மனு சாஸ்திரம் எரிக்கப்பட வேண்டியது அவசியம். பேராசிரியர். அருணன்

மனுசாஸ்திரம் என்பது பற்றி பொதுவாக கேள்விபட்டிருப்பீர்கள், ஆனால் மனுசாஸ்திரம் போல, இந்த நாட்டிலே, ஒரு குறைந்த இடைவெளியிலே, கிட்டதட்ட ஒரு இருபது சாஸ்திரங்கள் உருவாயின. அதிலே மிகப் பழமையானது – இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது – இருப்பதிலே மிகப் புனிதமானது என்று சொல்லப்படுவது மனுசாஸ்திரம். அந்த மனுசாஸ்திரத்தை ஏன் எரிக்கவேண்டும்? என்று விளக்குவதற்கான அருமையான விளக்க மாநாடு. அதிலே பேசுவதற்கான வாய்ப்பினை வழங்கிய கொளத்தூர் மணி அவர்களுக்கும், விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே!  குரங்கிலிருந்து முழுமையான மனித குலம் பரிணமித்தபொழுது, அது ஒரு ஆதி மனித சமூகமாக இருந்தது; வேட்டை சமுதாயமாக இருந்தது; அதிலேயிருந்து அடிமை சமுதாயம் வந்தது. ஆண்டான்களும், அடிமைகளும் நிறைந்த சமுதாயம் கிரேக்கத்திலே வந்தது; ரோமாபுரியிலே அப்படி நடந்தது; இந்தியாவிலே அடிமைச் சமுதாயம் இருந்ததா என்பதைப் பற்றியெல்லாம் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து கொண்டிருக் கிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்வோம் ‘உங்களுக்கு சந்தேகமே வேண்டாம், இந்தியாவிலும் அடிமை சமுதாயம் நிலவியது’ ஆனால் அது இந்திய பாணி அடிமைச் சமுதாயமாக இருந்தது; அது வேறு ஒன்றும் இல்லை, அது தான் வர்ணா சிரமம், வர்ணாசிரம முறைமை என்பது அடிப் படையில் இந்தியாபாணி அடிமைச் சமுதாயம். இங்கே எடுத்துச் சொன்னாரே, அந்த ஜாதிய படிநிலை அமைப்பு பற்றி. தந்தை பெரியார் அவர்கள் அதை  ஒரு ஏணிப்படிபோல என்று சொன்னார் – ஏற்றமும் இறக்கமும் உள்ள ஒரு கட்டமைப்பு என்று சொன்னார் என்பதையெல் லாம் எஸ்.வி.ஆர் எடுத்துச் சொன்னாரே. அந்த பாணியிலே –- அந்த முறையிலே – அனேகமாக உலகத்தில் வேறு எங்கும் இல்லாத ஒரு பாணியிலே, இந்த துணைக்கண்டத்திலே அடிமை முறை உருவானது. அந்த அடிமை முறைக்கான ஆதாரம் – அச்சாரம் – ரிக்வேதத்திலேயே உண்டு.

இதையும் படியுங்கள்: வேதம் ஆகமம் மனுதர்மம் இவற்றை ஏன் கொளுத்த வேண்டும்?

ரிக் வேதத்திலே புருஷ சூக்தம் என்ற ஒரு பகுதி இருக்கின்றது. அது தான் அந்த பிரபலமான பகுதி. புருஷன் என்கிற அந்த கடவுளின் வாய் பிராமணன்; தோள் சத்ரியன்; தொடை வைசியன்; பாதங்கள் மட்டுமே சூத்திரன். இந்த அமைப்பு முறையை, தந்தை பெரியார் தான் மிக அற்புதமாக கேலி செய்தார். கடவுளின் இத்தனை அங்கங்களிலிருந்து நான்கு வர்ணங்கள் வந்ததாக சொல்கிறீர்கள், அப்படீன்னா இவங்க யாரும் ஒழுங்கா பிறக்க வில்லை என்றார் பெரியார்; பிறக்கவேண்டிய இடத்துல ஒழுங்கா பிறந்தவன் இந்தியாவிலேயே பஞ்சமன்தான் என்று தந்தை பெரியார் இந்த மண்ணிலே முழங்கினார். அந்த மண்ணிலே இருந்து, அவருடைய நினைவு நாளிலே இந்த மாநாடு என்பது மிக்க மகிழ்ச்சி. ஆகவே இந்த ஜாதி படிநிலை கட்டமைப்பு என்பது, ரிக் வேத காலத் தின் கடைசி கட்டத்திலே கிட்டதட்ட மூவாயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. ஆனால் மனுதர்மம் என்பது எப்போது வந்தது என்றால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான். நடுவில் இந்த ஆயிரத்தி அய்நூறு ஆண்டுகளிலே இந்த வர்ணாசிரமம் மெல்ல மெல்ல ஒரு வளர்நிலையை எட்டிக்கொண்டு வந்தது. அந்த காட்சியை நாம் இராமாயணத்தில் பார்த்தோம்.

சம்பூகன் வதம் பற்றி உத்தரகாண்டத்திலே மிக அற்புதமாக வர்ணிக்கிறார் வால்மீகி. இராமராஜ்யம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு பிராமணன் அழுது கொண்டு வருகிறான்; இராமா என்னுடைய பிள்ளை இறந்துபோனான், தந்தை இருக்க தமயன் இறப்பது என்பது மகா அதர்மம் – மகா கொடுமை. அது உன்னுடைய ஆட்சியிலே நடந்திருக்கிறது என்றால் என்ன பொருள்? உன்னுடைய ஆட்சி யிலும் அதர்மம் நடக்கிறது என்று பொருள். எங்கே அந்த அதர்மம் நடக்கிறது என்பதை கண்டுபிடித்து அதை களை என்று அந்த “பிராமணர்” புலம்பி அழுகிறார். உடனே இராமன் புறப்பட்டு சென்றான் எங்கே அதர்மம் நடக்கிறது என்று. அவன் கண் ணோட்டத்திலே வடக்கே போனான் காண முடியவில்லை; கிழக்கே போனான் காணமுடிய வில்லை; மேற்கே போனான் காணமுடியவில்லை; தெற்கேதான் ஒரு அதர்மத்தை கண்டான். என்ன அதர்மம் என்றால் சம்பூகன் என்பவன் தவம் செய்துகொண்டிருக்கிறான். தவம் என்றால் ஏதோ ஒரு நோக்கத்திற்கான ஒரு தீவிர பயிற்சி. அப்படிப்பட்ட பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் சம்பூகனைப் பார்த்து இராமபிரான் கேட்கிறான், ‘நீ எந்த வர்ணத்தவன்’ அவன் ஏதாவது பொய் சொல்லி தப்பித்திருக்கலாம், ஆனால் பளிச்சென்று சொல்கிறான், நான் தவம் செய்பவன் பொய் சொல்ல மாட்டேன், நான் நான்காம் வர்ணத்தவன் என்றான். சொன்ன உடனே மின்னல் போல (இது நான் சொல்லும் வாக்கியமல்ல, வால்மீகி சொல்கிறான்) மின்னல் போன்று தன்னுடைய வாளை எடுத்து அவனுடைய தலையை வெட்டினான் சிறீ இராமன்.

