மறுகாலனியாதிக்கம்: தியாகம் கேட்கின்றது… உங்கள் மறுமொழி என்ன?


 

வரலாறு என்பது கடந்த காலத்தின் தேங்கிப்போன குட்டை வ அல்ல. அது வற்றாத ஜீவநதி. கற்கள் சிதைந்து துகள்களாகவும், துகள்கள் சேர்ந்து கற்களாகவும் உருமாற்றம் பெற்ற வண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் வரலாற்றில் தியாகிகள் உருவாகிறார்கள். துரோகிகளும் உருவாகிறார்கள். தியாகிகளும் துரோகிகளும் கடந்த காலத்துக்கு மட்டுமே உரியவர்கள் அல்லர். அவர்கள் நம் கண் முன்னே நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள். தியாகத்தையும், துரோகத்தையும் பகுத்துப் பார்க்க முடியாத அவலமும், பார்க்க விரும்பாத அலட்சியமும் கூட கடந்த காலத்துக்கு மட்டும் உரியது அல்ல. அது நிகழ்காலச் சமூகத்திலும் கோலோச்சத்தான் செய்கிறது.

ஆனால், வரலாறு இவ்வாறு பார்க்கப்படுவதில்லை. நமது விடுதலைப் போராட்ட மரபின் வீரமிக்க நாயகர்கள் சிலைகளாகச் சமைந்திருக்கிறார்கள். இந்த நாயகர்களைப் பற்றிய நமது பழைய கதைப்பாடல்களின் உணர்ச்சி, நாட்டுப்பற்றுக்கு மட்டுமின்றி, மக்களுடைய கையறு நிலைக்கும் சான்று கூறுகிறது. ஆம். அது அன்றைய சமூகத்தின் அவலம். அந்த மாவீரர்களுடைய போராட்டத்தின் வரலாற்றுப் பாத்திரத்தைப் புரிந்துகொள்ள இயலாத இந்தியச் சமூகத்தின் அவலம்.

புரட்சிகளால் உலுக்கப்பட்ட 18ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றைச் சிந்தனையில் ஓடவிட்டுப் பாருங்கள். பிரெஞ்சுப் புரட்சியின் வீரியத்தைக் கண்டு பீதியுற்ற ஐரோப்பிய மன்னர்கள் பிரான்சின் மீது படையெடுத்து முடியாட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்று கொண்டிருந்த போது, நம்முடைய திப்பு பிரெஞ்சுப் புரட்சியை வரவேற்று, குடிமகன்’ என்ற பட்டத்தை விருப்பத்துடன் சூடிக் கொள்கிறார். ஆங்கிலேய காலனியாதிக்கத்தை நொறுக்கும் நோக்கத்துக்காக, தன்னுடைய முடியாட்சியைத் தாங்கி நின்ற அடித்தளக் கற்களான நிலப்பிரபுக்களைத் தன் கைகளாலேயே அகற்றி விட்டு நாட்டை நவீனமயமாக்கிக் கொண்டிருந்தார்.

தன் அரியணையையும், அந்தப்புரத்தையும் தாண்டி வேறெதையும் பார்க்கத் தெரியாத மன்னர்களும், சாதி, வமிசப் பெருமைகளில் ஊறித் திளைத்துக் கொண்டிருந்த பாளையக்காரர்களும் நிறைந்திருந்த நாட்டில், காலனியாதிக்கத்துக்கு எதிரான போரை மக்கள் போராக மாற்றிக் காட்டியிருக்கிறார் சின்னமருது. சாதி, மத வேறுபாடின்றி எல்லா மக்களையும் கும்பனியின் சிப்பாய்களையும் கூட காலனியாதிக்கத்துக்கு எதிராக அணிதிரளுமாறு அறைகூவும் அவருடைய ‘திருச்சி பிரகடனம் வெறும் அறிவிப்பு அல்ல. சாதி, மத, மொழி எல்லைகளைக் கடந்து கும்பனியாதிக்கத்துக்கு எதிராக அவர் நடத்திய மாபெரும் போராட்டத்தின் எழுத்துபூர்வமான ஆதாரம். நூற்றுக்கணக்கான மன்னர்கள் ஆயிரக்கணக்கான பாளையங்கள் என்று சிதறிக்கிடந்த இந்த நாட்டை பிரிட்டிஷ் ஆட்சி தன் வாள் முனையால் ஒருங்கிணைத்து இந்தியாவை உருவாக்குவதற்கு முன்னமே, அந்த ஆங்கிலேயரைத் தூக்கியெறிவதற்காக சாதி, மொழி, இனம் கடந்து இந்த விடுதலை வீரர்கள் சாதித்த ஒற்றுமைதான் அவர்களால் உருவாக்கப்பட்ட தீபகற்பக் கூட்டிணைவு!

