சீனா. ரஷ்யா. கிர்கிஸ்தான், கசகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 6 நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காய் நகரை தலைமையிடமாக கொண்டு 2001-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. அதன் பிறகு புதியதாக   இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளாக இணைந்து கொண்டன. அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு இணையாக பொருளாதார ரீதியாக வளர்ந்து, உலகை ஆதிக்கம் செய்ய 2050 ஆம் ஆண்டை இலக்கு வைத்து வெறியுடன் அலைகின்ற சீனா இந்த கூட்டமைப்பை உருவாக்கியது.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டமைப்பு தொடர்ந்து உச்சி மாநாடுகளை நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறையும் அரசியல் ரீதியாக தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற ஏகாதிபத்தியத்தின் கள்ளக் குழந்தைகளைப் பற்றியும், அது செய்யும் துஷ்டத்தனங்களைப் பற்றி முன் வைப்பதும், அதனை பற்றி தீவிரமாக பேசி அந்தந்த நாடுகள் தேசிய வெறியை தூண்டுவதும், பொருளாதார ரீதியாக கார்ப்பரேட்டுகள் சுரண்டும் வகையில் புதுப்புது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போடுவதும்தான் இந்த உச்சி மாநாடுகளின் உண்மையான நோக்கமாகும்.

2018-. ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட எட்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அந்த மாநாட்டில் எண்பது நாடுகளுடன் சீனா போட்டுக்கொண்ட பெல்ட் அண்ட் ரோடு (P&R) என்ற மிகப்பெரிய வர்த்தக பாதையை இந்தியா ஏற்கவில்லை.

SCO உறுப்பு நாடுகள்!

பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை சீனா 2013-ம் ஆண்டு தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா வளைகுடா பகுதி, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை நிலம் மற்றும் கடல் மார்க்கமாக இணைக்கும் மெகா திட்டமாக அறிவித்தது. அவ்வாறு அறிவித்த போதே சீனா இதற்கு 126 பில்லியன் டாலர்கள் செலவழிக்க தயாராக இருப்பதாக அதன் அதிபர் ஷி ஜின்பிங் கூறினார்.

அமெரிக்காவுக்கு போட்டியாக சீனா தனது வர்த்தக செல்வாக்கை உலகளாவியதாக மாற்றுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சி என்று அமெரிக்க ஆதரவு ஊடகங்கள் ஊளையிட்டனர். அதே சமயத்தில் சுமார் 80 நாடுகள் மற்றும் பல பன்னாட்டு அமைப்புகள் சீனாவுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டன.

2018 மாநாட்டில் மோடி சூசகமாக தனது எதிர்ப்பை தெரிவித்ததாக முதலாளித்துவ ஊடகங்கள் அவரை பாராட்டினர். ஆனால் ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு வர்த்தகப் பாதையை ஏற்றுக் கொண்டு உறுதி செய்தனர். அதுமட்டுமின்றி ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் யூரோசியான் பொருளாதார ஒன்றியம், அதாவது ஐரோப்பா ஆகிய இரண்டையும் இணைத்து யூரோசியான் பொருளாதார ஒன்றியத்தை அமைப்பது பெல்ட் அண்ட் ரோடு கண்ட்ரோல் முயற்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கான சீனாவின் முயற்சியை உறுப்பு நாடுகள் பாராட்டின.

china belt and road

சீனாவின் அதிபரான ஷி ஜின்பிங் மற்றும் சீன கார்ப்பரேட் முதலாளிகளின் செல்லதிட்டமான பி.ஆர் என்று அழைக்கப்படும் பெல்ட் அண்ட் ரோடு, உலக வர்த்தக இணைப்பு திட்டத்தில் சீனா, பாகிஸ்தான் இடையிலான பாதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது. எனவே இது இந்தியாவின் இறையாண்மையை பாதிக்கும் என்று இந்தியா தொடர்ந்து கூச்சலிட்டு வருகிறது.

இந்த பி.ஆர் திட்டம் தவிர, பிற மெகா திட்டங்களின் மீது இந்தியாவிற்கு இருக்கும் ஆர்வத்தை வடக்குத் தெற்கு வர்த்தகப் பாதை திட்டத்திலும், சஹாபார் துறைமுகம் மற்றும் அஷ்காபட் ஒப்பந்தத்தின் மூலம் காட்டியுள்ளது என்று இந்தியா சுயேச்சையாக முடிவெடுத்ததாக இந்திய ஊடகங்களும், ஆளும் வர்க்க கைக்கூலிகளும் புளகாங்கிதம் அடைந்தனர்.

