ஒரே நாடு, ஒரே மதம் என்ற கோட்பாட்டில் பாஜக அரசு தற்போது ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்ற கருத்தியலில் தேசம் முழுமைக்குமான CUET எனப்படும் பொது நுழைவுத் தேர்வை கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் இனி 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் மேல்படிப்பை தொடர CUET எழுதியே ஆக வேண்டும்!

அதாவது நீட்டைப் போல இது ஒரு கியூட்! இதுவும் என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். நீட்டை எதிர்ப்பதைவிட நூறு மடங்கு அதிகமாக எதிர்க்க வேண்டிய தேர்வு தான் இந்த கியூட்டாகும்! காரணம், இனி என்சிஇஆர்டி கல்வி முறையிலே படித்து வராதவர்கள் பாடு திண்டாட்டம் தான்! ஆகவே, மாநில பாடதிட்டம் இனி எதற்கும் லாயக்கற்றதாகிவிடும். 12 ஆம் வகுப்பு வரை படித்து வரும் படிப்பெல்லாம் ஒரு படிப்பே இல்லை. வேண்டுமானால் ஒருவர் படித்த 12 ஆம் வகுப்பு தகுதியை நுழைவு தேர்வுக்கான தகுதியாக கருதி பெருமைபட்டுக் கொள்ளலாம்!

பன்முக வாழ்வியலும், பன்முக கலாச்சாரமும், பன்முகத் திறமைகளும் கொண்ட ஒரு நாட்டில் அந்தந்த மண் மற்றும் மாநிலம் சார்ந்த திறமைகளை அந்தப்படியே அங்கீகரித்து நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும்!

உலகின் மிகப் பெரிய வளர்ந்த நாடுகளே கூட இது போன்ற ஒன்றை நடைமுறைப்படுத்தவில்லை என கல்வியாளர் ஜவகர் நேசன் குறிப்பிடுகிறார். ஏனென்றால், ஒற்றை நுழைவு தேர்வை மட்டும் கொண்டு நடத்தப்படும் மாணவர் சேர்க்கை ஒரு தலைபட்சமானது என அவர் கூறுகிறார். அந்தந்த பல்கலைக் கழங்களே நுழைவு தேர்வை நடத்தும் முறையே உலகம் முழுமையும் உள்ளது’’ என்கிறார்!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சியூசெட் எனப்படும் மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை அன்றே அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களும் ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துவிட்டன!  இந்த அனுபவத்தில் பாடம் கற்காமல், புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு, மத்திய பாஜக அரசின் சார்பில் CUET தேர்வு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை நாம் எப்படி புரிந்து கொள்வது?

யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, நாடு முழுவதும் 45 மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது. இந்தப் பல்கலைக் கழகங்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளில் இந்தத் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், இந்த நுழைவுத் தேர்வு முறையைப்  பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதானது மிக ஆபத்தான போக்காகும்.

யுஜிசி தலைவர் மண்டலா ஜெகதீஷ் குமார் அவர்களே ஒப்புதல் வாக்குமூலமாக ”மத்திய பல்கலைக் கழகங்களுக்கான இளங்கலை நுழைவுத் தேர்வை ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு (one nation, one exam) என்று நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்.    இதன் மூலம் கட்-ஆஃப் முறை மாற்றப்பட்டு,  நுழைவுத் தேர்வின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும்’’ என்கிறார்!

பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு கல்லூரிகளில் சேர பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற புதிய தேசியக் கல்விக் கொள்கை குழுவின் வரைவு அறிக்கையில் செய்யப்பட்டுள்ள பரிந்துரை தற்போது நடைமுறை வடிவம் காண உள்ளது!

என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் இந்த பொது நுழைவுத் தேர்வு  அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகுமாம்.  இந்த ஆண்டு  ஜூலை முதல் வாரத்தில் தேர்வு நடைபெறுமாம். இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாதாம்! கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது.

இவை யாவும் 2019ஆம் ஆண்டிற்கான தேசிய கல்விக் கொள்கை குறித்து திட்டக் குழுவின் வரைவு அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில், பனிரெண்டாம் ‌வகுப்பு முடித்த மாணவர்கள் எந்த மேற்படிப்பை தொடர வேண்டுமானாலும் ஒரு பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய தேசிய வரைவுக் கல்விக்கொள்கையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ்வரும் அரசுக் கல்லூரிகளில் எல்லா இளங்கலைப் படிப்புகளிலும் மாணவர்கள் சேர்வதற்குத் தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரை  இடம்பெற்றுள்ளது.

அரசுக் கல்லூரிகளில் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு என்னும் பரிந்துரை ஒருவேளை ஏற்றுக் கொள்ளப்படும்பட்சத்தில், அடுத்த கல்வியாண்டு முதல் அதற்கான நுழைவுத் தேர்வுமுறை அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது.

ஏற்கெனவே, மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ போன்ற தேர்வுகளை நடத்திவரும் தேசிய தேர்வு நிறுவனமான என்.டி.ஏ அமைப்புதான், இந்தத் தேர்வையும் நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வானது, பல்வேறு மொழிகளில் நடத்தப்படுமாம் , தேர்வுக்குத் தயார் செய்வதற்கான புத்தகங்கள் அனைத்து மொழிகளிலும் வழங்கப்படுமாம்! இவை கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பொது நுழைவுத் தேர்வானது மாணவர்களின் வசதிக்கேற்ப ஒரு ஆண்டில் பலமுறை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் திறன் அறிவு, மொழித்திறன் மற்றும் தேர்ந்தெடுக்க உள்ள சிறப்பு பாடப்பிரிவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்தத் தேர்வானது நடத்தப்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆக, எல்லா சலுகைகளையும் தந்து நுழைவு தேர்வு என்ற வளையத்திற்குள் இழுக்கிறார்கள்! அதாவது, கற்றல் என்பதை கல்வித் துறையில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, கோச்சிங் பெற்று மதிப்பெண் அடிப்படையில் எழுதப்படும் நுழைவு தேர்வையே கல்வித் தகுதியாக்குவது மூடத்தனமாகும்!

இந்தத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு கல்லூரிகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் தேசியக் கல்விக் கொள்கைக் கு‌ழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அருகாமையில் உள்ள கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்கும் உரிமை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுவிடும்!

மேல் படிப்பை ஒரு பெரும் சுமையாகவும் எட்டாக் கனியாகவும் மாற்றி, ஏழை எளிய பிரிவு மக்களை உயர் கல்விக்குள் நுழையவிடாமல் செய்வதற்கே இந்த கியூட் தேர்வு பயன்படும்! இதை துளிர்விடும் போதே எதிர்க்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

நன்றி: அறம் இணைய இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here