மருதுவின் அறைகூவல் 1806-இல் வேலூர் சிப்பாய்ப் புரட்சியாய் எதிரொலித்தது. அங்கே ஐரோப்பியர்கள் அனைவரையும் கொன்று குவித்த வேலூர் புரட்சிச் சிப்பாய்கள், “வெளியே வாருங்கள் நவாப், இனி அச்சமில்லை|” என்று திப்புவின் மகனைத் தலைமையேற்க அழைத்தார்கள். கும்பனியாட்சியையே நிலைகுலைய வைத்த 1857இன் புரட்சிச் சிப்பாய்களோ, தயங்கிக் கொண்டிருந்த பகதூர் ஷாவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தினார்கள். “மன்னர்களின் தலைமையில் புரட்சியாம்!” என்று ஏளனம் பேசியது ஆங்கிலேய ஆளும் வர்க்கம். ”இந்தியாவில் நடைபெறும் புரட்சி ஐரோப்பியப் நகலாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது அபத்தம்” என்று சாடினார் மார்க்ஸ்.

காலனியாதிக்கத்தை அகற்றிய இடத்தில் ஜனநாயகத்தை நிறுவ வேண்டும் என மருதுவோ 1857-இன் சிப்பாய்களோ கனவு காணவில்லை. அவர்கள் முந்தைய மன்னராட்சியை மீட்க வேண்டும் என்று மட்டுமே நினைத்தார்கள். அன்று அவர்களுடைய சிந்தனைக்கு வரலாறு விதித்திருந்த வரம்பு அது. எனினும் அவர்களது செயலோ அதற்கு நேரெதிரான விளைவைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. ஆயுதமேந்திய சிப்பாய்களும் குடிமக்களும் நடைமுறையில் தங்கள் மன்னனை நியமித்துக் கொண்டிருந்தார்கள். மக்களால் நியமிக்கப்பட்ட மன்னர்கள் ! ஒருவேளை அந்தப் புரட்சி வெற்றி பெற்றிருந்தால், அந்த மன்னர்கள் பழைய மன்னர்களாக இருந்திருக்க முடியுமா, மக்களும்தான் பழைய பிரஜைகளாக நீடித்திருக்கக் கூடுமா?

“நாற்று நட்டாயா, களை பறித்தாயா” என்று ஜாக்சன் துரையைப் பார்த்து கட்டபொம்மன் பேசும் திரைப்பட வசனத்தை நாம் கேட்டிருக்கிறோம். மக்கள் மத்தியில் வழங்கி வந்த கட்டபொம்மு கதைப்பாடலிலிருந்து எடுத்தாளப்பட்ட வசனம் அது. தன் மரபுரிமையைப் பற்றி மட்டுமே பேச வேண்டிய பாளையக்காரன், அங்கே மக்களின் குரலிலும் பேசுகிறான். எனவே, அது நிலப்பிரபுவுக்கு எதிராக ஒரு விவசாயி கேட்க விரும்பும் கேள்வியாகவும் அமைகிறது. தான் உருவாக்கிய கதைப்பாடலில் தன்னுடைய வசனத்தைப் பேசுமாறு கட்டபொம்மனைப் பணித்திருக்கிறான் விவசாயி.

காலனியாதிக்கத்தை எதிர்ப்பதற்காகத் தோன்றிய இந்த மாபெரும் புரட்சிகள், அவை மக்கள் புரட்சிகளாக இருந்த காரணத்தினால், நிலப் பிரபுத்துவ எதிர்ப்பைத் தம் தவிர்க்கவியலாத உட்கிடையாகக் கொண்டிருந்தன. அனைத்து உழைக்கும் சாதியினரும் ஆயுதமேந்தி நடத்திய அந்தக் கிளர்ச்சிகள் ஒருவேளை வெற்றி பெற்றிருந்தால், 2000 ஆண்டுகளாக இந்த மண்ணைக் கவ்வியிருக்கும் சாபக்கேடான சாதியம் அன்றே நொறுங்கிச் சரியத் துவங்கியிருக்கும். சூழ்ச்சிகள் நிரம்பிய அதிகார மாற்றமாக இல்லாமல் தம் சொந்தக் கைகளால் மக்கள் பறித்தெடுத்த வெற்றியாக நம் சுதந்திரமும் இருந்திருக்கும்.

இது வெறும் கற்பனையல்ல. இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் வங்காளம் கும்பனியின் பிடிக்குள் வந்தது. வங்கத்து நெசவாளர்களின் எலும்புகளையும் விவசாயிகளின் பிணங்களையும் உரமாக்கிக் கொண்டுதான் தொழிற்புரட்சி வளர்ந்தது. இந்தியத் தொழில்களை முன்னேற விடாமல் முடக்கியது பிரிட்டிஷ் காலனியாதிக்கம்.

மறுமலர்ச்சிக் காலம் தொடங்கி, பல்வேறு சமூகப்போராட்டங்கள் மற்றும் புரட்சிகளின் தொடர்ச்சியாகத்தான், ஐரோப்பா, முதலாளித்துவத் தொழிலுற்பத்திக்கு மாறத் தொடங்கியது. ஆனால், தனது காலனியாதிக்க எதிர்ப்புப் போரினூடாகவே நாட்டைத் தொழில்மயமாக்கி மேலிருந்து ஒரு புரட்சியைத் தோற்றுவிக்க முயன்றார் திப்பு. அதே காலகட்டத்தில் கீழிருந்து மக்களை அணிதிரட்டி காலனியாதிக்கத்தை ஒழிக்க முயன்றிருக்கிறார் சின்ன மருது. ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றிருந்தால்?

தொடரும்…

முந்தைய பதிவு…

விடுதலைப் போரின் வீரமரபு – 30 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here