2019 ஆம் ஆண்டு கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் 19 ஆவது உச்சி மாநாடு நடைபெற்றபோது “தீவிரவாதத்திற்கு எதிராக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக கிர்கிஸ்தானும், இந்தியாவும் கூட்டாக போராடும்! எந்த நிலையிலும் பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள முடியாது என்பதை உலகுக்கு உணர்த்துவது அவசியமாகும்” என்று மோடி வலியுறுத்தி வீரவசனம் பேசினார்.

அதே ஆண்டு சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கை அழைத்து மகாபலிபுரத்தில் விருந்து கொடுத்து பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்ட பிறகு மோடி சீனாவுடன் முரண்பாடு இருப்பதாக காட்டிக்கொண்டார். அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நெருக்கமாக உறவுகளை மேற்கொண்டார்.

PM Modi, Chinese President Xi Jinping visit Mamallapuram in Tamil Nadu
சீன அதிபர் ஜி ஜின் பிங்குடன் மோடி

2020-ஆம் ஆண்டு ரசியாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொண்ட மோடி “பொருளாதார நோக்குவாதம் மற்றும் தேசிய திறன் உருவாக்கத்தின் கூட்டுக் கலவையில் இந்தியா உறுதியான நம்பிக்கை வைத்துள்ளது. இதன் மூலம் SCO  நாடுகள், பெரும் தொற்றால் ஏற்பட்டுள்ளன பொருளாதார இழப்பில் இருந்து மீள முடியும்.. பெரும் தொற்றுக்கு பிந்தைய உலகில் ’தன்னிறைவு இந்தியா’ என்னும் தொலைநோக்குடன் நாங்கள் நகர்ந்து வருகிறோம். தன்னிறைவு இந்தியா உலக பொருளாதாரத்திற்கான தனது பன்மடங்கு ஆற்றலை நிரூபிக்கும் என்று நான் நம்புகிறேன்”.

“இது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபை தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால் பல சாதனைகளுக்கு இடையில் ஐநா சபையின் அடிப்படை லட்சியம் இன்னும் நிறைவேறவில்லை. பெரும் தொற்று தொடர்பான பொருளாதார சமூக இடர்பாடுகளை களைய உலகம் போராடி வருகிறது இந்தப் போராட்டம் ஐநா-வின் நடைமுறையில் தீவிர மாற்றங்களை கொண்டு வருவதிலும் உள்ளது” என்று கூறினார். மேலும் “மாற்றமே நிலையானது என்றும் நமது வேதங்களில் கூறப்பட்டுள்ளது” என்று திருவாளர் மோடி அளந்து விட்டார்.

இவ்வாறு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பேசிய பிறகு ’தற்சாற்பு இந்தியாவை உருவாக்க’ இந்தியா, சீனாவுடன் மீண்டும் பல வர்த்தக ஒப்பந்தங்களை போட்டுக்கொண்டது. அதில் முக்கியமானது கிரேட் வால்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தமாகும். இந்த GWM நிறுவனம் 1984 இல் நிறுவப்பட்டு 2003-ஆம் ஆண்டு ஹாங்காங் பங்கு சந்தையில் தன்னை பதிவு செய்துகொண்டு பங்குகளை விற்கத் தொடங்கியது. இந்தியாவில் நடைபெற்ற ’பின்னாலே டெல்லி ஆட்டோ எக்ஸ்போ’ என்ற வர்த்தக நிகழ்வில் GWM  நிறுவனம் தனது மின்சார கார்களை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது..

அது மட்டுமின்றி பூனாவின் தலேகோன் நகரத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவை விட்டு ஓடத் துவங்கிய போது அதன் தொழிற்சாலையை தங்கள் கையகப்படுத்த உள்ளதாக கூறியிருந்தது GWM நிறுவனம், இந்தியாவில் 100 கோடி டாலர்களை முதலீடு செய்து அதிக தொழில்நுட்பத் திறன் கொண்ட ரோபோக்களின் உதவியுடன் இந்தியாவில் இருந்து வாகனங்களை உற்பத்தி செய்ய முடிவு செய்தது. இந்தியாவின் பெங்களூருவை தவிர GWM நிறுவனத்தின் ஆராய்ச்சி நிறுவனம் ஏழு வளரும் நாடுகளில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

அதேபோல ‘மேக்னெட்டிக் மகாராஷ்டிரா’ என்ற திட்டத்தின் கீழ் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டு இந்த தொழிற்சாலை துவங்குவதற்கு 40 ஆயிரம் ஏக்கர் நிலம் மகாராஷ்டிரா அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டது. இதுவும் மோடியால் முன்வைக்கப்பட்ட திட்டம் தான்.