அடுத்து வால்மீகி சொல்கிறார், சம்பூகன் என்ற சூத்திரனின் தலையை வெட்டியவுடன் தேவாதி தேவர்கள் எல்லாம் மகிழ்ந்தனர்; இராமன் மீது பூமாரி பொழிந்தார்கள். மேலிருந்து கீழே வந்து, இராமா அற்புதமான காரியம் செய்து விட்டாய்; அதர்மத்தை ஒழித்துவிட்டாய்; உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேட்டார்கள். இராமன் மிகப் பவ்யமாக ஒரே ஒரு வரம் தான் கேட்டான். அந்த “பிராமணன்” அழுதானே அவன் பிள்ளை மீண்டும் பிறந்து வரவேண்டும் என்றான். அதற்கு தேவாதி தேவர்கள் என்ன தெரியுமா பதில் சொன்னார்கள், ‘கவலைப்படாதே, எப்போது நீ சம்பூகனைக் கொன்றாயோ அந்த கணத்திலேயே, அந்த பிராமணப் பிள்ளைக்கு உயிர் வந்துவிட்டது. சூத்திரர்களுடைய வாழ்வு செத்தால்தான் பிராமணர்கள் வாழமுடியும் என்பது தான் இராமாயணக் கால நீதியாக இருந்தது. இந்த இராமராஜ்யம் மீண்டும் வரவேண்டுமென்று சிலர் பேசுவது எவ்வளவு கொடுமை என்று நீங்கள் யோசிக்கவேண்டும். ஆனால் நான் இங்கு சொல்ல வருகிற செய்தி, இதுவும் கூட ஒரு அசாதாரணமான தனி நிகழ்சியாகத்தான் இராமாயணத்திலே காட்டப்பட்டதே தவிர, சூத்திரன் தவம் செய்தால் – சூத்திரன் கல்வி கேள்வியிலே இறங்கினால், இந்த குறிப்பிட்ட நியதியின்படி ராஜாவானவன் அவன் தலையை வெட்டவேண்டும் என்று ஒரு நீதி சாஸ்திரம் அன்றைக்கு இல்லை. முடிவெடுக்கிறான் இராஜா அந்த கணத்திலேயே வெட்டுகிறான் தலையை. அதனால்தான் தேவர்களெல்லாம் அசந்து போய் – ஆச்சரியப்பட்டுப் போய், சூத்திரன் தவம் இருந்தால் வெட்டக்கூடிய ஒரு இராஜா கிளம்பி விட்டானே எனச் சொல்லி பூமாரி பொழிந்தார்கள்.

இதே போல மகாபாரதத்திலே ஏகலைவனின் கட்டை விரலை வாங்கினார் துரோணர் என்று கேள்விபட்டிருப்பீர்கள். நான் என்ன பார்க்கிறேன் என்றால், வியாசரின் மகாபாரதத்தை முழுமையாக படித்ததால் சொல்கிறேன், வில்வித்தை கற்றுக் கொள்ள வருகிறான் ஒரு வேடவன் – நம்ம மொழியில் அவன் ஒரு பழங்குடி. உனக்கு நான் கற்று தரமுடியாது என்கிறான் துரோணர். பிறகு அவனாக தன்னுடைய சொந்த முயற்சியிலே அந்த வில்வித்தையை கற்றுக்கொள்கிறான்; அதைப் பார்த்த அர்ச்சுணன் என்னைவிட இன்னொரு வனுக்கு அதுவும் ஒரு “எஸ்.டி”க்கு (பழங்குடி) கற்று கொடுத்து விட்டாயே, நீ என்ன குரு என்று கேலி செய்கிறான். உடனே அந்த கணத்திலே யாரப்பா உனக்கு குரு என்று கேட்டவுடன், ‘நீதான்’ என்று அப்பாவித்தனமாக –புரியாமல், ஏகலைவன் சொன்ன அந்த ஒரு வாக்கியத்தை வைத்து, நான் தான் உனக்கு குரு என்றால் எங்கே தட்சணை? அப்பவும் காசு புடுங்கற புத்தி போகல. தட்சணை என்றால் ஏதோ நல்ல சொல் அல்ல காசு புடுங்கறது தான் – அதன் அர்த்தம். எங்கே குரு தட்சணை எடு என்றால் அந்த மலைவேடன் என்ன செய்வான் – எங்கே போவான் தட்சணைக்கு; என்ன தட்சணை வேண்டும்; என்னால் எதை  கொடுக்க முடியும் என்கிறான் ஏகலைவன். உன் கட்டை விரலைக் கொடு, அதுதான் குருதட்சணை என்கிறார் துரோணர்.

என்ன கொடூரம்? மகாபாரத காலத்திலே ஒரு மலைவேடன் வில்வித்தை கற்றால் அவனுடைய கட்டை விரலை வெட்டவேண்டும் என்று ஒரு சூத்திரம் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அப்படியொரு சூத்திரம் இருந்து அதனடிப்படையில் துரோணாச்சாரியார் கட்டை விரலை வெட்டினார் என்றும் வியாசர் சொல்ல வில்லை. எப்படி சாஸ்திரம் என்கின்ற அடிப்படை யிலே – சட்டம் என்கின்ற அடிப்படையில், இராமாயண மகாபாரத காலத்தில் கூட இன்னும் கறார்படுத்தப்படவில்லை.  ஆனால், அதுவே சமுதாய சட்டமாக திணிக்கப்பட்டிருக்கிறது. இதுவே இந்திய பாணி – அடிமைமுறையாகிய வர்ணாசிரமம். இதை சட்டமாக்கிய கொடூரமான வேலையை செய்தவன் மனு. ஏன் அதை எரிக்க வேண்டும்?

