அமெரிக்க அதிபரால் பிப்.28 இல் அடாவடியாக துவக்கி வைக்கப்பட்டுள்ள வளைகுடா போரானது தற்போது ஒரு மாதத்தை எட்ட உள்ளது. இந்த சூழலில் தன்னிச்சையாக 5 நாள் போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஏன் இந்த அறிவிப்பு? அதன் பின்னால் என்ன இருக்கிறது என்பதையும் பார்க்கலாம்.
அமெரிக்காவில் இருந்து ஈரானானது சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஈரான் அமெரிக்கா பக்கம் திரும்பியே பார்க்க வில்லை. இருநாட்டுக்கும் இடையில் எந்த ஒரு மோதலையோ சீண்டலையோ ஈரான் செய்யவில்லை. அப்படி இருந்தும் தன்னிச்சையாக திமிரெடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியமானது ஈரானின் அதிஉயர் தலைவரை படுகொலை செய்தது.
ஒரு நாட்டின் தலைவரை படுகொலை செய்யவும், அந்நாட்டின் மீது போர் தொடுக்கவும் ஏதாவது காரணம் அமெரிக்காவின் இடம் உள்ளதா? இதுவரை தெளிவான காரணம் எதையும் அமெரிக்கா முன் வைக்கவில்லை.
ஈரானானது ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிக்கிறார்கள் என்ற காரணம் உலகின் பல நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். அப்படி இருந்தால் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அத்தனை நாடுகளையும் குண்டு வீசி அழிக்கலாமா? அதன்படி பார்த்தால் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா தான். எனவே அமெரிக்கா முதலில் தன்னை தானே அழித்துக் கொள்ளுமா? இந்த கேள்விகளுக்கு அமெரிக்க அதிபரிடம் பதில் இல்லை.
ஏறித் தாக்கும் ஈரான்!
அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாட்டை எதிர்கொள்ளும் தெம்பும், திராணியும் ஈரானுக்கு இருக்காது என்று குறை மதிப்பீடு செய்துவிட்டார் டிரம்ப். தமது தலைவரை முதல் நாள் சண்டையிலேயே பலி கொடுத்த போதும் அடுத்த தலைவரை தேர்வு செய்து திருப்பி அடிக்கிறது ஈரான்.
போரை வளைகுடாவின் வரம்புக்குள்ளேயே முடித்து விடலாம் என்று அமெரிக்கா கருதி இருந்தாலும் ஈரானின் ஏவுகணைகள் அதை சுட்டுப் பொசுக்குகின்றன. அமெரிக்கா எப்படி தனது நீர்மூழ்கி மூலம் இந்திய பெருங்கடலில் வைத்து ஈரானிய கடற்படை கப்பலை தாக்கி அழித்ததோ அதற்கு பதிலடியாக, அதே இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான டிகோ கார்சியா தீவை குறி வைத்து இரு ஏவுகணைகளை ஏவியுள்ளது. போரின் தாக்குதல் இலக்குகள் ஈரானில் இருந்து 4000 மைல் தொலைவில் உள்ள இடமாகவும் மாறுகிறது.
பாசிஸ்டுகள் கோழைகளே!
ஈரானை வம்புக்கு இழுத்து கோதாவில் இறக்கி விட்ட அமெரிக்கா இப்பொழுது துணைக்கு வாருங்கள் என்று சுற்றிலும் உள்ள நாடுகளிடம் கெஞ்சியும், மிரட்டியும் பார்க்கிறது. இஸ்ரேலைத் தவிர்த்து வேறு ஒரு நாடும் வருவதாக இல்லை.
படிக்க:
♦ இந்தியாவின் துரோகத்தை புறந்தள்ளி இந்திய எண்ணெய் கப்பலை பாதுகாப்பாக அனுப்பும் ஈரான்!
♦ அமெரிக்க மேலாதிக்கத்துக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் ஈரான்!
உலகையே பலமுறை அழிக்கக்கூடிய ஆயுதங்களை வைத்திருந்தும் அமெரிக்கா சின்னஞ்சிறு ஈரானைக் கண்டு அஞ்சுகிறது. தனியாக போய் வீழ்த்த முடியாமல் பம்மிப் பதுங்குகிறது.
தனிமைப்படும் அமெரிக்கா!
நாடுகளுக்குச் செல்ல வேண்டிய சரக்குக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் காத்திருக்கின்றன. வளைகுடா நாடுகளில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்த படகுகளும் இந்தியாவிலிருந்து சென்ற மீனவர்களும் இப்போது வருவாயை இழந்து தவித்து வருகின்றனர்.
