டந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பேசிய மோடி “அமலாக்கத்துறை தான் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறது” என்று தனது ஆட்சியின் யோக்கியதையையும், ஒன்றிய விசாரணை அமைப்புகளின் இலட்சணத்தையும் வெளிப்படுத்தினார். இந்தக் கூற்றின்படி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீதுதான் அமலாக்குத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ போன்ற ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் ஏவிவிடப்படுகின்றன என்ற உண்மையையும் ஒத்துக் கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களில் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சிகளை சேர்ந்த முக்கிய நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மேற்கு வங்காளத்தில் திரிணமூல் காங்கிரசைச் சேர்ந்த பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோபன் சட்டர்ஜி, பார்த்த சட்டர்ஜி, அனுபிரதா மொண்டல், ராஜு சஹானி போன்றோரும்; தெலுங்கானாவில் ஆளும் பாரதிய ராஷ்டிர சமதி எம்.எல்.ஏ-வும் சந்திரசேகரராவின் மகளுமான கவிதா மற்றும் சுங்கத்துறை அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி போன்றோரும்; பீகாரில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராபரி தேவி, மகள் மிசாபாரதி, மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீதும் சிபிஐ வழக்கு பதிந்து விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா. ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுவிட்ட மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கண்ட அனைவரும் யோக்கிய சிகாமணிகள் என்றோ சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் இவர்களை விசாரிக்க கூடாது என்றோ நாம் சொல்லவில்லை. ஆனால் அதே சமயத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற அமைப்புகளின் நோக்கம் ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதோ, மக்களின் பணத்தை கொள்ளையடிப்பவர்களை சட்டப்படி தண்டிப்பதோ இல்லை. மாறாக, பா.ஜ.க-வுக்கு யாரெல்லாம் இடையூறாக இருக்கிறார்களோ, பணிய மறுக்கிறார்களோ அவர்களை மிரட்டி வழிக்கு கொண்டுவருவதுதான்.

ஊழல் பேர்வழிகளை உண்மையிலேயே தண்டிக்க வேண்டும் என்று மேற்கண்ட அமைப்புகள் விரும்பினால் மோடி பிரதமராக பதவியேற்றது முதல் ரபேல் விமான கொள்முதல் ஊழல், PMCare fund ஊழல், பணமதிப்பிழப்பு, பயிர் காப்பீட்டு ஊழல், 5Gஅலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், வெறும் 8 ஆண்டுகளில் அதானி உலகின் 2-வது பணக்காரனாக செய்யப்பட்ட ஊழல் என்று ஒவ்வொன்றாக வெடித்துக்கிளம்பும் ஊழல்களை முதலில் விசாரிக்கவேண்டும். அவற்றின் சூத்திரதாரியான திருவாளர் மோடியைதான் முதன்மை குற்றவாளியாக விசாரிக்கவும் தண்டிக்கவும் வேண்டும்.


இதையும் படியுங்கள்: 5ஜி ஏலம் அம்பானியின் ஜியோ ஏகபோகம்!


அதேபோல கமிஷன் வாங்கிக் கொண்டு வராக்கடன் பேர்வழிகளை வெளிநாட்டுக்கு தப்புவித்தது, குஜராத்தின் உள்துறை அமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோரைக் கொன்ற குற்றச்சாட்டில் அமித்ஷாவையும்தான் குற்றவாளிக்கூண்டில் நிற்கவைத்து விசாரிக்கவேண்டும். இந்த விசாரணை அமைப்புகள் உண்மையாக, நேர்மையாக நடந்திருந்தாலே நாடெங்கும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் RSS-பா.ஜ.க. உள்ளிட்ட சங்கிகள் கூட்டம் அனைத்தும் ஜெயிலுக்குள்தான் இருந்திருக்கும்.

“சிசோடியா பாஜக-வில் சேர்ந்துவிட்டால் அவர்மீதான அனைத்து வழக்குகளையும் சிபிஐ வாபஸ் பெற்றுவிடும்” என்று அரவிந்த் கெஜ்ரிவால் சொல்வதும் ஒருவகையில் உண்மைதான்.

15,000 கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியிருந்த தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் 2019-ல் பா.ஜ.க.-வில் சேர்ந்தவுடன் அவர்மீதான ஊழல் புகார் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது என்பது வரலாறு. யாரெல்லாம் ஊழல், ஹவாலா மோசடி, சிட்பண்ட் மோசடி, கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், போதை பொருள் கடத்தல் போன்ற எந்த ஒரு குற்றபின்னணியைக் கொண்டிருந்தாலும் அவர்கள் பா.ஜ.க.-வில் இணைவதன் மூலம் “ஞானஸ்நானம்” பெற்று புனிதர்கள் ஆகிவிடுகின்றனர். இதுதான் பாசிச பா.ஜ.க.-வின் ஆட்சியில் ஒன்றிய புலனாய்வு நிறுவனங்களின் யோக்கியதை.

கடந்த காலங்களிலும் ஆட்சியில் இருந்த கட்சிகள் புலனாய்வு நிறுவனங்களை இதுபோன்று எதிர்கட்சிகளையும், விமர்சனம் செய்பவர்களையும் நோக்கி ஏவியுள்ளது. எல்லோரும் இப்படி தான் என மழுப்பப்ப பார்க்கின்றனர். ஆனால், எதார்த்தம் வேறொன்றாக உள்ளது. கடந்த  மன்மோகன் சிங் ஆட்சி (2004-2014) காலத்தில் அமலாக்கத்துறை செய்த சோதனைகளை விட மோடியின் ஆட்சி காலத்தில் (2014-2023) 27 மடங்கு அதிகமான சோதனைகளை மேற்கொண்டுள்ளது.  இதற்கு ஏற்றாற்போல் சட்டத்தையும் திருத்திக் கொண்டது, நீதிமன்றமும் அதை அங்கீகரித்து‌ ஏற்றுக்கொண்டது.  இந்த நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்புள்ளவர்களை கொண்டு நிரப்பி பாசிசமயப்படுத்துகிறது.

ஏறத்தாழ தனது ஆட்சியை புலனாய்வு நிறுவனங்களின் பலத்தை கொண்டே நடத்துகிறது.இதுதான்  தற்போது நடைமுறையில் உள்ள ‘ஜனநாயகமாக’ உள்ளது.

ஜுலியஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here