இந்திய வரலாற்றிலேயே மனுசாஸ்திரத்தின் ஒரு முக்கியமான பங்கு என்னவென்று பார்த்தால், அதற்கு முன்பே பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகளைக் காட்டுகின்ற வர்ணாசிரமம் வந்து விட்டது; அதற்கு முன்பே ஜாதியத்தின் அஸ்தி வாரம் போடப்பட்டுவிட்டது. ஆனால் மனு சாஸ்திரம் தான் அதைக் உறுதிப்படுத்தியது – சாஸ்திரமாக உருவாக்கியது. இன்றைய மொழி யிலே சொன்னால், “லா” வாக உருவாக்கியது; சட்டமாக உருவாக்கியது; இந்த காலத்து சட்டங்களை விட அந்த காலத்து சாஸ்திரங்கள் மிகவும் கறாரானவை – கெடுபிடியானவை  – மிகுந்த செல்வாக்கு மிக்கவை. இப்போது நீங்கள் ஒரு குற்றம் செய்து விட்டால் எப்போது தண்டனை கிடைக்கும்? உங்கள் மீது ஒருவர் புகார் கொடுத்து, அந்த புகாரின் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் போட்டு  (அதுவும் அந்த போலீஸ்காரருக்கு மனசு வந்தால்தான்), அதன்பிறகு ஜெயில், பெயில் இவ்வளவும் செய்யவேண்டும். ஆனால் அந்த காலத்தில் இதெல்லாம் ஒன்றும் தேவையில்லை.  மனுசாஸ்திர விதிப்படி – விஷ்ணுசாஸ்திர விதிப்படி – யாக்ஞவல்கியரின் விதிப்படி – வசிஷ்டர் சாஸ்திர விதிப்படி இப்படி இருபது சாஸ்திர விதிகளில் ஏதேனும் ஒன்றின் அடிப்படையிலே, அது மீறப்பட்டிருக்கிறது என்று அந்த ஊரில் பக்கத்து வீட்டுக்காரருக்கு தெரிந்தால் கூட, அந்த கணமே அந்த கிராம பஞ்சாயத்து கூடி உங்களுக்கு தண்டனையை கொடுத்துவிடும்.

இதையும் படியுங்கள்: குடிகாரன், ஸ்த்ரீலோலன் இராமன் : டாக்டர் அம்பேத்கர்

சட்டம் பெரிதா? சாஸ்திரம் பெரிதா? அந்த காலத்து சாஸ்திரம், இந்த காலத்து சட்டத்தை விட வலிமையானது – கொடூரமானது – மிகுந்த செல்வாக்கு மிக்கது – பயன்பாடு அதாவது கொடூரப் பயன்பாடு மிக்கது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் ஏதோ அந்த காலத்தில் எழுதி வைத்துவிட்டு போனதை இப்பொழுது ஏன் எரிக்கவேண்டும் என்றால், அது வெறும் எழுத்து அல்ல நண்பர்களே, தோழர்களே; அன்றைய கொடூரமான வாழ்க்கைமுறையின் சட்ட விதிமுறைகள்.

ஏற்கனவே இருந்த வர்ணாசிரமத்தை எப்படி கறார்படுத்தினான்? இங்கே எஸ்.வி.ஆர் கூட மிக அழகாக சுட்டிக்காட்டினார்கள். அம்பேத்கர் மிக விரிவாக எடுத்துச்சொன்னார். எப்படி இந்த மனுசாஸ்திரத்தின் மூலம் கறார்படுத்தினார்கள் என்றால் நான்கு வழிகள் மூலமாக. முதல் வழி வர்ண அடிப்படையிலான திருமண முறை -அகமண முறை; இரண்டாவது அந்த கட்டுப் பாட்டை மீறுகிறவர்களுக்கு கடும் தண்டனை; மூன்றாவது உத்தி இதையும் மீறி இயற்கை உணர்வு பீறிட்டு வர்ணம் விட்டு வர்ணம் மாறி குழந்தை பிறந்தால், அந்த குழந்தையை எந்த வர்ணத்தில் சேர்ப்பது? அதை மிகவும் தாழ்ந்த ஜாதியிலே சேர்; அதன் பெயர் என்ன என்ற பட்டியல் மனு சாஸ்திரத்தில் வருகிறது; நான்காவது முறை சொத்துரிமை பற்றியது. இந்த நான்கை வைத்துதான், இந்த ஜாதியத்தை கறார்படுத்தினான். நான் கூட யோசித்துப் பார்க்கின்றேன், தருமபுரி பிரச்சனைக்கு பிறகு, இந்த மாதிரி ஒரு கறார்தன்மை வரவேண்டாமா என்று இன்றைக்கு சில பேருக்கு மிக வருத்தமாக இருக்கின்றது. ஜாதி விட்டு ஜாதி திருமணமே செய்யக்கூடாது, மீறினால் மனு சாஸ்திரப்படி தண்டனை கொடுக்க வேண்டும்; அதையும் மீறி குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை கீழ் ஜாதியில் கொண்டு போய் சேர்க்கவேண்டும்; சொத்தே கொடுக்கக் கூடாது இந்த பிள்ளைக்கு என்று இன்றைக்கு கூட சிலர் ஆசைப்படுகிறார்கள். இதற்கெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அஸ்திவாரம் போட்டவன் இந்த கேடுகெட்ட மனு என்பதை நீங்கள் மனதிலே வைத்துக்கொள்ளுங்கள்.

