இனி, தஞ்சையை கம்பெனி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டியதுதான் பாக்கி. இருந்தாலும் திப்புவைத் தோற்கடிப்பதற்காக மராத்திய பேஷ்வாக்களின் ஆதரவு தேவைப்பட்டதால் வெள்ளையர்கள் கொஞ்சம் தயங்கினார்கள். ஆனால் சரபோஜி தயங்கவில்லை. “தனக்கு ஆட்சி செய்து அனுபவமில்லை என்பதால் கம்பெனியின் அதிகாரிகள் ஓரிரு வருடங்கள் ஆண்டு காட்டினால் பிறகு நானே பார்த்துக் கொள்வேன்” என்று கம்பெனியிடம் உதவி கேட்டான் சரபோஜி. கடைசியாக 1799-ஆம் ஆண்டு திப்பு தோற்கடிக்கப்பட, கம்பெனி தயக்கம் நீங்கியது. சரபோஜியிடமிருந்து நிரந்தரமாகவே ஆட்சியுரிமையை எடுத்துக் கொண்டது. 1799 அக்டோபர் 25 ஒப்பந்தப்படி 4000 சதுர மைல் கொண்ட தஞ்சை அரசு ஆங்கிலேயர்களின் கீழ் வந்தது. மன்னனுக்குரிய நிதி, நிர்வாக, நீதி உரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சரபோஜிக்கு பென்ஷன் பணமாக வருடத்திற்கு ஒரு லட்சம் ஸ்டார் பக்கோடாவும், வரி வசூலில் ஐந்தில் ஒரு பங்கு தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.
“கோட்டையில்லே கொடியும் இல்லே அப்பவும் நான் ராஜா” என்று அவ்வப்போது மக்களுக்குத் தரிசனம் தருவதையும், தாசிகளைக் கொஞ்சுவதையும் தவிர வேறு வேலை இல்லாததால் பாட்டு, நடனம், ஓவியம், நூலகம் என்று கலை வாழ்க்கையில் காலம் தள்ள ஆரம்பித்தான் சரபோஜி. இன்றைக்கும் அரசியல் சமூக அக்கறையில்லாமல் கலைத் தவத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்நாட்டின் சிறுபத்திரிக்கை இலக்கியவாதிகளின் முன்னோடி என்று வேண்டுமானால் சரபோஜியைக் கூறலாம்.இவ்வாறு கூறுவதனால் சரபோஜியை ஒரு மானமில்லாத கோமாளி என்று மட்டுமே கருதிவிடக் கூடாது. ஜூன் 1801-இல் தீபகற்பக் கூட்டிணைவின் கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோது கட்டபொம்மனின் தம்பி சிவத்தையா, சரபோஜிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்தில், கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட தொண்டைமானின் துரோகம், பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி 60,000 பேரைத் திரட்டி ஆறே நாளில் பாஞ்சைக் கோட்டையைக் கட்டிய சாகசம், அந்தப் போரில் 4 ஆங்கிலேய தளபதிகளைப் பிடித்துத் தூக்கிலிட்ட வீரம், தற்போது நடத்தி வரும் கொரில்லாப் போரின் வீச்சு அனைத்தையும் விவரித்து, இந்தத் தருணத்தில் மட்டும் நீங்கள் ஆதரித்தால் வெள்ளையரை ஒரேயடியில் ஒழித்து விடலாம் என்று உருக்கமாகக் கோருகிறார். “எங்களுக்கு எதிராக படை அனுப்புகிறீர்களே, இது நியாயமா?” என்று முறையிடுகிறார். “நீங்களும் தொண்டைமானும் உதவாவிட்டாலும் பரவாயில்லை, நடுநிலையாவது வகிக்கக் கூடாதா?” என்று மன்றாடுகிறார்.
செவத்தையாவின் இந்தக் கடிதத்தையும், அதைக் கொண்டு வந்த தூதனை கைது செய்தும் வெள்ளையனிடம் ஒப்படைக்கிறான் சரபோஜி. தன்னிடம் மிச்சமிருந்த படையையும் வெள்ளையனுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கிறான். அற்பன் போலத் தோற்றமளிக்கும் சரபோஜியின் உண்மையான கொடூர முகம் இந்த நடவடிக்கையில் வெளிப்படுகிறது.
தியாகிகளுடைய செயலை அவர்களது தன்மானம், நாட்டு நலன், மக்கள் நலன் போன்றவை தீர்மானித்தன. துரோகிகளோ தங்களது அரண்மனை ஆடம்பரத்தையும் சுகபோகத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்காக தன்மானம், அரசுரிமை, மக்கள் நலன் என எதை வேண்டுமானாலும் ‘தியாகம்’ செய்யத் தயாராக இருந்தார்கள். துரோகத்திற்கோ, தியாகத்திற்கோ சாதி, மத, மொழிப் பிரிவினைகள் இல்லை. திப்புவும், ஆற்காட்டு நவாபும் முசுலீம்கள்; மருது சகோதரர்களும், தொண்டைமானும் தமிழர்கள்; கட்டபொம்மனும், எட்டப்பனும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். எனினும், இந்த அடையாளங்களால் அவர்கள் வரலாற்றில் இணைக்கப்படவில்லை.
திருவிதாங்கூர் மன்னன், மைசூர் உடையார், ஐதராபாத் நிஜாம் … என இந்தத் துரோகிகளின் பட்டியல் நீள்கிறது. 500க்கும் மேற்பட்ட இந்திய சமஸ்தானங்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் துரோகிகளே. இறுதிவரையில் இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகவே செயல்பட்ட இவர்களுக்கு காங்கிரசு அரசு மானியம் வழங்கியது. அரண்மனை, மக்களைக் கொள்ளையிட்டு இவர்கள் சேர்த்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவும் அனுமதித்தது. துரோகிகளின் வாரிசுகள் தேசியக் கட்சிகளின் தலைவர்களாகவும் தொழிலதிபர்களாகவும் மாறி விட்டார்கள்.
மருதுவின் கோட்டை பாழடைந்து கிடக்கிறது. கோபால் நாயக்கரையும், தூந்தாஜி வாக்கையும் மக்களுக்கு யாரென்றே தெரியாது. இவர்களுக்கு வரலாற்று நூல்களிலும் இடம் கிடையாது. மைசூர் அரண்மனையில் ஆண்டுதோறும் தசரா நாளன்று, உடையார், தர்பார் நடத்துகிறார். தஞ்சைப் பெரிய கோயிலுக்கு சரபோஜியின் வாரிசுதான் பரம்பரை அறங்காவலர். சுதந்திர தினத்தன்று கவர்னர் மாளிகையின் முக்கிய விருந்தாளி ஆற்காட்டு இளவரசர்.
ஏனென்றால், இது துரோகிகளின் அரசு. விடுதலை வரலாற்றின் துரோகம் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருக்க, தியாகம் புறக்கணிக்கப்படும் இந்த அவலம், தியாகிகளைக் கவுரவிக்கும் நினைவுச் சின்னங்களை எழுப்புவதால் மாறி விடாது. காலனியாதிக்கத்திற்கு நினைவுச்சின்னம் எழுப்பப்படும் போதுதான் தியாகம் அதற்குரிய அரியணையில் கம்பீரமாக அமரும்.
- இளநம்பி