Magnetic Maharashtra Convergence 2018: Global Investor Summit

இந்த ஆண்டு (2021) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மோடி நேராக கலந்து கொள்ளாமல் காணொளி மூலம் கலந்துகொண்டு பேசி துவக்கியுள்ளார் என்பது முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக முதலாளித்துவ ஊடகங்களால் பரப்பப்படுகிறது. அமெரிக்க அடிமையான ஆர்.எஸ்..எஸ் – மோடி சீனாவுடன் உறவை நிறுத்திக் கொள்ளப் போகிறோம் என்று கூறிக்கொண்டே, அதனுடன் நெருக்கமாகிறது என்றால் அதற்கு என்ன பொருள்? வேறொன்றும் இல்லை. பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டுகின்ற விலாங்கு மீனைப்போல, மோடி இரட்டைவேடம் போட்டுக் கொண்டிருப்பது தான்.. மற்றபடி ’தற்சார்பு இந்தியா’ என்பதெல்லாம் ஏமாந்த இந்தியர்களின் தலையில் மிளகாய் அரைக்கத்தான்.

2010 முதல் கடந்த 10 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமின்றி ஆசிய, ஆப்ரிக்க நாடுகளிலும் மற்றும் அமெரிக்காவிலும் சீனாவின் முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது. 2008 – ஆம் ஆண்டு அமெரிக்கா மீள முடியாத நெருக்கடியில் விழுந்த பிறகு, அதன் முதலீடுகள் சர்வதேச அளவில் குறைந்துள்ளன. அந்த இடத்தை சீனா கைப்பற்றி முக்கியமான முதலீட்டு நாடாக மாறி வருகிறது. உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சீனா 45% வருவாயை ஈட்டியது. 2016 -ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவின் முதலீடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அதற்கு முன்பு இருந்தைக் காட்டிலும் 90 சதவீதம் அதிகரித்தது.

2017- ஆண்டில் மட்டும் சீன முதலீடு 70 பில்லியன் டாலரை தாண்டியது. சீனா துவக்கத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் முதலீடு செய்து வந்தாலும், அதன் பிறகு அமெரிக்காவிலும் சீனாவின் முதலீடுகள் அதிகரித்தது. சீனாவை பொறுத்தவரை அதனுடைய முதலீடுகள் அனைத்தும் ஒன்றிணைத்தல் மற்றும் கைப்பற்றுதல் என்ற முறையிலேயே உள்ளது இவற்றுக்கெல்லாம் சாதகமாக ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு, அதன் பிறகு பிரிக்ஸ் கூட்டமைப்பு போன்றவற்றின் மூலமாக போடப்பட்ட ஒப்பந்தங்களும், தற்போது யூரோசியான் என்ற ஒப்பந்தமும் சீனாவின் ஆதிக்கத்தை வலுப்படுத்துவதற்கு சாதகமான ஒப்பந்தங்கள் ஆகும்

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு போட்டியாக சீனா தற்போது ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் தனது நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்து அவற்றை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறது. இதற்கு ஒத்து வரும் நாடுகளை தனது ’டிராகன்’ பிடிக்குள் வளைத்துப் போடுகிறது. இந்தியாவும் அதன் பிடியில் சிக்கிக் கொண்டு இருப்பினும் அடிமைகளின் கூச்சல் காதை கிழிக்கிறது.

இந்த புதிய உலக சூழலை எதிர் கொள்ளும் வகையில் பாட்டாளி வர்க்கமும் சர்வதேச அளவில் ஏகாதிபத்திய முதலாளித்துவ எதிர்ப்பு கூட்டமைப்புகளை உருவாக்கி போராட வேண்டும். ’குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு’ சவடால் அடிப்பதாலும், சீனாவை இன்னமும் கம்யூனிச நாடு என்று வரையறை செய்துக் கொண்டு அதன் ஆதிக்க விரிவாக்க கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் இருப்பதும், மறைமுகமாக சீனாவின் கையாள் படையாக உதவுமே தவிர அதன் ஆதிக்கத்தை வீழ்த்தாது.

சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here