வருண் சாதி

இப்போதும் ஆய்வாளர்களுக்குள் நடந்து கொண்டேயிருக்கும் ஒரு விவாதம் என்ன வென்றால், ரிக் வேதத்தில் புருஷ சூக்தம் என்பதை இறுதியாக இணைத்ததைப் போல தெரிகிறது; அது ஒரு இடை செருகல் – கடை செருகல் மாதிரி தெரிகிறது என்றெல்லாம் சில பேர் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள். மனுசாஸ்திரத்தை படித்தால் தெரியும், இதை ஒரு இடை செருகல் என்றோ, வேதத்திற்கு புறம்பானது என்றோ மனு நினைக்க வில்லை, மாறாக புருஷ சூக்தத்தில் உள்ள அந்த உருவகம் – புருஷன் என்ற கடவுள் – வாய், தோள், தொடை, கால் என்ற அந்த உருவகம் இருக்கிறதே, அதை அப்படியே மனு தனது சாஸ்திரத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்பதுதான் உண்மை. என்னுடைய நூலிலே இதையெல்லாம் நான் ஆதார பூர்வமாக சொல்லியிருகின்றேன். நேரம் கருதி எந்த சுலோகம், எந்த பகுதி என்பதையெல்லாம் இங்கு சொல்ல முடியவில்லை. ஒரு சுலோகத்தில் மனு சொல்கிறார், பிராமணர்கள் புருஷ கடவுளின் வாயில் இருந்து பிறந்ததனால், பிராமணர்களே கடவுளின் மூத்த பிள்ளைகள். கடவுளைப் படுத்துகிற பாடு இருக்கிறதே! அடடா! அவருக்கு பிள்ளை குட்டியெல்லாம் கொடுத்தது இவர்கள் தான். மூத்த பிள்ளை என்கிற காரணத்தினால் பிற பிள்ளைகளுக்கு,–பிறவர்ணத்தவருக்கு, கடமைகளை நிர்ணயிக்கிற உரிமை பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு என்று சுலோகம் சொல்கிறது. என்ன ஒரு கொடுமை.

அந்த காலத்தில் பெரியாரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது; என்னங்க அய்யா எப்போதும் பிராமணர்களையே விமர்சனம் செய்து பேசுகிறீர்களே? இது என்ன நியாயம்? நிதானமாக பெரியார் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் ‘வேறு ஒன்றுமில்லை, யார் முடிச்சு போட்டார்களோ, அவர்களே அதை அவிழ்த்தால் சுலபமாக அவிழ்த்து விடலாம் அதற்காகத்தான்’ என்று. ஆக இந்த சாஸ்திரங்கள் எல்லாம் “பிராமணர்களால்” எழுதப்பட்டவை என்பது மட்டுமல்ல, “பிராமணர்களுக்காக” என்றே எழுதப் பட்டவை. ஜாதிய கட்டமைப்பை காப் பதற்காகவே எழுதப்பட்டவை; பெண்ணடிமைத்தனத்தை கட்டமைப்பதற்காகவே எழுதப்பட்டவை.

இதையும் படியுங்கள்: சாதி மதமற்ற சமுதாயத்திற்கான முயற்சியை வரவேற்போம்!

மற்றொரு இடத்தில் கூட பிராமணர்களைப் பற்றி சொல்லும் போது, அந்த புருஷன் என்ற கடவுள் வாயில் இருந்து பிராமணர்கள் பிறந்த தற்காக பிராமணர்களின் வாய் மூலமாகவே வானவர்கள் தங்களுடைய அவிர் பாகத்தை பெறு கிறார்கள். பிராமணர்களின் வாய் மூலமாகவே பிதுர்க்கள் தங்கள் பிண்டங்களை பெறுகிறார்கள் என்றார்கள். இந்த வார்த்தைகளையெல்லாம் பார்த்து ஒன்றும் மிரளவேண்டாம்; யாகம் செய்யும் போது அந்த தீயில், புடவை மற்றும் பட்டு உள்ளிட்ட பொருட்களை போட்டு எரிக்கும் போது கிடைக்கும் பலன்களெல்லாம் வானவர்களுக்கு – தேவர்களுக்கு – பிராமணர்கள் மூலமாகத்தான் கிடைக்கிறதாம். பிராமணர்கள் வாய் மூலமாக கிடைக்கிறது என்று சொன்னால், பிராமணர்கள் நன்கு சாப்பிட்டால் கடவுளே நன்றாக சாப் பிட்டதாக அர்த்தம். அதனால் தான் ‘பிராமணா  போஜனப் பிரியா’ என்ற வாக்கியத்தை அவர்களே சொன்னார்கள். அதேபோல திதி கொடுக்கும் போது, பிண்டங்களெல்லாம் வைப்பார்கள். அந்த காலத்தில் பிண்டங்களையே சாப்பிட்டிருக் கிறார்கள்.

ஆனால் அதிலும் மனுசாஸ்திரம் கறார்படுத்தியது. நமது அப்பாவுக்கு திதிகொடுக்க வரும் போது கூர்ந்து கவனியுங்கள். எங்கள் அப்பாவுக்கு சிக்கன் பிரியாணின்னா மிகவும் பிடிக்கும், நான் அதைத்தான் படைப்பேன், நீ அதை சாப்பிடவேண்டும், நீ சாப்பிட்டால்தான் உன் மூலமாக என் அப்பாவுக்கு கிடைக்கும் என்று சொல்லிப் பாருங்கள்; சாப்பிட மாட்டார், தெளிவாக மறுப்பார். அரிசி, காய்கறி, பருப்பு, என்று அவருக்கு எது தேவையோ அதைத்தான் திதி கொடுக்கச் சொல்வார். திதி அப்பாவுக்கு கொடுக் கிறோமா, இந்த புரோகிதருக்கு கொடுக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு வரும். இந்த முறைகளெல்லாம் இன்றைக்கு வந்ததல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதற்கெல்லாம் சட்ட வடிவம் கொடுத்தவன் மனு என்கின்ற காரணத்தினால் தான் நமக்கு இவ்வளவு ஆவேசமும், ஆத்திரமும் வருகிறது.

