தொடர்ச்சி…
‘ஒருவேளை’ என்ற சொல்லை வரலாறு அனுமதிப்பதில்லை. சில தற்செயல் நிகழ்வுகளோ, திடீர் திருப்பங்களோ வரலாற்றின் போக்கை மாற்றி விடுவதுமில்லை. எனினும் அந்த மக்கள் எழுச்சிகளில் வெடித்தெழுந்த அசாத்தியமான வீரமும், அதன் நாயகர்களிடம் வெளிப்பட்ட தன்னல மறுப்பும், இந்தத் தோல்வியின் விளைவாக நாம் தவறவிட்ட வரலாற்று வாய்ப்பும் அவர்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடாதா’ என்ற ஏக்கத்தை நம் உள்ளத்தில் தோற்றுவிக்கத்தான் செய்கின்றன.
இதோ,கட்டபொம்மன் வீழ்ந்த மண்ணிலிருந்து வ.உ.சி எழுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கத்தை இந்த மண்ணில் ஒலித்த திப்புவைத் தொடர்ந்து, ரசியப் புரட்சியின் சோசலிசத்தை முழங்க பகத்சிங் வருகிறார். இந்திய விடுதலைப் போராட்ட மரபில்தான் எத்தனை மின்னல்கள், இடிமுழக்கங்கள்! ஆனால், ஒவ்வொரு முறையும் மழைமேகத்தைக் கலைத்துச் சென்றிருக்கிறது துரோகத்தின் காற்று.
துரோகிகள் எனப்படுவோர், சமூக அடித்தளம் ஏதுமற்ற தனியாட்களாக இருந்திருந்தால் அன்றே துடைத்தொழிக்கப் பட்டிருப்பார்கள். ஆனால், அவர்களின் பின்புலமாக ஒரு பெரிய பிழைப்புவாதக் கூட்டம் இருந்திருக்கிறது. பிழைப்புவாதம் என்பதை வெறுக்கத்தக்கதாகக் கருதும் பண்பை நம் சமூகம் பெற்றிருந்தால், துரோகத்தின் ஆணிவேர் அன்றே பட்டுப் போயிருக்கும். அறியாமையையும் அடிமைத்தனத்தையும் அலட்சியத்தையுமே தம் பெருமைமிக்க மரபாகக் கொண்டிருந்த நம் சமூகம் துரோகிகளை வாழவைத்திருக்கிறது, வளரச் செய்திருக்கிறது.
துரோகமும் பிழைப்புவாதமும் பெற்ற வெற்றியைப் புரிந்து கொள்வதற்கு நுண்ணோக்கி கொண்டு வரலாற்றை ஆய்வு செய்யத் தேவையில்லை, நிகழ்காலத்தைக் கண் திறந்து பார்ப்பதே போதுமானது. மருதுவைக் கொன்று தன்னை அரியணையில் அமர்த்திய கும்பனி அதிகாரியின் காலில் விழுந்து கண்ணீர் விடுகிறான் கௌரி வல்லப உடையத் தேவன். இந்த அற்பத்தனத்தை எப்படி விளங்கிக் கொள்வது? “என்னை அமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்த்த தலைவா!” என்று கூறிக் கண்ணீர் விடும் அமைச்சர்கள் அந்த வரலாற்றுப் புதிருக்கு விடை தருகிறார்கள்.
தமிழகத்தை கும்பனிக்கு எழுதிக் கொடுத்துவிட்டு, நவாப் பதவியை அவனிடம் லஞ்சமாகப் பெற்றான் ஆற்காட்டு நவாப். அந்தப் பரம்பரைக்கு சமூகம் அன்று வழங்கிய அங்கீகாரத்தை எப்படிப் புரிந்து கொள்வது? ”சென்னைப் பல்கலைக் கழகம் கட்டுவதற்குத் தேவையான இடத்தை தானமாகக் கொடுத்தார்” என்று கூறி ஆற்காடு இளவரசரை அழைத்துக் கவுரவிக்கிறதே இன்றைய அரசு, இந்த ஆபாசம் அன்றைய அங்கீகாரத்திற்கு பொழிப்புரை வழங்குகிறது.
”அந்தக் காட்டு நாய் சின்ன மருது எதற்காகப் போராடுகிறான் என்றே தெரியவில்லை” என்று கும்பனிக்குக் கடிதம் எழுதினான் தொண்டைமான். ஏனென்றால், ‘அவர்கள் சாக விரும்புகிறார்கள்” என்று 19-ஆம் நூற்றாண்டில் தொண்டைமான் எழுப்பிய ஐயத்துக்கு 20-ஆம் நூற்றாண்டில் விளக்கமளித்தார் காந்தி. பகத்சிங்கின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்யப் போராடுமாறு கோரியவர்களிடம் இப்படியொரு பதிலைக் கூறிய பின்னரும் காந்தியை மகாத்மாவாகக் கொண்டாட முடிந்த தேசம் தொண்டைமான்களைத் தொடர்ந்து பெற்றெடுப்பதில் என்ன வியப்பு?
கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்ததால் எட்டப்பன் துரோகி. அந்த எட்டப்பன் பரம்பரையிடம் காசு வாங்கித் தின்றுவிட்டு கட்டபொம்மனையும் மருதுவையும் தன் எழுத்தில் இருட்டடிப்பு செய்த பாரதி? பாரதியின் இந்த இழிவை தெரிந்தே இருட்டடிப்பு செய்யும் பாரதி பக்தர்கள்? எட்டயபுரம் ராஜா இன்றளவும் அரண்மனையில் வாழ்வதும், கட்டபொம்மனின் வாரிசுகள் தொகுப்பு வீடு கேட்டு மனுப்போடுவதும் எட்டப்பனின் வெற்றியைப் பறை சாற்றவில்லையா?
நிகழ்காலத்தைக் கூர்ந்து கவனியுங்கள். கடந்த காலம் உங்கள் கண் முன் தெரியும். இதோ, காலனியாதிக்கத்தின் வரலாறு நம் கண் முன்னே விரிகிறது.
இன்று கடன் சுமை தாளாமல் விவசாயிகள் செய்து கொள்ளும் தற்கொலை என்பது அன்று பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வழங்கிய 34 பஞ்சங்களின் மறுபதிப்பு. “வட இந்தியாவின் சமவெளிகள் இந்திய நெசவாளர்களின் எலும்புகளால் வெளுக்கப்படுகின்றன” என்று 1830 களின் கோரச் சித்திரத்தைப் பதிவு செய்தான் பென்டிங் பிரபு. இன்று அவர்களுடைய தறிகள் விறகாகி எரிந்து அடங்கியும் விட்டன.
தொடரும்…