நமது எதிரி நாடான அமெரிக்க – இஸ்ரேலிய கப்பல்களைத் தவிர பிற நாட்டுக் கப்பல்களை தாக்க மாட்டோம்; பாதுகாப்பாக கடந்து செல்ல அனுமதிக்கிறோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவுக்கான கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையை கடந்து இந்தியாவையும் வந்தடைந்துள்ளன.
இதன் மூலம் தமது சரக்குகளை எதிர்பார்த்து காத்திருக்கும் உலக நாடுகள் அமெரிக்காவுடன் உறவை துண்டித்துக் கொண்டால் நல்லது என நினைக்கின்றன. அப்படி உலக நாடுகள் வெளிப்படையாக அறிவித்தால் அது தனக்கு மாபெரும் பின்னடைவாக மாறும் என்பதால், தானாக முன் வந்து 5 நாட்களுக்குப் போர் நிறுத்தம் என அறிவித்துள்ளார். இதன் மூலம் வளைகுடாவில் தேங்கியுள்ள சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக வெளியேறிவிடும். அதனால் உலக நாடுகளில் இருந்து தனக்கு தரப்படும் நெருக்கடியும் அழுத்தங்களும் விலகிவிடும் என்று கருதுகிறார் டிரம்ப்.
போரை நிறுத்துவது எப்படி?
பாதாள உலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த பூதத்தை எழுப்பி உயிர் கொடுத்து விட்ட மந்திரவாதி ஒரு கட்டத்தில் அந்த பூதத்தை அடக்கி ஆள முடியாமல் அலறுவதை போலத்தான் தற்போதும் நடக்கிறது. ஈரானுடனான போரை தொடங்கி விட்ட அமெரிக்கா அந்த போரை முடிக்க முடியாமல் தவிக்கிறது.
அமெரிக்காவை எச்சரிக்கவோ, கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ திராணி கொண்டதாக ஐநாவும் இல்லை; நேட்டோவும் இல்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் அண்டை நாடுகளை தாக்குவது குறித்துதான் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். முதலில் கொமேனியை படுகொலையை செய்து போரை தொடங்கி வைத்த அமெரிக்கா பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகளிலும் பெரும்பான்மையினர் – இந்தியா உட்பட – ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது வெட்கக்கேடானது.
ஊருக்குள் ஒரு தறுதலை தொல்லை கொடுத்தால், ஊரே சேர்ந்துதான் தலையில் நாலு போட்டு பணிய வைப்பார்கள். அமெரிக்காவின் தலையில் நாலு போடுவதற்கு உலக நாடுகள் எதுவும் முன்வரவில்லை. போரால் பாதிக்கப்படும் மக்கள் போராட்டங்களே அதை செய்ய வைக்கும்.
- இளமாறன்







வளைகுடாப் போரில் அமெரிக்காவின் முகத்திரையை மட்டுமல்ல; அதன் அடாவடித்தனத்தை கண்டு கொள்ள மறுக்கும் பிற உலக நாடுகளையும், குறிப்பாக போரை காரணம் இன்றி தொடங்கி வைத்து ஈரானின் உச்சபட்ச தலைவர் கோமேனியை கொன்றொழித்த ஈனத்தனத்தையும், ஐநா.சபை, நேட்டோ அதிகாரம் படைத்த கொம்பன்களையும், ட்ரம்பின் 5 நாள் போர் நிறுத்தத்திற்கான உண்மை காரணத்தையும் கட்டுரையாளர் தோழர் இளமாறன் சுருக்கமாக இருப்பினும் சிறப்பாகவே தோளுரித்துள்ளார். பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
ஐந்து நாள் போர் நிறுத்தம் ட்ரம்பின் அறிவிப்பில் காரணம் என்ன ?
பாதாள உலகத்தில் தூங்கிக் கொண்டிருந்த பூதத்தை எழுப்பி உயிர் கொடுத்த மந்திரவாதி
ஒரு கட்டத்தில் அந்த பூதத்தை அடக்கி ஆள முடியாமல் கண்டு அலறுவது போல் ஈரானுடன் போரை தொடங்கி விட்ட அமெரிக்கா அதை முடிக்க முடியாமல் திணறுகிறது என்ற உதாரணத்தை சுட்டிக்காட்டி அருமையாக இந்த கட்டுரை எழுதி உள்ளார் கட்டுரை ஆசிரியர் தோழர் இளமாறன் அவர்கள்