இந்த பிராமணியக் கட்டமைப்பை இப்படி கறார்படுத்தியே வந்து, திருமணம் என்று வரும் பொழுது, அவர் ஒரு வாக்கியத்தை சொல்கிறார். இரு பிறப்பாளர்களின் ஜாதி பெண்களோடு உடலுறவு கொண்ட சூத்திரனின் ஆண் குறியை சிதைக்கவேண்டும். நீங்கள் எரிக்கப் போகிறீர்களே! அந்த மனுசாஸ்திரத்தில் உள்ள ஒரு சுலோகம். இரு பிறப்பாளன் என்றால் யார்? பிராமண, சத்ரிய, வைசிய மூன்று பேரும் தான். அவர்களுக்கு இரண்டு பிறப்பு உண்டு இந்த பூமியிலே; ஒன்று தாயின் வயிற்றிலிருந்து பிறப்பது; மற்றொன்று உபநயனம் என்கின்ற அந்த வேதக் கல்வி சடங்கு நடக்கும் போது, அவனுக்கு இன்னொரு பிறப்பு. இந்த கல்வி யினுடைய முக்கியத்துவத்தை மனு போன்றவர்கள் மிகத் தெளிவாக உணர்ந்திருந்தார்கள். நாம் இப் பொழுதான் கல்வியை உணர்ந்து கொண்டு வரு கிறோம். ஆக அத்தகைய இரு பிறப்பாளர்களான பிராமண, வைசிய, சத்ரியர்களின் பெண்களோடு உடலுறவு கொண்ட சூத்திரனின் ஆண் குறியை சிதைக்க வேண்டும். எவ்வளவு கொடூரமான, கறாரான அகமண முறை. அதிலும் பெண் என்று வரும் போது ரொம்ப கண்டிப்பு.

இதே மனு சொல்கிறார், இந்த உயர் ஜாதிக்காரர்கள் அடுத்தடுத்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம்; ஆனாலும் அந்தந்த ஜாதிக்குள் திருமணம் செய்த பெண்கள் தான் தர்மபத்தினி; மற்றவர்களெல்லாம் அதர்மபத்தினி என்று அர்த்தம். அதனால் தான் தந்தை பெரியார் சொன்னார், ‘நம்மையெல்லாம் வைப்பாட்டி மக்கள் என்று சொல்கிறார்கள்’ என்று. ஆமாம் மிகத்தெளிவாக எழுதி வைத்திருக்கிறார், ஒரு பிராமணர், பிராமணப் பெண்ணை மணக்கலாம், சத்ரியப் பெண்ணை மணக்கலாம், வைசியப் பெண்ணை மணக்கலாம், சூத்திரப் பெண்ணைக் கூட மணக்கலாம். ஆனால் அந்த பெண்கள் மூவரும் தர்மபத்தினி ஆகமாட்டார்கள். பிராமணருக்கு பிராமணப் பெண்ணே தர்மபத்தினி; அதேபோல சத்ரியனுக்கு சத்ரியப் பெண்ணே தர்மபத்தினி; வைசியனுக்கு வைசியப் பெண்ணே தர்மபத்தினி; சூத்திரனுக்கு பத்தினி என்றுதான் சொல்வான் தர்மபத்தினி என்றெல்லாம் சொல்லவே மாட்டான், அந்த தகுதியெல்லாம் கிடையாது. இந்த மூன்று பேரினுடைய நிலைமை என்ன? இன்னும் கூட கறார்படுத்துகிறான். நீ திருமணமும் செய்து கொள்ளலாம், திருமணம் செய்யாமலும் வைத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கலாம் ஆனால் அந்த குழந்தைகளுக்கு சொத்துரிமை கிடையாது. தந்தையாக பார்த்து ஏதேனும் கொடுத்தால் தான் உண்டு என்ற வாக்கியம் அப்படியே மனுசாஸ்திரத்தில் இருக்கின்றது.

கீழ்ஜாதிப் பெண்ணை உயர் ஜாதி ஆண் மணக்கலாம், ஆனால் உயர் ஜாதிப் பெண்ணை கீழ் ஜாதி ஆண் மணக்கக் கூடாது. அதற்கு கடும் தண்டனை. காரணம், விஞ்ஞானம் தெரியாத அந்த காலத்தில் குழந்தை பிறப்பிற்கு ஆண் தான் காரணம் என்று நம்பினான். பெண் வெறும் நிலம்; விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் என்ற அந்த சொலவடைகளையெல்லாம் நீங்கள் சாதாரணமானதாகக் கருதாதீர்கள், பெண்ணை இழிவுபடுத்துகிற சொலவடை. கஷ்டபட்டு பிள்ளைத் தருவது பெண்; அந்த பெண்ணின் வேதனையை நம்மை போன்ற ஆண்களெல்லாம் தங்களின் மனைவி பிள்ளை பெறும்போது உணர்வதில்லை, ஆனால் தன் மகள் பிள்ளை பெறும்போது படுகிற கஷ்டத்தை, தந்தையாகிய ஆண் மகன் உணர்கின்றான். இந்த வேதனையோடு பிள்ளை பெறுகிறவள் பெண். ஆனால் அவளுக்கு முக்கியத்துவமே இல்லை; சகலத்துக்கும் காரணம் ஆண் தான் எனச் சொல்லி, அந்த கோணத்தி லிருந்து உயர் ஜாதிப் பெண்ணை கீழ் ஜாதி ஆண் திருமணம் செய்யக்கூடாது என்ற கொடூரமான மனுதர்ம சிந்தனை – மனு அதர்ம சிந்தனை, இன்றைக்கு வரைக்கும் இருக்கிறதே என்பது தான் வேதனை.

மருத்துவர் ராமதாசு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; வன்னிய இன மக்கள் உண்மையிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள். ஆகவே அவர்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று போராடினார். கலைஞர் அவர்களின் ஆட்சியிலே – அவர்  அந்த ஜாதியைச் சார்ந்தவரல்ல என்றபோதிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்ற ஒரு தனிப் பிரிவை உருவாக்கி, பிற்படுத்தப்பட்டவர்களின் ஐம்பது சதவீதத்திலிருந்து பிரித்து இருபது சதவீதத்தை பெற்றுத் தந்தார். இதற்காக மிகப் பெரிய போராட்டம்; தமிழகமே ஸ்தம்பித்தது.

ஏனென்று கேட்டபோது அவர் என்ன சொன்னார், நாங்களெல்லாம் மிகவும் பிற் படுத்தப்பட்டவர்கள் – பிராமணியத்தால் ஒடுக்கப் பட்டவர்கள் – வர்ணாசிரமத்தால் நசுக்கப்பட்ட வர்கள் – மனுசாஸ்திரத்தால் மிதிக்கப்பட்டவர்கள் என்று அன்று சொன்னார். இப்படி சொல்லி போராடினீர்களே அந்த போராட்டத்தின் தளபதி என்ற முறையில் நான் அவரை மதித்தேன். நமக்கு ஒரு கோளாறான குணம் இருக்கிறது, இந்த இடைநிலை ஜாதிக்கு.

