கவிஞன், எழுத்தாளன், பாடலாசிரியர், படைப்பாளி என இவர்கள் எழுதுவது சமூகத்திற்காக என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்காக இலக்கிய நடையுடன் எழுதிக் குவிக்கும் எழுத்து பிழைப்புவாதிகள் அதிகம். இவர்கள் முதல் ரகம்.

சிலர் சிற்றிதழ்களில் எழுதுவதன் மூலம் சின்னத்திரை முதல் பெரிய திரைக்கு இடம்பிடிக்க முயற்சிப்பது இரண்டாவது ரகம்.

சமூகத்தில் நடக்கும் அவலங்களை பெரும்பான்மை மக்களின் நலனில் இருந்து கோபத்துடன் எழுதுவது மூன்றாவது ரகம்.

இவர்கள் சமூகத்தின் எதார்த்தத்தை பிரதிபலிக்கும் எழுத்தாளர்களாக இருக்கிறார்கள். இவர்களிடம் இந்த வகையில் எழுதுங்கள் என்று திணிக்க முடியாது.
ஆளும் வர்க்கத்திற்கும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் இடையில் நடுநிலை வகிக்க தெரிந்த எண்ணற்ற எழுத்தாளர்கள் மலிந்து கிடக்கின்ற சமூகம் இது.

ஆனால் இது கார்ப்பரேட் காவி பாசிசத்தின் சர்வாதிகார காலம். பேச்சுரிமை, எழுத்துரிமை, படைப்பு உரிமை அனைத்தையும் பாசிச முறையில் அடக்கும் காலம் இது.

இந்தக் கால கட்டத்திலும் நடுநிலை வகிப்பது, ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யுமே தவிர பெரும்பான்மை மக்கள் பக்கம் சேர உதவாது.
இந்த சூழலில் எழுத்தாளர்களில் அப்பாவிகள், வெள்ளந்திகள் என்றெல்லாம் யாரும் கிடையாது.

இரு தரப்பில் எந்த பக்கம் நிற்பதன் மூலம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை சிந்தித்து செயல்படுகிறார்கள்.இதனால் இவர்கள் எவ்வளவு உன்னதமான கலை இலக்கியங்களை படைத்தாலும் அது எப்போதும் அடக்கி ஒடுக்குகின்ற வர்க்கத்திற்கு சாதகமாகவே முடிந்து விடுகிறது.

இந்த சூழலில் ஜெய்பீம் படத்தின் குறிப்பிட்ட பகுதிக்கான வசனகர்த்தா
திரு. கண்மணி குணசேகரன் திடீரென்று தான் வாங்கிய தொகையை திருப்பி அனுப்பி இயக்குனருக்கு எதிராக பொங்கி எழுந்தது, இது போன்ற எழுத்தாளர்களின், சிந்தனையின் வெளிப்பாடு எப்படி இருக்கிறது என்பதற்கான வகை மாதிரியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்கின்றனர். நாம் தான் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

000

வெள்ளந்தி என்பதற்கு புதிய அர்த்தம் இருப்பதைப் பார்த்து வியந்துகொண்டிருக்கிறேன்.

வெள்ளந்தி, பாவம், அப்பாவி, நல்ல மனசுக்காரர் எழுதிய சாதிவெறி கொப்பளிக்கும் கடிதம் கண்டு உவகையடைந்தீரா ஜகத்தீரே? பாவம், வெள்ளந்தி இல்லையா? அதனால்தான் தன் சாதிக்கட்சி, குடிசைகளைக் கொளுத்தியபோதும், கொலைகள் செய்யத் தூண்டியபோதும், கொலை செய்தபோதும் அப்பாவியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ‘உங்களால் தான் எங்களுக்கெல்லாம் கெட்ட பேர்’ என்று சட்டையைப் பிடித்து உலுக்காமல், எவ்வளவு நடந்தாலும் தலைமையை விதந்தோதும் நல்ல மனசுக்காரர். வெறியும் வக்கிரமும் தலைக்கேறி கடிதம் முழுக்க அதை வெளிப்படையாகக் கொட்டினாலும், ‘சே! பாவம். என்ன அழுத்தமோ’ என சக எழுத்தாளர்களையே உச்சுக் கொட்ட வைக்கும் அளவுக்கு வெள்ளந்தி.

என்னவோ இப்பத்தான் அவர் வெள்ளந்தியான மாதிரி! தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் தொடங்கப்பட்டபோது தனக்கு சாதி அடையாளம் வந்துவிடும் என்று அதில் சேர மறுத்த படைப்பாளிகளும் இங்கிருக்கையில், கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் அதில் சேர்ந்தபோதே அவர் வெள்ளந்திதானய்யா!

அப்புறம், ‘கையை வெட்டு காலை வெட்டு’ என வெறியேற்றிய காடுவெட்டி குரு இறந்தபோது மாவீரனெனப் புகழ்ந்து அஞ்சலி செலுத்தியபோதும் அவர் அப்பாவிதானே அய்யா?

என்ன? இந்த சாதிவெறிக் கடிதத்தில் இன்னும் கொஞ்சம் அப்பாவித்தனம் கூடிவிட்டது. அது புரியாமல் அவரை ஏன் திட்டுகிறார்களோ தெரியவில்லை.

த்சோ த்சோ பாவம், வெள்ளந்தி, அழுத்தம், அப்பாவி என்றெல்லாம் அவரைக் குறித்து பிம்பம் தருவோர் (ஒரு சிலரைத் தவிர) தலித் அல்லாதோராக இருப்பது தற்செயலானதா? ‘ஒதுக்கவேண்டாம், இந்தக் கடித விஷயத்தில் கண்டிப்போம். ஆனாலும் அவரை நேசிப்போம்’ எனச் சொல்பவர்கள் தாராளமாக அதைச் செய்யலாம். ஆனால் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்துவிடவேண்டும் என எதிர்ப்பார்க்கக் கூடாது.

முதலில் வெறுப்பு தோன்றிய இடத்தில் நேசம் மலராமல் வெறுக்கப்பட்ட தரப்பு நேசங்கொள்ள வேண்டுமென அறிவுறுத்துவதில் உள்ள முரண்பாட்டை எண்ணிப் பார்க்கவேண்டும். வெறுக்கப்பட்ட, தாக்கப்பட்ட தரப்பைத் தவிர மற்றவர்கள் அவர்மீது தாராளமாக நேசங்கொள்ளட்டும். ஏனெனில் அறைவிழுந்த கன்னம் அவர்களுடையது அல்ல. யாருக்கோ விழுந்த அறைக்கு தங்கள் கன்னத்தைத் திருப்பிக் காட்டுதல் எளிது. ஏனெனில் அடித்தவன் ஒருபோதும் உங்கள் கன்னத்தை கண்டுகொள்ளப் போவதில்லை. அடிவிழுந்த கன்னத்தையே மீண்டும் தேடும் கைகள் அவை. அதனால்தான் இந்தத் திருப்பிக் காட்டும் வேலையைச் செய்யமுடியாதென இங்கே ஒரு தரப்பு சொல்கிறது. அதிலுள்ள நியாயத்தையும் அனைவரும் புரிந்துகொள்வது அவசியம்.

நன்றி: கவின் மலர்
முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here