பத்திரிக்கைச் செய்தி

நாள் 06-03-2023


சூத்திர அர்ச்சக மாணவரை பணிநீக்கம் செய் ! பார்ப்பன அர்ச்சகரை பணியமர்த்து!மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய மனுதர்ம தீர்ப்பு!
கோவில்களை அபகரிக்க துடிக்கும் சங்பரிவார் கும்பல்களின் முயற்சியை முறியடித்து கோயில்களை பாதுகாப்போம்!

அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 மாணவர்களில் முதல் கட்டமாக 24 அர்ச்சக மாணவர்களுக்கு 2021 ஆகஸ்டு மாதம் 14ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால்  பணிநியமனம் வழங்கப்பட்டது.

அதில், திருச்சி குமார வயலூர் முருகன் கோவிலில் பணியமர்த்தபட்ட திருவண்ணாமலை பாட சாலையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த பிரபு, பழநி பாட சாலையில் பயிற்சி முடித்த ஜெயபால் ஆகிய இரு மாணவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ததுடன், வழக்குபோட்ட பார்ப்பன அர்ச்சகர்களான கார்த்தி, பரமேஸ்வரன் ஆகியோரை இரண்டு மாதத்தில் அதே கோவிலில் பணியமர்த்த வேண்டும் என  உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.

1971 –ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு சட்டம் இயற்றியதற்கு எதிராக பார்ப்பனர்கள் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகளால் தள்ளுபடி செய்யபட்டு அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் செல்லும் என 1972 சேசம்மான் வழக்கில் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதன் பின்னர் 2006-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு அரசாணைக்கு எதிராக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பார்ப்பனர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து அனைத்து சாதி அர்ச்சகராகலாம் என்ற அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் 2015-ல் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னரும் இன்று 2023 –ல் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து குறிப்பிட்ட நீதிபதிகள் முன் வழக்கை கொண்டு வந்து பார்ப்பனர்கள் மனுதர்மத்தை நிலைநாட்டி தீர்ப்பு பெற்றால் நீதிமன்றத்தை எப்படி நம்புவது? இன்னும் எத்தனை வருடங்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பணிக்காக வழக்கு நடத்துவது?

1969 -ல் பெரியார் கருவறை நுழைவு போராட்டம் அறிவித்தார். 2023 –ல் பெரியாரை ஏற்கும் கட்சிகள் அனைத்தும் அந்த போராட்டத்தை நடத்தி அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண்பது மட்டுமல்ல, தமிழக கோவில்களை அபகரிக்க துடிக்கும் சங்பரிவார் கும்பலின் முயற்சியை முறியடித்தாக வேண்டும்.

பொது கோவிலில், அரசு கோவிலில் தகுதியும் பயிற்சியும் உள்ள ஒருவரை அர்ச்சகராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு சட்டம் இயற்றி நியமிக்கிறது. அதை நீதிமன்றம் குறுக்கே புகுந்து தடுக்கிறது. கருவறை தீண்டாமையை புனிதம், ஆகமம் என்ற பெயரால் நிலைநிறுத்தி, கோவிலை ஒரு குறிப்பிட்ட சாதியினரிடம் மட்டுமே ஒப்படைக்க முயன்றால் சமத்துவத்தை, சமூக நீதியை நிலைநாட்ட மக்கள் போராட்டம்தான் ஒரே தீர்வு.

திருச்சி குமார வயலூர் முருகன் கோவிலில் தகுதியும் பயிற்சியும் உள்ள மாணவர்களுக்கே இந்த நிலை என்றால், திருவண்ணாமலை, திருவரங்கம், மதுரை போன்ற பெரிய கோவில்களில் பார்ப்பனர் அல்லாதவர்கள் அர்ச்சகராக்க முடியுமா? யோசித்து பாருங்கள்.

ஜனாதிபதி, நீதிபதி, பிரதமர், கலெக்டர், எஸ்.பி ஆகிய பதவிகளுக்கு வர சாதி தடையில்லை. ஆனால் கருவறையில் மணியாட்ட பார்ப்பனருக்கு மட்டுமே தகுதி உள்ளது. மற்றவர்கள் சாமியை தொட்டால் தீட்டாகிவிடும் என இன்றைக்கும் சொல்கிறான் என்றால் பொதுமக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.

மக்கள் கட்டிய கோவிலில், பக்தர்கள் வழங்கும் தட்டுகாசில் வயிறு வளர்க்கும் பார்ப்பனர்கள், கோவிலை அதிகார மையமாக மாற்றி வைத்துக் கொண்டு, கோவிலின் சொத்துக்களை வருமானங்களை கையகப்படுத்த முயன்று வரும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கூட்டத்தோடு இணைந்து மாபெரும் சதிதிட்டத்தை தீட்டி இந்து சமய அறநிலையத்துறையை ஒழிக்க முயற்சி செய்கின்றனர்.

இதற்கு சில இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், சில நீதிபதிகளும் சில பத்திரிக்கையாளர்களும் சங்பரிவார் கூட்டத்திற்கு எட்டப்பர் வேலை பார்த்து வருகிறார்கள்.

இன்று தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. பா.ஜ.க தவிர  அனைத்து கட்சிகளும் முழுமையாக அனைத்து சாதி அர்ச்சகர் நியமனத்தை ஆதரிக்கின்றன. அர்ச்சகர் பயிற்சி முடித்து பததாண்டுகளுக்கும் மேலாக காத்திருந்து டெல்லி வரை வழக்கு நடத்தி வெற்றி பெற்று 206 அர்ச்சக மாணவர்களில் முதல் கட்டமாக 24 பேருக்கு மட்டும் தமிழக முதல்வர் நேரடியாக பணி நியமனம் வழங்கி இரண்டு ஆண்டுகள் முடியவில்லை.

திருச்சியில் பணியாற்றி வரும் அந்த மாணவர்களின் பணிநியமனத்தை உயர்நீதிமன்றம் உடனடியாக ரத்து செய்து உத்திரவிடுகிறது என்றால் பார்ப்பானுக்கு ஒரு நீதி பஞ்சம சூத்திரனுக்கு ஒரு நீதி என மனுதர்மத்தின் ஆட்சியை நடத்த பார்க்கிறார்கள்.

சட்டப்போராட்டத்தை அரசு நடத்தட்டும். மக்கள் போராட்டத்தை நாம் நடத்துவோம். கருவறை தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்! தமிழக கோவில்களை கைபற்றத் துடிக்கும் சங்பரிவார் கும்பல்களை விரட்டி அடிப்போம்!

தோழமையுடன்

வழக்கறிஞர் சி.ராஜு
பொதுச் செயலாளர்
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு-புதுவை

தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்
நாள் 10-3-2023 வெள்ளி காலை 10 மணி

திருச்சி குமார வயலூர் முருகன் கோவிலில் உரிய தகுதியுடன் நியமிக்கபட்ட
அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் பணி நீக்கம் !
பிறப்பால் பார்ப்பனர் இல்லையாம்! மதுரை உயர்நீதிமன்றத்தின் மனு நீதி தீர்ப்பு !
தமிழக அரசே!
ஆகமத்தின் பெயரால் பார்ப்பனர் மட்டுமே அர்ச்சகர்
என்னும் கருவறை தீண்டாமையை ஒழிக்க
தனிச்சட்டம் இயற்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here