நமக்கு மேல் இருப்பவன் மிதித்தால் நமக்கு கோபம் வரும்; நமக்கு கீழ் இருப்பவனை நமது ஒரு கால் மிதித்துகொண்டே இருக்கிறதே அதுமட்டும் சுகமாக தெரியும். அதுதானே நடக்கிறது இப்பொழுது. நான் அந்த பேச்சை மகாபலிபுரத்திலே, சித்ரா பவுர்ணமி அன்று வன்னியர் சங்கத்தில் பேசப்பட்ட பேச்சை முழுமையாக தொலைக்காட்சியில் கேட்டேன். காடுவெட்டு குரு பேசிய பேச்சு இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. என்ன பேசினார் – ‘நமது ஜாதிப் பெண்ணை வேறு எந்த ஜாதிக்காரனுக்கும் திருமணம் செய்யக் கூடாது; செய்துகொண்டால் அவனை வெட்டினாலும் தப்பில்லை’ இது அவர் சொன்ன அதே வாக்கியம், நானாக இட்டுக்கட்டி எதுவும் சொல்லவில்லை. மனுசாஸ்திர வெறி இன்றுவரை பிற்படுத்தப்பட்ட ஜாதி – இடைநிலை ஜாதி மக்களிடையே கூட ஊட்டப்பட்டிருக்கிறது. இதை மருத்துவர் ராமதாசு  மறுத்து பேசுவார் என்று ஆர்வமுடன் தொலைக்காட்சி முன்பு இறுதி வரை அமர்ந்திருந்தேன். வந்தார் பேசினார் – அய்யா; என்ன பேசினார் தெரியுமா? காடுவெட்டி குருவைப் புகழ்ந்து பேசினார், இன்றைக்கு பார்க்கும்போது அதெல்லாம் எதேச்சையாக நடந்ததைப்போல தெரிய வில்லை.

நாடகக் காதல் பற்றி பேசுகிறார் அவர். கபட காதல் பற்றி பேசுகிற அவர், தான் காதலின் எதிரியல்ல நாடகக் காதலின் எதிரி என்று இரண்டு தினங்களுக்கு முன்பு கூட  தொலைக்காட்சியிலே பேசியிருக்கிறார். காதல்களில் சில காதல்கள் நாடகக் காதல்களாக இருக்கக் கூடும். அதற்காக எல்லா காதலையும் மோசமான காதல் என்று எப்படி சொல்கிறீர்கள் அய்யா? இன்னும் கூட நான் யோசித்துப் பார்க்கின்றேன், இது உண்மை காதலா, கபட காதலா என்று யார் தீர்மானிப்பது? ஜாதி சங்கமா? ஜாதி சங்க தலைவரா? உண்மை காதலா, கபட காதலா என்று தீர்மானிக்கின்ற ஆற்றல் ஒவ்வொரு தமிழன் வீட்டு பெண் பிள்ளைகளுக்கும், ஆண் பிள்ளைகளுக்கும் நிச்சயம் உண்டு. அதை நீங்களோ, நானோ தீர்மானிக்கக் கூடாது. அவர்களை தீர்மானிக்க விடுங்கள். இல்லையென்றால் இந்த இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டிலும், தமிழகத்தில் மனு நடமாடிக்கொண்டு இருக்கிறான் என்று தான் நாங்கள் புரிந்துகொள்ள முடியும். ஆக எந்த அளவுக்கு அன்று கொடூரமான சிந்தனைகளை உருவாக்கியிருக்கின்றான் என்பதை நீங்கள் உணருங்கள். அவ்வளவு கண்டிப்பான – கொடூரமான சிந்தனைகள் உருவாக்கப்பட்ட காரணத்தினால் தான், மனுவின் வலு – செல்வாக்கு இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், பெரியார் பிறந்த மண்ணிலே கூட நீடித்திருக்கிறது.

அண்மையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், கொங்கு மண்டலத்தைச் சார்ந்த ஒரு ஜாதி சங்கத்தின் தலைவர் பேசுகிறார். அவரின் முக்கியமான கோரிக்கை என்னவென்றால் இந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியில்லை; வன்கொடுமையெல் லாம் முடிந்துவிட்டது என்று முதலில் சொன்னார்; ஆகவே இந்த சட்டத்தை ஒழித்துவிடவேண்டும் என்று ஆரம்பித்தார். மேலும் விளக்கம் சொன்னார்… கோயம்புத்தூரில் எங்க ஆள் ஒருவர் பஸ்ஸில் ஏறினார், புதுசா ஒருத்தர் வந்தார், அவர் யாரோ என்னவோ என்று தெரியாததால் தொடாமல் உட்கார் என்று இவர் சொன்னார். உடனே இது தீண்டாமை என்று சொல்லி, அந்த வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துவிட்டார்கள்; ரொம்ப வேதனையாம், ரொம்ப வருத்தமாம். இது தீண்டாமை இல்லாமல் வேறு என்னவென்று கேட் கிறேன். நண்பர்களே யாரோ சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக, ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தில் இத்தகைய பார்வை இருக்கிறது என்று சொன்னால், கிராமங்களிலே கொடூரமான தீண்டாமை இன்றைக்கும் நிலவுகிறது என்றால், அந்த வன்கொடுமை சட்டம் இன்றைக்கும் அவசியம், அவசியம். சொல்லப் போனால் இன்னும் நன்றாக அந்த சட்டத்தைப் பயன்படுத்தவேண்டும் என்பதுதான் நம்முடைய நிலைப்பாடாக இருக்க முடியும். ஆக இந்த மனு உள்வாங்கிய தீட்டு கருத்து என்பது, எந்த அளவிற்கு இன்று வரை வந்திருக்கிறது என்பதை நீங்கள் தயவுசெய்து உணரவேண்டும் என்பதை நான் அருள்கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்.

