும் இல்லாமல் செய்து விடுகிறது அரசின் 24 மணிநேர டாஸ்மாக் சேவை. குடித்து விட்டு வேலைக்கு செல்லாமலும் அல்லது வேலைக்கு சென்று வந்து சம்பாதித்த பணத்தை டாஸ்மாக்கில் விடும் குடிமகன்களால் குடும்ப வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவது அரசிற்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் உழைக்கும் மக்கள் நலனிலும் அரசிற்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.
”போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டாலும் அது ஒன்றும் உதவவில்லை என்பதையே பின்வரும் புள்ளிவிவரங்க்ள் காட்டுகின்றன. கடந்த நிதியாண்டில் 45 ஆயிரத்து 855 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் இந்த நிதியாண்டில் 48 ஆயிரத்து 384 கோடியாக அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமானம் அதிகரித்து வருவது மக்களின் வாழ்க்கை சூனியமாவதையே காட்டுகிறது.
உண்மையாகவே மக்கள் நலனின் மீது அக்கறை கொண்ட அரசாக திமுக அரசு இருந்திருந்தால் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் டாஸ்மாக்கின் எண்ணிக்கையை குறைத்திருக்கும். அப்படியில்லாமல் இலக்கு வைத்து விறபனை செய்கிறது. நவீன டாஸ்மாக் கடைகளை உருவாக்கிறது. பணமில்லாமல் ஆன்லைன் பணபரிவர்த்தனை மூலம் விற்பனை செய்து மக்களின் பொருளாதாரத்தை சூறையாடுகிறது.
டாஸ்மாக் போதை மட்டுமில்லாமல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்தில் சுலபமாக கிடைப்பதனால் இளைஞர்கள், சிறுவர்களும் சீரழிந்து வருகிறார்கள். ஒரு தலைமுறையே போதையின் பிடியில் சிக்கியுள்ளது. இதனை உணர்ந்து தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு போதை கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஓர் மக்கள் போராட்டம் அரசை பணிய வைக்கும்.
- நலன்








மக்களுக்கு பகுத்தறிவு சுயமரியாதை சமத்துவம் என்ற அறிவு உணர்வை வளர்க்க அரசுகள் முயல வேண்டும்.
ஆனால் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத அவலநிலை தொடர்கிறது.
மக்களின் எழுச்சியே இதற்கு முடிவு கட்ட வேண்டும்.