நான் யோசித்து பார்க்கின்றேன், வரலாற்றில் மனுசாஸ்திரத்திற்கு இப்படியொரு முக்கியமான பங்களிப்பு இருந்திருக்கிறது; ஆனால் இரண்டா யிரம் ஆண்டுகளாக அது எப்படி நீடிக்கிறது? கிரேக்கத்திலே அடிமை சமுதாயம் இருந்தது என்று சொன்னேன், அது ஒழிந்தது; ரோமாபுரியில் இருந்தது என்று சொன்னேன், அதுவும் ஒழிந்தது; ஒவ்வொரு ஊரிலும் அடிமை மனித சந்தை இருந்தது அதெல்லாம் ஒழிந்து விட்டது.

இங்கு வர்ணாசிரமம் என்பது இந்திய பாணி அடிமை முறை என்கிறீர்களே, அப்படிப்பட்ட அடிமை முறை – சூத்திரர்களை அடிமை போல பாவித்த நிலை -– பஞ்சமர்களை அடிமைகளாகவே ஆக்கி வைத்த நிலை அப்படியே ஏன் இரண்டாயிரம் ஆண்டுகளாக நீடிக்கின்றது? அதனுடைய மிச்ச சொச்சங்கள், கொடூர வடிவங்கள் இரண்டாயிரத்து பன்னிரண்டாம் ஆண்டிலும் எப்படி நிலவுகிறது? என்று யோசித்துப்பார்த்தால், இந்த படிநிலை அமைப்பிலே என்ன ஆகிவிட்டது என்றால், பிராமணர்கள் என்பவர்கள் எண்ணிக்கையில் குறைவுதானே, அதிகமான பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் – மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள். அல்லது அன்றைய மொழியில் சொன்னால் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் சத்ரிய, வைசிய, சூத்திரர்கள். இந்த மூன்று பேரில் ஒருவருக்கு கீழ் ஒருவராக வைக்கும் போது – சூத்திரர்களுக்கு கீழேயும் பஞ்சமர்களை வைத்ததால் ஒவ்வொரு வருக்கும் ஒரு சுகம்; நம்மை ஒருவன் ஒடுக்குகிறான் என்றாலும் நமக்கு கீழேயும் ஆள் இருப்பதே போதும் என்ற குணப்போக்கும் இந்த நடைமுறையும் தான் இவ்வளவு காலம் வர்ணாசிரமம் நீடிப் பதற்கு காரணம்; இந்த நடைமுறையை உருவாக்கியது மனுதர்மம். அதனால் தான் நீங்கள் அதை எரிக்கப் போகிறீர்கள். ஜாதி எல்லாம் முடிந்துவிட்டது, சும்மா பிராமிணியம் என்று பேசுகிறீர்களே என்று சிலர் கேட்கிறார்கள்.

நண்பர்களே ஒரு சொந்த அனுபவத்தை சொல்கிறேன், சென்னையிலே திருவான்மியூர் என்ற பகுதியிலே என்னுடைய மகன் வசிக்கிறார்; அந்த பகுதியில் காலை எழுந்தவுடன் நடைபயிற்சி செய்வேன்; இரண்டு வீட்டில் ஒரு விளம்பர பலகை; அது ஆங்கிலத்தில் இருந்ததால் அப்படியே சொல்கிறேன் கூடிடுநவ க்ஷரவ டீடேல குடிச ஏநபவையசiடிளே என்று இருந்தது; மகா நகரம். இது ஏதோ குக்கிராமத்தில் அல்ல தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் “ஒன்லி பார் வெஜிட்டேரியன்” மரக்கறி உண்பவர்களுக்கே என்றால் என்ன அர்த்தம்? பிராமணர்களுக்கே என்று சொல்லாமல் கவனமாக சொல்கிறார்கள், இது இரண்டு மாதங்களுக்கு முன்பு. இப்பொழுது கடந்த வாரம் பிள்ளை வீட்டிற்குச் சென்றேன்; உண்மையிலேயே ஒரு வீடு தேவைப் பட்டது; அங்கும் இங்கும் சுற்றி வந்த போது அதே வீட்டில் இப்போது புதிதாக ஒரு போர்டு, ‘வீடு வாடகைக்கு’  என்று மட்டும் இருந்தது; ஒன்லி வெஜிடேரியன் என்பது இல்லை; திருந்தி விட்டார்கள் என்று எனக்கு ஏக மகிழ்ச்சி; உடனே அந்த எண்ணுக்கு தொலைபேசி செய்து, நான் ஒரு ஓய்வு பெற்ற பேராசிரியர் எனது பிள்ளைக்கு வீடு வேண்டும் என்று கேட்டேன்; எதிர் முனையில் பேசிய ஒரு அம்மா சொன்னது ‘நாங்க வெஜிடேரியன்ஸ்க்கு மட்டும் தான் வீடு தருவோம்’ என்று. எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், அவர்கள் மாறவில்லை என்பது மட்டுமல்ல, நான் பிராமணர் அல்ல என்பதை நான் பேசிய மொழியிலேயே தெரிந்து கொண்டுவிட்டார் அந்த அம்மா. ஜாதிப் பெயரைக் கூட கேட்க வேண்டிய தில்லை; நீங்கள் வெஜிடேரியனா என்றாவது கேட்டிருக்கலாம் ஆனால் எதுவுமே கேட்கவே இல்லை. அப்படியென்றால் இன்றைக்கும் அந்த பிராமிணியம் என்கின்ற ஜாதிய-ஆணாதிக்க கட்டமைப்பு, எத்தனை புதுப் புது வடிவங்கள் எடுத்து நிற்கிறது என்பதை உணருங்கள்.

இவ்வளவுக்கும் யார் காரணம்? மனு ஒரு முக்கியமான பங்களிப்பை செய்திருக்கின்றான். இன்றைக்கு பல பேர் சொல்லுகிறார்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று; ஆனால் தருமபுரி நமது கண்களைத் திறந்து விட்டிருக்கிறது. நான் வேதனை யோடு பார்க்கின்றேன்; பிராமணியம் என்கின்ற கட்டமைப்பு பிராமண, சத்ரிய, வைசிய, சூத்திர, பஞ்சம. என்ற கட்டமைப்பு காலபோக்கில் என்ன வானது என்றால் உயர் ஜாதி, பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்கள். இப்படி உருவானதற்கு பெரியாரின் பங்களிப்பு; கம்யூனிசத்தின் பங்களிப்பு; சில காங்கிரஸ் காரர்களின் பங்களிப்பு; எல்லாம் உண்டு. அவரவர்களுக்கு உரியதை அவரவர்களுக்கு கொடுப்போம்; இவ்வளவும் சேர்ந்து உருவானது. ஆனால் இது உருவாவதற்கு அடிப்படை கருத்தியல் காரணம் என்னவென்றால் பிராமணியம் என்ற அந்த உயர்ஜாதியினரால் பாதிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்பட்டோரும் இணைந்து நின்று போராடியதால் கிடைத்த வெற்றி என்பதை மறந்து விடாதீர்கள்.

இன்று பிராமணீயம் கெக்கொலி கொட்டி சிரிக்கிறது தமிழ்நாட்டிலே; ஏன் சிரிக்கிறது? பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் அடித்துக் கொள்கிறார்களே, ஆஹா, அடித்துக் கொள்ளட்டும் என்று அவர்கள் சிரிக்கிறார்கள். அப்படி சிரிக்க விடலாமா என்றுதான் நான் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்களையும் பார்த்து கேட் கின்றேன். எங்களுக்கு பெரிய சக்தி இல்லை; ஆய்வாளர் என்ற முறையிலே பணிவோடு அவர்களைப் பார்த்துக்கேட்கின்றேன். நீங்கள் பிராமணீயத்தின் எதிரி என்றால் தயவுசெய்து பிராமணீயம் சிரிக்க இடம் கொடுத்துவிடாதீர்கள். சகலரும் சேர்ந்து பிராமணீயத்தை ஒழித்துக் கட்டுகின்ற வேலையிலே இறங்கவேண்டும். இன்றைக்கு பிராமணீயம் என்பது பல அவதாரங்களை எடுக்கின்றது; இதில் எந்த ஆட்சேபணையும் இல்லை.

இந்தியாவில் தான் இந்த வினோதம். அடிமை சமுதாயம் ஒழிந்து, நிலபிரபுத்துவ சமுதாயம் ஒழிந்து, முதலாளித்துவ சமுதாயம் வந்தது என்றால் என்ன பொருள்? இந்தியாவிலே என்ன பொருளாக இருந்திருக்க வேண்டும் தெரியுமா? இங்கு ஜாதியும், வர்ணாசிரமும் ஒழிந்திருக்க வேண்டும் அப்போது தான் முதலாளித்துவ சமுதாயம் வந்ததாகப் பொருள். ஆனால் இந்த நாட்டு முதலாளித்துவம் நிலபிரபுத்துவத்துடன் அதனுடைய சமூக கருத்தியல் மற்றும் நடை முறையாகிய ஜாதியோடு கைக்கோர்த்துக் கொண் டிருக்கிறது. அது தான் தொடர்ந்து நீடிப்பதற்கு காரணம். புள்ளி விபரத்தோடு சொன்னார் நம்முடைய ஆய்வாளர் எஸ்.வி.ஆர். ஆக ஒரு மிகப் பெரிய போராட்டம் தேவைப்படு கிறது; ஆனால், அதை நடக்கவிடாமல் செய்வதற்கு மக்களை கூறுபோடுகிறார்கள். அரசியல் ரீதியாக பாரதிய ஜனதா கட்சி என்கின்ற ஒரு கட்சி; இந்த மக்கள் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதற்காக செயற்கையாக இந்து – முஸ்லீம் என்று பிரித்து மோதவிடப் பார்க்கிறார்கள். அந்த கொடூரன் குஜராத்திலே நரேந்திர மோடி; தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களெல்லாம் நல்லவர்களல்ல; நரேந்திர மோடி தான் அடுத்த பிரதமர் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்னும் வேதனையான செய்தி, நாமெல்லாம் வாக்களித்து முதலமைச்சராக அமர்த்தியிருக்கின்ற ஜெயலலிதா, முஸ்லீம்களை நரவேட்டை ஆடிய நரேந்திரமோடியின் பட்டாபிசேக விழாவிற்கு செல்லவிருக்கிறார். ஒரு கட்சியினுடைய தலைவர் என்ற முறையிலே போனால் நான் இங்கு பேச மாட்டேன்; அவர் அ.தி.மு.க.விற்கு மட்டும் முதலமைச்சர் அல்ல; உங்களுக்கும் எனக்கும் முதலமைச்சர்; ஆகவே உரிமையோடு பேசுகிறேன். ஒரு முதல்வர் என்ற முறையிலே மாண்புமிகு ஜெயலலிதா அவர்களே நீங்கள் செல்லலாமா? இது தான் அண்ணா வகுத்த வழியா? எம்.ஜி.ஆர் கூட அப்படி போனதில்லையே! எவ்வளவு பெரிய ஆபத்து இன்றைக்கு வந்திருக் கிறது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும். நான் சொல்ல வருவதெல்லாம் இது தான், இந்த இருபது சாஸ்திரங்களும் எரிக்கப்படவேண்டியவை; ஆனால் அந்த சாஸ்திரங்களின் முதன்மையான பிரதிநிதி என்கிற முறையிலே மனுசாஸ்திரத்தை நீங்கள் எரிக்கப்போகிறீர்களே, அது மிக நல்ல காரியம். குப்பையை எரிப்பது தனிமனித சுகாதாரத் திற்கு அவசியம்; மனுசாஸ்திரத்தை எரிப்பது சமூக சுகாதாரத்திற்கு அவசியம், அவசியம். எரியுங்கள் அது பெரும் நெருப்பாக மூண்டு எழட்டும்; அந்த அற்புதமான தீ பரவட்டும்; அந்த நெருப்பிலே விழுந்து, விழுந்து இந்த ஜாதி ஒழியட்டும்.

  • பேரா. அருணன் (திராவிடர் விடுதலைக் கழக மாநாட்டில் “வரலாற்றில் மனுசாஸ்திரம்” என்ற தலைப்பில் பேசியது)

(குறிப்பு: பேராசிரியர் அருணன் தனது உரையில் பயன்படுத்திய “பிராமணன்” என்ற சொல்லாட்சியில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் அவரது உரையை அப்படியே வெளியிட்டுள்ளோம் – விடுதலை இராசேந்தரன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here